Published:Updated:

மருத்துவர் பரிந்துரையில்லாமல் வாங்கக்கூடிய OTC மருந்துகள்... கவனிக்க வேண்டியவை!

மருந்துகள்

ஓடிசி மருந்துகளால் நன்மைகளைவிட, தீமைகளே அதிகம். என்னதான் அவை பக்க விளைவுகளற்ற மருந்துகள் என்றாலும், வரைமுறைப்படுத்தப்படாமல் போகும்போது அது தீங்கில் வந்து முடிகிறது.

மருத்துவர் பரிந்துரையில்லாமல் வாங்கக்கூடிய OTC மருந்துகள்... கவனிக்க வேண்டியவை!

ஓடிசி மருந்துகளால் நன்மைகளைவிட, தீமைகளே அதிகம். என்னதான் அவை பக்க விளைவுகளற்ற மருந்துகள் என்றாலும், வரைமுறைப்படுத்தப்படாமல் போகும்போது அது தீங்கில் வந்து முடிகிறது.

Published:Updated:
மருந்துகள்

ஓவர் த கவுன்டர் மருந்துகள் (Over the Counter Drugs) என்பவை, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளிலும், சூப்பர் மார்க்கெட் போன்ற கடைகளிலும் கிடைக்கக்கூடிய மருந்துகள். உதாரணமாக, பாராசிட்டமால், வலி நிவாரணி ஜெல்கள் மற்றும் சளி மாத்திரைகள் போன்றவை. இவற்றுக்கு பெரும்பாலும் விளம்பர அனுமதி உண்டு. மற்ற மருந்துகளை வணிகரீதியாக விளம்பரம் செய்யக்கூடாது என்பது விதி. மேலும், இந்த ஓடிசி (ஓவர் த கவுன்டர்) மருந்துகள் பக்கவிளைவுகள் அதிகம் இல்லாதவையாக இருக்கும்.

Dr.திலீபன் செல்வராஜன்
Dr.திலீபன் செல்வராஜன்

நம் அன்றாட வாழ்க்கையில் காய்ச்சல், சளி, உடல்வலி போன்றவற்றுக்குப் பயன்படுத்தக்கூடியவை ஓடிசி மருந்துகள். இவற்றைப் பயன்படுத்த மருத்துவரை அணுகத் தேவையில்லை. மருந்தாளுநரோ, கடைக்காரரோ, கேட்பவர்களுக்கு இவற்றை வழங்குவர். உலகம் முழுக்க இந்த வகை மருந்துகளின் பயன்பாடு அதிகம். ஆனால், இதில் பல பாதகங்களும் உள்ளன.

இந்தியாவில் ஓடிசி மருந்துகளின் நிலை!

மருந்துகள்
மருந்துகள்

இந்தியாவில் ஓடிசி மருந்துகளுக்கு வரையறையே இல்லை. மாறாக, எவையெல்லாம் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வாங்க வேண்டும் என்ற வகைப்பாடுதான் உள்ளது. அதாவது, `ஷெட்யூல் H, H1, X என்றுள்ள, அட்டவணையில் குறிப்பிடப்படாத மருந்துகளை ஓடிசியாக வாங்கிக்கொள்ளலாம்' என்று மறைமுகமாகத்தான் உள்ளது. இந்த ஓட்டையைப் பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்கள் பல மருந்துகளை பொதுச் சந்தையில் விற்று வருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை ஓடிசி மருந்துகளை நுகர்வதில் முதலில் மாநிலங்களுக்கு இடையே பெரிய வித்தியாசம் நிலவுகிறது. அது மருத்துவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் மாறும். உதாரணமாக ஓர் ஆய்வில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 81% ஒடிசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், தமிழகத்தில் 23% பயன்பாட்டில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தேசிய அளவில் இந்தியாவின் சராசரி ஓடிசி பயன்பாடு 50% ஆக இருக்கிறது. இந்தியாவில் ஓடிசி மருந்துகள் பெரும்பாலும் மருந்தாளுநர்களாலும் மளிகைக் கடைக்காரர்களாலும்தான் கையாளப்படுகின்றன.

ஓடிசி மருந்துகளின் நன்மை, தீமைகள்!

மருந்துகள்
மருந்துகள்
Pixabay

ஓடிசி மருந்துகளால் நன்மைகளைவிட, தீமைகளே அதிகம். என்னதான் அவை பக்க விளைவுகளற்ற மருந்துகள் என்றாலும், வரைமுறைப்படுத்தப்படாமல் போகும்போது அது தீங்கில் வந்து முடிகிறது. இங்கிலாந்தில், கல்லீரல் செயலிழப்பு மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்கு முதல் காரணமே, அம்மக்கள் மூட்டுவலிக்காக அதிகமான பாராசிட்டமால் எடுத்துக்கொள்வதுதான்.

நம் ஊரில், சளித் தொந்தரவுக்கு மாத்திரை கேட்டு ஒரு மருந்தகத்துக்குச் சென்றால், அந்த மருந்துக் கடைக்காரர் இரண்டு வேளைக்கு தலா 3 மாத்திரைகளைக் கொடுப்பார். அவற்றில் ஒன்று அமாக்சிலின் போன்ற ஆன்ட்டிபயாட்டிக்காக இருக்கும். இவ்வாறு தொடர்ச்சியாக ஆன்ட்டிபயாடிக் எடுத்துக்கொள்ள நேரிடும்போது, ஒரு கட்டத்தில் அந்த ஆன்ட்டிபயாடிக் மருந்துக்கான எதிர்ப்பு சக்தியை கிருமி பெற்றுவிடும். பின்னர் எந்த நோய்த்தொற்று வந்தாலும், எந்த ஆன்ட்டிபயாடிக் மருந்துகளாலும் அந்தக் கிருமியை எதிர்க்க முடியாமல் போய்விடும்.

ஆகவே, மருத்துவர் பரிந்துரையின்றி எந்த ஆன்ட்டிபயாடிக் மருந்தையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஓடிசி மருந்துகள் எளிதாகக் கிடைப்பதால் அவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளும் சுபாவம் நமக்கு வந்துவிடுகிறது. ஆனால், எந்தப் பொருளுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதான் என்பதை உணர வேண்டும்.

மேலும், ஏற்கெனவே ஒரு நோயால் நாம் பாதிக்கப்பட்டிருக்கும்போது, குறிப்பிட்ட சில மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்தில் முடியும். குறிப்பாக, டெங்கு காய்ச்சல் சீஸனின்போது, நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஆஸ்பிரின் மாத்திரைகளைச் சாப்பிட்ட சிலருக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இந்தக் கொரோனா காலத்தில் காய்ச்சல் ஏற்பட்டால் பரிசோதனைக்குச் செல்லாமல் பாராசிட்டமால் போட்டுக்கொண்டு இருப்பதும் மிகவும் ஆபத்தானது.

மருந்துகள்
மருந்துகள்
pixabay

ஓடிசி மருந்துகளால் என்ன நன்மைகள் என்றால், சாதாரண சளி, காய்ச்சல், மற்றும் லேசான பேதி போன்றவற்றுக்கு மருத்துவமனை செல்லாமல் நாமே வைத்தியம் செய்துகொள்ளலாம். அப்போதும்கூட, மருந்துகளைப் பற்றிய அடிப்படை அறிவு, எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு போன்றவை இருந்தால் மட்டுமே இது பரிந்துரைக்கத்தக்கது.

அரசு என்ன செய்ய வேண்டும்?

முதலில், ஓடிசி மருந்துகளின் அட்டவணையை மத்திய அரசு வெளியிட வேண்டும். மருந்தாளுநர்களையும் மருந்து விநியோகிக்கும் கடைகளையும் முறைப்படுத்தவேண்டும். ஓடிசி மருந்துகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.