Published:Updated:

பெண்களைக் கீழ்மைப்படுத்தும் மாதவிடாய் சர்ச்சைகள்... மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

News Report
News Report ( ahmedabadmirror.indiatimes.com )

மாதவிடாய் நாள்களில் பெண்களுக்கு ஓய்வு தேவை என்பதால்தான், அப்போது அவர்களைச் சமைக்க வேண்டாம் என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள். அதை மீண்டும் மீண்டும் அழுந்தச் சொல்ல வேண்டியதற்கான சூழல்களை, இதுபோன்ற பேச்சுகள் ஏற்படுத்துகின்றன.

பெண்களைக் கீழ்மைப்படுத்தும் வார்த்தைகள் சினிமா, அரசியல் பிரபலங்களிடமிருந்து வந்து சர்ச்சையை ஏற்படுத்துவது அவ்வப்போது நடக்கும். அந்த வரிசையில், `மாதவிடாய் நாள்களின்போது கணவருக்கு சமைக்கிற பெண் அடுத்த ஜென்மத்தில் பெண் நாயாகப் பிறப்பாள். அவர் சமைத்த உணவைச் சாப்பிடும் கணவர் அடுத்த ஜென்மத்தில் எருதாகப் பிறப்பார்' என்று பேசியிருக்கிறார் சுவாமி க்ருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி என்பவர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் உள்ள ஸ்ரீ சுவாமி நாரணன் கோயிலைச் சேர்ந்த இவர், எப்போதோ பேசிய இந்த வீடியோ சமீபத்தில் வைரலாகி கண்டனங்களைப் பெற்றது.

Women Empowerment
Women Empowerment

மாதவிடாய் நாள்களில் பெண்களுக்கு ஓய்வு தேவை என்பதால்தான், அப்போது அவர்களைச் சமைக்க வேண்டாம் என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள். அதை மீண்டும் மீண்டும் அழுந்தச் சொல்ல வேண்டியதற்கான சூழல்களை, இதுபோன்ற பேச்சுகள் ஏற்படுத்துகின்றன.

மாதவிடாய் ஆரம்பித்ததுமே குளிக்க வேண்டும் என்ற பழக்கத்துக்கு, `உடல் சூடு தணிவதற்காகத்தான் இந்த உடனடிக் குளியல்' என இயற்கை மருத்துவம் காரணம் சொல்கிறது. அது சுத்தம், சுகாதாரத்துடன் தொடர்புடையது என்று ஆங்கில மருத்துவம் சொல்கிறது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க, அதிகாலையில் மாதவிடாய் ஏற்பட்ட குடும்பத் தலைவிகள், `சமைக்கணும் கணவரை ஆபீஸுக்கு அனுப்பணும், பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பணும், அப்புறம் குளிச்சுக்கலாம்' என்ற மனநிலையில்தான் தற்போது இருக்கிறார்கள். இது இயல்பானது, நடைமுறைக்கு ஏற்றதும்கூட.

பெண்களின் ஓய்வுக்காகச் சொல்லப்பட்டதை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்துகிறார்கள்
பெண்களின் ஓய்வுக்காகச் சொல்லப்பட்டதை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்துகிறார்கள்

வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட இன்றைய நிலையில், ஆலைகளுக்கு வேலைக்குச் செல்லும் கிராமத்துப் பெண்கள் முதல், மெட்ரோ பாலிட்டன் சிட்டிகளில் விரையும் பெண்கள்வரை, மாதவிடாய் வலியை எல்லாம் கணக்கிலேயே கொள்ளாமல் வேலை வேலையென்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள் பலர். `பணியிடங்களில் மாதவிடாய் நாள்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும்' போன்ற பேச்சுகள் தற்போது எழுந்துள்ளன. அவை அங்கொன்றும் இங்கொன்றும் எனச் சில நிறுவனங்களில் செயலுக்கு வந்திருப்பது பாசிட்டிவ் செய்தி. இந்நேரத்தில் மாதவிடாய் பற்றிய மூடத்தனமான பேச்சுகளையும் நாய், மாடு என்று உளறுபவர்களையும் என்னவென்று சொல்வது?

மாதவிடாய் நேரத்தில் பெண்களைத் தனிமையில் இருக்க வைத்தது, அந்நாள்களில் அவர்கள் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றக் கூடாது, ஊறுகாயைத் தொடக்கூடாது என்று வரையறுத்திருந்தது என, இந்த மூடநம்பிக்கைகள் பற்றிச் சில மருத்துவர்களிடம் பேசினோம்.

மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ கஜராஜ், சித்த மருத்துவர் செல்வ சண்முகம், இயற்கை மருத்துவர் யோ.தீபா
மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ கஜராஜ், சித்த மருத்துவர் செல்வ சண்முகம், இயற்கை மருத்துவர் யோ.தீபா

மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ கஜராஜ், ``மாதவிடாய் என்பது முழுக்க முழுக்க உடலியல் சார்ந்த விஷயம் அவ்வளவுதான். மாதவிடாய் ரத்தத்துடன் எந்த விதமான விஷப்பொருளோ, ஹார்மோனோ வெளிவருவதில்லை. கர்ப்பப்பை சுருங்கி விரிந்து மாதவிடாய் வெளியேறுவதால் வலி ஏற்படலாம். இதனால்தான், அந்த நாள்களில் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டது. அதைக் கொஞ்சம் அழுத்தமாகச் சொன்னால்தான் ஆண்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்காக, `தனியாக உட்காரு', `சமைக்காதே', `எந்தப் பொருளையும் தொடாதே', `எந்த வேலையும் செய்யாதே' என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

`வேலை செய்யாதே' என்பதிலேயே `செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றாதே', `ஊறுகாய் ஜாடியைத் தொடாதே' போன்றவையும் அடங்குகின்றன. ஆனால், பெண்களின் ஓய்வுக்காக வலியுறுத்தப்பட்ட இந்த விஷயங்களை, அவர்களை ஒடுக்குவதற்காகக் கையில் எடுத்துக்கொண்டது துரதிர்ஷ்டம். இன்றைய தனிக்குடித்தனங்களில் மாதவிடாய் நேரத்தில் தன் குடும்பத்துக்கான தனது பணிகளை பெண் தானேதான் செய்கிறாள். காலமாற்றத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறை மாறுவது இயல்பான ஒன்று'' என்றார்.

women empowerment
women empowerment

இயற்கை மருத்துவர் யோ.தீபா, ``அந்த நேரத்தில் பெண்கள் தனியாக இருக்க வேண்டும், தனியாகப் படுக்க வேண்டும் என்று சொன்னதற்கு, சில காரணங்களைக் கணிக்கலாம். நம் அம்மாக்களும் பாட்டிகளும் மாதவிடாய் நேரத்தில் துணிகளைத்தான் பயன்படுத்தினார்கள். மாதவிடாய் உதிரம் கட்டுப்பாட்டை மீறி கறையாகும்போது, அது அவருக்கும் அவர் அருகிலிருப்பவர்களுக்கும் ஏற்படுத்தும் அசௌகர்யத்தைத் தவிர்க்க, அவர்களைத் தனிமைப்படுத்தியிருக்கலாம்'' என்கிறார்.

Vikatan

சித்த மருத்துவர் செல்வ சண்முகம் பேசுகையில், ``இதுபோன்ற பேச்சுகளை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவே தேவையில்லை. அதைத்தாண்டி, மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு ஓய்வும் பாதுகாப்பும் அவசியம் என்று பெரியவர்கள் சொன்ன பாசிட்டிவ் விஷயத்தை, இதனால் மற்றவர்களுக்கு, செடி கொடிகளுக்கு, ஏன் ஊறுகாய் பாட்டில்களுக்குக்கூட ஆபத்து என்பதுபோல திரித்துச் சொல்லிவிட்டார்கள். இவற்றுக்கெல்லாம் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லை. இந்த நேரத்தில் பெண்களுக்கு ஊட்டமான உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் மருத்துவரீதியில் நிரூபிக்கப்பட்ட உண்மை'' என்றார்.

women empowerment
women empowerment
மாதவிடாய் இல்லை என்பதை நிரூபியுங்கள்.. மாணவிகளிடம் சர்ச்சை சோதனை நடத்திய குஜராத் ஆசிரியைகள்!

உதிரச் சங்கிலியிலிருந்து பெண்கள் தங்களை விடுவித்துக்கொண்டே வருகிறார்கள். இதுபோன்ற பேச்சுகள் சர்ச்சைக்கு மட்டுமே கைகொடுக்கும்; வலுவிழந்துகொண்டே வரும் சங்கிலியின் கண்ணியை இறுக்க நினைப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

அடுத்த கட்டுரைக்கு