Published:Updated:

கருவில் 117 நாள்கள் பராமரிப்பு; 2.13 கிலோ எடை! - மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்குப் பிறந்த குழந்தை

ஜெனி ஃப்ரீடா

மூளைச்சாவு அடைந்த தாயின் வயிற்றில் வைத்து 117 நாள்கள் குழந்தை பராமரிக்கப்பட்டது. `செயற்கை முறையில் அதிக நாள்கள் வளர்ச்சியடைந்த சிசு' என்ற சாதனைக்கும் இந்தக் குழந்தை சொந்தமாகியிருக்கிறது.

Child
Child

`மூளைச்சாவு' என்ற வார்த்தை பொது ஜனத்துக்குப் பழக்கப்பட்டு நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலுறுப்புகளைத் தானமாகப் பெற்று, பல்வேறு நோயாளிகளுக்குப் பொருத்தி அவர்கள் மறுவாழ்வு அடைகின்றனர்.

Brain death
Brain death

ஆனால், மூளைச்சாவு அடைந்த ஒரு கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த குழந்தையை, கருவிலேயே 15 வாரங்களுக்கும் மேல் வளர்த்து, காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள்.

செக் குடியரசு நாட்டில் மக்கள்தொகை மற்றும் பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது மிகப்பெரிய நகரம் பிர்னோ. இந்த நகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சுயநினைவு இழந்த நிலையில் ஒரு கர்ப்பிணி ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டார். பரிசோதித்ததில் அவர் மூளைச்சாவு அடைந்திருப்பது தெரியவந்தது.

Helicopter
Helicopter

மூளைச்சாவு அடைந்தவர்களைக் காப்பாற்றுவதற்கான சாத்தியம் இல்லை. எனவே, கர்ப்பிணியின் கருவில் 15 வாரங்களே ஆன சிசுவைக் காப்பாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அதனால் மூளைச்சாவு அடைந்த பெண்ணை உயிர்காக்கும் செயற்கைக் கருவிகளில் பொருத்தினர். கருவிகளின் உதவியால் கர்ப்பிணியின் இதயம், கல்லீரல், நுரையீரல் போன்ற பிற உறுப்புகள் எப்போதும் போல் இயல்பாகச் செயல்பட்டு வந்தன. கர்ப்பத்தில் இருந்த சிசுவும் வளர்ந்து வந்தது.

Doctor
Doctor

தாய் போதுமான அளவு நடந்தால்தான் கர்ப்பத்தில் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்பதால், அந்தப் பெண்ணின் கால்களை மருத்துவப் பணியாளர்கள் நடப்பது போன்று இயக்கினர். தினமும் தாயின் கால்களை அசைத்தனர். குழந்தையும் கருவில் வளர்ந்து வந்தது.

கருவிலேயே 34 வாரங்கள் சிசு வளர்ச்சியடைந்த நிலையில், சிசேரியன் மூலம் குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது. 2.13 கிலோ எடையில் 42 செ.மீ. உயரத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

Child
Child

மூளைச்சாவு அடைந்த தாயின் வயிற்றில் வைத்து 117 நாள்கள் குழந்தை பராமரிக்கப்பட்டது. `செயற்கை முறையில் அதிக நாள்கள் வளர்ச்சியடைந்த சிசு' என்ற சாதனைக்கும் இந்தக் குழந்தை சொந்தமாகியிருக்கிறது. குழந்தை பிறந்த பிறகு, உயிர்காக்கும் செயற்கைக் கருவிகளிலிருந்து மூளைச் சாவு அடைந்த அந்தத் தாய் விடுவிக்கப்பட்டு, உயிர் துறக்க அனுமதிக்கப்பட்டார்.