Published:Updated:

ஆக்சிஜன் அலர்ட்! - அவசியம்... அவசரம்!

Pregnancy
பிரீமியம் ஸ்டோரி
Pregnancy

ஹெல்த்

ஆக்சிஜன் அலர்ட்! - அவசியம்... அவசரம்!

ஹெல்த்

Published:Updated:
Pregnancy
பிரீமியம் ஸ்டோரி
Pregnancy

ருவிலுள்ள குழந்தைக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்காத எமெர்ஜென்சி நிலை (Fetal Distress During Pregnancy) தற்போது அதிகரித்துவருகிறது. பிரசவத்துக்கு முன்னர் மற்றும் பிரசவ நேரத்தில் என இரண்டு சூழல்களில் இந்த பாதிப்பு ஏற்படும். இதனால், குழந்தைக்கு வளர்ச்சிக் குறைபாடு முதல் உயிரிழப்புவரை ஏற்படலாம். இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகளை விளக்குகிறார், மகப்பேறு மருத்துவர் நித்யா தேவி.

ஆக்சிஜன் அலர்ட்! - அவசியம்... அவசரம்!

பிரசவத்துக்கு முந்தைய காரணங்கள்

 • உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், ரத்தச்சோகை போன்ற பாதிப்புகள் கர்ப்பிணிக்கு நீண்டகாலமாக அல்லது தீவிரமாக இருந்தால், அவரின் ரத்த நாளங்கள் சுருங்கவோ அல்லது அவற்றில் அடைப்பு ஏற்படவோ வாய்ப்புகள் ஏற்படும். அதனால், கருவிலுள்ள குழந்தைக்குச் செல்லும் ரத்த அளவு குறைந்து, ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும், நஞ்சு கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியில் உருவாகியிருந்தாலும், குழந்தைக்கான ரத்த ஓட்டம் குறையலாம்.

 • கருவிலுள்ள குழந்தைக்கு சரிவிகித வளர்ச்சி இல்லாமை. மேலும், சராசரி அளவைவிட அதிக உடல் எடை அல்லது குறைந்த உடல் எடையில் குழந்தை இருப்பது.

 • கருவில் குழந்தையைச் சுற்றியிருக்கும் நீர்ச்சத்து குறைவாக இருப்பது. இதனால், போதிய இட வசதியில்லாமல் நஞ்சுக்கொடிக்கு அழுத்தம் உண்டாகி, குழந்தைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும்.

 • உடல் பருமன், தாமதமாகத் திருமணம் செய்துகொள்வது அல்லது குழந்தை பெற்றுக்கொள்வது போன்ற காரணங்களும் குழந்தைக்குச் சிக்கலை உண்டாக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரசவ நேரக் காரணங்கள்

 • பிரசவ நேரத்தில் தாய்க்கு அதிக ரத்த இழப்பு ஏற்படுதல் அல்லது அடிக்கடி ரத்தப்போக்கு நிகழ்வதற்குக் காரணமான உடல்நல பாதிப்புகள் எவையேனும் முன்கூட்டியே இருப்பது.

 • பிரசவ நேரத்தில் தாய்க்குக் கடுமையான காய்ச்சல் இருந்தால், அந்தக் கிருமித்தொற்று குழந்தையின் உடல்நலனையும் பாதிக்கக்கூடும். இதுவும் கருவிலுள்ள குழந்தைக்கு சுவாசப் பிரச்னையை உண்டாக்கலாம்.

ஆக்சிஜன் அலர்ட்! - அவசியம்... அவசரம்!
 • குழந்தையின் வளர்ச்சி சரியாக இருந்தும், பிரசவத்தின்போது குழந்தை வெளியே வருவதற்கான பாதை குறுகலாக இருப்பது.

 • தாய் அதிக நேரம் பிரசவவலியில் இருந்தாலோ அல்லது பிரசவவலி இருந்தும் குழந்தை வெளியே வராமல் இருந்தாலோ குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பொதுவாக, பிரசவவலியில் இருக்கும் தாய்க்கு, இரண்டு சூரிய விடியல் அல்லது இரண்டு இரவுப் பொழுதுவரை பிரவசவலி நீளாமல் அதற்குள் குழந்தை பிறந்துவிட வேண்டும்.

 • பொதுவாக, குழந்தை பிறந்த பின்னர்தான் நஞ்சு பிரிய வேண்டும். மாறாக, குழந்தை பிறக்கும் முன்னரே நஞ்சு பிரிதல் அல்லது நஞ்சு சிறியதாக இருப்பது அல்லது பிரசவ நேரத்தில் குழந்தை வெளியே வருவதற்குத் தடையாக நஞ்சு, பாதையை அடைத்துக்கொண்டு இருப்பது போன்ற காரணங்களாலும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். மேலும் பிரசவ நேரத்தில் நஞ்சுக்கொடி, குழந்தையின் கழுத்துப் பகுதியைச் சுற்றியிருப்பதும் சிக்கலை உண்டாக்கலாம்.

 • பிரசவ நேரத்தில் குழந்தை பூமியைப் பார்த்ததுபோலக் கவிழ்ந்தபடி வராமல், வானத்தைப் பார்த்ததுபோல மல்லாந்த நிலையில் வெளியே வருவது அல்லது முதலில் தலை வருவதற்கு பதிலாக, கால் உள்ளிட்ட வேறு பகுதிகள் வெளியே வருதல்.

 • குழந்தை கர்ப்பப்பையிலேயே மலம் கழித்துவிட்டால், அதற்கு சுவாசப் பிரச்னைகள் அதிகளவில் ஏற்பட வாய்ப்புண்டாகும். அது போன்ற நேரங்களில், குழந்தையை விரைந்து காப்பாற்ற சிசேரியன் பிரசவம்தான் மேற்கொள்ளப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தீர்வுகள்

 • இந்தப் பிரச்னையைத் தடுக்க, கர்ப்பிணிகள் மாதந்தோறும் தவறாமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். தாயின் ரத்த அழுத்தம், ரத்த அளவு, உடல் எடை, நீர்ச்சத்து, நீரிலுள்ள உப்புச் சத்தின் அளவு மற்றும் குழந்தையின் வளர்ச்சி, அசைவுகள், ரத்த ஓட்டம் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உரிய இடைவேளைகளில் மருத்துவர் பரிந்துரைக்கும் ஸ்கேன்களைத் தவறாமல் எடுத்துப் பார்க்க வேண்டும். ஒருவேளை பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மருத்துவர் சிகிச்சையை ஆரம்பிப்பார். ஒருவேளை அந்த பாதிப்பு கண்டறியப்படாமல் இருந்தால் அல்லது கண்டறிந்தும் அலட்சியமாக இருந்தால், குழந்தைக்கு நிரந்தர மூளை வளர்ச்சி அல்லது உடல் வளர்ச்சிக் குறைபாடு ஏற்படலாம். சில நேரங்களில் இது போன்ற பாதிப்புகளால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

ஆக்சிஜன் அலர்ட்! - அவசியம்... அவசரம்!
 • குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதைக் கண்காணிப்பதற்கு என்.எஸ்.டி (Non Stress Test) பரிசோதனையை உரிய நேரத்தில் செய்துகொள்ளலாம் (8 மாதங்களுக்குப் பிறகிலிருந்து பிரசவம்வரை).

 • 26-வது வாரத்திலிருந்து கருவிலுள்ள குழந்தையின் அசைவுகளை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். மாலை வேளைச் சிற்றுண்டி உட்பட நான்கு வேளையும் உணவு உட்கொண்ட பின்னர் அடுத்த ஒரு மணி நேரத்தில் கருவிலுள்ள குழந்தையிடமிருந்து குறைந்தபட்சம் 4 - 5 ஆக்டிவ் மூவ்மென்ட்ஸ் (அசைவுகள்) தெரிய வேண்டும். அப்படித் தெரியவில்லையெனில், உடனடியாக மருத்துவரை அணுகி குழந்தையின் இதயத்துடிப்பு சீராக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

 • மாதந்தோறும் தாய் மற்றும் குழந்தையின் உடல் எடை சீராக அதிகரிக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

 • இந்தியாவில் 28 வாரங்களைக் கடந்தால்தான் கருவிலுள்ளது குழந்தை. அதற்கு முந்தைய வாரங்கள்வரை அதை `சிசு’ என்போம். 28 வாரங்களைக் கடந்த பிறகு கருவிலுள்ள குழந்தை நல்ல வளர்ச்சிநிலையை அடைந்துவிடும். எனவே, அதற்குப் பிறகு குழந்தைக்கு ஆக்சிஜன் கிடைக்காத பிரச்னை ஏற்பட்டால், உடனடியாகப் பிரசவம் செய்து குழந்தையைக் காப்பாற்றவே அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆனால், அந்த பாதிப்பை உரிய காலத்தில் கண்டறிவது அவசியம்.

 • கர்ப்பிணிகள், தவறாமல் நடைப்பயிற்சி மற்றும் எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். துரித மற்றும் எண்ணெய் உணவுகளைத் தவிர்த்துவிட்டு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 • கர்ப்பிணிகள் இடதுபுறமாக திரும்பிப் படுத்தால், குழந்தைக்கான ரத்த ஓட்டம் சீராக இருக்க அதிக வாய்ப்புண்டாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism