Published:Updated:

மருத்துவர் உட்பட நான்கு பேருக்கு கொரோனா... மூடப்பட்ட பெரம்பூர் அரசு மருத்துவமனை... தவிக்கும் மக்கள்!

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

''வீட்ல இருந்து ரொம்ப தூரம் நடந்து, கஷ்டப்பட்டுதான் வந்து சேர்ந்தேன். மறுபடியும் இங்க இருந்து வேற இடத்துக்கு நான் எப்படிப் போவேன். ஒரு ஆட்டோகூட கிடையாது. கையில காசும் சுத்தமா இல்ல. இப்ப நான் மாத்திரைக்கு என்ன பண்ணப்போறேன்னு தெரியல.''

சென்னை பெரம்பூர் பகுதியில் அமைந்திருக்கும் அரசு பொது மருத்துவமனையில், மருத்துவர் ஒருவருக்கும் அவருடன் இணைந்து பணியாற்றிய சக மருத்துவமனை ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மண்டல சுகாதாரத் துறையினர் அந்த மருத்துவமனையை தற்காலிகமாக மூடியுள்ளனர். இந்தச் செய்தி அந்தப் பகுதி மக்களிடையே கடும் அச்சத்தையும் பீதியையும் உண்டாக்கியுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றின் பரவல், சமீப காலமாக இந்தியாவில் வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது. அதன் காரணமாக, தனியார் மருத்துவமனைகள் பலவும் தங்களின் மருத்துவமனைகளைத் தற்காலிகமாக மூடியுள்ளன. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே சில மருத்துவமனைகள் தொடர்ந்து சிகிச்சை அளித்துவருகின்றன. கொரோனா நோய் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும்கூட இந்த நோய் தொற்றிக் கொள்வதால்தான் அவை மூடப்படுகின்றன. இந்த இக்கட்டான சூழலில் பொது மக்கள் அதிகம் நம்பி இருப்பது, அரசு பொது மருத்துவமனைகளைத்தான். ஆனால், அரசு மருத்துவமனைகளும்கூட இதுபோன்ற காரணங்களால் மூடப்படுவது, ஊரடங்கு காலத்தில் மருத்துவத் தேவைக்காக நாடும் பொது மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

பெரம்பூர் பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ளது, பெரியார் நகர் அரசு பொது மருத்துவமனை. மகப்பேறு சிகிச்சை, நீரிழிவு நோய் சிகிச்சை என அனைத்து மருத்துவத் தேவைகளுக்கும் பெரம்பூர் பகுதி மக்கள் பெரும்பாலும் நாடுவது இந்த மருத்துவமனையைத்தான். கடந்த வாரம், பெரியார் நகர் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, உடனடியாக மண்டல சுகாதாரத் துறையினர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையை தற்காலிகமாக இழுத்து மூடியுள்ளனர். மருத்துவருக்கு கொரோனா வந்ததால், மருத்துவமனை மூடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டால் மக்கள் அச்சம் கொள்வார்கள் என்பதற்காக, தூய்மைப் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மூடப்பட்டுள்ளதாக வெளியே எழுதி ஒட்டியுள்ளனர்.

ஆனால் அதையறியாத பொது மக்கள், கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய வண்ணமாக இருக்கின்றனர். வாடிக்கையாக அந்த மருத்துவமனையில் மாத்திரை மருந்து பெற்றுவருபவர்கள், திடீரென மருத்துவமனை மூடப்பட்டுள்ளதால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மூடியிருக்கும் மருத்துவமனையை ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவரை அணுகினோம்

"நான், கடந்த 10 வருஷமா இந்த ஆஸ்பத்திரியிலதான் சுகருக்கு மாத்திரை வாங்கிட்டு இருக்கேன். டாக்டருங்க எனக்கு மாசத்துக்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனை செஞ்சு சர்க்கரையோட அளவுக்கு ஏத்த மாதிரி மருந்து மாத்திரை தருவாங்க. அப்படி, ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை டாக்டரைப் பார்த்து மருந்து மாத்திரை வாங்கிட்டுப் போவேன்.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

போன வாரத்துக்கு முந்தின வாரம் வந்து மருந்து வாங்கிட்டுப் போனேன். ஆனா, இப்போ ஆஸ்பத்திரி மூடியிருக்கு. எனக்கு மூணு வேளையும் மாத்திரை போடணும். ஆனா இங்க மூடி வெச்சிருக்காங்க. வேற மருத்துவமனையில போய் வைத்தியம் பாத்துக்கச் சொல்லி போட்ருக்காங்க. ஆனா, அது எங்கன்னுகூட எனக்குத் தெரியாது. நான் இந்த மருத்துவமனைக்கே வீட்ல இருந்து ரொம்ப தூரம் நடந்து கஷ்டப்பட்டுதான் வந்து சேர்ந்தேன். மறுபடியும் இங்க இருந்து வேற இடத்துக்கு நா எப்படி போவேன். ஒரு ஆட்டோகூட கிடையாது. தனியார் ஆஸ்பத்திரிக்குப் போற அளவுக்கு என்கிட்ட வசதி இல்லை. இப்ப நான் மாத்திரைக்கு என்ன பண்ணப்போறேன்னு தெரியல " என்றபடியே ஏமாற்றத்துடன் நடக்கத் தொடங்கினார்.

சிகிச்சைக்கு வந்தவரை தரக்குறைவாக நடத்திய மருத்துவமனை ஊழியர்கள்... சாதிப் பெயரைக் கேட்டதால் சர்ச்சை!

இதுகுறித்து, சென்னை மாநகராட்சியின் 6-ம் மண்டல நலத்துறை அதிகாரி ஆஷா அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்...

"பெரியார் நகர் மருத்துவமனையில் பணி புரிந்து வந்த 44 வயது மதிக்கத்தக்க மருத்துவர் ஒருவருக்கு, கடந்த சில நாள்களுக்கு முன் கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறி இருந்தது. அதையடுத்து, அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்து பரிசோதனை செய்தோம். அதில், அந்த மருத்துவருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக, அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சுமார் 94 பேரை பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதில் 3 மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தவிர, மருத்துவமனையின் மற்ற மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி, அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி தொடர்ந்து அவர்களைக் கண்காணித்துவருகிறோம்.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பணியாற்றிய மருத்துவமனை என்பதால் தற்காலிகமாக மூடி இருக்கிறோம். முறையாக கிருமி நாசினிகள் தெளித்து தூய்மைப் பணிகளை மேற்கொண்ட பிறகே, மருத்துவமனையை மீண்டும் திறப்பது குறித்துச் சொல்ல முடியும். ஒரே மருத்துவமனையில் பணி புரிந்த நான்கு பேருக்கு கொரோனா வந்துள்ளதால், கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. எனவேதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனைக்கு வாடிக்கையாக வரும் மக்கள் சிறிது காலத்துக்கு அருகில் உள்ள அகரம் மருத்துவனைக்கு சிகிச்சைக்குச் செல்லும்படி கேட்டுக் கொள்கிறோம். மீண்டும் மருத்துவமனை எப்போது திறக்கப்படும் என்று சரியாகச் சொல்ல முடியாது. தூய்மைப் பணிகள் நிறைவடைந்ததும் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு