Published:Updated:

மாவட்டத்தின் முதல் கொரோனா நோயாளி... புதுக்கோட்டையைக் கலங்கவைத்த `மிரட்டு நிலை'

பாதுகாப்பு வளையத்திற்குள் மிரட்டு நிலை
பாதுகாப்பு வளையத்திற்குள் மிரட்டு நிலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் நோயாளியாக 23வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

உலக நாடுகளையே அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் புதிதாகப் பலருக்கும் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டு வந்தாலும், தினமும் அதிலிருந்து சிலர் மீண்டு வருவது ஆறுதல் அளிக்கிறது. இந்த நிலையில், புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் ஒருவருக்குக்கூட கொரோனா தொற்று பரவாமல் இருந்த நிலையில், தற்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள மிரட்டு நிலை என்ற கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறியுடன் புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் திசு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார்.

பாதுகாப்பு வளையத்திற்குள் மிரட்டு நிலை
பாதுகாப்பு வளையத்திற்குள் மிரட்டு நிலை

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட அந்த நபர், அவரது தந்தை ஆகியோர் டெல்லியில் நடைபெற் மாநாட்டுக்கு சென்றுவந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்ததால், இவரது தந்தை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்தனர். ரிசல்ட் நெகட்டிவாக வந்ததால் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மகனுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என வந்திருப்பது குடும்பத்துக்கு மட்டுமில்லாமல், மாவட்டத்தில் உள்ள பலருக்கும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, மிரட்டு நிலை கிராமமே மாவட்ட நிர்வாகத்தின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சாலைகள் முழுவதும் பேரிகார்டுகள் வைத்து அடைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அந்த இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுவருகின்றனர். இதையடுத்து, மிரட்டு நிலை கிராமத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டுவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு