Published:Updated:

`டாக்டர் சாந்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?!' - நினைவுகள் பகிரும் தங்கை சுசீலா

சாந்தாவின் உற்ற துணையாக இருந்த அவரின் தங்கை சுசீலா, சாந்தாவின் அறைக்குள் நம்மை அழைத்துச் சென்றார். மிகவும் யோசித்தவர், `அக்காவின் எளிமையான வாழ்க்கையைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளட்டும்' என்று சாந்தாவின் அறையை புகைப்படம் எடுக்க அனுமதித்தார்.

மக்களின் மருத்துவராக வாழ்ந்து மறைந்துள்ளார் டாக்டர் சாந்தா. இவர் காட்டிய வழியில், அறத்தின் வழியே செயல்படுகிறது சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனம். தன் எண்ணம், செயல், உலகம் என எல்லாமுமாகவே இருந்த இந்த நிறுவனப் பணிகளுக்காக, வெளியுலகம், கொண்டாட்டம், தனக்கான குடும்ப வாழ்க்கை என எல்லாவற்றையும் தியாகம் செய்த சேவை மனுஷி.

டாக்டர் சாந்தா
டாக்டர் சாந்தா

புற்றுநோய் நிறுவனத்தின் சிறிய குடியிருப்பில்தான் சாந்தா வசித்து வந்தார். அதில் வரவேற்பறையில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிப்பார். அவரது பெட் ரூம், டைனிங் ஹால் பகுதிகளில் வெளிநபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதில்லை. சாந்தாவின் மறைவால் வெறுமையில் தவிக்கும் புற்றுநோய் நிறுவனத்துக்குச் சென்றிருந்தோம்.

சாந்தாவின் உற்ற துணையாக இருந்த அவரின் தங்கை சுசீலா, சாந்தாவின் அறைக்குள் நம்மை அழைத்துச் சென்றார். மிகவும் யோசித்தவர், `அக்காவின் எளிமையான வாழ்க்கையைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளட்டும்' என்று சாந்தாவின் அறையை புகைப்படம் எடுக்க அனுமதித்தார்.

எளிமையும் பணிவுமாக அறப்பணிக்கு இலக்கணம் வகுத்த சாந்தா பயன்படுத்திய அறை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சிறிய கட்டில், எழுதப் படிக்கப் பழைய டேபிள், சிறிய டிவி மற்றும் கணினி, கோப்புகளை வைக்கும் அலமாரி, பழைய காலத்து மின் விசிறி, சில பழைய சேர்களைப் பயன்படுத்தி மிகவும் சிக்கனமான வாழ்க்கை முறையையே கடைப்பிடித்திருக்கிறார். அந்த அறையில் மருத்துவமனை சார்ந்த கோப்புகள்தான் அதிகம் இருந்தன.

சாந்தாவின் அறை
சாந்தாவின் அறை

மத்திய, மாநில அரசுகளிடம் விடாப்பிடியாக வலியுறுத்தி, புற்றுநோய் நிறுவனத்தை ஏக்கர் கணக்கில் விரிவுபடுத்தி, சிகிச்சையளிக்கும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார் சாந்தா. ஆனால், அரை நூற்றாண்டுக்கும் மேல் சாந்தாவின் சுவாசம் இந்தச் சிறிய அறைக்குள்தான் சுழன்றிருக்கிறது. அத்தியாவசியத் தேவைக்கு மீறிய ஆடம்பரமான எந்தப் பொருளையும் இவர் பயன்படுத்தியதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவரது சேவைப் பணிகளுக்காகக் கிடைத்த இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் மூன்றும், ஆசியாவின் உயரிய விருதான `மகசேசே' விருதும் வரவேற்பறையின் ஒரு மூலையில் உறங்கிக்கொண்டிருந்தன. திரும்பிய பக்கமெல்லாம் விருதுகள், புத்தகங்கள், கோப்புகள்தாம் சூழ்ந்திருந்தன. சாந்தாவின் சேவைப் பணியைப் போற்றும் வகையில், அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஆசைப்படி, சாந்தாவின் அஸ்தி, புற்றுநோய் நிறுவனத்தின் இரண்டு வளாகங்களின் அனைத்துப் பகுதிகளிலும் தூவப்பட்டுள்ளது.

சாந்தாவின் அறை
சாந்தாவின் அறை
`சென்டிமென்ட் செயின்... இறுதிக்கட்ட முடிவுகள்... கடைசி ஆசை!' - மருத்துவர் சாந்தா என்னும் சகாப்தம்

வரவேற்பறையில் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சாந்தாவின் புகைப்படத்தைப் பார்த்து கலங்கியவாறே, சகோதரி உடனான சில நினைவுகளைப் பகிர்ந்தார் சுசீலா.

``பெரிதாக அழுகை ஏதுமின்றி சாந்தமாகவே இருந்ததால்தான் அக்காவுக்கு `சாந்தா’ எனப் பெயர் வைத்துள்ளனர் பெற்றோர். வாழ்க்கை முழுவதுமே சாந்தமாகவே இருந்தார் அக்கா. கேள்வி ஞானத்தில் நன்றாகப் பாடுவார். இசை தவிர, மற்ற பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்த மாட்டார். அக்காவுக்கும் எனக்கும் 11 வயது வித்தியாசம். தாய் ஸ்தானத்தில்தான் என்னைக் கவனித்துக்கொண்டார். உறுதியான கொள்கையுடன் மருத்துவர் ஆனார்.

சாந்தாவின் அறை
சாந்தாவின் அறை

தொடக்க காலத்தில் அக்கா கைராசியான மகப்பேறு மருத்துவர். அக்காவின் முதல் தங்கை கமலாவுக்கு அவர்தான் பிரசவம் பார்த்தார். இந்த நிறுவனத்தில் மருத்துவராக இணைந்தவர், 1950-களில் இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். வெளிநாட்டில் படித்து புற்றுநோய் மருத்துவத்தில் அனுபவம் பெற்றார். ஓய்வுநேரத்தில் பணி சார்ந்த புத்தகங்களைப் படித்துக்கொண்டே இருப்பார். பண்டிகை காலம், விடுமுறை தினம் என எப்போதும் ஏதாவதொரு வேலையில்தான் கவனம் செலுத்துவார். அக்காவின் மருத்துவப் பணி, இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர் கொடுத்த உழைப்பைப் பார்த்து நான் பெருமிதப்படாத நாளே இல்லை.

புற்றுநோய் மையத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் எல்லாவற்றிலும் நானும் கலந்துகொள்வேன். அதன் மூலம்தான் இந்தியக் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள் உள்ளிட்ட பெரிய தலைவர்கள் பலரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தத் தலைவர்களிடம், புற்றுநோய் நிறுவன வளர்ச்சிக்கான உதவியைத் தவறாமல் முன்வைப்பார் அக்கா. அவர்களும் அக்காவுடன் அன்பாகப் பழகுவதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாகவும், அக்காவின் பொறுப்புமிக்க நிலையை எண்ணி பெருமையாகவும் இருக்கும்.

சுசீலா
சுசீலா

1954-ல் இந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்தபோது அக்காவின் ஊதியம் 200 ரூபாய். 1995-ல் அக்காவின் ஊதியம் 20,000 ரூபாய். அந்த ஆண்டு முதல் மறைவுக்காலம் வரை அக்கா ஊதியம் பெறாமல் சேவை நோக்கத்தில்தான் பணியாற்றினார். அதுவரை அவர் சேமித்த பணத்தை, நாங்கள் தொடங்கிய `ராமகிருஷ்ணா விவேகானந்தா டிரஸ்ட்’டுக்கு வழங்கிவிட்டார். இந்த அமைப்பு மூலம், புற்றுநோய் நிறுவன பணியாளர்களின் குழந்தைகளின் படிப்புக்கு உதவித்தொகை கிடைக்கிறது. மருத்துவப் பணிகளுக்காக உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அக்கா பயணம் செய்திருக்கிறார். சென்ற வேலை முடிந்ததும், மறுகணமே சென்னை திரும்பிவிடுவார். பொழுதுபோக்குக்காக எங்கும் செல்ல மாட்டார்.

அத்தியாவசியத் தேவைக்குப் போக ஒரு ரூபாய்கூட விரயமாகக் கூடாது என்பதில் கவனமுடன் இருந்தார். புற்றுநோயாளிகளைக் குணப்படுத்த வேண்டும், உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முறைகளை இந்த நிறுவனத்தில் வழங்க வேண்டும், வசதியற்றவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும், இந்த நிறுவனத்தை விரிவுபடுத்த வேண்டும். இதைத் தாண்டி, அக்காவுக்கு வெளியுலகம் எதுவும் தெரியாது. அவரைப் போல தான் கொண்ட கொள்கைக்கு முழுவதுமாக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நபரைக் காண்பது அரிது" என்று தளர்வான குரலில் முடித்தார் சுசீலா.

``சாந்தா அம்மாவின் வாழ்நாள் வைராக்கியம் இதுதான்!" - கெளதமி உருக்கம்
சாந்தாவின் அறை
சாந்தாவின் அறை

அக்கா சாந்தாவைப் பற்றிய சுசீலாவின் கூடுதலான நினைவுப் பகிர்வை, நாளை வெளியாகும் அவள் விகடன் இதழில் படிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு