Published:Updated:

`பீகாரிகளுக்கு நம்மளவிட மூளை கம்மி?!' - அமைச்சர் கே.என்.நேரு சொன்னதன் அறிவியல் உண்மை என்ன?

அமெரிக்காவிலும் வெள்ளை அமெரிக்கர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்களைவிட அறிவுத் திறன் மிக்கவர்கள் என்று விவாதிக்கப்பட்டது. அதைத் தெளிவுபடுத்துவதற்காக, இருதரப்புக்கும் இடையே ஐ.க்யூ பரிசோதனை நடத்தப்பட்டது.

மரபணு ஆய்வு, மனித மூளையின் செயல்பாடு, அறிவுத் திறன் ஆகியவை குறித்த பேச்சு வரும்போதெல்லாம், சில நாகரிகமற்ற கேள்விகளையும் சில கூட்டத்தினர் முன்வைக்கவே செய்கின்றனர். குறிப்பிட்ட சில சாதிகளைச் சேர்ந்தவர்கள், மற்ற சாதிகளைச் சேர்ந்தோரைவிட அறிவுத்திறனில் சிறந்தவர்கள் என்ற வாதத்தைச் சுற்றியே அத்தகைய கேள்விகள் சுழல்கின்றன.

அறிவுத்திறன் (மாதிரி படம்)
அறிவுத்திறன் (மாதிரி படம்)

இதில், குறிப்பாகச் சொல்லப்படும் ஓர் அம்சம் என்னவெனில், குறிப்பிட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதன் மூலம், அவர்களுடைய மரபணுவில் புதைந்திருக்கும் அறிவுத்திறன் முதல் ஆரோக்கியம் வரை அனைத்தும் அடுத்த சந்ததிகளுக்கு அப்படியே கிடைக்கும் என்றும் சிலர் வாதிடுகின்றனர். சாதியரீதியாக மட்டுமன்றி, பிராந்திய ரீதியாகவும் இதுபோன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. சமீபத்தில்கூட, அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்துப் பேசியபோது, ``நம்மைவிட பீகார்காரங்களுக்கு மூளை கம்மி" என்று கூறியுள்ளார்.

அதேபோல், வட இந்தியர்களைவிட தென்னிந்தியர்கள் அறிவாளிகள், தென்னிந்தியர்களிலும்கூட, குறிப்பிட்ட சில சாதிகளைச் சேர்ந்தவர்கள்தாம் மற்ற சாதிகளைச் சேர்ந்தவர்களைவிட அறிவுத்திறன் மிக்கவர்கள் என்று பல கோணங்களில் இந்த அறிவுத் திறன் சார்ந்த விவாதங்கள் ஆண்டாண்டு காலமாகப் பொறி கிளப்புகின்றன. இவர்களெல்லாம் சொல்வதுபோல் உண்மையாகவே குறிப்பிட்ட ஒரு சாதிக்காரருக்கோ, குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்தில் வாழ்பவர்களுக்கோ, குறிப்பிட்ட இனக்குழுவுக்கோ மூளையின் செயல்பாடும் அறிவுத் திறனும் அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளனவா என்பது பற்றி மனநல மருத்துவர் ஷாலினியிடம் பேசினோம்.

அறிவுத்திறன் (மாதிரி படம்)
அறிவுத்திறன் (மாதிரி படம்)

``அறிவியல் ரீதியாகப் பார்க்கையில் மூளைத்திறன் என்பது மரபணு அடிப்படையில் மட்டுமே வருவதில்லை. அவரவரின் வாழ்க்கை சூழ்நிலை, கிடைத்திருக்கும் ஆரம்பகால உணவு, தாய்-சேய் உறவு என்று பல காரணிகள் ஒருவரின் அறிவுத்திறனுக்குப் பின்னணியில் உள்ளன. அதேபோல, ஒருவருக்கு படிப்பினைக்கு உண்டான சாத்தியக்கூறுகள் எப்படியிருக்கின்றன என்பதும் இதில் பங்கு வகிக்கிறது. உதாரணத்துக்கு தாய்க்கு தினமும் செய்தித்தாள் படிக்கும் பழக்கமிருந்தால், அவரைப் பார்த்து குழந்தையும் அதைப் பழகி, சிறுவயதிலிருந்தே நிறைய கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைப் பெற்றிருக்கும். அதே குழந்தை, எழுதப் படிக்கத் தெரியாத ஒரு குடும்பத்தில் பிறந்திருந்து, அதற்குப் படிப்பதற்கான வாய்ப்பே அமையாத சூழலில் வளர்ந்திருந்தால், எவ்வளவுதான் மரபணு அடிப்படையில் திறன் இருந்தாலும் அது செயல்படாமலே போய்விடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆக, வெறும் மரபணு வழியாகவே ஒருவருக்குப் பிறக்கும் குழந்தையும் அறிவாளியாகவே இருக்கும் என்று சொல்லவே முடியாது. ஏனெனில், அறிவு என்பது ஒரேயொரு மரபணு மூலமாகக் கிடைப்பது அல்ல.

முந்தைய காலங்களில் நன்கு படிக்கும் ஏழைக் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து கல்வி கற்றுக்கொடுக்க அரசு முடிவு செய்தபோது, எந்தக் குழந்தைகளைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்விக்கு விடை காணவே IQ உருவாக்கப்பட்டது. அறிவில் பலவிதம் உண்டு. உதாரணத்துக்கு, ஒருவருக்கு கணக்கு நன்றாக வரும், ஒருவர் கலையில் சிறந்தவராக இருப்பார், ஒருவர் விளையாட்டில் சிறந்தவராக இருப்பார். ஆனால், பொது அறிவு என்று ஒன்றுண்டு. அதாவது, பொதுவான அனைத்தையும் மனிதர் கற்றுக்கொள்வதற்கான திறனை அடிப்படையாகக் கொண்டது. அந்தப் பொது அறிவு அதிகமாக இருப்பவர்கள்தாம், வாழ்வில் அதிக முன்னேற்றத்தை, அதிகாரத்தைப் பெற்று, உயர்ந்த இடங்களுக்குச் செல்கிறார்கள் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

மருத்துவர் ஷாலினி
மருத்துவர் ஷாலினி

ஆனால், இந்த பொது அறிவு பரம்பரை பரம்பரையாக வருகிறதா என்று பார்த்தால், அப்படி வருவதில்லை. ஒருவேளை ஒருவருக்குத் தன் குழந்தை அறிவுத்திறன் மிகுந்து பிறக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், அதற்கு அவர் வேற்று சாதியை, வேற்று இனத்தைச் சேர்ந்தவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும். சொந்த சாதியைச் சேர்ந்தவரையே திருமணம் செய்துகொள்ளாமல், புதிய நபரைத் திருமணம் செய்துகொள்ளும்போது, அந்த உறவிலிருந்து பிறக்கும் குழந்தைக்குப் புதிய மரபணுக்கள் கிடைக்கின்றன. அதோடு, நம் சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும்போது, ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளாமலே பெரும்பான்மை திருமணங்கள் நடக்கின்றன. அப்படியிருக்க, தன் துணையான ஓர் ஆணோ, பெண்ணோ மனரீதியாக எப்படிப்பட்டவர், மனரீதியான பிரச்னை ஏதேனும் இருக்கிறதா என்பது திருமணத்துக்கு முன்பே தெரியாது. அதனால், பிறக்கும் குழந்தையும் அத்தகைய மனக் குறையோடு பிறக்க வாய்ப்புகள் உள்ளன. ஒருவரை பற்றி ஒருவர் நன்கு தெரிந்துகொண்டு திருமணம் செய்துகொள்வது இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்கும்.

இவையெல்லாவற்றையும்விட முக்கியமாக பிரசவத்தின்போது, வளைகாப்பு போன்றவற்றில் செய்யும் சீர்களைக் குறைகூறி, கர்ப்பிணியின் மனதைக் காயப்படுத்துவது, பிரச்னைகளை வளர்ப்பது என்று பல மன உளைச்சல்களுக்கு ஆளாக்குவதும் பிறக்கும் குழந்தையின் அறிவுத்திறன் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த டென்ஷனிலேயே முன்கூட்டியே பிரசவிக்கும் பெண்களும் பலர் இருக்கிறார்கள். இப்படியாக, ஒருவருடைய அறிவுத்திறனைத் தீர்மானிப்பதில் பல காரணிகள் பங்கு வகிக்கின்றன. அவற்றைத் தவிர்த்துவிட்டு, குறிப்பிட்ட மக்கள் தொகைக்கு, மற்றவர்களைவிட அதிக அறிவுத்திறன் உள்ளதாகச் சொல்வது இனவாதம். தமிழர், பீகாரி என்று எப்படிச் சொன்னாலும் அது மிகவும் தவறானதுதான்" என்று கூறினார்.

மூளை (மாதிரி படம்)
மூளை (மாதிரி படம்)
``இந்த 3 காரணங்களைத்தான் `பேய் பிடித்துவிட்டது' என்கிறார்கள்!" - விளக்கும் மனநல மருத்துவர்

அமெரிக்காவிலும் வெள்ளை அமெரிக்கர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்களைவிட அறிவுத் திறன் மிக்கவர்கள் என்று விவாதிக்கப்பட்டது. அதைத் தெளிவுபடுத்துவதற்காக, இருதரப்புக்கும் இடையே ஐ.க்யூ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, வெள்ளை அமெரிக்கர்கள் நல்ல முடிவுகளைக் கொடுத்தனர். அதே பரிசோதனையைப் பின்னர் மீண்டும் செய்தனர். அதில் ஆப்பிரிக்க அமெரிக்க மாணவர்களிடம் அவர்கள் எழுதும் எலெக்ட்ரானிக் பேனாவை பரிசோதித்துப் பார்ப்பதற்காகவே இதைச் செய்வதாகச் சொல்லி, ஐ.க்யூ பரிசோதனையைச் செய்தனர். அப்போது, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, அவர்களுடைய அறிவுத்திறனை வெளிப்படுத்தினார்கள்.

இங்கு சில விஷயங்களைக் கருத்தில் எடுக்க வேண்டியது அவசியம் என்பதை ஆய்வு முடிவுகள் உணர்த்தின. முதலாவதாக, அமெரிக்காவில் வெள்ளை அமெரிக்கர்களைவிட மோசமான வறுமை, வன்முறை மற்றும் மகிழ்ச்சியற்ற போராட்டம் நிறைந்த வீட்டுச்சூழல் ஆகியவற்றை ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் எதிர்கொண்டுள்ளனர். இதனால், வெள்ளை அமெரிக்கர்களின் மரபணுவில் இருக்கும் அதிகார மனப்பான்மை இருக்காது. அவர்களுடைய சுயமரியாதை, தன்னம்பிக்கை அனைத்தும் பல நூறு ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டு, பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.

குழந்தைகள் (மாதிரி படம்)
குழந்தைகள் (மாதிரி படம்)
கூடுதல் பணத்தை அச்சிடுவது நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்ய உதவுமா? உண்மை என்ன?

ஆகையால், அவர்களுடைய மரபணுவில் தன் செயல்திறன் மீதான சந்தேகம், தன்னம்பிக்கை குறைவு ஆகியவை இருப்பது இயல்புதான். அதுவே, அவர்களுடைய அறிவுத் திறன் மீதான பரிசோதனை என்று சொல்லாமல், அவர்களுக்கே தெரியாமல் அறிவுத்திறன் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர்களுடைய அறிவுத்திறன் வெளிப்பட்டது.

அதாவது, மரபணுவுக்கும் அறிவுத்திறனுக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால், அவர்களுடைய அறிவுத்திறனை வெளிப்படுத்துவதில் சில சிக்கல்களைச் சந்தித்தனர். அதற்கு அவர்கள் வளர்ந்த சமுதாய சூழ்நிலைதான் காரணம். இப்போது இதை இப்படியே இந்தியாவில் பொருத்திப் பார்ப்போம். இங்கும் சில குறிப்பிட்ட மக்கள் குழுக்கள், இனவாதம், சாதிய பிற்போக்குத்தனம் ஆகியவற்றின் அடிப்படையில், இத்தகைய அணுகுமுறையைக் கையாளுகின்றனர். ஆனால், அவர்கள் அப்படிச் சொல்வதாலேயே மற்ற மக்களுடைய அறிவுத்திறன் குறைவு என்றாகிவிடாது என்று மருத்துவர் ஷாலினியின் விளக்கம் தெளிவுபடுத்துகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு