Published:Updated:

உடலில் ஆங்காங்கே தென்படும் கொழுப்புக்கட்டிகள் - அறுவைசிகிச்சை மூலம் அகற்றியே ஆக வேண்டுமா?

அறுவைசிகிச்சை

எல்லா கட்டிகளையும் நாம் கொழுப்புக்கட்டி என்று நினைத்துவிடக் கூடாது. சில இடங்களில் புற்றுநோய்க்கட்டி உருவாகியிருக்கும் நிலையில் அதை கொழுப்புக்கட்டி என நினைத்துவிட்டால், நாளடைவில் புற்றுநோய் வளரும் அபாயமும் இருக்கிறது.

உடலில் ஆங்காங்கே தென்படும் கொழுப்புக்கட்டிகள் - அறுவைசிகிச்சை மூலம் அகற்றியே ஆக வேண்டுமா?

எல்லா கட்டிகளையும் நாம் கொழுப்புக்கட்டி என்று நினைத்துவிடக் கூடாது. சில இடங்களில் புற்றுநோய்க்கட்டி உருவாகியிருக்கும் நிலையில் அதை கொழுப்புக்கட்டி என நினைத்துவிட்டால், நாளடைவில் புற்றுநோய் வளரும் அபாயமும் இருக்கிறது.

Published:Updated:
அறுவைசிகிச்சை

உடலின் சில பகுதிகளில் அளவில் சிறியதும், சற்று பெரியதுமாகக் கட்டிகள் இருக்கும். நமக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் நீண்ட காலமாக அப்படியே இருக்கும். இவை கொழுப்புக்கட்டிகள் என்று அழைக்கப்படுகின்றன. Lipoma என்றழைக்கப்படுகிற கொழுப்புக்கட்டியை நாமே சுய பரிசோதனை செய்து எப்படிக் கண்டுபிடிப்பது? ஏனென்றால் வேறு விதமான கட்டிகளைக்கூட நாம் கொழுப்புக்கட்டி என நினைத்து அலட்சியப்படுத்திவிட்டால் பிரச்னை. கொழுப்புக்கட்டிதான் என உறுதிப்படுத்திவிட்டால் அதை அகற்றியே தீர வேண்டுமா? இதுபற்றி, சென்னையைச் சேர்ந்த பொது அறுவைசிகிச்சை மருத்துவர் முரளிதரனிடம் கேட்டோம்...

டாக்டர் முரளிதரன்
டாக்டர் முரளிதரன்
படம்: ர. கண்ணன்

``கொழுப்புக்கட்டியைப் பொறுத்தவரையிலும் அது வலி ஏற்படுத்தாத கட்டியாகவே இருக்கும். நிறைய பேருக்கு அவர்கள் உடலில் கொழுப்புக்கட்டி இருப்பது தெரியும். கேன்சர் அல்லாத கட்டி என்றே அதைக் கூறுவோம். இந்தக் கொழுப்புக் கட்டிகள் உடலில் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கான பிரத்யேக காரணங்கள் எதுவுமில்லை. மரபு ரீதியாகவும் இக்கொழுப்புக்கட்டிகள் ஏற்படுகின்றன. மற்றபடி யாருக்கு வேண்டுமானாலும் இக்கட்டிகள் வரலாம். கொழுப்புக் கட்டிகளைக் கண்டறிந்த பிறகு, அகற்றியே தீர வேண்டுமா என்று கேட்டுக்கொண்டு பலர் எங்களிடம் வருவார்கள். இதற்கு பொதுவாக பதில் கூறி விட முடியாது. அது கொழுப்புக்கட்டியின் தன்மையைப் பொறுத்து முடிவு செய்யப்படக்கூடியது.

2 செ.மீ அளவில், வலியின்றி எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் இருந்தால் அதை அகற்றத் தேவையில்லை. ஆலோசனைக்காக வருகிற பலரும், அவர்கள் உடலில் இக்கொழுப்புக்கட்டி 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது என்று சொல்வார்கள். அவர்களுக்கு அக்கட்டி ஏதேனும் ஒரு விதத்தில் இடையூறாக இருக்குமேயானால் அதை அகற்றியே தீர வேண்டும். அதற்கு முன் அது உண்மையில் கொழுப்புக்கட்டிதானா என்பதை மருத்துவப் பரிசோதனை மூலமாக உறுதிப்படுத்திக் கொள்வோம். இது தொடர்பான பல கேள்விகள் கேட்டு அதற்கான பதில்களின் மூலம் கண்டறிவோம். அளவில் பெரியதாக சந்தேகத்துக்குரிய கட்டியாக இருக்கும் பட்சத்தில், ஸ்கேன் செய்து கண்டறிய வேண்டிய தேவை ஏற்படலாம். பொதுவாகவே இக்கட்டி வலி கொடுக்காது, சில இடங்களில் நரம்புகள் சந்திக்கும் இடத்தில் கட்டி உருவானால் அது வலி கொடுப்பதாக அமையலாம். கட்டியால் வலி ஏற்படும் நிலையில் இதை அகற்றியே ஆக வேண்டும்.

இக்கட்டி பொதுவாக அனைவருக்கும் ஏற்படுவதால் இதை `யுனிவர்சல் ட்யூமர்' என்று குறிப்பிடுவோம். நீண்டகாலமாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்தால் விட்டுவிடலாம். திடீரென கட்டி முளைப்பது, பெரிதாவது என்று வருகையில் அகற்றுவது அவசியம். இந்தக் கட்டி உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். கழுத்து, தோள்பட்டை, வயிறு மற்றும் தொடைப்பகுதியில்தான் பெரும்பாலாக இக்கட்டி ஏற்படுகிறது. நரம்பு மண்டலத்தில் இக்கட்டி வளர்வதெல்லாம் மிகவும் அரிது" என்றவரிடம் இக்கட்டியை உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கம் வழியாகக் கரைக்க முடியுமா என்று கேட்டதற்கு...

``சருமத்துக்கு அடியில் தேங்கியிருக்கும் கொழுப்பை வேண்டுமானால் உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவுப் பழக்கத்தின் வழியே கரைக்க முடியுமே தவிர, அது கட்டியாகி விட்ட பிறகு அறுவைசிகிச்சை செய்து அகற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்தக் கட்டி நாளடைவில் பெரிதாகலாமே தவிர சிறியதாகாது. இக்கட்டி மிக மெதுவாக வளரக்கூடியது. பெரும்பாலும் 2 செ.மீ அளவில்தான் இக்கட்டி இருக்கும். அரிதாக சிலருக்கு 10 - 15 செ.மீ அளவில் வெளிப்படையாகத் தெரியும் வண்ணம் இக்கட்டிகள் இருக்கும். தொடை மற்றும் வயிற்றின் பின்பகுதியில் இந்த மாதிரியான பெரிய கட்டிகள் இருந்தால் அது புற்றுநோய்க்கட்டியாக மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதால் கவனமாக இருக்க வேண்டும்" என்றவர் உடலில் உண்டாகியிருக்கும் கட்டியை கொழுப்புக்கட்டி என நாமே நினைத்துக்கொள்ளக் கூடாது என்கிறார்.

உடலில் ஆங்காங்கே தென்படும் கொழுப்புக்கட்டிகள் - அறுவைசிகிச்சை மூலம் அகற்றியே ஆக வேண்டுமா?

``எல்லாக் கட்டியையும் நாம் கொழுப்புக்கட்டி என்று நினைத்து விடக் கூடாது. உதாரணத்துக்கு, கழுத்துப் பகுதியில் நெரிக்கட்டுவதால்கூட கட்டி ஏற்படும். அது காசநோயின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம். சில இடங்களில் புற்றுநோய்க்கட்டி உருவாகியிருக்கும் நிலையில் அதைக் கொழுப்புக்கட்டி என நினைத்துவிட்டால் நாளடைவில் புற்றுநோய் வளரும் அபாயமும் இருக்கிறது. இக்கட்டி வலி அல்லது ஏதேனும் தொந்தரவு கொடுக்கும் நிலையில் உடனே அறுவைசிகிச்சை நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது. பெரும்பாலும் கொழுப்புக்கட்டியை குறிப்பிட்ட பகுதியைச் சுற்றி மட்டும் மரத்துப்போகிற ஊசி (லோக்கல் அனஸ்தீசியா) போட்டு அகற்றிவிடுவோம். வந்த உடனே சிறிய அளவிலான அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு உடனே வீட்டுக்குக் கிளம்பிவிடலாம். இதுவே பெரிய கட்டி என்றால் முழு மயக்கத்தை ஏற்படுத்தி பெரிய அளவிலான அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும்" என்கிறார் முரளிதரன்.