Published:Updated:

``லாக்டௌன்ல 70 நாளா லீவ் எடுக்கல!" - முதல்வர் பாராட்டிய டயாலிசிஸ் டெக்னீஷியன் தம்பிதுரை

நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோய்க்களத்தில் முன்வரிசை வீரர்களாக நின்றுவரும் மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளார்களின் சேவை மதிப்பற்றது.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தற்காலிக மருத்துவ ஊழியராகப் பணியாற்றி வரும் டயாலிசிஸ் டெக்னீஷியன் தம்பிதுரை, அவர்களில் ஒருவர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல் முழு அர்ப்பணிப்புடன், குழந்தைகள் டயாலிசிஸ் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.

corona
corona

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் தொடர்ந்து 70 நாள்களுக்கும் மேலாக ஒரு நாள்கூட விடுமுறை எடுக்கவில்லை தம்பிதுரை. பணியில் முழு ஈடுபாட்டுடன் குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்தி களப்பணி ஆற்றி வரும் இவரை, முதல்வர் பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டி, அவருடைய அர்ப்பணிப்புக்குத் தலைவணங்கியிருக்கின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த துடிப்புமிக்க இளைஞரான தம்பிதுரை, தனது ஃபார்மா படிப்பை முடித்த கையோடு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனையின் டயாலிசிஸ் பிரிவில் சில காலம் பணிபுரிந்தவர். கடந்த மூன்று ஆண்டுகளாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகள் டயாலிசிஸ் பிரிவில் ஒப்பந்த மருத்துவ ஊழியராக பணியாற்றி வருகிறார். நோய்த் தொற்று அச்சம் காரணமாக மருத்துவத்துறை ஊழியர்களுக்கு மாதத்தில் 7 நாள்கள் விடுமுறையை அரசு அளித்துள்ளபோதிலும், அதைத் தவிர்த்தவர் தம்பிதுரை. துணிகளை எடுத்துக்கொண்டு வந்து, மருத்துவமனை வளாகத்திலேயே தங்கியிருந்து, நேரம் காலம் பார்க்காமல் வேலைபார்த்து வரும் தம்பிதுரையை தொடர்புகொண்டு பேசினோம்.

தம்பிதுரை
தம்பிதுரை

``என்னோட சொந்த ஊரு தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த மானியத அல்லி கிராம். பார்மா துறையை விரும்பித் தேர்ந்தெடுத்துப் படிச்சேன். வேலையில சேர்ந்த புதுசுல, டயாலிசிஸ் வேலைகளைப் பாக்குறது மனசுக்குக் கஷ்டமா இருக்கும். அதுலயும் குழந்தைகளுக்குச் செய்யும்போது ரொம்ப பாரமா இருக்கும். அப்புறம், போகப் போக பழகிடுச்சு. ஆரம்பத்துல குழந்தைகளுக்கு டயாலிசிஸ் செய்யும்போது, குழந்தைங்க வலி தாங்காம அழுதா, அதைப் பார்க்க முடியாம நான் கண்ணை மூடிக்குவேன். ஆனா டயாலிசிஸ் செய்த பிறகு குழந்தைங்க முகத்துல சிரிப்பைப் பார்க்கும்போது எனக்குள்ள ஒரு சந்தோஷம் வந்து ஒட்டிக்கும். அந்தச் சிரிப்புக்காக இந்த வேலையை இன்னும் அர்ப்பணிப்போடு பார்க்க ஆரம்பிச்சேன். குழந்தைங்க டயாலிசிஸ் பிரிவுல இருக்கிறதாலதான் இவ்ளோ ஈடுபாட்டோடு இருக்கேன்னு நினைக்குறேன்.

`தமிழக பக்தர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்!’ - 79 நாள்களுக்குப் பிறகு காட்சி தந்தார் திருப்பதி ஏழுமலையான்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீட்டுக்கு ஒரே புள்ள நானு. ஊருல அப்பா, அம்மாவ விட்டுட்டு தனியா இங்க வேலசெஞ்சுட்டு இருக்குற எனக்கு, சிகிச்சைக்கு வர்ற குழந்தைங்கதான் சொந்தங்க. சொல்லப்போனா, அந்தக் குழந்தைகள் எல்லாருமே என் குழந்தைங்க மாதிரி. இது தொடர் சிகிச்சைங்கிறதால, அவங்கயெல்லாம் வாரத்துக்கு ரெண்டு முறை, வாரம் ஒரு முறை, மாதம் ரெண்டு முறைனு பல கால இடைவெளிகள்ல தொடர்ந்து வருவாங்கங்கிறதால, அவங்க எல்லாருமே எங்கிட்ட நல்லா பழகிடுவாங்க. அதனால, எனக்கும் அவங்களுக்கு டயாலிசிஸ் செய்யுறது சுலபமா இருக்கும். தினமும் அஞ்சு குழந்தைங்களுக்கு டயாலிசிஸ் செஞ்சுட்டு இருக்கேன். நேரம் காலம் எல்லாம் நான் பாக்குறது இல்ல. வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் கூப்பிட்டாங்கன்னாகூட ஓடி வந்துடுவேன்.

சில நேரங்கள்ல வேலைப்பளு காரணமா சோர்வாகிட்டாகூட, அந்தப் பச்சக் குழந்தைங்க முகத்தைப் பார்த்தா தானா உத்வேகம் வந்து வேலைக்கு ரெடியாகிடுவேன்.

தம்பிதுரை
தம்பிதுரை

டயாலிசிஸ் ரொம்ப முக்கியமான சிகிச்சை முறை. அதிலும், என் பணி குழந்தைகள் டயாலிசிஸ் வார்டு என்பதால ரொம்ப கவனமா இருக்கணும். என்கூட பணியாற்றி வந்த சக மருத்துவ ஊழியர் ஒருத்தவங்க ஊரடங்கு காரணமாக வெளியூருல மாட்டிக்கிட்டாங்க. அதனால அவங்க வேலையையும் நான் சேர்த்துப் பார்க்க வேண்டிய நிலை. 70 நாள்களைத் தாண்டி, அப்டிதான் தனியாளா இங்க வேலைசெஞ்சுட்டு இருக்கேன். நான் ஒரு நாள் விடுமுறை எடுத்தாலும், அந்நாளில் டயாலிசிஸ் செய்துக்க வர்ற குழந்தைகளின் சிகிச்சை பாதிக்கப்படும். தாமதம் இந்த சிகிச்சையில் கூடாது, அது உயிருக்கேகூட ஆபத்தாகலாம் என்பதால நான் லீவு எடுக்கிறதைப் பத்தி நெனச்சுக்கூடப் பார்க்கிறதில்ல. வீட்டுக்குக் கூட போகாம, மருத்துவமனை நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு மருத்துவமனையிலேயே தங்கி வேலை செஞ்சுட்டு இருக்கேன்.

`எலும்பு முறிவு; அவசர சிகிச்சை வார்டு' -மதுரை அரசு மருத்துவமனை நோயாளிக்கு நேர்ந்த அதிகாலை பயங்கரம்

`சென்னையிலதான் அதிக கொரோனா பாதிப்பாம்டா... வீட்டுக்கு வந்துடுடா... ஒரு தடவ வந்துட்டாச்சும் போடா... எங்களுக்கு நீ ஒத்தப்புள்ளடா'னு ஊர்ல இருந்து போன் பேசுற அம்மாவும் அப்பாவும் சொல்லிட்டே இருக்காங்க. அதனால, அவங்களுக்கு போன் பேசுறதையே குறைச்சுட்டேன். அரசாங்கம் மருத்துவ ஊழியர்களுக்கு மாதம் ஒருமுறை கொடுக்கிற ஒரு வார விடுமுறையையும் வேண்டாம்னு மறுத்துட்டேன்.

எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு, எந்த வேல செஞ்சாலுமே அத முழு அர்ப்பணிப்போடு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம செய்யணும்னு. அதைத்தான் நான் செஞ்சிட்டிருக்கேன். எங்க மருத்துவமனை இயக்குநர், நான் வேலைசெய்றதைப் பார்த்துட்டு அடிக்கடி பாராட்டுவார். ஒரு நாள் நான் வழக்கம்போல குழந்தைகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை வேலைகள்ல இருந்தேன். எதிர்பார்க்கவே இல்ல... சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனைக்கு வந்து என்ன நேர்ல பார்த்துப் பாராட்டி சான்றிதழ் எல்லாம் கொடுத்தார். அந்த நொடி அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. அதே நாள், முதலமைச்சரும் என்னைப் பாராட்டி ட்வீட் போட்ருந்தார். நெகிழ்ந்து போனேன்.

தம்பிதுரை
தம்பிதுரை

நான் மட்டுமல்ல... என்னை மாதிரி எத்தனையோ மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை ஊழியர்கள் இந்தக் கொரோனா நோய்த் தொற்று காலத்துல தங்களோட குடும்பத்தைகூட கவனிக்காம மக்களைப் பாதுகாக்க தங்களோட உயிரைப் பணயம் வெச்சு வேலைசெஞ்சுட்டு இருக்காங்க. அவங்க எல்லாருமே அங்கீகாரத்துக்கு உரியவங்க. கொரோனா முடிஞ்சாலும், ஓய்வோ, தொய்வோ இல்லாம என் வேலையை நான் செஞ்சுட்டே இருப்பேன்'' என்றார் தம்பிதுரை.

மக்கள் சார்பாக நன்றி... தம்பிதுரை மற்றும் அனைத்து கொரோனா முன்கள வீரர்களுக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு