Published:Updated:

` மரச்செக்கு எண்ணெயில் பாமாயில் கலப்பு?'- முற்றுகையிட்ட பொதுமக்கள்; மூடப்பட்ட பிரபல ஆயில் நிறுவனம்

protest
protest

மரச் செக்கு ஆயில் என்கிற பெயரில் கலப்பட எண்ணெய் தயாரித்ததாக எழுந்த புகாரில் திருச்சியில் செயல்பட்டு வந்த பிரபல எண்ணெய் உற்பத்தி ஆலை சீல் வைக்கப்பட்டது.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் செயல்பட்டு வருகிறது எண்ணெய் நிறுவனமான காளை மார்க். கடந்த இரண்டு வருடமாகச் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், திருச்சியில் காளை மார்க் மற்றும் புவனா மரச்செக்கு எண்ணெய் என்கிற பெயரில் விற்பனை செய்துவருகிறது. இந்த நிலையில், மரச்செக்கு எண்ணெயில் பாமாயில் கலப்படம் செய்வதாகவும் இதனால் பொதுமக்களுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, தி.மு.க முன்னாள் கவுன்சிலரான முத்துச்செல்வம் தலைமையில் ஆலை முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

Peoples protest
Peoples protest

போராட்டத்தையடுத்து, நேற்று முன்தினம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சித்ரா தலைமையில் காளை மார்க் எண்ணெய் நிறுவனத்தின் உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர். செக்கு இயந்திரம், எண்ணெய் பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது நிறுவனத்தின் உரிமையாளர்கள் இல்லாமல் தொழிலாளர்கள் மட்டுமே அங்கே குழுமியிருந்தனர்.

சோதனைக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய உணவுப் பாதுகாப்பு அலுவலர் சித்ரா, ``மரச்செக்கு எண்ணெய் உற்பத்தியில் கலப்படம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட ஆலையை ஆய்வுசெய்து சீல் வைத்துள்ளோம். எங்கள் சோதனையில் ஆலையின் உள்ளே 100 லிட்டருக்கும் மேல் பாமாயில் உள்ளது தெரியவந்துள்ளது" என்றார்.

Food safety officers raid
Food safety officers raid

ஆலை மீதான குற்றச்சாட்டுகள் குறித்து காளை மார்க் எண்ணெய் ஆலை நிறுவனர் பாரதிராஜாவின் தம்பியும் வழக்கறிஞருமான பாண்டியனிடம் கேட்டோம். `` இந்தக் குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை. உள்நோக்கத்தோடு எங்கள் நிறுவனத்தைச் சிலர் முற்றுகையிட்டனர். அவர்கள் கொடுத்த அரசியல் நெருக்கடி காரணமாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எங்கள் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையில் ஆய்வு நடத்தினார்களே தவிர, கலப்படம் செய்யப்பட்ட பொருள்களைக் கைப்பற்றவில்லை. ஆய்வக சோதனைக்கும் அனுப்பவில்லை. இப்படியிருக்க, நாங்கள் கலப்பட பொருளை விற்றதாகக் குற்றம்சுமத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பாமாயிலை மொத்தமாக வாங்கி வைத்திருந்தோமே தவிர கலப்படத்துக்காக இல்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திப்போம்" என்றார் கொதிப்புடன்.

அடுத்த கட்டுரைக்கு