Published:Updated:

`புற்றுநோய்க் கட்டியிலிருந்தே மருந்து!' - முற்றிலும் குணமான ஆஸ்திரேலிய நாய்

நாய் கிரிப்பின்ஸின் உடலிலிருந்த கட்டியிலிருந்து எடுக்கப்பட்ட செல்கள் மூலமே அதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கினர் மருத்துவர்கள்.

நாய் நலன்
நாய் நலன்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஜான்சன், தான் வளர்த்து வந்த ராட்வீலர் இனத்தைச் சேர்ந்த கிரிப்பின்ஸ் என்ற நாய்க்கு 2017 டிசம்பரில் ஒரு கட்டி இருப்பதைக் கவனித்தார். மருந்து, மாத்திரையால் சரியாகக்கூடிய சாதாரண கட்டிதான் அது என்று நினைத்தார். ஆனால் மருத்துவர்கள், அது சாதாரண கட்டி அல்ல, டிசெல் லிம்போமா (T cell lymphoma) என்ற புற்றுநோய்க் கட்டி என்றும், இன்னும் மூன்று மாத காலமே கிரிப்பின்ஸ் வாழும் என்றும் தெரிவித்தனர்.

தனது மருத்துவர் அனிகா ஒக்ஸாவுடன், கிரிப்பின்ஸ் நாய்
தனது மருத்துவர் அனிகா ஒக்ஸாவுடன், கிரிப்பின்ஸ் நாய்
ABC News

கிரிப்பின்ஸுக்கு இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்க முடிவெடுத்தார் ஆடம். அப்படி அதை நீக்கிவிட்டு, அறுவை சிகிச்சையின்போது போட்ட தையலை பிரிக்கச் சென்றபோது, அங்கு மேலும் மூன்று கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கட்டிகள் வேகமாக வளர்ந்திருந்தன. அவற்றைச் சோதனை செய்தபோது, அந்த நாய் 11 புற்றுக்கட்டிகளுடன் போராடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. ஆடன், தன் நாய்க்கு அடுத்தகட்ட சிகிச்சையளிக்க முடிவெடுத்தார்.

 நாய் வளர்க்கப் போறீங்களா? உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ்!
கிரிப்பின்ஸ், புற்றுநோய் சிகிச்சைக்குக் கொடுக்கப்படும் கீமோதெரபி சிகிச்சை தரப்படாமல், இம்யூனோ தெரபி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது.

கால்நடை மருத்துவரும், குயின்ஸ்லேண்ட் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளருமான அனிகா ஒக்ஸா, ஒரு சிகிச்சையை முன்னெடுத்தார். கிரிப்பின்ஸின் கட்டியிலிருந்து எடுக்கப்பட்ட செல்கள் மூலமே அதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கினார். அதாவது, கிரிப்பின்ஸின் புற்றுக்கட்டியிலிருந்து சிறு பகுதியை எடுத்து, ரசாயன மாற்றத்துக்கு உட்படுத்தி, அதையே ஊசி மூலம் நாய்க்குச் செலுத்தி, நாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அது பயன்படுத்தப்பட்டது.

நாய் - நோய் எதிர்ப்பு சக்தி
நாய் - நோய் எதிர்ப்பு சக்தி
ABC News

தடுப்பூசிபோல கிரிப்பின்ஸுக்கு வாரக்கணக்கில் செலுத்தப்பட்ட, அதன் உடம்பிலிருந்த கட்டியிலிருந்தே தயாரிக்கப்பட்ட இந்த மருந்து, கிரிப்பின்ஸின் புற்றுக்கட்டிக்கு எதிராக, அதை அழிக்கும் விதத்தில் செயல்பட ஆரம்பித்தது. இம்முறையில் தொடர் சிகிச்சை எடுத்த கிரிப்பின்ஸுக்கு புற்றுக் கட்டிகள் படிப்படியாக கரைய ஆரம்பித்தன.

மருத்துவர்கள் சொல்லிய மூன்று மாதக் கெடுவை பொய்யாக்கி, இன்றுவரை ஆரோக்கியமாக இருந்துவருகிறது கிரிப்பின்ஸ்!

கிரிப்பின்ஸ் உட்படுத்தப்பட்ட 8 வார கால சிகிச்சைக்குப் பின், கட்டி எதுவும் மீண்டும் வரவில்லை. பயங்கரமான புற்றுநோயிலிருந்து கிரிப்பின்ஸ் மீண்டது அனைவருக்கும் ஆச்சர்யம் தந்தது.

ஆடம் ஜான்சனுடன், கிரிப்பின்ஸ் நாய்
ஆடம் ஜான்சனுடன், கிரிப்பின்ஸ் நாய்
ABC News

இந்தச் சிகிச்சை முறையை சோதனை அடிப்படையில் இன்னும் பல நாய்களுக்கு மேற்கொண்டு அதன் முடிவுகளைப் பதிவு செய்து ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என்றும், தடுப்பூசி புற்றைக் கரைத்தது எப்படி, இதனுடன் வேறு சிகிச்சைகளையும் ஒருங்கிணைத்துச் செய்யலாமா எனவும் குயின்ஸ்லேண்ட் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். வரும் காலங்களில் இச்சோதனை முறையை மனிதர்களிடமும் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்க ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.

புற்றுநோயை முற்றிலும் வெல்லும் காலம் வரட்டும் சீக்கிரம்!