Published:Updated:

பரிசோதனைகள் வேண்டாம்; இயற்கையுடன் இணைந்து வாழுங்கள்... மக்கள் மருத்துவரின் மனிதாபிமான குரல்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

பரிசோதனைகள் வேண்டாம்; இயற்கையுடன் இணைந்து வாழுங்கள்... மக்கள் மருத்துவரின் மனிதாபிமான குரல்!

மாத்தியோசி

Published:Updated:
மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

‘‘நல்ல உடல் நலம் வேண்டும் என்று மருத்துவரிடமும், மரியாதை வேண்டும் என்று காவல் துறையிடமும், நீதி வேண்டும் என்று நீதிமன்றத்திடமும் கேட்கக் கூடாது என என் மாணவர்களிடம் நகைச்சுவையாகச் சொல்வது உண்டு’’ என்று அவர் சொல்லி முடிக்கும்போது, கைத்தட்டல் அரங்கை அதிர வைத்தது. இந்தக் கலகக் குரலுக்குச் சொந்தக்காரர், பெல்ல மோனப்ப ஹெக்டே. பி.எம்.ஹெக்டே என்று சுருக்கி சொன்னால் பெயர் எளிதில் விளங்கும்.

ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஒரு முறையாவது இவரின் பகீர் கிளப்பும் உரையை நாம் கேட்டிருப்போம். ஆமாம், இப்படிப் பேசுபவரை எப்படி இன்னும் விட்டு வைத்துள்ளார்கள் என்று நீங்கள் நினைப்பதுபோல நானும் நினைத்தேன். அதற்கான விடை இந்தப் பெருங்கிழவனின் உரையை, சென்னை பெருநகரத்தில் நேரில் கேட்கும்போது கிடைத்தது.

‘வாலன்டரி ஹெல்த் சர்வீஸ்’ (Voluntary Health Services) என்ற வித்தியாசமான மருத்துவமனை, தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அருகில் உள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு, திரும்பி வருவதற்குப் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன். அப்போதுதான் மென்பொருள் துறை தரமணியை மெள்ள எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த நேரம். சென்னையின் புறநகர் பகுதியாகவே அது பார்க்கப்பட்ட காலம். அதனால், எப்போ தாவதுதான் பேருந்து வரும். சரி, மத்திய கைலாஷ் வரை நடந்து செல்வோம் என்று நடந்தேன். வழியில், ‘வாலன்டரி ஹெல்த் சர்வீஸ்’ என்ற பெயர்ப்பலகை இருந்த அந்தக் கட்டடத்தில் நிறுவன நாள் விழா நடந்து கொண்டிருந்தது. அனைவரும் வருக என்று அறிவிப்பு வைத்திருந்தார்கள். இந்த இடத்தைத் தாண்டிச் செல்லும்போது, ஒரு முறையாவது உள்ளே எட்டிப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். அதற்கு அந்த நடைப்பயணம் மூலம் வாய்ப்புக் கிடைத்தது.

ஏதோ மருத்துவம் சம்பந்தமான தொண்டு நிறுவனமாக இருக்கும் என்று நினைத் திருந்தேன். உள்ளே சென்ற பிறகுதான் தெரிந்தது, அது ஓர் அதிநவீன மருத்துவமனை என்று. சென்னையில் உள்ள பிரபல மருத்துவ மனைகள் வசூலிக்கும் கட்டணத்தில் பத்தில் ஒரு பங்குதான், இங்கு கட்டணம் வாங்கு கிறார்கள் என்பதை விழாவில் பேசிக் கொண்டிருந்த விருந்தினர் பெருமையாகக் குறிப்பிட்டார்.

மக்கள் நலனில் அக்கறையுள்ள மருத்து வர்கள், தொண்டு உணர்வுடன் இணைந்து நடத்தும் அமைப்பு என்று தெரிந்து கொண்டேன். அதன் பிறகு, அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்குச் செல்லத் தொடங்கினேன். அதில்தான், ‘மக்கள் மருத்துவர்’ என்று கொண்டாடப்படும் பி.எம்.ஹெக்டே அவர்களைச் சந்திக்கவும், அவரின் உரையைக் கேட்கும் வாய்ப்புகளும் பல முறை கிடைத்தன. அவர், ‘வாலன்டரி ஹெல்த் சர்வீஸ்’ நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் செயல்பட்டு வருகிறார் என்பதை, பின்னாளில் தெரிந்துகொண்டேன். சென்னையைப் பற்றிப் பேசத்தொடங்கினால், பி.எம்.ஹெக்டேவின் முகம், மகிழ்ச்சியில் திளைக்கும்.

காரணம், இங்குள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில்தான், எம்.பி.பி.எஸ் படித்தார். இதனால், சரளமாகச் செந்தமிழில் பேசுவார், இந்த மங்களூர்க்காரர். கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்த இவரின் தாய்மொழி துளு. அவரின் தமிழ் பேச்சின் ஊடே, பொருள் தெரியாத தமிழ் சொல்லுக்கு, அருகில் உள்ள நண்பர்களிடம் விளக்கம் கேட்பார். ‘‘அட, தமிழில் உள்ள இதே பொருள்தான் துளுவிலும். தமிழ்மொழி தானே, துளுவுக்கும் தாய்’’ என்று சொல்லி மகிழ்ச்சியில் துள்ளுவார்.

பி.எம்.ஹெக்டே
பி.எம்.ஹெக்டே

அமெரிக்காவில் இதயவியல் உயர் படிப்பு படித்த நிபுணர், மணிப்பால் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், மருத்துவத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான பி.சி.ராய் விருதும், நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருதும் பெற்றவர் என்பதெல்லாம், ஊர் அறிந்த தகவல்.

ஆனால், இவர் எழுதிய கட்டுரை ஒன்றுக்காகப் பணியி லிருந்து நீக்கப்பட்டதும், மருத்து வப் பட்டத்தைத் திரும்பப் பெற இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் புகார்கள் பறந்ததும் வெளி உலகம் அதிகம் அறிந்திராத உண்மை. அது பற்றி, பி.எம்.ஹெக்டே சொல்வதைக் கேட்போம்.

ஒரு வாழ்வியல் ரகசியத்தைச் சொல்கிறேன். அறிவுபூர்வமாகச் சிந்தித்து இயற்கையுடன் இசைந்து வாழ்பவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை நம்பி வாழ வேண்டிய தேவை இருக்காது.

‘‘நண்பர்களே, 45 ஆண்டு களுக்கு முன்பு ‘வழக்கத்துக்கு மாறான மருத்துவ ஞானம்’ (Unconventional Wisdom In Medicine) என்ற தலைப்பில் என் அனுபவத்தில் கண்டதை வைத்துக் கட்டுரை எழுதினேன். பத்து ஆண்டுகள் கழித்துதான், இந்தக் கட்டுரையை வெளிநாட்டில் உள்ள மருத்துவ இதழ் ஒன்று வெளியிட்டது. இதில் என்ன எழுதியிருப்பேன் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதனால், என் மருத்துவத் தொழில் முடங்கும் அளவுக்கு எதிர்ப்பு அலை உண்டானது. பேராசிரியராகப் பணிபுரிந்த கல்லூரியிலிருந்து வெளியில் தள்ளப்பட்டேன்; இந்திய மருத்துவ கவுன்சிலில் என் பட்டத் தைப் பறிக்கப் புகார்கள் அளிக்கப்பட்டன. இதை எல்லாம் எதிர்த்து நின்றேன். காலங்கள் ஓடிவிட்டன. எப்படியோ, பல சோதனை களைக் கடந்து வந்து உங்களுடன் மகிழ்ச்சி யாக உரையாடிக்கொண்டிருக் கிறேன். நான் மாறவே இல்லை. அப்படியேதான் இருக்கிறேன்.

இப்போது இந்த நாடும், மக்களும் என்னைப் புரிந்து கொண்டனர். அப்போது என்னைப் புரிந்து கொள்ள வில்லை. இதுதான் வித்தியாசம். தற்போது மருத்துவத் துறையிலிருந்தே என்னைப் போன்ற கலகக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக் கின்றன. மனசாட்சியுள்ள பல மருத்துவர்கள் இந்த நிலை மாற வேண்டும் என நினைக்கிறார்கள். 45 ஆண்டுகளாக இந்த மோச மான செயலை எதிர்த்துக் கரடியாகக் கத்திக்கொண்டிருக் கிறேன். ‘ஹெக்டேவுக்கு நாம் பணம் சம்பாதிப்பது பிடிக்க வில்லை. அதனால்தான் அப்படிப் பேசி வருகிறான்’ என்று என் நண்பர்களே என்னைத் தவறாக நினைத்த காலம் உண்டு.

நோயாளியைக் குணப்படுத்துவதென்பது வியாபாரம் அல்ல; அது துயரத்தில் சிக்கிக்கொண்ட ஓர் உயிரைக் காப்பாற்ற இயற்கை நமக்குக் கொடுத்த ஒரு வாய்ப்பு. ஆனால், அதைப் பணம் பண்ணும் தொழிலாகப் பார்க்கத் தொடங்கியதுதான், மருத்துவத் துறையில் சீர்கேடுகள் நடக்க முக்கியக் காரணம்.

வணிகமயமாக்கப்பட்ட மருத்துவத் துறைக்கு எதிரான என் பேச்சு இந்தியாவில் உள்ள மக்களுக்கானது மட்டுமல்ல. பூவுலகு முழுவதும் உள்ளவர்களுக்கானது. உலகம் முழுக்கவே மருத்துவத்துறை இப்படித்தான் இருக்கிறது.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

மருத்துவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மனிதக் குலத்துக்குச் சிகிச்சை அளித்து நோயாளிகளைத் துயரிலிருந்து மீட்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். மனித சமூகத் துக்கான தங்களுடைய கடமையை ஆற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றவர்கள். பணம் தானாக வரும், எந்த மருத்துவரும் வருமானம் இன்றிப் பசி, பட்டினியுடன் மறைந்து போனதாக வரலாறு இல்லை.

பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதைக் காலம் கடந்த பிறகுதான், ஞானம் வரும். இதனால், யாருக்கும் பயனில்லை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், நவீன மருத்துவம் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியிருக்கிறது, மனிதாபிமானம் மனரீதியாகக் கீழ் நோக்கி சென்றுகொண் டிருக்கின்றது.

நண்பர்களே, நோய் என்பது ஒரு விபத்து போன்றதுதான். நலத்துடன் வாழும் மனிதனைத் தீவிர நோய் ஒன்று அடியோடு வீழ்த்தும் வல்லமை கொண்டது. ஆனாலும், நாம் சிறந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றினால், அந்த நோயிலிருந்து மீண்டு வந்து விட முடியும். அதற்கு நல்ல மருந்துகளுடன், நல்ல நம்பிக்கையைக் கொடுக்கும் மருத்துவர்கள் அவசியம்.

மருத்துவ உலகின் மாஃபியாக் களின் தந்திரங்களை அறியாத எளிய மக்கள், நவீன மருத்துவம்தான் நம்மைக் காக்கும் ஒரே கர்த்தா என்று நம்பிவிடுகிறார்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே மருத்துவர்கள் இல்லை என்றால், நம் உயிர் வாழ முடியாது என்று கற்பித்துவிடுகிறார்கள்.

உங்களுக்கு ஒரு வாழ்வியல் ரகசியத்தைச் சொல்கிறேன். அறிவுபூர்வமாகச் சிந்தித்து இயற்கையுடன் இசைந்து வாழ்பவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை நம்பி வாழ வேண்டிய தேவை இருக்காது. நோய்களிலிருந்து நம்மைக் காக்கும் ஓர் அற்புதமான மருத்துவரை நமக்குள்ளே பொருத்தி யுள்ளது பேரருள் கொண்ட இயற்கை. அதை நவீன மருத்துவம் நோய் எதிர்ப்புச் சக்தி என்று அழைக்கிறது. சத்துமிகுந்த உணவுகளை உண்பதும், சரியான வாழ்க்கை முறை யைப் பின்பற்றுவதும்தான், இந்த மருத்துவருக்கு நாம் கொடுக்கும் ஆகச் சிறந்த கட்டணம்.

நலக்குறைவு ஏற்படும் போது, பெரும்பாலும் நம் உடலுக்குள் உள்ள மருத்துவரே, அதைச் சரி செய்துவிடுகிறார். நோய் எதிர்ப்பு சக்தி என்ற அந்த மருத்துவர் தோற்கும்போதுதான், வெளியில் உள்ள மருத்துவரின் உதவியைத் தேடிச் செல்ல வேண்டும். அப்போது, கருணையுடன் உள்ள மருத்துவர்கள் நம்பிக்கை அளித்து மருத்துவம் பார்க்க வேண்டும். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலும் இது சாத்திய மில்லை. நல்ல மனைவி/கணவன் அமைவது மட்டுமல்ல, நல்ல மருத்துவர் உங்களுக்குக் கிடைப்பதும் இயற்கைக் கொடுத்த வரம் என்றுதான் சொல்வேன்.

எனவே, நலமுடன் நல்வாழ்வு வாழ விரும்பும் மனிதர்கள், மறந்தும் மனிதத் தன்மை இல்லாத மருத்துவமனைகள் பக்கம் மறந்தும் சென்றுவிடாதீர்கள். குழந்தைகளுக்கு இனிப்பு மிட்டாய் கொடுத்து, ஆசைகாட்டி அழைப்பதுபோல, இலவச பரிசோதனை முகாம்களைக் கார்ப்பரேட் மருத்துவ மனைகளை ஊர்தோறும் நடத்தி வருகின்றன. இது ஓர் வியாபார யுக்தி. ஆள் பிடிக்கும் வேலை. தவறிக்கூட, இலவச பரிசோதனை தானே என்று இவர்கள் பக்கத்தில் சென்று விடாதீர்கள். புகைப் பிடிப்பவர்களும் மது அருந்துபவர்களும், அடிக்கடி உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நலமாக உள்ளவர்களுக்கு இது அவசியமில்லை.

வாழும் மனிதனைத் தீவிர நோய் அடியோடு வீழ்த்தும் வல்லமை கொண்டது. ஆனாலும், நாம் சிறந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றினால், அந்த நோயிலிருந்து மீண்டு வந்து விட முடியும்.

இந்த மருத்துவ மந்திரவாதிகளின் கருவிகளில் ஒன்று, நன்றாக வாழும் மனிதரி டம்கூட ஏதாவது ஒரு குறையைப் படம் பிடித்துக்காட்டும் வல்லமை கொண்டது. உண்மையில், அந்தக் குறைபாட்டை அப்படியே விட்டுவிட்டால், நம் உடலுக்குள் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி என்ற மருத்துவரே அதைச் சரி செய்துவிடுவார். அப்புறம், எப்படி இந்த வெள்ளைக் கோட்டு மந்திரவாதிகளுக்கு வருமானம் வரும்?

இலவச பரிசோதனை பொறியில் சிக்கியவர்களைப் புரியாத பெயர்களைச் சொல்லி, நோயாளி என்ற முத்திரை குத்தி படுக்கையில் கிடத்தும் வரை ஓயமாட்டார்கள். ‘உங்களுக்கு அந்த நோய் வரும், இந்த நோய் ஆரம்ப நிலையில் உள்ளது. இப்போதே சிகிச்சையைத் தொடங்கினால் தான் உயிர் பிழைக்க முடியும்...’ என்றெல்லாம் பய முறுத்தி பணத்தைக் கறக்கத் தொடங்கி விடுவார்கள்.

ஆங்கில மருத்துவ உலகம் அறிவித்துள்ள ஒரு மருத்துவ உண்மையை உரக்கச் சொல்கிறேன், கவனமாகக் கேளுங்கள். நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம் என்ற இரண்டு நோய்களை மட்டுமே ஆரம்ப நிலையில் பரிசோதனை செய்து அறிந்து கொள்ள முடியும். பிற நோய்கள் எதுவாக இருந்தாலும், அதன் தாக்குதல் நம் உடலுக்குள் ஊடுருவிப் பாதிப்பு ஏற்படுத்திய பிறகே, அறிந்துகொள்ள முடியும். உண்மை, இப்படி இருக்க பரிசோதனைகள் என்ற பெயரில், அறியாத மக்களிடம் மட்டுமல்ல, படித்த மக்களையும் ஏமாற்றுகிறார்கள். மக்களே! உஷார், உஷார்’’ என்று எச்சரிக்கும் பி.எம்.ஹெக்டே சிறந்த மருத்துவர் மட்டுமல்ல, நல்ல மனிதர். அதனால்தான், அன்பும் கருணையும் பொங்க, அக்கறையுடன் பேசுகிறார். இன்னும் இவரின் உன்னதமான உரைகள், கட்டுரைகள், நூல்களிலிருந்து சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். நல்வாழ்வை விரும்புபவர் களுக்கு, அவை நிச்சயம் நல்வழி காட்டியாக இருக்கும்.

‘‘நீரிழிவு என்று அழைக்கப்படும் சர்க்கரை நோய் என்பதே ஏமாற்று வேலைதான். இது நோயே அல்ல’’ என்று பட்டாசு போல வெடிக்கிறார் பி.எம்.ஹெக்டே.

அதை அடுத்த இதழில் பார்ப்போம்.