கொரோனா வைரஸுக்கு எதிராகத் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளின் காப்புரிமையை, சர்வதேச மருந்து நிறுவனங்கள் சுமார் 5 ஆண்டுகளுக்குத் தளர்த்திக் கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையே நிலவி வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ள இந்த தளர்வானது வளரும் நாடுகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு காப்புரிமைதாரர்களின் அனுமதியின்றி தடுப்பூசிகளை தயாரிப்பது மட்டுமல்லாமல், அவற்றை ஏற்றுமதி செய்யவும் வழிவகுக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதேசமயம், கொரோனா சிகிச்சையில் பயன்படும் மருத்துகள் மற்றும் வைரஸ் கண்டறியும் செயல்முறையில் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு தளர்வுகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள், கடந்த 2020 அக்டோபரில் உலக வர்த்தக மையத்திடம் பேச்சு வார்த்தை நடத்த முன்மொழிவு ஒன்றை சமர்பித்திருந்தன. இரு நாடுகளின் முன்மொழிவை ஏற்ற உலக வர்த்தக மையம் கடந்த டிசம்பர் 23-ம் தேதி முதல் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைத்தது.
இந்தியா, தென்னாப்பிரிக்காவுடன் சேர்ந்து, அமெரிக்கா உட்பட 100 நாடுகள் இந்த நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன.
இந்தியா உட்பட பல வளரும் நாடுகளில் ஏற்கெனவே கட்டாய உரிமம் வழங்கும் முறை உள்ளது. இதன் மூலம் காப்புரிமை பாதுகாக்கப்படுகிறதா என்பதைப் பொருட்படுத்தாமல் ஒரு மருந்து அல்லது தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுவரைக்கும், இந்தியாவில் 170 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை தயாரித்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறைந்தபட்சம் 30 கோடி தடுப்பூசிகள் அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இத்துடன், சர்வதேச தடுப்பூசி திட்டமான கோவாக்ஸ் திட்டத்திற்கும் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காப்புரிமை பெற்ற தயாரிப்புகளுக்கு மட்டுமே இந்த தளர்வு விதிகள் பொருந்தும். இந்தியாவில் காப்புரிமை பெறாத தடுப்பூசி நிறுவனங்களான மாடர்னா மற்றும் ஃபைசர் உள்ளிட்டவற்றின்மீது இது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.