Published:Updated:

`டேய் பேரக்குழந்தைகளா' என்ற குரலுக்குச் சொந்தக்காரர்... சித்த மருத்துவர் சிவராஜ் மரணம்!

சிவராஜ் சிவக்குமார்
சிவராஜ் சிவக்குமார் ( எம். விஜயகுமார் )

பிரபல சித்த மருத்துவர் சிவராஜ் சிவக்குமார், பலராலும் அறியப்பட்டவர். இவருடைய மருந்து, மாத்திரைகள் உலக முழுவதும் பலரின் சிகிச்சைக்கு பயன்பட்டன.

ஒரு காலத்தில் தமிழ் டி.வி சேனல்களை ஆன் செய்தாலே சித்த மருத்துவர் சிவராஜ் சிவகுமாரின் அறிவுரைகள் தொடங்கிவிடும்.

மரணம்
மரணம்

அவர், 'டேய் பேரக் குழந்தைகளா, நான் உங்க தாத்தா பேசறேன்டா. தவறு செய்யாதீங்கடா, உங்க சக்தியை வீணாக்காதீங்கடா. படுபாவிகளா ஒரு நாளைக்கு மூணு, நாலு முறையாடா... உங்க கால்ல விழுந்து கெஞ்சி கேக்குறேன்டா, தப்பு பண்ணாதீங்கடா' என்பார். சுய இன்பத்தால் ஆண்மை குறைவு ஏற்படும், அதனால் இல்லற வாழ்வில் இன்னல்கள் ஏற்படும் என்று இளைஞர்களுக்கு அன்பாகவும் அதட்டலாகவும் எச்சரிப்பார். அதனால் அவர் தமிழகம் தாண்டி அறியப்பட்டார்.

சித்த மருத்துவர் சிவராஜ் சிவக்குமார் குடும்பத்தினர் 7 தலைமுறைகளாக, சுமார் 206 ஆண்டுகளுக்கும் மேலாக சித்த மருத்துவர்களாக இருந்துள்ளனர். இவரின் அப்பா சிவராஜ், அம்மா அமிர்தவள்ளி. அப்பா சிவராஜூம் சித்த மருத்துவத்தில் தலைசிறந்து விளங்கினார். அந்த பாரம்பர்யத்தில் வந்த சிவக்குமாருக்கும் சிறு வயதிலிருந்தே சித்த மருத்துவத்தில் ஈடுபாடு அதிகரித்து சித்த மருத்துவத்தில் பல புதிய மருந்துகளையும் கண்டுபிடித்தார்.

சிவராஜ் சிவக்குமார் பேச்சி
சிவராஜ் சிவக்குமார் பேச்சி

சிவராஜ் சிவக்குமாரின் மனைவி பெயர் மல்லிகா. இவர்களுக்கு சிவராஜ் கல்பனா என்ற மகளும் மருத்துவர் சஞ்சய் என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்கள் சேலம் சிவதாபுரத்தில் உள்ள சிவராஜ் சித்த மருத்துவ கல்லூரியை நிர்வகித்து வருகிறார்கள்.

சித்த மருத்துவர் சிவக்குமார் சித்த மருத்துவத்தின் மகிமைகளை தொலைக்காட்சிகளில் பேசியும் விளம்பரம் செய்தும் புகழ் பெற்றார். அதையடுத்து சேலம் சிவதாபுரத்தில் மிகப்பெரிய சித்த மருத்துவமனையும் சித்த மருத்துவ கல்லூரியும் தொடங்கினார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதன் கிளைகளைத் தொடங்கியும் பல மாநிலங்களுக்குச் சென்று மருத்துவ முகாம்கள் நடத்தியும் ஆண்மைக் குறைவு, நரம்பு தளர்ச்சிக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

இந்த நிலையில் 78 வயதான சிவராஜ் சிவக்குமார் உடல் நலக்குறைவால் சிவதாபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்தார். நேற்று நள்ளிரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சிவதாபுரத்தில் உள்ள பூர்விக வீடான அகஸ்தியர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அரசியல் கட்சியினரும் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று மாலை 4:15 மணிக்கு சிவதாபுரத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அஞ்சலி
அஞ்சலி

இதுபற்றி சிவராஜ் சித்த மருத்துவ கல்லூரியின் நிர்வாக மேலாளர் சரவணகுமாரிடம் பேசியபோது, ''அய்யாவின் மரணம் அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்ல எங்களுக்கும் தமிழக மக்களுக்கும், சித்த மருத்துவ துறைக்கும் பேரிழப்பு. சிவராஜ் சிவக்குமார் சித்த மருத்துவத்தில் பல சாதனைகளைப் புரிந்தவர். 78 வயதான இவர் வயது முதிர்ச்சியின் காரணமாகவும் உடல் நலக் குறைவாலும் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். நேற்று நள்ளிரவு 12.05 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

சிவராஜ் சிவக்குமார் அய்யாவின் மருந்து, மாத்திரைகள் உலகம் முழுவதும் பலரின் சிகிச்சைக்கு உதவியது. தமிழகத்தில் 7 தலைமுறைகளாக, 206 ஆண்டுகளுக்கும் மேலாக சித்த மருத்துவத்துறையில் அய்யாவின் குடும்பம் இருந்து வருகிறது '' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு