Published:Updated:

கொரோனா காலத்திலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டிய 5 எமர்ஜென்ஸி உடல்நலப் பிரச்னைகள்!

மருத்துவம்
மருத்துவம்

"ஆரம்பத்திலேயே எளிதாகக் குணப்படுத்தக்கூடிய பிரச்னைகளை, மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்ப்பதாலும், காலதாமதத்தினாலும் சிக்கலாக்கி, அவசரநிலைக்குக் கொண்டுசெல்கின்றனர்."

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் , மருத்துவமனைகள் மற்றும் மருந்துக் கடைகள் மட்டுமே செயல்படுகின்றன. இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக அவசரகால உடல்நல சிகிச்சைகளுக்குக்கூட மருத்துவமனைக்குச் செல்வதை மக்கள் தவிர்த்துவருகின்றனர்.

மருத்துவர் தவபழனி
மருத்துவர் தவபழனி

ஆரம்பத்திலேயே எளிதாகக் குணப்படுத்தக்கூடிய பிரச்னைகளை, மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்ப்பதாலும், காலதாமதத்தாலும் சிக்கலாக்கி, அவசரநிலைக்குக் கொண்டு செல்கின்றனர். மருத்துவமனைக்குச் சென்றால் கொரோனா தொற்று ஏற்படுமோ என்ற பயமே இதற்குக் காரணம். இந்த அலட்சியம் உயிரிழப்புகளைக்கூட ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

அவசரகால சிகிச்சை தேவைப்படும் பிரச்னைகளாகக் கருத வேண்டியவை பற்றி விளக்குகிறார், அவசர கால மருத்துவர் தவபழனி.

மூடப்பட்ட காவல் நிலையம், தீயணைப்பு நிலையம்! - கொரோனா தொற்று அதிகரிப்பால் அச்சத்தில் மதுரை

1 நெஞ்சு வலி , மூச்சுத்திணறல்

முன்பெல்லாம் நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால், மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வருவார்கள். ஆனால் இப்போது, கொரோனா பயத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டாலும் வீட்டிலேயே சுய மருத்துவம் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வருவதைத் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். நெஞ்சு வலி பொதுவாக இதயத்தில் ஏற்படும் பல நோய்களுக்கான அறிகுறியாக இருக்கும்.

சுய மருத்துவம்
சுய மருத்துவம்

இதற்கு, அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை பெற்றால்தான் உயிரிழப்பைத் தடுக்க முடியும் மூச்சுத்திணறல், பல்வேறு உடல் உபாதைகளால் ஏற்படும் என்பதால், குறிப்பிட்ட பிரச்னைக்கான அறிகுறி என்று சொல்லிவிடமுடியாது. அதனால் மூச்சுத்திணறலை அலட்சியப்படுத்தாமல் உரிய சிகிச்சை பெற்றால், அதனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து எளிதில் மீளலாம். பலர், நீண்ட நேரம் அறிகுறிகள் தொடர்ந்தால் மட்டுமே மருத்துவரைச் சந்திக்க வருகின்றனர். இதனால் சுலபமாகக் குணப்படுத்தக்கூடிய இதயநோய்கூட சவாலாகிவிடுகிறது.

சுய மருத்துவம் பேராபத்து!

2 சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள்

தீவிர சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், வாரத்தில் இரண்டு மூன்று முறை டயாலிசிஸ் செய்துகொள்ளவேண்டியது அவசியம். இதைச் செய்யாமல் நீண்ட நாள் தள்ளிப்போடும் பட்சத்தில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். மருத்துவமனை தரப்பில் டயாலிசிஸ் யூனிட்டுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இயங்குகின்றன. அரசும் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் யூனிட்டை நல்ல முறையில் பராமரிக்கிறது. இதனால் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பயமில்லாமல் மருத்துவமனைக்குச் சென்று டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

சிறுநீரகம்
சிறுநீரகம்

3 நீரிழிவுநோய் உள்ளவர்கள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கு ஏதேனும் வலி, காயம் அல்லது உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.இவர்கள், உடலின் சர்க்கரை அளவை சரியான இடைவேளைகளில் பரிசோதிக்க வேண்டும். நீண்ட நாள் காயங்கள் அல்லது வலி இருந்தால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

எடைக் குறைப்பு முதல் நீரிழிவு தடுப்பு வரை! -சிறுதானியங்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? #Myvikatan

4 தலை, கால், கழுத்துப் பகுதிகளில் காயம்

நமது உடலில் தலை ,கால் ,கழுத்து ஆகிய பகுதிகள் மிக முக்கியமானவை. இவற்றில் அடிபட்டு உள் காயங்கள் ஏற்பட்டால் அறிகுறிகள் தெரியாது. அதனால் அடிபட்ட உடனேயே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். வீட்டிலேயே சுய மருத்துவம் மேற்கொண்டிருந்தால், காயம் அதன் தீவிரநிலையை அடைந்து, சில நேரம் உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.

மூட்டு வலி
மூட்டு வலி

5 விஷப் பொருள்களால் ஏற்படும் ஆபத்துகள்

தூக்க மாத்திரை அதிக அளவில் சாப்பிடுவது, விஷம் உட்கொள்ளுதல், மது கிடைக்காததால் அதற்கு மாற்றாக மெத்தனால் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும் திரவத்தைக் குடித்தல் உள்ளிட்டவை விஷமாக மாறி உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். விஷப் பொருள்களால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். வீட்டிலேயே இருக்கும் மருந்துகளைப் பயன்படுத்தி நஞ்சை முறிக்க நினைத்தால் விபரீதமாக்கூடும் . இதை அவசர கால சிகிச்சைக்கு உட்படுத்தவேண்டியது அவசியம். இந்த மாதிரியான ஆபத்துகளுக்கு, சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவேண்டியது கட்டாயம்.

காயங்கள், மயக்கம், லோ சுகர்.... அவசர நிலைகளும் அவசிய முதுலுதவிகளும்

6 அதிக ரத்தப்போக்கு

சில நேரங்களில் எதிர்பாராத காயங்களால் அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். அப்படிப்பட்ட நேரத்தில் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போடவேண்டிய அவசரமோ அல்லது வேறு ஏதேனும் சிகிச்சையோ தேவைப்படலாம். அலட்சிப்படுத்தினால் காயத்தின் தன்மை தீவிரமடையக்கூடும். ரத்த இழப்பும் அதிகரிக்கும்.

செல்போன்களிலேயே நடக்கும் மருத்துவம்
செல்போன்களிலேயே நடக்கும் மருத்துவம்

மருத்துவரிடம் போனிலோ, வீடியோ காலிலோ அறிவுரைகள் பெற்று சரிசெய்துகொள்ளக்கூடிய விஷயங்களுக்கு, மருத்துவமனை விசிட்டைத் தவிர்க்கலாம். அதேநேரம் அவசியமான, அவசரமான உடல்நலக் கோளாறுகளுக்கு மருத்துவமனைகளை நாடுவதில் தவறில்லை. கொரோனாவுக்கு பயந்து, பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொண்டு, வேறு பிரச்னைகளுக்கு இலக்காகி உயிரிழந்துவிட வேண்டாம்.

அடுத்த கட்டுரைக்கு