Published:Updated:

மருந்தை நிரப்பாமல் தடுப்பூசி போட்ட செவிலியரின் வைரல் வீடியோ; அதன் ஆபத்தை விளக்கும் மருத்துவர்!

Vaccination - Representational image
Vaccination - Representational image ( Manish Swarup )

சமீபத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்தில், செவிலியர் ஒருவர் தடுப்பு மருந்தை ஊசியில் நிரப்பாமல், வெற்று ஊசியாக தடுப்பூசியை பயனாளி ஒருவருக்குச் செலுத்திய வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமீபத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்தில் செவிலியர் ஒருவர் தடுப்பு மருந்தை ஊசியில் நிரப்பாமல், வெற்று ஊசியை பயனாளி ஒருவருக்குச் செலுத்திய வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாம் நாட்டின் அனைத்துப் பகுதியிலும் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பீகார் மாநிலம் சாபிரா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமிற்கு சமீபத்தில் ஒருவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தன் நண்பருடன் சென்றுள்ளார்.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo/Anupam Nath
சான்றிதழில் ஒரு தேதி; குறுஞ்செய்தியில் ஒரு தேதி; தடுப்பூசி குழப்பம் ஏன்?

அப்போது அந்த முகாமில் இருந்த செவிலியர் ஒருவர், அங்கு இருந்த மக்களிடம் பேசியபடியே, கவரில் இருந்த ஊசியை எடுத்து, பிரித்து, பேச்சு மறதியில் அதில் தடுப்பு மருந்தை நிரப்பாமலேயே, வெறும் ஊசியை பயனாளிக்குச் செலுத்தியுள்ளார். சோஷியல் மீடியா சம்பிரதாயத்திற்காக, அவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வீடியோவை அவர் நண்பர் எடுத்திருக்கிறார். இருந்தாலும், அவரும் தடுப்பு மருந்து நிரப்பப்படாமல் வெறும் ஊசி மட்டுமே செலுத்தப்பட்டதை கவனிக்கவில்லை.

வீடு திரும்பிய பின்னர், தான் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வீடியோவை சம்பந்தப்பட்ட நபர் பார்த்துள்ளார். அப்போதுதான், வெறும் ஊசி மட்டுமே தனக்குச் செலுத்தப்பட்டுள்ளதை அவர் அறிந்தார். அந்த வீடியோவை அவர் ஷேர் செய்ய, அது வைரலானது. நெட்டிசன்கள் மருத்துவர்கள், அரசியல்வாதிகள், மற்றும் அமைச்சர்களை 'டேக்' (Tag) செய்து அந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

அதை தொடர்ந்து, சாபிரா மாவட்ட தடுப்பூசி பயன்பாடு அதிகாரி மருத்துவர் அஜய் குமார், தடுப்பு மருந்தை ஏற்றாமலேயே ஊசி போட்ட செவிலியர் சந்திரகுமாரியை பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். ``இது வேண்டுமென்றே நிகழ்ந்தது அல்ல. பணிச் சுமையினாலும், மிக அதிகமாக இருந்த மக்கள் கூட்டத்தினாலும் தவறுதலாக நிகழ்ந்துள்ளது" என்று அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், வெறும் ஊசி மட்டும் செலுத்தப்பட்ட பயனாளியை அழைத்து, முதல் தவணை தடுப்பூசி போட இருப்பதாகக் கூறியுள்ளார்.

இவ்வாறாக, மருந்து நிரப்பாமல் வெறும் ஊசி மட்டும் செலுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து திருச்சியைச் சேர்ந்த அவசர சிகிச்சை நிபுணர், மருத்துவர் ஹக்கீம் முகமதுவிடம் கேட்டோம்.

மருத்துவர் ஹக்கீம் முகமது
மருத்துவர் ஹக்கீம் முகமது

``ஊசியை மருந்து நிரப்பாமல் உடலுக்குள் செலுத்தும் போது, அது நிச்சயமாக விளைவுகளை ஏற்படுத்தும். பீகார் சம்பவத்தில், செவிலியரால் அந்த ஊசி உடலில் தசை வழியாகச் (Intra muscular) செலுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து செலுத்தப்படும் ஊசியின் அளவு மிகச் சிறியது. எனவே, மேற்கண்ட சம்பவத்தில் பெரிய அளவில் உடலில் பாதிப்புகள் ஏற்படவில்லை. என்றாலும், செவிலியரின் கவனமின்மை கண்டிக்கத்தக்கதே.

பொதுவாக, ஊசியை உடலுக்குள் செலுத்துவதில் மிகப் பாதுகாப்பான வழி, தசையில் செலுத்துவதுதான். கொரோனா தடுப்பூசிகள் அவ்வகையில்தான் செலுத்தப்படுகின்றன.

தடுப்பு மருந்துகள் செலுத்தப்படும் ஊசிகள் மிகச் சிறிய அளவில் இருக்கும். இதுவே மற்ற உடல்நலக் கோளாறுகளுக்கு மருந்துகள் செலுத்தப்படும் ஊசி, இவ்வாறாக கவனக்குறைவுடன் செலுத்தப்பட்டிருந்தால், குறிப்பாக அது நரம்பில் செலுத்தப்பட்டிருந்தால் சுவாசப் பிரச்னை, தலைசுற்றல், படபடப்பு எனப் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம். அதிகபட்சமாக, உட்செலுத்தப்படும் காற்றின் மூலம் ரத்த நாளங்களில் குமிழிகள் ஏற்பட்டு இதயப் பிரச்னை, இதயம் செயலிழப்பு, மாரடைப்புவரை ஏற்பட வாய்ப்பு உண்டாகலாம்.

பொதுவாக, ஊசி தசையில் செலுத்தப்படும்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு. ஒருவேளை, தவறுதலாகச் செலுத்தப்படும் காற்று ரத்த நாளங்களில் உட்புகுந்தால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அப்படி நடப்பதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவே.

Covid-19 Vaccination
Covid-19 Vaccination
கோவிட் 19 தடுப்பூசியால் உயிரிழந்த இந்தியாவின் முதல் நபர்; அதிகாரபூர்வமாக அறிவித்த அரசு!

ஊசி செலுத்தும்போதும் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளத்தான், சரியான இடத்தில், தசையில் செலுத்துகிறோமா என ஊசியை பின் இழுத்துப் பார்த்து (withdraw), ரத்தம் வருகிறதா எனச் சோதனை செய்து, ரத்தம் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே ஊசி தசையில் போடப்படும். முக்கியமாக, குழந்தைகளுக்கு இந்தப் பரிசோதனை முறைக்குப் பின்னரே ஊசி செலுத்தப்படும்'' என்ற டாக்டர்,

மேலும், ``நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் இந்நிலையில், இந்தச் சம்பவத்தை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, நாட்டில் உள்ள அனைத்து செவிலியர்களுக்கும் ஆலோசனையும் அறிவுறுத்தலும் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டிலும் வழங்கப்படுகிறது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு