விகடனின் 'Doubt of common man'-ல் ’மெட்ராஸ் ஐ எதனால் பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்ன’ என்று விகடன் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
மெட்ராஸ் ஐ வருவதற்கு முன்பும் வந்த பின்பும் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? அதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து நம் வாசகர் கேட்ட கேள்விக்கான பதிலை, கண் மருத்துவர் சரயு காயத்திரி அவர்களிடம் கேட்டோம். அவர் கூறிய பதில் பின்வருமாறு:

காரணம்:
அடினோ வைரஸ் என்னும் ஒரு வைரசால் பரவுவதுதான் 'மெட்ராஸ்-ஐ.' காலநிலை மாற்றத்தால் இது உருமாற்றம் அடைந்து அனைவருக்கும் பரவிவருகிறது. காலநிலை அதிக வெயிலாய் இருந்தாலும் அதிக மழையாய் இருந்தாலும் அந்த மாற்றத்தினால் இந்த வைரஸ் பரவும்.
அறிகுறிகள்:
அதன் அறிகுறிகள் நம் கண்களில் தூசி விழுவது போலதான் இருக்கும். ஆனால், மறுநாள் அவர்களின் கண்கள் சிவப்பாகவும், பீளை தள்ளுவது அதாவது வெள்ளை அழுக்கு போல வரும் இவைதான் அதன் ஆரம்பக்கால அறிகுறிகள்.
மேலும், கண்களில் இருந்து நிறைய நீர் வரும், கண்ணில் எரிச்சல் இருக்கும். இது வைரஸ் மூலமாகப் பரவுகிறது, இது தானாகவே பத்து நாள்களுக்குள் சரியாகிவிடும்.
இருப்பினும் அந்த வலியைப் போக்கவும், அது அதிகமாகாமல் தடுக்கவும், கண் சொட்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. அப்படி அந்த வைரஸ் தாக்கினால் அவர்களின் கருவிழிகளைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
செய்ய வேண்டியது:
பள்ளி அல்லது கல்லூரி செல்லும் மாணவர்களுக்குக் கண்ணாடி அணிவித்துப் பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில், அங்கு மற்ற குழந்தைகள் விளையாட்டுத் தனமாக கண்ணாடியைப் போட்டுப் பார்த்து விளையாடுவார்கள். அப்பொழுது, அவர்களுக்கும் அந்த வைரஸ் பரவும். எனவே இந்த வைரஸ் தொற்று காணப்பட்டால் சில நாள்கள் விடுப்பு எடுத்துக்கொள்வது சிறந்தது. டிஷ்யூ பேப்பர் ஒரு முறை பயன்படுத்தித் தூக்கிப் போட வேண்டும்.
ஒவ்வொருவரும் தனித்தனியாகக் கண் சொட்டு மருந்து வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தானாக மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்தல் நல்லது. கண்ணில் காற்று படாமல் தவிர்க்க சாதாரண கண்ணாடி அணிய வேண்டும் அது கறுப்பாகவும் இருக்கலாம், வெள்ளையாகவும் இருக்கலாம்.
கண்களை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுவது நல்லது. கண்களை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் பயன்படுத்தும் பொருளை மற்றவர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
செய்யக்கூடாதாவை:
மேற்கூறிய அறிகுறிகள் காணப்பட்டால் சில நாள்களுக்கு குழந்தைகளிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் சிறிது விலகி இருத்தல் நல்லது. கைக்குட்டை பயன்படுத்தக் கூடாது.
இரண்டு கண்களுக்கும் ஒரே டிஷ்யூ பயன்படுத்தக் கூடாது.
குடும்பத்தில் மூன்றுபேருக்கு வந்தால் அவர்கள் மூவரும் ஒரே மருந்ததைப் பயன்படுத்தக் கூடாது.
இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!