பிரீமியம் ஸ்டோரி
சென்னை ஃப்ரன்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் நிறுவனர், தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன். ‘ஹெல்த் இஸ் வெல்த்’ தொடருக்காக அவரைச் சந்தித்தோம்.

வேட்டையாடு விளையாடு!

‘‘எனது பூர்வீகம் கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள செங்கனூர். இப்போது என் வயது 78. தினமும் நடைப்பயிற்சி செய்வது என் வழக்கம். வெளிநாடுகளுக்குச் செல்ல நேரும் நாள்களில்கூட டிரெட்மில்லில் நடைப்பயிற்சியை முடித்து விடுவேன். நான் சென்று வந்த நாடுகளில் பிரெட், பட்டர், ஜாம் ஆகியவைதான் அதிகம் கிடைக்கும். ஆனாலும் முடிந்தவரை நல்ல உணவு எடுத்துக்கொள்வேன். வார இறுதியில் புதுச்சேரியிலுள்ள எனது ‘தி ஸ்டடி’ பள்ளிக்குச் செல்வேன். அங்கேயிருக்கும் என் அழகிய தோட்டத்தில் நேரம் செலவழிப்பேன். வெளிநாடுகளிலிருந்து நிறைய செடிகள் வாங்கி வந்து, அங்கே வளர்த்துவருகிறேன்.

கே.எம்.செரியன்
கே.எம்.செரியன்

காலை விருந்தாக, மதியம் மருந்தாக, இரவு அளவாக...

இயல்பாகவே நான் குறைந்த அளவே சாப்பிடுவேன். காலை உணவை நன்றாகச் சாப்பிட்டுவிடுவேன். மதியம் சூப், சாலட் மட்டுமே சாப்பிடுவேன். இரவு மிகவும் லைட்டான உணவு. சிறு வயதிலிருந்தே நான் கடைப்பிடிக்கும் உணவு முறை இதுதான். ஒரு வேளை உணவைக் குறைத்துக்கொள்வதன் மூலம் வீண் கொழுப்பு சேராமல் தவிர்க்க முடியும். இந்த உணவு முறை சர்க்கரைநோய்க்கு நல்ல மருந்தாக அமையும்.

கே.எம்.செரியன்
கே.எம்.செரியன்

அரிசி, அவியல், ஆற்று மீன் ஃபேவரைட்!

மற்ற மாநிலங்களிலுள்ள அரிசி ரகங்களைவிட, கேரளத்துப் பெரிய அரிசி சத்து நிறைந்தது. எனக்கு மிகவும் பிடிக்கும்.

மீன் உணவை விரும்பிச் சாப்பிடும் எனக்கு வஞ்சிரம் போன்றவற்றைவிட நன்னீர் மீன்தான் ரொம்பப் பிடிக்கும். கேரளத்தில் நதிக்கரையில் வீடு. நல்ல மீன்கள் நிறைய கிடைக்கும். அதற்கடுத்த படியாக, அமெரிக்காவில் நல்ல மீன்கள் கிடைப்பதைப் பார்த்திருக்கிறேன். எல்லா காய்கறிகளும் கலந்த அவியல் உணவு என் ஃபேவரைட்.

ஹெல்த் இஸ் வெல்த் : காய்கறி... உடற்பயிற்சி... குத்துப்பாட்டு!

ரிட்டயர்மென்ட் லைஃபில் பிஸியாக இருங்கள்!

எவ்வளவு பெரிய பணியில், தொழிலில் இருந்தவர்களாக இருந்தாலும், ரிட்டயர்மென்ட் வாழ்க்கையில் அவர்களுக்கு வேலையில்லாமல் இருப்பது மனஉளைச்சலை ஏற்படுத்தும். முகம் மாறி, சிரிப்பை இழப்பார்கள். அதனாலேயே நோய் வரும். எனவே, நம்மையும் நம் இயல்பையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். தொழில், அலுவல் வேலைகள் இல்லையென்றாலும், பிடித்த ஒரு விஷயத்தைச் செய்து நம்மை நாமே பிஸியாக வைத்துக்கொள்ளலாம்.

கே.எம்.செரியன்
கே.எம்.செரியன்

ஆரோக்கியத்தின் அளவீடு

படுக்கையில் சாய்ந்த அடுத்த நிமிடமே உறங்கிவிடுவேன். மருத்துவர் என்பதால், எப்போது வேண்டுமானாலும் தொலைபேசி அழைப்புகள் வரும். இரவு தூங்கும்போது அழைப்பு வந்தால்கூட, பேசிவிட்டு மீண்டும் தூங்கி விடுவேன். என் தூக்கத்துக்கு இந்த போன் அழைப்புகள் தொந்தரவாக இருந்ததில்லை.

நல்ல தூக்கம் வேண்டுமா... யாரைப் பற்றிய கெட்ட சிந்தனையும் கூடாது. ஒருவரைப் பற்றித் தவறாக எண்ணுவதால், நமக்கு என்ன நன்மை... நம்மிடம் ஒருவர் உதவி எதிர்பார்த்து அது நியாயமாக இருந்தால், அதைச் செய்யக்கூடிய பலம் நமக்கிருந்தால் நிச்சயமாக உதவலாம். இவையெல்லாம் மனதுக்கு அமைதியையும் நிறைவையும் கொடுக்கும். அவை நல்ல தூக்கத்தைக் கொண்டு வரும். 26 வயதில் நான் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது முன்பின் தெரியாதவர்கள்கூட எனக்கு உதவினார்கள். என் அத்தியாவசியத் தேவைகளுக்கு அவை கைகொடுத்தன. அப்படி நானும் பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

டெய்லி பிளானிங்குக்கு ஸ்மார்ட் ஐடியா!

காலை எழுந்ததும் இசை கேட்டுக்கொண்டே 45 நிமிடங்கள் டிரெட்மில்லில் நடைப்பயிற்சி மேற்கொள்வேன். இசையில் கவனம் செலுத்துகிறேனோ இல்லையோ, ரிலாக்ஸ்டாக நடந்துகொண்டே அன்றைய தினத்துக்கான திட்டங்களை மனதுக்குள் வகுக்கத் தொடங்குவேன். அவற்றைச் செயல்படுத்துவேன். இப்படி இசையில் தொடங்கும் என் நாள்கள் குழப்பமும் பதற்றமும் இல்லாமல் முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு