Published:Updated:

`வீட்டுக்குச் செல்ல முடியாத அளவுக்குப் பணி!'- வுகானில் தன்னார்வலருக்கு உணவு எடுத்துச் செல்லும் நாய்

நாய்
நாய் ( CGTN )

நாய் தனது வாயில் மதிய உணவு உள்ள பையினைச் சுமந்து வருவதும் ஸியோ உணவைச் சாப்பிட்ட பிறகு அந்தப் பாத்திரங்கள் உள்ள பையினை மீண்டும் நாய் வீட்டிற்கு எடுத்துச் செல்வதுமாக ஒரு வீடியோவை சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் தனது ட்விட்டர் பகுதியில் பகிர்ந்துள்ளது.

``கொரோனா" - இந்தப் பெயரைக் கேட்டு உலகமே நடுங்கிக் கொண்டிருக்கிறது. சீனாவில் ஆரம்பித்த இதன் கோரத்தாண்டவம் இன்னும் முடிந்தபாடில்லை. கோவிட் -19 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் தற்போது சீனாவைத் தாண்டி கிட்டத்தட்ட 80 நாடுகளுக்கு மேல் பரவிவிட்டது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டிக்கொண்டிருக்கும் வேளையில் அனைத்து நாடுகளும் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு சுகாதார நடவடிக்கைகளைக் கையிலெடுத்து வருகின்றன. இந்நிலையில் அடிப்படை சுகாதார தற்காப்புப் பொருள்களான மாஸ்க், ஹேண்ட் சானிடைசர் போன்றவற்றிற்குச் சீனா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சீனாவில் மக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருள்களைக் கூட வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். தனது நாட்டைச் சேர்ந்த மக்களுக்குத் தன்னார்வலராக மாறி அவர்களுக்குத் தேவையான பொருள்களை வெளியிலிருந்து வாங்கித் தருகிறார் ஸியோ ஸியோ.

நாய்
நாய்
CGTN

இவர் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ள வுகான் பகுதியில் பார்சல் சேவை நிலையத்தை நடத்தி வருகிறார். தற்போது அப்பகுதியில் உள்ள மக்களால் அடிப்படை பொருள்களான காய்கறிகள், ஆடைகளை வெளியில் சென்று வாங்க இயலாததால் ஸியோ ஸியோ மக்களுக்குத் தேவையான பொருள்களை தன் பார்சல் சேவை நிலையத்தின் மூலம் மற்ற இடங்களிலிருந்து வாங்கி விற்பனை செய்து வருகிறார். இதனால் கடையிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் தன் வீட்டிற்குக் கூடச் சென்று உணவருந்த முடியாத நிலை ஸியோ ஸியோவிற்கு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் குறைகிறது, உலக நாடுகளில் பரவுகிறது... கொரோனாவின் உண்மை நிலைதான் என்ன?! #Corona360

எனவே, இவரின் செல்ல நாய் தினமும் இவருக்கு வீட்டிலிருந்து மதிய உணவு எடுத்து வருகிறது. நாய் தனது வாயில் மதிய உணவு உள்ள பையினைச் சுமந்து வருவதும், ஸியோ உணவைச் சாப்பிட்ட பிறகு அந்தப் பாத்திரங்கள் உள்ள பையினை மீண்டும் நாய் வீட்டிற்கு எடுத்துச் செல்வதுமாக ஒரு வீடியோவை சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க்(CGTN - China Global Television Network) தனது ட்விட்டர் பகுதியில் பகிர்ந்துள்ளது.

இது குறித்து ஸியோ கூறும்போது, ``நான் வசிக்கும் வுகான் பகுதியில் கொரோனாவினால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலர் அத்தியாவசியப் பொருள்கள் கூட கிடைக்காமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் பிப்ரவரி 8-ம் தேதியிலிருந்து இந்தத் தன்னார்வப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். வெளியிலிருந்து பொருள்களை வாங்கி, தேவையானவர்களுக்குக் கொடுத்து வருகிறேன்.

`உதவும் வெப்பநிலை?; தினமும் 9,000 அழைப்புகள்..!' -கொரோனா வைரஸை இந்தியா எப்படி எதிர்கொள்கிறது?

பொருள்கள் நிலையத்திற்கு வந்துகொண்டே இருப்பதால் என்னால் வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. இதனால் தினமும் என் நாய் எனக்கு மதிய உணவு எடுத்துவருகிறது. நான் உணவு அருந்தும்வரையில் அருகில் இருக்கும். பிறகு கிண்ணங்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுவிடும்" என்றார். இந்த வீடியோவைப் பார்த்த மக்கள் அனைவரும் ஸியோவையும், அவரின் நாயையும் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இது ஒருபக்கம் இருக்க கொரோனா வைரஸ் தற்போது மனிதர்களையும் கடந்து விலங்குகளுக்கும் பரவி வருகிறது. ஹாங்காங்கைச் சேர்ந்த பொமேரேனியன் வகை நாய்க்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. உலகில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட முதல் விலங்கு இதுதான். பாதிக்கப்பட்ட 60 வயது நோயாளியிடமிருந்து நாய்க்கு இந்த வைரஸ் பரவியதாகக் கூறப்படுகிறது. நாயிடமிருந்து, மற்றவர்களுக்கும் இது பரவ வாய்ப்புள்ளதால் அதைத் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

எனவே, ஒவ்வொருவரும் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள சுய சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்து நாடுகளின் சுகாதார அமைப்புகளும் கூறி வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு