Published:Updated:

`மனஅழுத்தத்துக்கு காரணமும் தூக்கம்தான்... மருந்தும் தூக்கம்தான்!’ – மருத்துவர் விளக்கம்

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்குவதுதான் சரியான தூக்கம். அப்போதுதான் உடலின் இயக்கத்துக்குத் தேவையான நல்ல ஹார்மோன்கள் சுரக்கும்.

தூக்கம்
தூக்கம் ( Pixabay )

'ஊரு சனம் தூங்கிருச்சு...' என நள்ளிரவில் பாட்டு பாடிக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துவிட்டது. மாறிவிட்ட வாழ்க்கைச் சூழல் காலை 6 மணியை நள்ளிரவாகவும், இரவு 12 மணியை பகல் போலவும் மாற்றிவிட்டது. ஆனால் நம் உடலில் இருக்கும் உயிரியல் கடிகாரம் நமக்கேற்றாற்போல் மாறாது. தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் அல்லது ஆழ்ந்த தூக்கம் வராமல் தவிப்பது போன்ற பிரச்னைகள் நமது மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தி மனஅழுத்தம், மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

No Sleep
No Sleep

அண்மையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ஆய்வில், தூக்கமில்லா இரவுகள் ஒரு மனிதனின் மனப்பதற்றத்தை 30 சதவிகிதம் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக 18 இளைஞர்களின் தூக்கத்தை ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் இரவு ஆழ்ந்த தூக்கத்தில் ஈடுபட்டபோதும், தூக்கமில்லாத இரவுகளுக்குப் பிறகும் அவர்களின் மூளையின் செயல்பாடு தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டது. எம்.ஆர்.ஐ ஸ்கேன், பாலிதோம்னோகிராபி போன்ற பரிசோதனைகளின் மூலம் மூளையின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன.

அதன்படி, தூக்கமில்லாமல் இருந்த இரவுக்குப் பிறகு அந்த நபர்களின் மூளையில் மனப்பதற்றத்தை நிர்வகிக்கும் ஆழ்ந்த உணர்வு மையங்கள் தேவைக்கும் மேல் சுறுசுறுப்பாக இருந்தது கண்டறியப்பட்டது. ஆனால் ஆழ்ந்த தூக்கத்தில் ஈடுபட்ட நாளில் அந்த உணர்வு மையங்களின் செயல்கள் குறைவாக இருந்து, மனப்பதற்றத்தின் அளவு குறைந்துள்ளது தெரிய வந்தது. அந்த நிலையில் நரம்புகளின் செயல்பாடுகளில் காணப்படும் ஏற்ற இறக்கங்கள் சீராகி, இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் அனைத்தும் குறைவதாகக் கண்டறிந்துள்ளனர்.

தூக்கம் சீராக இல்லையென்றால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூளையில் திசுக்கள் எல்லாம் சோர்வடைந்துவிடும். அப்போது மனச்சோர்வை ஏற்படுத்தும் ரசாயனங்கள் மூளையில் சுரக்கும்.
தூக்கவியல் நிபுணர் ஜெயராமன்

18 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரே மாதிிரியான முடிவு வந்ததால், அடுத்து 30 நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சி தவிர இணையதளம் மூலமாக 280 நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அனைத்தின் முடிவிலும் மனப்பதற்றம், மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற குறைபாடுகள் இருப்பவர்களுக்கு இரவில் ஆழ்ந்த உறக்கமில்லாதது தெரிய வந்தது.

heart beat
heart beat

போதுமான அளவு தூக்கமில்லாமல் இருக்கும் நபர்களின் மனப்பதற்றத்தின் அளவு அதிகரிக்கும். மூளையில் இருக்கும் பதற்றத்தைத் தணிப்பதற்கு ஆழ்ந்த தூக்கம் உதவுகிறது என்று கண்டறிந்துள்ளனர். ஆழ்ந்த உறக்கம் மனப்பதற்றத்தைக் குறைக்கும் இயற்கையான காரணி. தினமும் இரவு ஆழந்த உறக்கத்தில் ஈடுபட்டால் மனப்பதற்றத்தில் இருந்து தீர்வு கிடைக்கும். அதனால் மனப்பதற்றம், மனச்சோர்வு, மனஅழுத்தம் போன்ற பிரச்னைகளுக்குத் தூக்கம் என்பது மருந்துகள் இல்லாத, இயற்கையான மருத்துவமாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனப்பதற்றப் பிரச்னையிருப்பவர்கள் தங்களுக்கு இரவில் தூக்கம் தடைபடுவது பற்றியும் ஆழ்ந்த உறக்கமில்லாததது பற்றியும் மருத்துவர்களிடம் தெரிவித்தாலும், அதைக் குறைப்பதற்கு தூக்கத்தைச் சீரமைக்க வேண்டும் என்ற தீர்வை மருத்துவர்கள் கொடுப்பதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Non sleepy eyes
Non sleepy eyes

ஒருவர் ஆழ்ந்த தூக்கத்தில் ஈடுபட என்ன செய்ய வேண்டும் என்று தூக்கவியல் நிபுணர் ஜெயராமனிடம் பேசினோம்:

``தூக்கத்துக்கும் மனநலத்துக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு. தூங்கும்போது ஆக்ஸிஜன் விநியோகம் இதயம், மூளை என அனைத்துத் திசுக்களுக்கும் சீராகப் போய்ச் சேரும். தூக்கம் சீராக இல்லையென்றால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு அந்தத் திசுக்கள் எல்லாம் சோர்வடைந்துவிடும். அப்போது மனச்சோர்வை ஏற்படுத்தும் ரசாயனங்கள் மூளையில் சுரக்கும்.

அதனால் இரவில் சரியாகத் தூங்காதவர்கள் அடுத்தநாள் காலையில் மனச்சோர்வுடனும் மனப்பதற்றத்துடனும் காணப்படுவார்கள். தூக்கம் தடைப்படுவதற்கான காரணிகளைக் கண்டறிந்து தடைப்படும் தூக்கத்தைச் சரிசெய்துவிட்டால், ஆக்ஸிஜன் விநியோகம் சரியாக நடைபெற்று, ஆழ்ந்த தூக்கம் ஏற்படும்.

Dull
Dull

மற்றொரு வகையில் வேறு காரணங்களால் மனஅழுத்தத்தில் இருப்பவர்கள் அதிகம் தூங்குவார்கள். ஒருவர் மனஅழுத்தத்தில் இருக்கும்போது சில மணி நேரம் நன்கு தூங்கினால், அந்தச் சமயத்தில் மூளையில் பல்வேறு ஹார்மோன்கள் சுரக்கும். இது மனதுக்கு அமைதியைக் கொடுக்கும். உடலளவிலும் மனதளவிலும் அதிக உற்சாகத்தை உணர்வார்கள். நல்ல எண்ணங்கள், புதிய நேர்மறை எண்ணங்கள் தோன்றும்.

Dr.jayaraman
Dr.jayaraman

தூக்கத்தை REM (Rapid Eye Movement), - தூங்கும்போது கருவிழி அசைந்துகொண்டே இருப்பது, NREM (NonRapid Eye Movement) - தூங்கும்போது கருவிழி அசைவில்லாமல் இருப்பது என்று பிரிப்பார்கள். இவற்றில் NREM என்பதுதான் ஆழ்ந்த தூக்கத்தின் வகையைச் சார்ந்தது.

ஆழ்ந்த தூக்கம் ஏற்படுவதற்கு முதலில் சுகாதாரமான தூக்கம் (Sleep Hygiene) என்பதைப் பின்பற்ற வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி யவரை தூங்குவதுதான் சரியான தூக்கம். அப்போதுதான் உடலின் இயக்கத்துக்குத் தேவையான நல்ல ஹார்மோன்கள் சுரக்கும். தூங்கும் அறை இருட்டாக இருக்க வேண்டும், தூங்குமிடம் அதிக சத்தத்துடன் இருக்கக் கூடாது. இவையெல்லாம் சுகாதாரமான தூக்கத்துக்குக் காரணியாக இருக்கும்.

Sleep
Sleep

குறட்டை, தூக்கத்தில் சுவாசிப்பதில் பிரச்னை போன்றவை இருந்தால் அதற்கான சிகிச்சையை எடுக்க வேண்டும். மாலைக்கு மேல் டீ, காபி போன்றவற்றைத் தவிர்த்துவிட வேண்டும். இவையெல்லாம் மூளையின் செயல்பாட்டைத் தூண்டி விழிப்புடன் இருக்க வைக்கும். வயிறு நிறைய சாப்பிடக்கூடாது, எளிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Tea, coffee
Tea, coffee

தூங்குவதற்கு முன் மது குடிப்பது, புகைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. கடுமையான உடற்பயிற்சிகள் எதுவும் செய்யக்கூடாது. அவ்வாறு செய்பவர்கள் மாலை 6 மணிக்கே அதனை முடித்துவிட வேண்டும். தியானம், யோகா, பிராணயாமா போன்ற எளிய பயிற்சிகளைத் தூங்குவதற்கு முன்பு செய்யலாம். தூங்கும் நேரத்துக்கான அட்டவணையைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். விடுமுறை நாள்களிலும் சரியாக அதே நேரத்துக்குத் தூங்குவதற்குச் சென்றுவிட வேண்டும். தூங்கும் நேரத்தில் கேட்ஜெட்டுகள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்" என்றார்.

தூக்கம் வரவில்லையா... உங்கள் ஜாதகம் சொல்லும் ரகசியம்!