Election bannerElection banner
Published:Updated:

இனி வீட்டுக்குள்ளும் மாஸ்க் அவசியமாம் மக்களே! - நிதி ஆயோக் சொன்னது என்ன?

Mask
Mask ( AP Illustration/Peter Hamlin )

வீட்டுக்குள்ளே பொதுவான இடங்களைப் பகிரும்போது, மக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும். காற்றோட்டம் குறைவாக உள்ள பகுதிகளைத் தவிர்க்க வேண்டும்.

`மக்களே... இனி வீட்டுக்குள்ளேயும் முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள்!' - இந்த எச்சரிக்கையை வேறு யாரும் கூறவில்லை. இந்தியா முழுவதும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தொடர்ந்து மத்திய அரசே இப்படிக் கூறியிருக்கிறது.

வீட்டுக்குள்ளே பொதுவான இடங்களைப் பகிரும்போது, மக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும். காற்றோட்டம் குறைவாக உள்ள பகுதிகளைத் தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையைக் கருத்தில்கொண்டு கைகளைச் சரியாகக் கழுவ வேண்டும்.

face mask | முகக்கவசம்
face mask | முகக்கவசம்
AP Photo/Bikas Das

``மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முகக்கவங்களை அணியத் தொடங்கும் நேரம் இது" என்று நிதி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறியுள்ளார். அபாயகரமான தொற்றுநோயின் புதிய அதிவேக அலையை இந்தியா கையாள வேண்டிய இக்கட்டான நேரத்தில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது.

இந்தியாவில் அதிகரித்து வரும் மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறையானது ஒருவித நெருக்கடி நிலையை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் கள்ள மார்க்கெட்டில் அதீத விலைக்கு விற்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. அதன் தவறான பயன்பாட்டை தவிர்க்கும்படியும் மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இப்போது ஆக்ஸிஜன் பயன்பாட்டுக்கும் அதே பதற்ற நெருக்கடிச் சூழல் உருவாகியுள்ளது.

புது டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா, ஆக்ஸிஜனை `தவறாகப் பயன்படுத்துவது'தான் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தேவையற்ற பீதிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். ``ஆக்ஸிஜன் செறிவு 94% அல்லது அதற்கு மேல் இருந்தால், கவலைப்படத் தேவையில்லை" என்கிறார் அவர்.

தொற்றுநோயின் இரண்டாவது அலை கடந்த காலத்தைவிட கணிசமான தொற்றுகளை ஏற்படுத்துகிறது. முறையான தனிநபர் இடைவெளியைப் பின்பற்றாவிட்டால், ஒரு நபர் முப்பதே நாள்களில் 406 நபர்களுக்கு கொரோனா தொற்றைப் பரப்பிவிடுவார் என்கிற புள்ளிவிவரம் அடுத்த அதிர்ச்சியை அளிக்கிறது.

Covid-19 Outbreak
Covid-19 Outbreak

இதைக் கூறும் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், அத்தியாவசியமாகத் தேவைப்படும்வரை வெளியே செல்ல வேண்டாம் என்றும், வீட்டுக்குள்ளேயும்கூட முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். வீடுகளுக்கு வெளியாட்களையும் விருந்தினர்களையும் அழைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்தியா தொடர்ச்சியாக ஒருவார காலமாக 3,00,000-க்கும் அதிக கோவிட் -19 தொற்றுகளைப் பதிவு செய்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, டெல்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய 10 மாநிலங்கள் நோய்ப் பரவலில் முன்னணியில் உள்ளன. இதைத் தொடர்ந்து வெளியே மட்டுமல்ல, வீட்டிலும் மாஸ்க் என்கிற புதிய கட்டுப்பாட்டை நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு