Published:Updated:

`நான் முகக்கவசம் அணிய வேண்டுமா?' -பிரான்ஸ் வாசகரின் கொரோனா கேள்விக்கு மருத்துவர் பதில்

கொரோனா முகக்கவசம்
கொரோனா முகக்கவசம் ( vikatan )

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், N95 வகை முகக்கவசம் அணிவது அவசியம். பொதுமக்களைப் பொறுத்தவரை வெளியில் செல்கையில் முகக்கவசம் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பு, முகக்கவசம் என்பது மருத்துவர்களுக்கான பாதுகாப்பு சாதனமாகவே இருந்தது. இன்றோ பொதுமக்கள் அனைவருமே முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள். பிரான்ஸில் வசிக்கும் நம் வாசகர் ஷாஹிர் அகமது, `நான் வெளியில் செல்லும்போதெல்லாம் முகக்கவசம் அணிய வேண்டுமா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கான பதில் பெற, சமூக நல மருத்துவர் S. ஹரிஹரனிடம் பேசினோம்.

சமூகநல மருத்துவர் ஹரிஹரன்
சமூகநல மருத்துவர் ஹரிஹரன்

``கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளான காய்ச்சல், வறட்டு இருமல், சளி, மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும். அப்போதுதான் தொற்று அவர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாமல் காக்க முடியும். அதேபோல, அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் மாஸ்க் அணிய வேண்டும். இது, அவர்கள் தொற்று பெறாமல் தற்காப்பதுடன், ஒருவேளை தங்களையும் அறியாமல் அவர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களிடமிருந்து தொற்று மற்றவர்களுக்குப் பரவாமலும் தடுக்கும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், N95 வகை முகக்கவசம் அணிவது அவசியம். பொதுமக்களைப் பொறுத்தவரை வெளியில் செல்கையில் முகக்கவசம் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனுடன், தனி மனித இடைவெளியைப் பின்பற்றுதல், கைகழுவுதல், காலணி, மாஸ்க், ஆடைகளை முறையாக அப்புறப்படுத்துவது இவையெல்லாம் சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகள்.

N95 முகக் கவசம்
N95 முகக் கவசம்

கேள்வி கேட்டிருக்கும் வாசகர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். எந்த நாடாக இருந்தாலும், மாஸ்க் அணிவது, மாஸ்க் அணியாமல் இருப்பதைவிட குறிப்பிடத்தகுந்த பாதுகாப்பைத் தருகிறது என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் (CDC - The Centers for Disease Control and Prevention ), முகக்கவசம் அணிய பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முகக்கவசம் பயன்படுத்தும்போது, அதை முறையாகப் பயன்படுத்துவது பற்றி தெரிந்திருக்க வேண்டும். மாஸ்க்கை அணியும்போதும், அகற்றும் போதும் பக்கவாட்டில் உள்ள கட்டும் பகுதியை மட்டுமே தொட வேண்டும். முகக் கவசம் அணிந்திருக்கும்போது அதன் முன்பகுதியை தொடவே கூடாது. அதில் வைரஸ் ஒட்டியிருக்க வாய்ப்பு உள்ளது. அப்பகுதியைத் தொட்டுவிட்டு கண், மூக்கு என்று நாம் தொட்டால் தொற்று பரவும் வாய்ப்பு உண்டாகிவிடும். ஆக முகக்கவசம் அணிவதிலும், அகற்றும் முறையிலும் கவனம் அவசியம்.

கொரோனா
கொரோனா

முகக் கவசம் கிடைக்கப்பெறாதவர்கள், வாங்க இயலாதவர்கள், தரமான துணியாலான காட்டன் மாஸ்க்குகளைப் பயன்படுத்தலாம். அவற்றை முறையாக கிருமிநீக்கம் செய்த பின்னரே, மறுமுறை பயன்படுத்த வேண்டும்.

தற்போதைய சூழலில் அரசு கூறியுள்ளதுபோல் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அவசியமே'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு