Published:Updated:

இரும்பைக் கொடுப்பதால் வலிப்பு நிற்காது ~ வலிப்புநோய் அறிவோம்

வலிப்பு ( pixabay )

மூளையிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் மூலம்தான் உடலின் மற்ற அனைத்து உறுப்புகளுக்கும் தகவல் கடத்தப்படுகிறது. இந்த மின்சாரப் பாய்ச்சல் சமநிலை தவறி, மூளைக்கு அதிகமாகப் பாய்கையில் ஏற்படுவதுதான் வலிப்பு.

இரும்பைக் கொடுப்பதால் வலிப்பு நிற்காது ~ வலிப்புநோய் அறிவோம்

மூளையிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் மூலம்தான் உடலின் மற்ற அனைத்து உறுப்புகளுக்கும் தகவல் கடத்தப்படுகிறது. இந்த மின்சாரப் பாய்ச்சல் சமநிலை தவறி, மூளைக்கு அதிகமாகப் பாய்கையில் ஏற்படுவதுதான் வலிப்பு.

Published:Updated:
வலிப்பு ( pixabay )

கழுத்தில் இரும்புக் கம்பி குத்திய நிலையில் 28 வயது இளம்பெண் ஒருவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வலிப்பு வந்ததைத் தொடர்ந்து, அதனைக் கட்டுப்படுவதற்காக இரும்புக் கம்பியைக் கொடுத்தபோது, அது கழுத்தில் குத்தி கை, கால் நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அந்தக் கம்பியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி விட்டனர்.

வலிப்புநோய் குறித்த போதிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை என்பதை, இது போன்ற சம்பவங்கள் வழியே உணர முடிகிறது. இந்த நவீன காலத்திலும் வலிப்பு வந்தால் இரும்பைக் கையில் கொடுக்க வேண்டும் என்கிற மூடப்பழக்கம் தொடர்வது வேதனைக்குரியது. கம்பியைப் பழுக்கக் காய்ச்சி காலில் சூடு போட்டால் வலிப்பு வராது என்கிற மூடப்பழக்கம்கூட நம்மிடையே இருந்திருக்கிறது.

இந்நிலையில், வலிப்புநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு, வலிப்பு ஏன் வருகிறது? வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்று, மதுரையைச் சேர்ந்த நரம்பியல் மற்றும் வலிப்புநோய் சிறப்பு மருத்துவர் ஹரிஷ் ஜெயக்குமாரிடம் கேட்டோம்...

மருத்துவர் ஹரிஷ் ஜெயக்குமார்
மருத்துவர் ஹரிஷ் ஜெயக்குமார்

வலிப்பு ஏன் வருகிறது?

எபிலெப்சி (Epilepsy) என்கிற நரம்பு மண்டலப் பிரச்னையின் ஒரு பகுதிதான் seizure என்று சொல்லப்படக்கூடிய வலிப்புநோய். மூளையிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் மூலம்தான் உடலின் மற்ற அனைத்து உறுப்புகளுக்கும் தகவல் கடத்தப்படுகிறது. இந்த மின்சாரப் பாய்ச்சல் சமநிலை தவறி மூளைக்கு அதிகமாகப் பாய்கையில் ஏற்படுவதுதான் வலிப்பு. மரபு ரீதியாகவும், மூளைக்கட்டி, தலையில் அடிபடுதல் உள்ளிட்ட பல காரணங்களாலும் வலிப்புநோய் ஏற்படுகிறது. வலிப்பு வருகிற அனைவருக்கும் எபிலெப்சி இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. தொடர்ச்சியாக வலிப்பு வந்தால்தான் அது எபிலெப்சியாக கருதப்படும்.

எபிலெப்சியிலேயே பல வகைகள் இருக்கின்றன. ஈ.ஈ.ஜி மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலமாகத்தான் அதன் தன்மையை அறிய முடியும். மூளையின் நினைவுப் பகுதியில் அதீத மின்சாரப் பாய்ச்சல் நிகழ்கையில் நினைவு தப்பிப் போகிறது. சிலர் நினைவோடு இருக்கும்போதே வாய் துடிக்கும். வாய்க்குச் செல்லும் நரம்புகளில் அதீத மின் பாய்ச்சல் நிகழ்வதால் ஏற்படும் விளைவான இதுவும் ஒருவித வலிப்புதான். எது வலிப்பு நோய்... எது வலிப்பு நோய் இல்லை என்பதை நீங்களாக முடிவு செய்ய முடியாது. மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகுதான் முடிவெடுக்க முடியும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செய்ய வேண்டியது என்ன?

ஒருவருக்கு வலிப்பு வருகிறதென்றால் சுற்றி இருப்பவர்கள் பதற்றப்படக்கூடாது. அவர்கள் சுய நினைவை இழந்திருப்பார்கள் என்பதால் அவர்களைச் சுற்றி காயத்தை ஏற்படுத்தும் விதமான பொருள்கள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். வலிப்பு வந்தவரை சூழ்ந்து நின்று பதறிக் கொண்டிருக்காமல், அவர்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கும்படி காற்றோட்டத்துக்கு வழி செய்ய வேண்டும். ஒரு புறமாகச் சாய்த்து, தலையை சற்றே தூக்கிப்பிடித்தபடி இருக்கலாம். ஏனென்றால் வலிப்பின் காரணமாக அவர்கள் வாந்தி எடுத்தால், அது நுரையீரலுக்குப் போகாமல் இருக்கும்.

வலிப்பு
வலிப்பு

உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். வலிப்பு வருகையில், அதனை வீடியோவாக எடுக்க வேண்டும். ஏனென்றால் எந்த மாதிரியான வலிப்பு என்பதை மருத்துவர்கள் கண்டறிய வேண்டுமெனில் வீடியோ உதவிகரமானதாக இருக்கும். அதனைப் பார்க்கிறவர்கள் எவ்வாறு புரிந்து கொண்டு மருத்துவர்களுக்கு போதுமான தகவல்களைத் தருவார்கள் என்று சொல்ல முடியாது. ஆகவேதான், வலிப்பு நோய்க்காக சிகிச்சைக்கு வருகிறவர்களிடம் அடுத்தமுறை வலிப்பு வரும்போது வீடியோ எடுங்கள் என்று சொல்வோம்.

எதையெல்லாம் செய்யக்கூடாது?

வலிப்பு வருகிறவர்களுக்கு இரும்பு கொடுத்தால் வலிப்பு நின்று விடும் என்கிற அறிவியலுக்கு முரணான மூடப் பழக்கத்தை நாம் விட்டொழிக்க வேண்டும். இரும்பைக் கையில் கொடுப்பதற்கும் வலிப்புக்கும் அணு அளவு கூடத் தொடர்பில்லை. நாக்கைக் கடித்து விடக்கூடாது என்பதற்காக கட்டை விரலை பற்களுக்கிடையில் வைப்பார்கள். இதனால், விரல் துண்டாகி விழுந்து தொண்டையை அடைத்து இறந்தவர்களும் இருக்கிறார்கள் என்பதால் அப்படிச் செய்யவே கூடாது. சுற்றியிருப்பவர்கள் பதற்றப்படக் கூடாது. சூழலைக் கையாளப் பழகிக் கொள்ள வேண்டும்.

வலிப்பு
வலிப்பு

வலிப்பிலேயே பல வகைகள் இருப்பதால் கை, கால்கள் வெட்டிக் கொள்வது மட்டுமே வலிப்பு என்றெண்ணி விடக்கூடாது. திடீரென நினைவு தப்பிப்போய் எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தவித்து மீண்டும் நினைவு திரும்புவதற்கு absence seizure என்று பெயர். மூளை முழுவதும் ஏற்படும் மின்னதிர்வு, மூளையின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் மின்னதிர்வு என, வலிப்பு எதன் காரணமாக வருகிறது என்பதை ஆராய் வேண்டும்.

எதனால் வலிப்பு தூண்டப்படுகிறது என்பதைக் கண்டறிவது முக்கியம். சிலருக்கு தொடர்ச்சியாக வலிப்பு இருக்கும். சிலருக்கு தூக்கம் கெடுவது உள்ளிட்ட குறிப்பிட்ட காரணத்தால் மட்டுமே வலிப்பு வரும். அந்தக் காரணிகளைத் தவிர்ப்பதால் அவர்கள் வலிப்பு நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். ஆக, வலிப்பு என்பது ஒரு நரம்பியல் பிரச்னை என்பதைப் புரிந்து கொண்டு அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர இரும்பைக் கையில் கொடுப்பது மாதிரியான மோசமான செயலைச் செய்யாதீர்கள்" என்கிறார் டாக்டர் ஹரிஷ் ஜெயக்குமார்.