சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

பதற்றம் வேண்டாம். பாதுகாப்பே வேண்டும்!

கொரோனா விழிப்புணர்வு
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா விழிப்புணர்வு

``கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை மேம்போக்காகப் பார்த்தால் பீதியைக் கொடுப்பதாக இருக்கலாம்.

ற்போதைய நிலவரப்படி, உலகளவில் கோவிட்-19 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, லட்சத்தைத் தாண்டிவிட்டது.

கடந்த வாரம்வரை ‘சீனா - ஐரோப்பா - கிழக்கு மத்தியப் பகுதிகள் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது’ எனச் செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில், `இந்தியாவில் 34 பேருக்குக் கொரோனா பாசிட்டிவ்’ என்பது இந்தக் கட்டுரை எழுதும்போது உள்ள நிலவரம். `இத்தனை நாள்களாக, கொரோனா விஷயத்தில் இந்திய மக்கள் மெத்தனமாகவே இருந்தனர். `நமக்கு வராது என்ற மனநிலைதான் நம் சமூகத்தின் முதல் கேடு’ எனத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வேதனை தெரிவித்திருந்தார் மருத்துவர் மயிலன் சின்னப்பன். அவரிடம் பேசினேன்.

``ரத்தம் வழியாகப் பரவும் தொற்றுகள் மற்றும் மருந்தில்லாத் தொற்றுகளுக்கு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக்கூட, நம் மக்கள், காற்றின் வழியாகப் பரவும் கொரோனா விஷயத்தில் இதுவரை எடுக்கவில்லை. எத்தனை பேர் இப்போது கூட்டம் உள்ள இடங்களைத் தவிர்க்கிறார்கள்? திரையரங்குகளிலும் ஷாப்பிங் மால்களிலும் கோயில் திருவிழாக்களிலும் கூடிக்கொண்டேதான் இருக்கிறார்கள். தரைகளிலும் தளங்களிலும் கைவைத்த பிறகு கைகழுவுபவர்கள், சானிட்டைஸர் பயன்படுத்துபவர்கள் எத்தனை பேர்? அதிக மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில், ஒரே ஒரு தும்மலின் வழியாகக் காற்றின் மூலம் நூற்றுக்கணக்கானோரை பாதிக்கவல்ல கொரோனா வைரஸை இப்போதும் அலட்சியத்துடன் கடப்பது ஆபத்தானது. கொரோனா விஷயத்தில் சீன மக்கள் கடைப்பிடித்துவரும் சுயக்கட்டுப்பாடு உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்” என்றார்.

மயிலன் சின்னப்பன்
மயிலன் சின்னப்பன்

அது என்ன சீன மக்களின் சுயக்கட்டுப்பாடு? தங்கள் நாட்டில் ஆயிரக்கணக்கில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவுடன், சீனா செய்த முதல், முக்கிய நடவடிக்கை... மாஸ் ஷட் டவுன். தன்னையும் கொரோனா வைரஸையும் முடிந்த அளவுக்குத் தன் ஊருக்குள்ளேயே முடக்கிக்கொண்டது சீனா. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 89,000-க்கும் மேற்பட்டவர்களில், 80,000 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள்தாம். தங்கள் நாட்டில் பாதிப்புக்குள்ளான வெளிநாட்டினரையும்கூட அவர்கள் நாட்டுக்கு அனுப்ப மறுத்து, ‘உங்கள் நாட்டுக்கு ரிஸ்க் வேண்டாம், நாங்களே குணப்படுத்துகிறோம்’ என்றது சீனா.

உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி ப்ரூஸ், `உலகம் முழுவதும் இந்நேரம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியிருக்க வேண்டிய ஒரு தொற்றுநோயை தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டதன் மூலம் கட்டுப்படுத்தியிருக்கும் வூஹான் மக்களுக்கு உலகமே கடன்பட்டிருக்கிறது’ என்றார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை உறுதிசெய்யப்பட்டவுடன், ஹேண்ட் வாஷ்கள், சானிட்டைஸர்கள், மாஸ்க்குகளை மக்கள் முன்னெச்சரிக்கை உணர்வுடன் வாங்கத் தொடங்க, இப்போது இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் அவுட் ஆஃப் ஸ்டாக். அப்படியே கிடைத்தாலும், நான்கு, ஐந்து மடங்கு விலை வைத்து விற்கப்படுகின்றன. இன்னொரு பக்கம், ‘கொரோனா நோயாளிகளைக் கையாளும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கான மருத்துவ உபகரணங்களில் பற்றாக்குறையே நிலவுகிறது’ என்று தெரிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். கொரோனா 80க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்திருக்கும் நிலையில், அம்மக்களின் தேவைக்கு ஈடுகொடுக்க, மருத்துவ தற்காப்பு உபகரணங்களின் உற்பத்தியை 40% அதிகரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது.

“கொரோனா பற்றிய அவசியமற்ற பதற்றம் தவிர்க்கப்பட வேண்டியது’’
என்கிறார் பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை, மாணவர்களுக்கு மாஸ்க் கொடுப்பது, பல அலுவலகங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலைபார்க்கச் சொல்லியிருப்பது என இந்திய மாநிலங்களின் கொரோனா காட்சிகள் பிரச்னையின் தீவிரத்தைக் காட்டுகின்றன. பெங்களூரில் பணியாற்றும் கீர்த்தனாவிடம் பேசினேன். “எங்கள் அலுவலகக் கட்டடத்தில் பணிபுரியும் ஒருவருக்குக் கொரோனா அறிகுறிகள் தெரியவந்தன. அனைவரையும் அலுவலகத்திலிருந்து உடனடியாக வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அடுத்த நாள் விடுமுறை அளித்து, அலுவலகக் கட்டடம் முழுவதையும் சுத்தமாகக் கழுவிவிட்டார்கள். மறுநாள், `வேண்டுமென்றால் வொர்க் ஃப்ரம் ஹோம் எடுத்துக் கொள்ளுங்கள். சளி, காய்ச்சல் இருப்பவர் களுக்குக் கட்டாய விடுமுறை அளிக்கிறோம்’ என்று மெயில் வந்தது. அதற்கடுத்த நாள், அலுவலகமே கிட்டத் தட்ட காலியாகிவிட்டது. கைகழுவுவது, மாஸ்க் என நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கிவிட்டோம். ஆனால், பெங்களூரு போன்ற மெட்ரோ நகரத்தில், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதில் நாங்கள் பின்தங்கியிருப்பதாகவே நினைக்கிறேன். வெளியே செல்வதை எங்களால் தவிர்க்கமுடியவில்லை’’ என்றார்.

இன்னொரு பக்கம், “கொரோனா பற்றிய அவசியமற்ற பதற்றம் தவிர்க்கப்பட வேண்டியது’’ என்கிறார் பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

``கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை மேம்போக்காகப் பார்த்தால் பீதியைக் கொடுப்பதாக இருக்கலாம். ஆனால், உண்மையில் அவை நம்பிக்கையையே அளிக்கின்றன. உலகளவில் லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மட்டுமே பார்க்கிறோம். அதைவிட முக்கியமானது, லட்சத்தில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு இப்போது முழுமையாகக் குணமாகிவிட்டது என்பது. ஆம், 50,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

`இன்னும் 50,000 பேர் குணமாகவில்லையே?’ எனில், அதற்கும் நம்பர்களே பதில். பாதிப்போடு இருக்கும் 50,000 பேரில் 80% பேர் இப்போதுவரை முதல் நிலை பாதிப்பில்தான் இருக்கிறார்கள். அவர்கள் முழுமையாகக் குணமாகிவிடுவார்கள். மீதமுள்ளவர்களில் 14% பேருக்கு சற்றுத் தீவிரமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சரியான மருத்துவக் கண்காணிப்புக்கு அவர்கள் உட்படுத்தப்படும்பட்சத்தில் நிச்சயம் குணமாகிவிடலாம். மீதமுள்ள 6 % பேருக்குத்தான் மோசமான மற்றும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாகக் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், பாதிப்படைந்தவர்களில் 2% - 3% பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 3% பேரில், 14.8% பேர் முதியவர்கள். முதியோர்களிலும், சரியான சிகிச்சை மேற்கொண்டவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப் புள்ளிவிவரங்கள், கொரோனா பற்றிய பீதியைக் குறைக்கத்தான் சொல்லப்படுகிறதே தவிர, அந்நோய்க்கான தற்காப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்ட அல்ல என்பது அடிக்கோடிட வேண்டியது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம், கேரளா. நாட்டிலேயே முதன்முறையாக மூன்று கொரோனா பாசிட்டிவ் நோயாளிகள் அங்கு கண்டறியப்பட்டபோது, அவசியமற்ற பீதியைத் தவிர்த்து, அவசியமான தடுப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி, மூவரையும் முழுமையாகக் குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது அம்மாநிலம். மேலும் தீவிரக் கண்காணிப்பால், தொற்றுப் பரவலை பூஜ்ஜியத்தில் நிறுத்தியது. எனவே, பதற்றம் தவிர்த்து மக்கள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா. தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளும் அதையே வலியுறுத்துகிறார்கள்.

கீர்த்தனா
கீர்த்தனா

விழிப்புணர்வு + தற்காப்பு நடவடிக்கைகள் + சுயக்கட்டுப்பாடு... இப்போதைக்குக் கொரோனாவுக்குக் கண்டறியப்பட்டுள்ள கூட்டு மருந்து இதுதான்!

மிளகு, மஞ்சள் உணவு முறைகள் கொரோனாவைத் தடுக்குமா?

‘`கொரோனா விஷயத்தில் உலக சுகாதார நிறுவனம் சொல்லும் முக்கியமான அறிவுரை, மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தை உறுதிசெய்துகொள்ளுங்கள் என்பதுதான். அந்த வகையில் மிளகு, மஞ்சள், துளசி, அதிமதுரம் போன்றவை உணவில் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப் படுகிறது. இது கொரோனாவைத் தடுக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றாலும், ஆரோக்கியமான வாழ்வை முன்னெடுக்க நிச்சயம் உதவும்.

இந்திய வெப்பநிலை கொரோனாவுக்கு எதிராக அமையுமா?

‘`கொரோனா பரவிய நாடுகளின் பட்டியலில் குளிர்ப்பிரதேசங்களே உள்ளன. குறிப்பாக, 10 டிகிரிக்கும் குறைவான தட்பவெப்பம் உள்ள நாடுகளில்தான் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இந்தத் தரவின் அடிப்படையில், கொரோனா வெப்பமயமான இடத்தில் பரவுவதில்லை, பரவினாலும் அழிந்துவிடுகிறது என்று அனுமானிக்கிறார்கள் நிபுணர்கள்.

பதற்றம் வேண்டாம். பாதுகாப்பே வேண்டும்!

ஆனால், இதை இந்தியாவுக்கான சாதக அம்சமாக எடுத்துக்கொள்ள முடியுமா? இன்று பலரும் ஏ.சி அறைகளில் அடைபட்டுக்கிடக்கிறோம். ஏ.சி பொதுவாகவே சுவாசப் பிரச்னைக்கான சாத்தியக் கூறுகளை அதிகப்படுத்தும். கொரோனா ஒரு சுவாசத்தொற்று என்பதால், தொற்றுக்கான வாய்ப்புள்ள இடங்களில் ஏ.சி பயன்பாடு கொரோனாவுக்கு சாதகமாகவே அமையும். இந்தக் கோடையை வெயிலிலும் வியர்வையிலும் கழிப்போம்!

மருத்துவர் கு.சிவராமன்

சானிட்டைஸர், மாஸ்க் தட்டுப்பாட்டுச் சூழல்களில் வேறு என்ன தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்?

‘`சாதாரண சோப் வாட்டர் கொண்டு அடிக்கடி கைகழுவுங்கள். மாஸ்க், தொற்று ஏற்பட்டவர்களுக்கும் அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் கட்டாயம்.

பதற்றம் வேண்டாம். பாதுகாப்பே வேண்டும்!

மற்றவர்கள், தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க அவசியமற்ற பயணங்கள் அவுட்டிங்குகளைத் தவிர்க்கவும்.

டிஷ்யூ பேப்பர், கைக்குட்டை பயன்படுத்துங்கள். கையால் மூக்கு, வாயைத் துடைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.’’

மருத்துவர் ஃபரூக் அப்துல்லா