Published:Updated:

``நோய் குணமாகி வந்தவர்கள், நோயாளிகள் அல்லர்!" - கொரோனா அச்சம் குறித்து மனநல மருத்துவர் விளக்கம்

மருத்துவர்- நோயாளி நல்லுறவு
News
மருத்துவர்- நோயாளி நல்லுறவு

நெகிழ்ச்சி நிகழ்வுகள் ஒரு பக்கம் நடந்தாலும், இந்த செவிலியருக்கு நடந்ததுபோன்ற அதிர்ச்சி நிகழ்வுகளும் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கின்றன.

சென்னையில் சமீபத்தில் நடந்த சம்பவம். பல ஆண்டுகளாக செவிலியர் பணியில் இருக்கும் பெண் அவர். சமீபத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், ரிசல்ட் பாசிட்டிவ் என்று வந்தது. என்றாலும் அவர் குடும்பத்தினருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் அனைத்தும் நெகட்டிவ் என்பது ஆறுதல்.

செவிலியர்
செவிலியர்

மருத்துவமனையில் கோவிட்-19 வார்டில் சிகிச்சை எடுத்துக்கொண்டு, பூரண குணம் பெற்று, வீடு திரும்பினார் அந்த செவிலியர். தொலைக்காட்சிகளில், கோவிட்-19 பணி முடித்துத் திரும்பும் செவிலியர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள்வரை மலர் தூவி அக்கம், பக்கத்தினர் வரவேற்று, ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். அப்படியான நெகிழ்ச்சி நிகழ்வுகள் ஒரு பக்கம் நடந்தாலும், இந்த செவிலியருக்கு நடந்ததுபோன்ற அதிர்ச்சி நிகழ்வுகளும் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆம்... அந்த செவிலியரை, அவர் வசித்த அப்பார்ட்மென்ட்டில் நவீன தீண்டாமைக்கு உள்ளாக்கினர். அவரையும் அவர் குடும்பத்தினரையும் விலக்கிவைத்தனர். பேச்சு முதல் நடவடிக்கைகள்வரை அவர்களின் புறக்கணிப்பு நிறைந்திருந்தது. இதை எதிர்பாராத அந்த செவிலியர், `என் பணியில் எத்தனையோ பேருக்கு ரத்தம், சதை, புண், நோவு என்று முகம்சுளிக்காமல் சேவை செய்திருக்கிறேன். ஆனால், இன்று என்னை இந்த மக்கள் ஒதுக்குவதைப் பார்த்து வேதனையாக இருக்கிறது' என்றார் மனம் நொந்து.

சர்வதேச செவிலியர் தினம்.உறுதி மொழி ஏற்ற செவிலியர்கள்
சர்வதேச செவிலியர் தினம்.உறுதி மொழி ஏற்ற செவிலியர்கள்
உ.பாண்டி

இப்படி, மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் முதல் பொதுமக்கள்வரை, கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளாகி குணம் பெற்றுத் திரும்புபவர்களை, பலரும் புறக்கணிக்கவே செய்கின்றனர். சிகிச்சை, க்வாரன்டீன் நாள்கள் முடிந்து, பூரணமாக அவர்கள் குணம்பெற்றுத் திரும்பினாலும், அவற்றையெல்லாம் மக்கள் புரிந்துகொள்வதில்லை. `இவர்கள் மூலம் நமக்குக் கொரோனா பரவிவிடலாம்' என்ற அவர்களின் மூடநம்பிக்கையும், மனிதம் மலிந்த மனநிலையுமே அதற்குக் காரணங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``கோவிட்-19 பாதிப்பிலிருந்து குணம் பெற்றவர்களை அணுக வேண்டிய முறையில், மக்களுக்கு விழிப்புணர்வு, ஆலோசனைகள் தேவைப்படுகின்றன'' என்கிறார், மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.

மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா
மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா

``கொரோனா வைரஸ் ஒரு தொற்றுதான் என்றாலும், அது போகிற போக்கில் பரவுவது இல்லை. பாதிக்கப்பட்டவர் இருமும்போதோ, தும்மும்போதோ அந்த நீர் அருகிலிருப்பவரின் மீது பட்டு, வாய், மூக்கு, கண்வழியாக உடலுக்குள் செல்லும் சூழலில், அவருக்கும் கோவிட்-19 தொற்று பரவும். அதேபோல, தன் மூக்கைத் தொடுவது, வாயைத் துடைப்பது போன்ற காரணங்களால், பாதிக்கப்பட்டவரின் கைகளில் இருக்கும் கோவிட்-19, அவரின் அந்தக் கைகளையோ, கைகள் பட்ட இடங்களையோ மற்றவர்கள் தொடும்போது பரவுகிறது.

அதனால்தான் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள். முழு குணமடைந்த பின்னரே வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

அப்படி குணம் பெற்று வந்தவர்களை, கோவிட்-19 தொற்றைப் பரப்புபவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பது அறியாமை. கொரோனாவிலிருந்து குணமடைந்த ஒருவர் நம் தெருவில் வசிப்பதால் நமக்கு கொரோனா வருமோ என்ற அச்சம் தேவையற்றது. அந்த அச்சத்தின் காரணமாக அவரைப் புறக்கணிப்பது, அவர் குடும்பத்தைப் புறக்கணிப்பது போன்றவை ஏற்றுக்கொள்ள முடியாதவை.

கொரோனா அச்சம்
கொரோனா அச்சம்

இப்போது அரசு, லேசான அறிகுறிகள் உள்ள கோவிட்-19 நோயாளர்கள், விரும்பினால் தங்கள் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது. தமிழகத்தில் பெருகிவரும் கோவிட்-19 தொற்று எண்ணிக்கையைப் பார்க்கும்போது, வரும் நாள்களில் பரவலாக எல்லா ஏரியாக்களிலும் இப்படி வீடுகளில் தங்களைக் தனிமைப்படுத்திக்கொள்ள நேரும் கொரோனா தொற்றாளர்கள் வசிக்க நேரலாம். அவர்கள் வீட்டுக்குச் செல்லாமல் தவிர்ப்பது, தங்கள் வீடுகளிலிருந்து வெளியே செல்லும்போது கிளவுஸ், மாஸ்க் அணிவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளையே அந்த வசிப்பிட மக்கள் மேற்கொள்ள வேண்டுமே தவிர, சம்பந்தப்பட்டவரை புறக்கணிக்கும் விதமாகவோ, புண்படுத்தும் விதமாகவோ நடந்துகொள்ளக் கூடாது.

கொரோனா பாதித்த நோயாளிகள் குணமான பின்னர் அவர்களின் இயல்பான பணிகளை மேற்கொள்ளலாம். அக்கம் பக்கத்து கடைகளுக்குச் செல்வது, வேலைக்குச் செல்வது போன்ற சூழல்களில் அவர்களை மற்றவர்கள் ஒதுக்கக் கூடாது. அவருக்கு மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அரிது. ஒருவேளை அந்த அச்சம் இருப்பவர்கள், சம்பந்தப்பட்டவரிடமிருந்து தங்களை விலக்கிக்கொள்ளலாமே தவிர, சம்பந்தப்பட்டவரை ஒரு பொதுச் சூழலிலிருந்து புறக்கணிக்கும் விதமாகச் செயல்படுவது கூடாது. நோயிலிருந்து மீண்டவர்களை அந்நியப்படுத்துவது மனிதத் தன்மைக்கு எதிரானது.

`ஆதரவற்றவர்களுக்கு உதவும் `மனிதம்' அமைப்பு!
`ஆதரவற்றவர்களுக்கு உதவும் `மனிதம்' அமைப்பு!

`வைரல் லோடு' என்று சொல்லுவோம். எந்தளவுக்கு வைரஸ் பாதிப்புக்கு வாய்ப்புள்ள சூழல்களில் இருக்கிறோமோ, அந்தளவுக்கு நோய்த்தாக்கத்துக்கு ஆளாவோம். அந்த வகையில், மாஸ்க், கிளவுஸ் அணிவது, அறிமுகமற்ற நபர்களுடன் நேரம் செலவழிக்காமல் இருப்பது போன்றவற்றின் மூலமே வைரல் லோடுக்கான வாய்ப்பைக் குறைத்துக்கொள்ளலாம். பொதுமக்களுக்கு இது சாத்தியம். ஆனால், மருத்துவத்துறை, காவல்துறை, துப்புரவுத் துறை என கொரோனா போரில் முதல் வரிசையில் இருக்கும் பணியாளர்களுக்கு இந்த வைரல் லோடு அதிகம். அவர்கள் அப்படி முன் வரிசையில் இருப்பது, பின்னால் இருக்கும் நம்மைப் பாதுகாக்கத்தான் என்பதை உணர்ந்தால், அவர்களில் கோவிட்-19 தொற்று பெற்று மீள்பவர்களை நாம் எதிரிபோலப் பார்க்கமாட்டோம்.

தற்போதைய சூழலில், கொரோனா பணியிலிருக்கும் இவர்கள் அதிக மன உளைச்சல்களுக்கும், மனஅழுத்தத்துக்கும் ஆளாகியிருப்பார்கள். நம்மைக் காக்கிற அவர்களை உற்சாகப்படுத்தி பணிசெய்ய வைக்க வேண்டிய அவர்களின் அண்டை வீட்டினரும், உறவினர்களும், நண்பர்களுமே அவர்களை மதிப்பு குறைவோடு நடத்துவது வேதனையளிக்கிறது. பொதுமக்களில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மீண்டவர்களுக்கும், `நாங்கள் இருக்கிறோம்' என்ற நம்பிக்கையைத் தரவேண்டியதே நம் கடமை. சுய பாதுகாப்பு என்ற பெயரில் மற்றவர்களை அவமதிக்க நமக்கு உரிமையில்லை.

கொரோனா
கொரோனா

நோய் குணமாகி வந்த ஒருவரை நோயாளியாகக் கருதுவது தவறான செயல். நமக்கு நோய்வந்து மீண்டால், நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என விரும்புவோமோ, அப்படித்தான் நாம் மற்றவர்களையும் நடத்த வேண்டும். அதுவே மனிதம், ஒழுக்கம், அறம்!" என்றார் பூர்ண சந்திரிகா