“கண் நல்லாத்தான் தெரிஞ்சிட்டிருந்தது. கொஞ்சநாளா கண்ல பூச்சி பறக்குற மாதிரியே இருக்கு. சில சமயம் கண்ணுக்கு முன்னாடி ஒட்டடை படிஞ்ச மாதிரி தெரியுது'' என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்களில் சிலருக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். `களைப்பு.... ஸ்ட்ரெஸ்.... ரொம்ப நேரம் கம்ப்யூட்டர் வேலை பார்த்ததோட விளைவு....' இப்படி உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக்கொண்டு அந்தப் பிரச்னையை அலட்சியப்படுத்திக் கொண்டிருப்பீர்கள்.
கண்களில் பூச்சி பறப்பது என்பது, நீங்கள் நினைப்பது போல் சாதாரணமானதல்ல. சில நேரங்களில் அவசர சிகிச்சையாக அணுகப்பட வேண்டியது'' என்கிறார், சென்னையைச் சேர்ந்த விழித்திரை மருத்துவர் வசுமதி வேதாந்தம். அந்தப் பிரச்னையின் பின்னணி, காரணங்கள், தீர்வுகள் குறித்து விளக்குகிறார் அவர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நம்முடைய கண்கள் கேமரா போன்றவை என்றால், கேமராவினுள் உள்ள ரோல்தான் ரெட்டினா எனப்படும் விழித்திரை. ரெட்டினாவுக்கு முன், விழித்திரவம் (vitreous ) இருக்கும். அது பார்ப்பதற்கு டிரான்ஸ்பரன்ட்டான ஜெல்லி போன்று இருக்கும். அது விழித்திரையோடு ஒட்டிக் கொண்டிருக்கும்.
ஒருவேளை இந்த ஜெல்லி பகுதியில் இறுக்கமாக இணைந்திருக்கும் கொலாஜன் தளர்ந்தால், அந்த ஜெல்லியானது நீர்க்கத் தொடங்கும். அப்படி நீர்க்கும்போது அதனுள் உள்ள குட்டிக்குட்டித் துகள்கள் போன்ற பகுதியின் நிழல், ரெட்டினாவில் தெரிய ஆரம்பிக்கும். அதுதான் கறுப்புநிறத்தில் பூச்சிகள் பறப்பது போலத் தெரியும். சிலர் ஒட்டடை மாதிரி இருப்பதாகச் சொல்வார்கள். சிலர் கொசு பறப்பது போல இருப்பதாகச் சொல்வார்கள். இவற்றை 'ஃப்ளோட்டர்ஸ்' என்கிறோம்.
காரணங்கள்....
முதுமையின் காரணமாக விழித்திரவம் நீர்த்துப்போவதால் இப்படி ஏற்படலாம்.
கண்களுக்குள் ஏதேனும் அடிபட்டதன் விளைவாக ரத்தக் கசிவு ஏற்படுவதாலும் இருக்கலாம்.
சர்க்கரைநோயாளிகள் மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கும் இது சகஜம்.
மிக அரிதாக கண்களில் ஏற்பட்ட புற்றுநோயின் காரணமாகவும் இப்படி பூச்சி பறப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.

என்ன செய்ய வேண்டும்?
திடீரென கண்களில் பூச்சி பறப்பது போன்றோ, ஒட்டடை தெரிவது போன்றோ உணர்ந்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுகி, விழித்திரையில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்று பார்க்க வேண்டும். ஏனெனில் விழித்திரவமானது நீர்க்கத் தொடங்கினாலே அது விழித்திரையை விட்டுப் பிரிய ஆரம்பிக்கும்.
அப்படிப் பிரியும்போது நரம்புகள் இழுக்கப்பட்டு ஓட்டைகள் விழலாம். அது தெரியாமல் விடும்பட்சத்தில், விழித்திரை விலகி, 'ரெட்டினல் டிடாச்மென்ட்' என்கிற பாதிப்பு வரும். அதைச் சரியாக்க விட்ரெக்டமி (vitrectomy ) என்கிற அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும்.
விழித்திரை திரவம் பிரிந்து, விழித்திரை விலகல் ஏற்படும்போது சிலருக்கு கண்களில் ஃபிளாஷ் போல ஒளிக்கீற்றுகள்கூட தெரியலாம்.
அதையும் அலட்சியப்படுத்தக்கூடாது. அப்படிப்பட்ட நிலையை எமர்ஜென்சியாக கருதி உடனே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். எனவே உங்களுக்கோ, உங்களுக்குத் தெரிந்த யாருக்கோ இத்தகைய அறிகுறிகள் தெரிந்தால் உடனே விழித்திரை சிறப்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

சில நேரங்களில் விழித்திரை திரவத்தை பரிசோதனைக்கு அனுப்பி அமைலாடோசிஸ் (Amyloidosis) எனும் பாதிப்பு இருக்கிறதா என்று கண்டுபிடிக்கப்படும். கார்சினோமா அசோசியேட்டடு ரெட்டினோபதி(Cancer-Associated Retinopathy [CAR]) எனப்படும் பாதிப்புக்கும் இந்தப் பரிசோதனை அவசியம். அதாவது எங்கேயோ உள்ள புற்றுநோயின் பிரதிபலிப்பாக அது கண்களில் தெரியும் நிலை இது.
தவிர ஆட்டோஇம்யூன் ரெட்டினோபதி (Autoimmune retinopathy (AIR) மற்றும் மெலனோமா அசோசியேட்டடு ரெட்டினோபதி (Melanoma-associated retinopathy (MAR) போன்ற நிலைகளிலும் கண்களில் பூச்சி பறப்பது போல தெரியலாம்.

50-60 வயதுக்காரர்களுக்கு ஏற்படும் 'லிம்போமா ' பாதிப்பும் இதற்கும் ஒரு காரணம். அதாவது புற்றுநோய் செல்கள், விழித்திரவத்தில் சேகரமாகும். பாதிக்கப்பட்ட நபர் அலர்ஜி என நினைத்து சிகிச்சைகள் எடுத்துக்கொண்டிருப்பார். அவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் கொடுத்து சரிசெய்வார்கள்.
ஆனாலும் மீண்டும் மீண்டும் கண்களில் பூச்சி பறக்கும் உணர்வு தொடரும். அவர்களுக்கும் விழித்திரவத்தை பயாப்சி சோதனைக்கு உட்படுத்திதான் பிரச்னையை உறுதிசெய்ய முடியும்.
-பார்ப்போம்
- ராஜலட்சுமி
பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்