Published:Updated:

கொரோனா வைரஸ் பாதிப்பு கொள்ளை நோயல்ல... பீதியடைய வேண்டாம் - மருத்துவர் கருத்து

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் ( Freepik )

பல நூற்றாண்டுகளாக கொரோனா வைரஸின் தாக்கம் இருந்து வந்தாலும் 2002-ம் ஆண்டுக்கு முன்புவரை உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதுவரை இப்போதைய புள்ளிவிவரங்களின்படி தொற்று விகிதம் அதிகமாகவும் நோய்த்தாக்கம் குறைவாகவும் இருப்பதாகத் தெரிகிறது

`வரலாறு திரும்புகிறது' என்ற வசனத்தைப் பலமுறை அரசியல் சகாப்தங்களில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உலகத்தையே தற்போது அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பும் 'வரலாறு திரும்புகிறது' என்பதையே நினைவுபடுத்துகிறதா என்ற சந்தேகம் எழும்பியிருக்கிறது.

உலகில் பல்வேறு இடங்களில் பல்வேறு காலகட்டங்களில் பரவிய தொற்றுநோய்கள் கொள்ளை நோய்களாக மாறி லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கின. 1720-ம் ஆண்டு தொடங்கி சரியாக 100 ஆண்டுகள் இடைவெளியில் பல்வேறு வகையான கொள்ளை நோய்கள் பரவி உயிர்ப்பலி வாங்கியுள்ளன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Pixabay

1720-ம் ஆண்டு பரவிய பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு ஃபிரான்ஸில் உள்ள மர்சேய் என்ற துறைமுக நகரத்தில் வசித்த சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர்.1820-ம் ஆண்டு பரவிய காலரா நோய் தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தோனேசியாவிலுள்ள ஜாவா என்ற தீவில் மட்டும் இந்த நோயால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர்.

1918 முதல் 1920-ம் ஆண்டு வரை பரவிய இன்ஃப்ளூயென்ஸா மற்றும் பன்றிக் காய்ச்சல் என்று அழைக்கப்படும் ஹெச்1என்1 ஆகிய நோய்களால் உலகம் முழுவதும் 50 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். ஸ்பானிஷ் ஃப்ளு என்று அழைக்கப்படும் இந்த நோய்களால் சுமார் 10 கோடி பேர் உயிரிழந்துள்ளனர். உலகில் இதுவரை ஏற்பட்ட கொள்ளைநோய்களில் மிகவும் மோசமானது என்று இது கருதப்படுகிறது.

2020-ல் கொரோனா வைரஸ்?

2003-ம் ஆண்டு சீனாவை அச்சுறுத்தியது சார்ஸ் நோய். ஒரு வகை வைரஸால் பரவும் இந்த நோய் சுவாச மண்டலத்தைத் தாக்கும் தன்மையுடையது. சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் 37 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. சார்ஸ் நோயால் மொத்தம் 8,098 பேர் பாதிக்கப்பட்டனர், அவர்களில் 774 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பிறகு சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே வகையான வைரஸின் தாக்கம் சீனாவில் ஊருடுவியுள்ளது. இந்த வைரஸானது நுரையீரலைத் தாக்கி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

மருத்துவர் புகழேந்தி
மருத்துவர் புகழேந்தி

இதுவரை இந்த நோயால் 7000-த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவைத் தவிர அமெரிக்கா, தாய்லாந்து, ஜப்பான் போன்ற பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 91 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக செயற்பாட்டாளரும் மருத்துவருமான புகழேந்தி கூறும்போது, ``2019-ஆம் டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் உள்ள விலங்கு இறைச்சிக்கூடத்திலிருந்து இந்த வைரஸ் பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது. வௌவால்களில் இந்த வைரஸ் மாற்றம் அடைந்திருக்கக்கூடும் என்றாலும், பாம்புகளின் மூலம் இவை பரவியிருக்கலாம் என்ற ஆராய்ச்சிக் கட்டுரை வெளிவந்தது.

ஆனால், பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் ஏற்கவில்லை. கொரோனா வைரஸ் பாம்புகளைத் தாக்கக்கூடும் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை என்றும் பறவைகளை மட்டுமே அந்த வைரஸ் எளிதில் தாக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். பல நூற்றாண்டுகளாக கொரோனா வைரஸின் தாக்கம் இருந்து வந்தாலும் 2002-ம் ஆண்டுக்கு முன்பு வரை உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதுவரை இப்போதைய புள்ளிவிவரங்களின்படி தொற்று விகிதம் அதிகமாகவும் நோய்த்தாக்கம் குறைவாகவும் இருப்பதாகத் தெரிகிறது" என்கிறார்.

ஃப்ளு காய்ச்சல் போன்ற பாதிப்புதான் இதுவும். பொதுமக்கள் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை.
தொற்றுநோய் மருத்துவர் அப்துல் கஃபூர்
மாஸ்க், வீடியோ கேம்...  கொரோனா வைரஸை வைத்து அக்கறையும் `வியாபார' உத்திகளும்!

நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றனவா... கொரோனா வைரஸும் அந்த வகையைச் சேர்ந்ததா என்று தொற்றுநோய் மருத்துவர் அப்துல் கஃபூரிம் கேட்டோம்.

``2012-ம் ஆண்டு மத்திய கிழக்கு பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது 2020-ல் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் பாதிப்புகள் ஒன்றும் புதிதல்ல. மேலும் 1720, 1820, 1920-களில் ஏற்பட்டது போன்று இது அத்தனை கொடிய கொள்ளைநோயும் இல்லை. கொரோனா வைரஸ் பாதிப்பை அதுபோன்ற கொள்ளைநோய்களுடன் ஒப்பிடுவதும் மிகப்பெரிய தவறு.

Dr.Abdul Ghafur
Dr.Abdul Ghafur

வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவையெல்லாம் மிகப்பெரிய கொள்ளைநோய்கள். பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். சீனா போன்று அதிக மக்கள்தொகையுள்ள நாட்டில் மூன்று வாரங்களில் நூற்றுக்கும் அதிகமான உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்ற அம்சத்தைக் கவனிக்க வேண்டும். இது 3 சதவிகிதம் மட்டுமே.

இதற்கு முன்பு பரவிய தொற்றுநோய்கள் தீவிரமாகப் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தின.ஃப்ளு காய்ச்சல் போன்ற பாதிப்புதான் இதுவும். பொதுமக்கள் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. வைரஸ்களும் உலகின் ஒரு பகுதிதான். ஒவ்வோர் ஆண்டும் ஏதாவது ஒரு வைரஸ் உருவாகிக்கொண்டுதான் இருக்கும். அதன் தாக்கம் குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு தானாகவே குறையத் தொடங்கும்.

Virus
Virus

இதற்கென்று பிரத்யேக சிகிச்சைகள் எதுவும் கிடையாது. அறிகுறிகளுக்கான சிகிச்சைகள் மட்டுமே உள்ளன. இந்த வைரஸுக்கென்று தடுப்பூசிகளும் கண்டறியப்படவில்லை. வெப்பமண்டல நாடு என்பதால் இந்தியாவில் இதுபோன்ற நோய்கள் வராது என்று கூற முடியாது. ஆனால், குளிர் பிரதேசங்களில் பரவுதைப் போன்று அத்தனை வேகமாகப் பரவாது என்று கூறலாம்" என்கிறார்.

Corona Virus
Corona Virus

கொரோனா வைரஸ் பாதிப்பை உலக மருத்துவ அவசரம் என்று இதுவரை உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கவில்லை என்பதே இந்த நோய் இதுவரை மிகப்பெரிய கொள்ளைநோயாக உருவெக்கவில்லை என்பதற்கான சான்றாகப் பார்க்கப்படுகிறது.

`நாடு திரும்பிய கேரளா மாணவருக்கு கொரோனா பாதிப்பு!' -அதிகாரபூர்வமாக அறிவித்த மத்திய சுகாதாரத்துறை
அடுத்த கட்டுரைக்கு