Published:Updated:

``50 வருட நீரிழிவுடன் கொரோனாவில் இருந்து மீண்டேன்!’’ - அனுபவம் பகிரும் `எக்ஸ்னோரா' நிர்மல்

`எக்ஸ்னோரா' நிர்மல்
`எக்ஸ்னோரா' நிர்மல்

``உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் இருந்தால் கொரோனாவை வென்றுவிடலாம்" என்கிறார் `எக்ஸ்னோரா' நிர்மல்!

நீரிழிவு இருப்பவர்களுக்கு கொரோனா வந்தால் இன்னும் ரிஸ்க் அதிகம் என்று பலரும் பயந்துகொண்டிருக்க, அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார் சமூக ஆர்வலர் `எக்ஸ்னோரா' நிர்மல். அதைப்பற்றி அவரே பகிர்ந்துகொள்கிறார் கேளுங்கள்.

``கடந்த 50 வருடங்களாக எனக்கு நீரிழிவு இருக்கிறது. இப்போது என் வயது 77. இத்தனை வருடங்களாக ஒருவர் நீரிழிவுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறாரா என்றுகூட உங்களுக்கு சந்தேகம் வரலாம். ஆனால், தினசரி உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என்று வாழ்ந்தால், நீரிழிவு இருந்தாலும் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துவிடலாம் என்பதற்கு நானே உதாரணம் என்றவர், தன்னுடைய கொரோனா அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

``என் மனைவி ஒரு மருத்துவர் என்பதால் உணவு விஷயத்தில் அவர் சொல்வதை அப்படியே கேட்டு நடப்பேன். அளவு குறைவாக, அதே நேரம் ஊட்டச்சத்துள்ள உணவாக, நாளொன்றுக்கு நான்கு தடவை சாப்பிடுவேன். உடற்பயிற்சியைப் பொறுத்தவரை தினசரி பல் துலக்குவது, குளிப்பதைப்போல கட்டாயம் செய்து விடுவேன். இதனால் சுகர் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்ற பிரச்னைக்குள் நான் சிக்கிக்கொண்டதே இல்லை.

`எக்ஸ்னோரா' நிர்மல்
`எக்ஸ்னோரா' நிர்மல்

மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரு நாள் லேசான காய்ச்சல். நீரிழிவு மாதிரியான உடல்நல பாதிப்புகள் இருப்பவர்களுக்கு கொரோனா எளிதில் தொற்றும் என்பதால் மறுநாளே பரிசோதனை செய்துவிட்டேன். சந்தேகப்பட்டது போலவே கொரோனா பாசிட்டிவ். ரிசல்ட் வந்தவுடன் நான் மனதிலிருந்த பயத்தை முதலில் தூக்கிப்போட்டேன். 50 வருடங்களாக நீரிழிவுடன் ஆரோக்கியமாக வாழத் தெரிந்த எனக்கு, இந்தக் கொரோனாவிடம் இருந்து மீண்டு வருவது அவ்வளவு பெரிய கஷ்டம் இல்லை என்பதைச் சொல்லிச் சொல்லி என் மனதுக்கு நானே தைரியம் கொடுத்துக்கொண்டேன்.

உணவுக் கட்டுப்பாடு ஓகே. ஆனால், கொரோனா நேரத்தில் வெளியே வாக்கிங் போக முடியாதே... அதற்காக வாக்கிங் செய்யாமலிருந்தால் இன்னும் என் ஆரோக்கியம் கெட்டுவிடலாம் இல்லையா... அதனால் என் வீட்டு ஹாலிலேயே எட்டுப் போட ஆரம்பித்தேன். உடம்பில் இருக்கிற அத்தனை மூட்டுகளையும் இணைப்புகளையும் என்னால் முடிந்தவரை க்ளாக் வைஸ், ஆன்டி க்ளாக்வைஸ் தினமும் 10 முறை சுழற்றுவேன். என் வீட்டு பால்கனியில் ஆக்ஸிஜன் வெளியேற்றுகிற இண்டோர் பிளான்ட்ஸ் நிறைய வைத்திருக்கிறேன். அந்தப் பகுதியில் அமர்ந்து மூச்சுப்பயிற்சி செய்வேன்.

என்னுடைய வீடு பன்னிரண்டாவது மாடியில் இருக்கிறது. ஒரே தடவையில் 12 மாடி ஏறினால் இதயம் தாங்காது. அதற்குப் பதில் முதலிரண்டு மாடி ஏறுவது, பிறகு ஓய்வெடுப்பது, மறுபடியும் இரண்டு அல்லது மூன்று மாடிகள் ஏறுவது என்று உடலைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்கிறேன்.
மலேசியா: `கொரோனா வைரஸின் புதிய திரிபு’ - 10 மடங்கு வேகமாகப் பரவுவதாக எச்சரிக்கை

இந்தியாவில் என்னைப் போல பலருக்கும் நீரிழிவு இருக்கிறது. அவர்கள் எல்லோரும் இந்தக் கொரோனா நேரத்தில் தங்களுக்கும் கொரோனா வந்துவிடுமோ, அப்படி வந்துவிட்டால் உயிரிழந்து விடுவோமோ என்ற பயத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பயமே அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து தொற்றுக்கு வழிவகுத்துவிடலாம். அதனால் நீரிழிவு இருப்பவர்கள் பயப்படாதீர்கள், உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் இருந்தால் கொரோனாவை வென்றுவிடலாம்" என்கிறார் எக்ஸ்னோரா நிர்மல்!

அடுத்த கட்டுரைக்கு