Published:Updated:

"தயாரிச்ச கம்பெனியில போய் கேட்டுக்குங்க!" - உடலில் ஊசி புகுந்த பெண்ணிடம் அரசு செவிலியர் காட்டம்

பார்வதி
News
பார்வதி

காய்ச்சல் காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த பார்வதிக்கு, நர்சு போட்ட ஊசி உடைந்து உடலுக்குள் புகுந்தது. அதன்பின் அவருக்கு நேர்ந்த கதி என்ன?

Published:Updated:

"தயாரிச்ச கம்பெனியில போய் கேட்டுக்குங்க!" - உடலில் ஊசி புகுந்த பெண்ணிடம் அரசு செவிலியர் காட்டம்

காய்ச்சல் காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த பார்வதிக்கு, நர்சு போட்ட ஊசி உடைந்து உடலுக்குள் புகுந்தது. அதன்பின் அவருக்கு நேர்ந்த கதி என்ன?

பார்வதி
News
பார்வதி

நாகை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவைச் சேர்ந்தவர் பார்வதி. கணவரை இழந்த இவர், ஆட்டோ டிரைவரான மகன் மூர்த்தி குடும்பத்துடன் வசித்துவருகிறார். கடந்த நவம்பர் 9-ம் தேதி, பார்வதி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அதே தெருவிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றார். டாக்டரின் ஆலோசனைப்படி அப்போது பணியிலிருந்த நர்ஸ் பார்வதி இடுப்பில் ஊசி போட்டார். மருந்து இறங்கியதும் ஊசியை எடுக்க நர்சு முயன்றபோது, ஊசி உடைந்து பார்வதி உடலுக்குள் புகுந்துவிட்டது.

அதன்பின் நடந்தவற்றை பார்வதியின் மருமகள் ஜெயஸ்ரீ விவரித்தார். "ஊசி போட்ட இடத்தில் ரத்தம் வழிஞ்ச நிலையில அத்தையுடன் ஒரு ஆளை, சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கூட அனுப்பி வைச்சிருக்காங்க. அங்கு, கட்டு கட்டுறவர் பார்த்திட்டு 'அந்த இடத்துல பழுக்கணும். அப்பதான் ஊசி இருக்கிற இடம் தெரியும். ரெண்டு நாள் கழிச்சி வாங்கன்னு' அனுப்பிட்டார். வீட்டுக்கு வந்த ரெண்டுநாளும் உட்கார முடியல, படுக்க முடியல, வலிக்குது வலிக்குதுன்னு அத்தை துடிக்கிறாங்க. 13-ம் தேதி, மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போனேன்.

எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துட்டு, உள்ளே ஊசி இல்லைன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. அதோட, நாங்களும் வீட்டுக்கு வந்துட்டோம். அரைமணி நேரம் கழிச்சி, திரும்ப ஆஸ்பத்தரியில இருந்து ஆள் வந்து பெரிய டாக்டர் கூட்டிவரச் சொன்னதா சொன்னாங்க. பெரிய டாக்டரைப் பார்த்தபோது, 'எக்ஸ்ரேவை லென்ஸ் வைச்சி இப்பதான் பார்த்தோம். உடைஞ்ச ஊசி உள்ளே கொஞ்சம் ஆழத்துல இருக்கு. ஆபரேஷன் செஞ்சுதான் எடுக்கணும். சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எழுதித் தர்றோம். அங்கு போனால் ஆபரேஷன் பண்ணி ஊசியை எடுத்துடுவாங்க'ன்னு சொன்னாங்க. எங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. திடீர்னு பணத்துக்கு என்ன பண்றதுன்னு வீட்டுக்கு வந்துட்டோம். இந்த விஷயம் நண்பர்கள் மூலம் எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சி. அதுக்குப் பின்னாடி, ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் வெச்சி, டாக்டர், நர்ஸ் துணையோட திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துட்டாங்க" என்றார்.

உடைந்து உடலில் புகுந்த ஊசி
உடைந்து உடலில் புகுந்த ஊசி

பார்வதியின் மகன் மூர்த்தியிடம் பேசினோம். "ஊசி போட்ட நர்ஸிடம் 'உங்க கவனக்குறைவாலதானே எங்க அம்மா இவ்வளவு கஷ்டப்படுறாங்க'ன்னு கேட்டேன். 'ஊசி தரமில்லை. அதை தயாரிச்ச கம்பெனிக்காரனை போய் கேளுங்க'ன்னு சொல்றாங்க. உடைஞ்ச ஊசி உள்ளேதான் இருக்குன்னு ஊசி போட்ட நர்சே சொன்ன பின்னாடியும், பெரிய ஆஸ்பத்திரியில் அலட்சியப்படுத்திட்டாங்க. இப்ப குடும்பமே திருவாரூர் ஆஸ்பத்திரியில் வந்து கெடக்கோம். காய்ச்சல்னு போனதுக்கு எவ்வளவு கஷ்டம்?" என்றார் வேதனையுடன்.

இதுபற்றி சீர்காழி அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் தேவலதாவிடம் கேட்டபோது, "இது ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த சம்பவம். எதிர்பாராமல் லட்சத்துல ஒரு கேஸ் இதுபோல ஆகிடும். எக்ஸ்ரே-யில் சாதாரணமா தெரியல. ஊசி உள்ளே இருப்பது பற்றி என் கவனத்திற்கு வந்ததும் அவங்களை வரவழைச்சி சிதம்பரத்துக்கு பரிந்துரை பண்ணிட்டேன். அவர்கள் தாமதப்படுத்திட்டாங்க. தற்போது திருவாரூர் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பிட்டல்ல இருக்காங்க. அங்கு ஊசியை எடுத்துடுவாங்க" என்றார்.

மகன் மூர்த்தி மற்றும் மருமகள் ஜெயஸ்ரீ
மகன் மூர்த்தி மற்றும் மருமகள் ஜெயஸ்ரீ

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உதவி நிலைய மருத்துவர் அருண்குமாரிடம், பார்வதிக்கு நேர்ந்த விஷயத்தை எடுத்துச்சொன்னோம்.

"ஊசி போடும்போது வலியில் உடலை அசைத்தால்கூட மெல்லிய ஊசி உடைய வாய்ப்புண்டு. உடனே வந்திருந்தால் எளிதாக எடுத்திருக்கலாம். பரவாயில்லை; இப்போதே சரி செய்திடலாம்" என்றார். உடனடியாக மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு பார்வதிக்கு அறுவைசிகிச்சை செய்ய ஏற்பாடுசெய்தார். 14 நாள்கள் அவதிக்குப்பின் பார்வதி உடலில் புகுந்த ஊசியை மருத்துவர்கள் அகற்றினர்.

மயக்கம் தெளிந்த பார்வதியிடம் பேசினோம். "இந்த உதவிக்கு ரொம்ப நன்றிங்க" என்றார் நிம்மதிப் பெருமூச்சுடன்.