Election bannerElection banner
Published:Updated:

உலகம் முழுவதும் உலுக்கியெடுக்கும் உருமாறிய கொரோனா... யாருக்கு ஆபத்து அதிகம்? விளக்கும் மருத்துவர்

corona virus
corona virus ( Pixabay )

தேர்தல் காலம் ஒருபுறம், கொரோனா பரவல் மறுபுறம் என ஒருவித அச்சத்துடனேயே மக்கள் இருந்துவருவது உண்மையே. இந்நேரத்தில் நாம் அறிய வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் சில உள்ளன.

2019-ம் ஆண்டு முதல் உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 எனும் கொரோனா வைரஸ் தொற்று, தற்போது ஒவ்வொரு மாகாணமாக தம் முதல் அலை முடிந்து, இரண்டாம் அலையின் நகர்தலில் இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் மட்டும் மூன்றாம் அலை ஆரம்பித்திருப்பதாகத் தகவல். இந்தியாவிலும் கொரோனாவின் இரண்டாம் அலை கிட்டத்தட்ட 5 மாநிலங்களில் உருவாக ஆரம்பித்து தற்போது தமிழகத்திலும் மிக வேகமாகப் பரவி வருகிறது. தேர்தல் காலம் ஒருபுறம், கொரோனா பரவல் மறுபுறம் என ஒருவித அச்சத்துடனேயே இருக்கிறார்கள் மக்கள். இந்நேரத்தில் நாம் அறிய வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் சில உள்ளன.

தற்போது இந்தியாவில் இருக்கும் கொரோனா, இரு உருமாற்றம் (DUAL MUTATION) அடைந்திருக்கிற வைரஸ். இதை NOVEL VARIANT OF CONCERN FROM INDIA எனச் சொல்கின்றனர். இந்திய அரசின் கீழ் இயங்கும் சுகாதாரத்துறை, கொரோனா வைரஸ்களில் தோன்றும் புதிய உருமாற்றங்களைக் கண்டறிவதற்காக, தற்போது இருக்கும் வைரஸ் மாதிரிகளில் மரபணு பகுப்பாய்வு (Genomic sequencing) செய்வதற்கென பத்து ஆய்வுக்கூடங்களை ஒருங்கிணைத்திருக்கிறது.

Corona
Corona

அதற்கென INDIAN SARS COV2 CONSORTIUM ON GENOMICS சுருக்கமாக INSACOG என்ற ஒரு சிறப்புப் பிரிவை உருவாக்கி இருக்கிறது. கொரோனா பாதித்த 10,787 மனிதர்களுடைய மாதிரிகளில் ஆய்வு நடத்திய இந்தச் சிறப்பு பிரிவு இதுவரை 771 உருமாற்றங்கள் தென்படுவதாகக் கண்டறிந்துள்ளது. அவற்றுள் 736 மாதிரிகளில், யுகே வேரியன்ட் (UK VARIANT) என்று அழைக்கப்படும் B.1.1.7 என்ற கொரோனா இருந்ததாகக் கூறி இருக்கிறது. இந்த உருமாற்றமானது முந்தைய வைரஸ்களைவிட அதிக வீரியத்துடன் பரவும் என்றும், கூடுதலாக மரணங்களை உண்டாக்கும் என்றும் இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகள் கூறுகின்றன என்பது கூடுதல் தகவல்.

ஹெர்மன் மற்றும் பிரிட்டன் நாடுகளில் இயங்கும் NERVTAG அமைப்பும் இந்த உருமாறுதல் குறித்து கடுமையான எச்சரிக்கையை எழுப்பியுள்ளது. கண்டெடுக்கப்பட்ட 34 மாதிரிகளில் தென்ஆப்பிரிக்க வேரியன்ட் என்று அழைக்கப்படும் B.1.351 எனும் உருமாறுதல் இருப்பதும், இந்த வேரியன்ட் தடுப்பூசிகளின் நோய் தடுக்கும் திறனைக் குறைக்க வல்லது என்பதும் தென்ஆப்பிரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவற்றுள் ஒரு மாதிரியில் P.1 என்று அழைக்கப்படும் பிரேசில் வேரியன்ட்டும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் புதிய உருமாறுதல் தாக்கத்தால் பிரேசில் இரண்டாவது அலையைத் தற்போது சந்தித்து வருகிறது. அதன்படி அங்கே ஒரு நாளைக்கு பல ஆயிரம் மரணங்கள் நிகழ்கின்றன என்பது அச்சம் கிளப்புகிறது.

Dr.சஃபி.M.சுலைமான்
Dr.சஃபி.M.சுலைமான்
அதிகம் பாதிக்கப்படும் இளைஞர்கள்; நிரம்பும் மருத்துவமனைகள்; தடுப்பூசி தட்டுப்பாடு... கொரோனா அலர்ட்!

இதில் மேற்சொன்ன மூன்று வேரியன்ட்களும் பல்வேறு உலக நாடுகளில் ஏற்கெனவே கண்டறியப்பட்டு உறுதிசெய்யப்பட்ட உருமாற்றங்கள். இவற்றை சிறப்பு கவனத்தைக் கோரும் வகைகள் என (VOC) என்று அடையாளம் கண்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனால், இந்த மாதிரிகளில் மகாராஷ்டிராவில் இருந்து பெறப்பட்ட 15-20% மாதிரிகளில் இதற்கு முன் நாம் எங்கும் கண்டிராத உருமாற்றங்களைக் கொண்ட புதிய உருமாற்றமடைந்த கொரோனா கண்டறியப்பட்டது.

அது இரண்டு இடங்களில் உருமாற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வைரஸின் மரபணு வரிசைகளில் E484Q என்ற இடத்திலும் அடுத்ததாக L452R என்ற இடத்திலும் உருமாற்றம் இருப்பதாகக் கணடறியப்பட்டு இருக்கிறது.

மேற்சொன்ன தகவல்களில் நமக்கு பாதகமானது E484Q உருமாற்றம் ஆகும். காரணம் இந்த உருமாற்றம் நமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதனால் உண்டாகும் எதிர்ப்பு சக்தியை ஊடுருவி நம் எதிர்ப்பாற்றல் நலனுக்கு மிகப்பெரிய சேதாரம் ஏற்படுத்தக்கூடியது. மேலும் L452R என்பது நமக்கு ஏற்கெனவே இருந்த வைரஸைவிட வேகமாகப் பரவும் தன்மையுடயைது என்றும் அடையாளம் காணப்பட்டு இருக்கிறது.

அதேபோல் நம் அண்டை மாநில கேரளாவில் 14 மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட 2032 மாதிரிகளில் 123 மாதிரிகளில் N440K என்ற வேரியன்ட் கண்டறியப்பட்டுள்ளது. இதே வேரியன்ட் இதுவரை ஆந்திராவில் இருந்து பெறப்பட்ட 33% மாதிரிகளில் இருந்தது தெலங்கானாவில் இருந்து பெறப்பட்ட 104 மாதிரிகளில் 53-ல் இருந்தது. பஞ்சாபில் இருந்து கடந்த 1.1.2021 முதல் 10.3.2021 வரை பெறப்பட்ட 401 மாதிரிகளில் 326 மாதிரிகளில் B.1.1.7 எனும் UK வேரியன்ட் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வேரியன்ட் பரவுவதால் முன்பைவிட இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சதவிகிதம் உயர்ந்திருப்பதாக பஞ்சாப் முதல்வர் அறிவித்திருக்காறார் என்பது கூடுதல் அதிர்ச்சி.

மேலும், தற்போது பரவிவரும் உருமாறித் தொற்றும் கொரோனா, முதல் அலை தொற்று போல் அல்லாது சிறுவயதினர் உட்பட அனைவரையும் பாகுபாடில்லாது தாக்குவதாக அறியப்படுகிறது. மேலும் இளவயது நோயாளிகள், பெரிதான எந்தவிதமான அறிகுறிகள் இல்லாமல் இருப்பது மேலும் கவலைகொள்ள வைக்கிறது.

கொரோனா
கொரோனா

வழக்கமாக வரும் இருமல், காய்ச்சல், உடல்சோர்வு, உடல்வலி, தொண்டைவலி போன்ற அறிகுறிகள் இருந்து அவர்களைத் தனிமைப்படுத்தி அடுத்தவருக்கு நோய் தாக்காது காக்க முயலலாம்.

ஆனால், அறிகுறிகள் இல்லாது பாதிக்கும் இவ்வகை நோயால் தொற்று எண்ணிக்கையும் கூடிட வாய்ப்புகள் அதிகம். மேலும், இளவயதினருக்கு வரும் கொரோனா சாதாரண அறிகுறிகள் தென்படாமல், நுரையீரல் மற்றும் இதர உடல் உறுப்புகளை சேதப்படுத்துவதும் வெகுவாக நடக்கிறது என்பதும் கவலைக்குரிய தகவல். இதனால் இறப்பு விகிதம் மிக அதிகமாகக் காணப்படவும், அப்படி உயிர் இழப்பவர்கள் பெரும்பாலும் இளைய சமுதாயத்தினராக இருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. இவர்களில் ஒருசிலருக்கு இந்த உருமாற்றம் அடைந்த வைரஸ் தொற்றை RTPCR பரிசோதனை மூலம் அறிந்திடவும் முடிவதில்லை என்பது உள்ளபடியே பெரும் அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.

தேர்தல், விடுமுறை தினம், கொண்டாட்டங்கள், ஒன்றுகூடல்கள் என கொரோனாவை மறந்து சர்வ சாதாரணமாக மாறிப்போன மனித குலத்துக்கு ஒரு மிகப்பெரிய பேரிடி இந்தப் புதியவகை கொரோனா என்பதே மருத்துவ உண்மை.

ஆனால், நாம் முன்பு நம்மை பாதுகாத்தது போல் முகக் கவசம், தனிமனித விலகல், கைசுத்தம், ஒன்றுகூடல் தவிர்த்தல், முக்கியமாக, தடுப்பூசி உபயோகம் போன்றவற்றை முறையாகக் கடைப்பிடித்து வருவோமேயானால் இந்தப் புதுவகை உருமாற்றத்தையும் இரண்டாம் அலையையும் மிக எளிதாகக் கடக்கலாம். நோயை வெல்லலாம்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இந்தப் பெருந்தொற்றின் இரண்டாம் அலையில் பெரும்சேதம் தவிர்த்திட தேர்தல் ஆணையம் செய்திட வேண்டிய மிக முக்கியமான கடமைகள் சில உள்ளன.

- வாக்கு மையங்கள் மிகப் பாதுகாப்பாக இருந்திட உள்ளூர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆணை பிறப்பித்தல்.

- உள்ளே வந்து வாக்களிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்துதல்.

- வயது முதிர்ந்தவர்கள் மற்றும் உடல் நலம் பாதித்தவர்களுக்கு வாக்கு மையங்களில் முன்னுரிமை அளித்தல்.

- வாக்காளர்கள் நிற்கும் வரிசைகளில் தனிமனித இடைவெளி பேணிட வலியுறுத்துதல்.

- கை சுத்தம் பேணிட சானிடைசர் அல்லது சோப்பு கரைசல் உபயோகித்தல் (சில சமயம் ஆல்கஹால் உள்ள சானிடைசர்கள் ஓட்டு மையை அழிக்க வாய்ப்பு உண்டு.)

- கொரோனா பாதித்த நபர்கள் ஓட்டளிக்க ஒவ்வொரு வாக்கு மையத்திலும் தனி அறை ஒதுக்குதல், அங்குள்ள தேர்தல் பணியாளர்களுக்கு, பாதுகாப்பு உடை மற்றும் முக ஷீல்டுகள், கையுறைகள் கொடுத்துப் பாதுகாத்தல்.

- நோய் பாதித்து அறிகுறிகள் இல்லாமல் வாக்களிக்க வரும் நபர்கள் உபயோகிக்கும் பூத் ஸ்லிப், அடையாள அட்டை, ஆதார் கார்டு, பேனா மற்றும் ஈவிஎம் ஓட்டு இயந்திரம் போன்றவை உபயோகிக்கும் முன்னரும் பின்னரும் அடுத்தவருக்கு வாக்கு மையம் மூலம் நோய் பரவாது தடுத்திட நோய்த்தடுப்பு முறைகளைச் சரியாகப் பேணிட அறிவுறுத்த வேண்டும்.

- தேர்தல் திருவிழா ஒரு நாள் கொண்டாட்டமாக வந்து போகும், இதனால இவ்வகை உருமாறிய கொரோனா தாக்கினால், நம் தேர்தல் முடிவுகள் வரும் முன்னர் மிக மோசமான அலை தாக்கத்தினால் நாம் பாதித்திட வாய்ப்புண்டு.

election vote counting
election vote counting
Photo: Vikatan / Sakthi Arunagiri.V

எனவே, தேர்தல் ஆணையமும் மாநகர, நகர, கிராம உள்ளாட்சி அமைப்புகளும் ஆட்சியர்களும், தேர்தல் அதிகாரிகளும், முக்கியமாக மக்களாகிய நாமும் மிக எச்சரிக்கையாக இருந்திட வேண்டிய நாள் இந்தத் தேர்தல் நாள்.

வாக்களிப்பது நம் ஜனநாயக கடமை, நல்ல உறுப்பினர்கள் கொண்ட ஆட்சியைத் தேர்ந்தெடுப்பது நம் தனிப்பட்ட உரிமை. கொடுமையான கொரோனா நோயின் தாக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாத்து அடுத்த அலையைத் தவிர்ப்பது நம் அனைவருடைய தற்போதைய அவசர கடமை.

சிந்தித்துச் செயல்படுவோம். அடுத்த புதிய உருமாறிய கொரோனா நோய்த் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்வோம். மறவாமல் வாக்களிப்போம். மறவாமல் தடுப்பூசியும் போட்டுக் கொள்வோம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு