Election bannerElection banner
Published:Updated:

̀`அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள அரசு செய்ய வேண்டியது இதுதான்!' - விளக்கும் மருத்துவர்

COVID-19 vaccine
COVID-19 vaccine ( AP Photo/Altaf Qadri )

கொரோனா தடுப்பூசி போடுவதில் பொதுமக்களுக்கு இருக்கிற தயக்கத்தை எப்படிப் போக்குவது?

ஒரு பக்கம் கொரோனா இரண்டாம் அலை பயம் காரணமாகப் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இன்னொரு பக்கமோ `கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவு' என்கிற செய்திகளைப் படித்த பயத்தால் தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறார்கள். கொரோனா தடுப்பூசி போடுவதில் பொதுமக்களுக்கு இருக்கிற தயக்கத்தை எப்படிப் போக்குவது, எல்லாரும் அவசியம் தடுப்பூசி போட்டுத்தான் ஆக வேண்டுமா என்று தொற்றுநோய் மருத்துவர் சுரேஷ் குமாரிடம் கேட்டோம்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

``60 வயதுக்கு மேல் இருப்பவர்கள் போட்டுக்கொள்ளுங்கள், 45 வயதுக்கு மேல் இருப்பவர்கள் போட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்காமல் எல்லாரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று அரசு அறிவித்தால் மட்டுமே, தடுப்பூசி போட்டுக்கொள்வதில் இருக்கிற பயமும் தயக்கமும் போகும். இதைவிட முக்கியமாக, கொரோனா தடுப்பூசியை எல்லா மருத்துவ மனைகளிலும் கிளினிக்குகளிலும் போட்டுக்கொள்ளும் வசதியை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு நன்கு பழக்கமான மருத்துவர்களிடம் சென்று தயக்கமில்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள். அந்த மருத்துவர்களுக்கும் `இவருக்கு நீரிழிவு இருக்கு, அவருக்கு ஒவ்வாமை இருக்கு. இவங்களுக்குக் குறிப்பிட்ட மருத்துவ பாதுகாப்புடன் தடுப்பூசி போட வேண்டும்' என்பது தெரியும். இதனால், மக்களுக்குப் பக்க விளைவுகள் குறித்த பயம் போகும்.

இரண்டாம் அலை வந்துவிட்டது. அதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், வயதை வைத்தோ, கோமார்பிடிட்டியை வைத்தோ தடுப்பூசி போடுவதைத் தீர்மானிக்கக் கூடாது. எல்லா வயதினரும் போட வேண்டும். அதுதான் பாதுகாப்பு.

தொற்று நோய் நிபுணர் சுரேஷ் குமார்
தொற்று நோய் நிபுணர் சுரேஷ் குமார்
கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டால் இறால், புரொக்கோலி சாப்பிடக்கூடாதா? #ExpertExplains

சில மேலை நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போதுமான அளவு இல்லை. அதனால், வயது வாரியாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டில் தடுப்பூசிகளும் இருக்கின்றன. ஏற்றுமதி செய்கிற அளவுக்கு ஸ்டாக் இருக்கிறது. அதனால், எல்லாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். அதற்கு எல்லா மருத்துவமனைகளிலும் தடுப்பூசி கிடைப்பதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்'' என்றார்.

அரசு யோசிக்குமா?

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு