Published:Updated:

கொரோனாவால் வீட்டுக்குள் குழந்தைகள், பெற்றோர்கள் செய்ய வேண்டியவை? - சித்த மருத்துவர் வழிகாட்டல்

'கொரோனா விடுமுறையில் மொபைல் பரவாயில்லை'
'கொரோனா விடுமுறையில் மொபைல் பரவாயில்லை'

’இயற்கையே வலிமையானது’ என்பதைக் குழந்தைகள் மனதில் ஆழமாகப் பதிய வையுங்கள்.

’விட்டாச்சு லீவு... அய்யோ நம்ம பசங்கள இப்போ எப்படிப் பாதுகாக்கிறதுனு தெரியல’ எனப் புலம்பும் பெற்றோர்களைக் காண முடிகிறது. ஆனால், இன்றைய சிறுவர்களை வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்துவது மிக மிக எளிது. காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதானே? செல்போன்!

Playing Kids
Playing Kids

துள்ளித் திரிந்து வெவ்வேறு தெருக்களுக்குப் பயணித்து, பலருடன் கூடி, குழு விளையாட்டுகளை மகிழ்ந்து அனுபவித்து, வியர்க்க விறுவிறுக்க வீடு திரும்பும் இன்றைய தலைமுறை சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இல்லை என்றே சொல்லலாம். எனவே, அவ்வகையில் பெற்றோர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை. ஆனால், செல்போன்களே கதி என்று கிடக்கும் அவர்களின் நிலை இப்போது மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது! கொரோனா பிரச்னைக்கு மொபைலால் வரும் பாதிப்பு பரவாயில்லை என்று நீங்கள் நினைத்தால், இதற்கு மேல் படிக்க வேண்டாம்.

பிரபல தொலைக்காட்சியில் கொரோனா சார்ந்த ஒரு விழிப்புணர்வு விளம்பரம் வருகிறது. அதில் விடுமுறையில் இருக்கும் பள்ளிச் சிறுவன், நன்றாகக் கைகளைக் கழுவுகிறான், பணிக்குச் சென்று வரும் தந்தையையும் கைகழுவ வலியுறுத்துகிறான். அதன் பிறகு அந்தச் சிறுவனும் அவன் தந்தையும் செல்போனைப் பார்த்துக் கொஞ்சிக் குலாவுவதுபோல அந்த விளம்பரம் நிறைவடைகிறது! விழிப்புணர்வு ஏற்படுத்துவது நல்ல விஷயம்தான். ஆனால், அதில் தந்தையும் மகனும் செல்போனைப் பார்த்துதான் பேசி நேரம் செலவழிக்க வேண்டுமா?

Chess
Chess

நம் பாரம்பர்ய விளையாட்டுகளைக் குழந்தைகளுக்குப் பழக்குவதற்கு இதுதான் நேரம். வீட்டுக்குள்ளேயே இருக்கும்போது ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி, பேர்சொல்லி, தாயம், சதுரங்கம், பரமபதம், பூச்சொரிதல் போன்ற விளையாட்டுகளைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி, பாரம்பர்ய நுண்ணறிவைத் தூசி தட்டலாம். ஆனால், சொல்லிக்கொடுக்க பெற்றோர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே? இருக்கவே இருக்கின்றன புத்தகங்கள், காணொளிகள். மேலும், வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள் தாத்தா, பாட்டி என்ற அனுபவ அறிவுப் பொக்கிஷங்கள்! குடும்பத்துடன் இணைந்து உற்சாகமாக இருப்பதற்கான வாய்ப்பு இது நமக்கு. முழுநேரமும் செய்திகளை மட்டுமே பார்த்துப் பதற்றமடையாமல், பெரியவர்களுக்கும் கொஞ்சம் மனம் சாந்தமடையும்.

கொரோனாவின் பெயரைப் பயன்படுத்தி கீரைகள், காய்கள், பழச்சாறுகள், ஆரோக்கிய உணவுகளை உங்கள் பிள்ளைகளிடம் வலியுறுத்துங்கள். ’கீரை, காய் சாப்பிடலைன்னா பூச்சாண்டி வந்துடுவான்...’ - அனைத்து அம்மாக்களும் இந்தப் பதத்தைத் தங்கள் வாண்டுகளுக்குச் சோறூட்ட ஆரம்பித்த காலத்தில் கையாண்டிருப்பார்கள். இப்போது ஓரளவு வளர்ந்த குழந்தைகளிடம், 'கீரை, காய் சாப்பிடலைன்னா நம்ம உடம்புக்குள்ள கொரோனா பூச்சாண்டி வந்துடுவான்...' என்று சொல்லி உணவியலைக் கற்றுக்கொடுங்கள். அதிக உப்பும் சுவையூட்டிகளும் நிறைந்த பாக்கெட் நொறுவைகளைத் தவிர்ப்பதற்கான நல்ல வாய்ப்பும் இப்போது அமைந்திருக்கிறது. சாயம் பூசப்பட்ட உணவுப் பொருள்களை எதிரிகளாகக் காட்டுவதற்கான சூழல் வாய்த்திருக்கிறது... முயல்வோம்.

Fruits
Fruits

’இயற்கையே வலிமையானது’ என்பதைக் குழந்தைகள் மனதில் ஆழமாகப் பதிய வையுங்கள். வெளியில் சென்றுவந்தால் கைகால் கழுவி குளிக்கச் சொன்னது எதற்கு, எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொன்னது எதனால், குழந்தைகளுக்கு உரை மாத்திரை கொடுத்து வலிமைப்படுத்தியது எதற்கு, மிளகு ரசத்தையும் கொள்ளு ரசத்தையும் பருகச் சொன்னது ஏன், படிப்பு படிப்பு என்றில்லாமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கச் சொன்னது எதற்கு... போன்ற விஷயங்களின் ஆழத்தை இப்போது கொரோனாவை இயற்கையின் சாட்சியாக வைத்து எடுத்துச் சொல்லுங்கள்!

எனக்குத் தெரிந்து 90’ஸ் கிட்ஸுக்குப் பிறகு, இரண்டரை மாத கோடை விடுமுறையை அனுபவிக்கப்போவது இந்த ஆண்டுப் பள்ளி மாணவர்களாகத்தான் இருப்பார்கள்! சம்மர் க்ளாஸ் அனுப்ப வாய்ப்பே இல்லை. அடுத்து வரும் மாதங்களை ஆசை தீர அனுபவிக்கப்போகிறார்கள். என்றாலும், சில பள்ளிகள் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நீட் பாடம் நடத்தினாலும் நடத்தலாம்!

மருத்துவர் வி.விக்ரம்குமார்
மருத்துவர் வி.விக்ரம்குமார்

அற்புதமான வாய்ப்பு இப்போது பெற்றோர்களே. செல்போன்களை அதிகம் பயன்படுத்தாமல், நாம் வாழ்ந்த ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் உணவியல் முறையை மீண்டும் நம் வீடுகளுக்குள் புழக்கத்தில் கொண்டு வர நாம் முன்வர வேண்டும். இப்போது நாம் கொடுக்கும் மரத்தைப் பயன்படுத்தி, அடுத்த தலைமுறை ‘நலத் தேரை’ நிச்சயம் இழுப்பார்கள்!

இந்த 21 நாள்களுக்கு நாம் கடைப்பிடிக்க வேண்டிய 21 மந்திரங்கள்! #21DayLockdown
அடுத்த கட்டுரைக்கு