Published:Updated:

சாலையில் பேச்சு மூச்சில்லாமல் கிடப்பவரை எப்படி மீட்க வேண்டும்? #ExpertOpinion

இதைச் செய்ய ஆரம்பிக்கும்போது அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும். ஒரே நபரால் தொடர்ந்து செய்ய முடியாது.

CPR
CPR ( Pixabay )

சாலை விபத்தில் சிக்கி, மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்த முதியவருக்கு உரிய நேரத்தில் செயற்கை சுவாசம் அளித்துக் காப்பாற்றியிருக்கிறார் காவலர் பிரபு. திருச்சியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காவலருக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. காவலர் பயிற்சியின்போது அளிக்கப்பட்ட முதலுதவி பயிற்சியினால்தான் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. இப்படிச் செய்வதன் மூலம் ஆபத்தில் இருக்கும் உயிர்களை 70 சதவிகிதம் காப்பாற்றிவிடலாம் என்றும் பிரபு தெரிவித்துள்ளார்.

`முதியவரைக் காப்பாற்றிய 3 நிமிட செயற்கை சுவாசம்!' -வைரல் வீடியோவால் நெகிழும் திருச்சி காவலர்
First Aid
First Aid
Pixabay

இதுபோன்று பல இடங்களை நாமும் கடந்திருப்போம். நம்மாலும் செயற்கை சுவாசம் கொடுத்துவிட முடியுமா? அதை எப்படிக் கொடுப்பது என்று அவரசகால மருத்துவர் தவப்பழனியிடம் கேட்டோம்.``இந்த வகையான முதலுதவிக்கு `கார்டியோபல்மோனரி ரிஸாசிடேஷன்' (Cardiopulmonary resuscitation - CPR) என்று பெயர். சுருக்கமாக சி.பி.ஆர். மாரடைப்பு ஏற்பட்டாலோ, மின்சாரம் பாய்ந்தாலோ, சாலை விபத்தில் சிக்கி ஒருவர் மயங்கி விழுந்தாலோ முதலில் அவருக்கு சுவாசம் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும்.

வயிறு, நெஞ்சுப் பகுதிகளில் அசைவிருந்தால் மூச்சு இருக்கிறது என்று அர்த்தம். நாடித்துடிப்பு இருக்கிறதா என்பதைக் கழுத்தின் பக்கவாட்டில் இருக்கும் பெரிய ரத்தக்குழாயில் கை வைத்துப் பரிசோதிக்க வேண்டும். இரண்டு இடங்களிலும் அசைவு, துடிப்பு இல்லை என்றால் இதயத்துடிப்பு நின்றுவிட்டது (Cardiac arrest) என்று பொருள். அத்தகைய சூழலில் முதலுதவி செய்யாவிட்டால் அவர்கள் உயிரிழக்க வாய்ப்புள்ளது. மயங்கி விழுந்து இதயத்துடிப்பு நின்றுவிட்டால் குறுகிய நேரத்தில் இதயத்தை மீண்டும் இயங்க வைக்க முதலுதவி செய்ய வேண்டியது அவசியம்.

Dr.Dhavapalani
Dr.Dhavapalani

இந்தச் செயல்முறையைச் செய்வதற்குமுன் ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் கொடுத்துவிட வேண்டும். அதன்பிறகு மயங்கிய நிலையில் இருப்பவரின் நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் (Chest Compression) கொடுப்பதுதான் `சி.பி.ஆர்' செயல்முறை. நடுநெஞ்சுப் பகுதியில் படுமாறு உள்ளங்கையை வைக்க வேண்டும். அதற்கு மேல் மற்றோர் உள்ளங்கையை வைத்து, உடல் 5 செ.மீ அளவு உள்ளே அழுந்துமாறு அழுத்த வேண்டும். சௌகர்யப்பட்டால் சம்பந்தப்பட்டவரின் வாயோடு வாய் வைத்தும் மூச்சுக் கொடுக்கலாம்.

30 முறை நெஞ்சுப்பகுதியை அழுத்துவது, அதன்பிறகு வாய் வழியாக இரண்டு முறை மூச்சுக் கொடுப்பது என இரண்டையும் மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். இரண்டு முறை இவற்றைச் செய்துமுடிக்க இரண்டு நிமிடங்கள் எடுக்கும். அதன்பிறகு, `நாடித்துடிப்பு இருக்கிறதா?' என்று மீண்டும் கழுத்தில் கை வைத்துப் பரிசோதிக்க வேண்டும். நாடித் துடிப்பு இல்லையென்றால் மீண்டும் இதே முறையைப் பின்பற்ற வேண்டும்.

Ambulance
Ambulance
Pixabay

இதைச் செய்ய ஆரம்பிக்கும்போது அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும். ஒரே நபரால் தொடர்ந்து செய்ய முடியாது என்பதால் ஆம்புலன்ஸ் வரும்வரை இன்னொருவர் உதவியுடன் செய்யலாம்" என்றார்.

இதுபோன்ற முதலுதவியைச் செய்வதற்கு முன்பு தகுந்த பயிற்சி பெற்றிருப்பதும் அவசியம் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

Vikatan