Election bannerElection banner
Published:Updated:

`கோவையில் 1,200 பேருக்கு கொரோனா?' - வைரல் வாட்ஸ்அப் ஆடியோவும் உண்மையும்

New corona virus
New corona virus ( Pixabay )

பொதுமக்கள் கோவிட் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் - சுகாதாரத் துறை

தமிழகத்தில் கோவிட்-19 தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகள் திடீரென வைரல் ஆவதுண்டு. அந்த வகையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஒருவர் மற்றொருவருடன் பேசியது எனக் கூறி சமீபத்தில் ஒரு ஆடியோ வைரல் ஆனது.

அதில், 'ஜாக்கிரதையாக இருங்க! கோவையை ரெட் ஸோனாக அறிவித்துவிட்டார்கள்' என்று அந்த நபர் பேசத் தொடங்குகிறார். மேலும், 'கோவையில் இன்றைய தினம் மட்டும் 1,200 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கவனமாக இருந்ததைப் போன்று சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்.

covid-19 infection
covid-19 infection

தற்போது மூன்றாவது அலை தொடங்கியிருக்கிறது. இதில் சிக்கிக்கொண்டால் பிழைப்பது ரொம்ப கடினம். எனக்கெல்லாம் வந்தது என்றால் குணமாவது ரொம்ப கடினம். எது சாப்பிட்டாலும் சூடாகச் சாப்பிடுங்கள்.

ஆறிப் போன உணவுகளைச் சாப்பிடவே சாப்பிடாதீர்கள். ஐஸ்க்ரீம் போன்ற உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். குழந்தைகளுக்கு ஆட்டுக்கால், கோழி சூப் அடிக்கடி வைத்துக்கொடுங்கள். விழாக்களுக்குப் போகும்போது வரும்போதெல்லாம் கவனமாக இருங்கள். கண்டிப்பாக தேர்தலுக்கு முன்பாகவே தமிழகத்தில் லாக்டௌன் அமல்படுத்தப்படும்' என்று கூறுவதைப்போல முடிகிறது அந்த ஆடியோ.

இந்நிலையில் இதற்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் ஏ.நிர்மலா விளக்கமளித்துள்ளார்.

அதன்படி, "எங்கள் மருத்துவமனையில் விசாரித்துவிட்டோம். எங்கள் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் யாரும் இதுபோன்ற தகவல்களை வெளியிடவில்லை. இது முழுக்க முழுக்கப் போலியானது.

Covid-19
Covid-19

அந்த ஆடியோவில் கோவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், அன்றைய தினம் மட்டும் 1,200 பேருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அந்த நபர் தெரிவித்திருக்கிறார். அதுவும் முற்றிலும் தவறானது. கோவை மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 50 - 60 பேருக்குத்தான் நோய்த்தொற்று உறுதி செய்யப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் இதுபோன்ற போலியான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கோவை சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு