Published:Updated:

`நோயாளிகளின் ஆக்ஸிஜன் தேவையை இது குறைக்கும்!' - DRDO-வின் 2-deoxy-D-glucose மருந்து

Oxygen cylinder / Representational Image
Oxygen cylinder / Representational Image ( AP Photo )

குளூக்கோஸ் போன்ற 2 டிஜி மருந்து உடலெங்கும் பரவுகிறது. வைரஸ் பாதிக்கப்பட்ட செல்களை இந்த மருந்து அடைந்ததும் வைரஸ் வளர்ச்சியைத் தடுக்கிறது.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தொற்றுக்கு எதிராகச் செயலாற்றக்கூடிய, பவுடர் வடிவிலான மருந்தை உருவாக்கியுள்ளது.

2-டிஜி (2-deoxy-D-glucose) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து, கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையைக் குறைப்பதாகவும் இதை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தலாம் என்றும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் அனுமதி அளித்திருப்பது இப்போதைய சூழலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா
கொரோனா

இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) இந்த மருந்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா முதல் அலையின்போது, நடத்தப்பட்ட சோதனையில் இந்த மருந்து கொரோனா தொற்றுக்கு எதிராகச் செயல்பட்டு நோயைக் கட்டுப்படுத்துவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்ததையடுத்து, கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெற்ற பல்வேறு சோதனைகளில் இந்த 2-டிஜி மருந்தில் உள்ள மூலக்கூறுகள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் விரைவாகக் குணமடைய உதவுவதுடன் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையையும் குறைக்கிறது என்பது தெரியவந்துள்ளது. மிதமானது முதல் தீவிர தொற்று உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் பொதுவான மருந்துகளுடன் இந்த 2-டிஜி மருந்தையும் சேர்த்து வழங்குவதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் ஏராளமான நோயாளிகளுக்கு மருத்துவமனை அனுமதியும் ஆக்சிஜனும் தேவைப்படும் சூழலில், சிகிச்சை நாள்களின் எண்ணிக்கையை குறைத்து, ஏராளமான உயிர்களைப் பாதுகாக்கும் வரப்பிரசாதமாக 2-டிஜி மருந்து அமையும் என்று எதிர்பாக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்
கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்
Pixabay

இந்த மருந்து குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ள டிஆர்டிஓ-வின் திட்ட இயக்குநரும் விஞ்ஞானியுமான டாக்டர் சுதிர் சந்தனா, 11குளுக்கோஸ் போன்ற 2 -டிஜி மருந்து உடலெங்கும் பரவுகிறது. வைரஸ் பாதிக்கப்பட்ட செல்களை இந்த மருந்து அடைந்ததும் வைரஸ் வளர்ச்சியைத் தடுக்கிறது. நுரையீரலில் பரவும் வைரஸ் தொற்றுக்கு எதிராகவும் இந்த மருந்து செயல்படுவதால் இது கொரோனா நோயாளிகள் ஆக்சிஜனை சார்ந்திருக்க வேண்டிய சூழலைக் குறைக்க உதவும்" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு