Election bannerElection banner
Published:Updated:

கோவிட்-19: `அரசு மருத்துவர்களை மனச்சோர்வுக்கு ஆளாக்காதீர்கள்!' - அரசுக்கு மருத்துவர் சங்கம் கோரிக்கை

COVID-19 vaccine
COVID-19 vaccine ( AP Photo / Manish Swarup )

மருத்துவர்கள் தங்கள் மாத ஊதியத்தில் ரூ. 8,000 முதல் ரூ. 10,000 வரை இழந்து வருகிறார்கள். புதிதாகத் தொடங்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் மார்ச் மாத சம்பளம் வழங்கப்படவில்லை.

கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலை கடந்த ஆண்டை விட தற்போது தீவிரமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மருத்துவமனைகளில் படுக்கை இல்லை, ஆக்ஸிஜன் இல்லை, மருந்து கிடைக்கவில்லை என்று மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் இருக்கிற வசதிகளை வைத்து அரசு மருத்துவ மனைக்கு வரும் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சிகிச்சை அளித்து வருகிறார்கள் அரசு மருத்துவர்கள். தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 18,000 மருத்துவர்கள் தன்னலம் பார்க்காமல் முன்களப் போராளிகளாக சேவை செய்து வருகிறார்கள்.

கொரோனா சிகிச்சையில் மருத்துவர்கள்
கொரோனா சிகிச்சையில் மருத்துவர்கள்

கடந்த ஆண்டைப்போல அரசு மருத்துவர்களைப் பாதுகாக்க, தனிமைப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல் தொய்வில்லாமல் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தினர், கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த அரசுக்கு ஆலோசனைகளும் சில கோரிக்கைகளும் வைத்துள்ளது அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.

வெளியிட்டுள்ள அறிக்கையில், `அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு, வார இறுதி முழுநேர ஊரடங்கை வரவேற்கிறோம். காலை, மாலை வேளைகளில் மட்டும் சந்தைகள், கடைகள் திறக்க வேண்டும். மக்கள் பெரும்பாலும் தங்கள் வீட்டுக் கருகிலுள்ள கடைகளிலயே அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வேண்டும். கடந்த ஆண்டைப்போல வீடுகளுக்கே பொருள்களை கொண்டு சேர்க்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் பொதுமக்களின் வாகனப் போக்குவரத்தைத் தடுத்து பெருந்தொற்று பரவலைத் தடுக்க முடியும்.

கொரோனா முன்கள பணியாளர்கள்
கொரோனா முன்கள பணியாளர்கள்

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் மூன்றில் ஒரு பகுதி பணியாளர்களை வைத்து செயல்பட வேண்டும். போர்க்கால அடிப்படையில் 25,000 தன்னார்வலர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மூலம் மத்திய, மாநில அரசிடமிருந்து 5 முதல் 6 லட்சம் தடுப்பூசிகளைப் பெற்று, ஒரு தன்னார்வலருக்கு தினமும் 50 பேர் என இலக்கு நிர்ணயித்து தடுப்பூசிகளை மூன்று நாள்களுக்குள் செலுத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நோய் எதிர்ப்பு அலை உருவாக வாய்ப்புண்டு.

மருத்துவமனை நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தடை இல்லாமல் கிடைக்க அதற்கான உள் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் லிக்யூட் ஆக்ஸிஜன் பிளான்ட் ஏற்படுத்த வேண்டும். கோவிட் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு என்-95 மாஸ்க், பிபிஇ கிட், கிருமிநாசினி, கையுறைகள் தேவையான அளவு அனைத்து மருத்துவமனை களிலும் இருப்பு வைக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் பாதுகாப்பு உபகரணங்களின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

கோவிட்-19
கோவிட்-19

தொற்று அதிகரித்து வரும் சூழலில் மருத்துவர், செவிலியர், பணியாளர்களை போர்க்கால அடிப்படையில் நியமிக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள், மினி கிளினிக்குகளில் கோவிட் அல்லாத பணிகள் நிறுத்தப்பட வேண்டும். இதன் மூலம் கோவிட் பணிக்கு அதிகமான மருத்துவர்கள், செவிலியர்கள் கிடைப்பார்கள். ஆக்ஸிஜன் உட்பட மருத்துவ உபகரணங்களை கோவிட் சேவைக்கு பயன்படுத்தலாம்.

கோவிட் பணியில் ஈடுபடும் அனைத்து மருத்துவர்களுக்கும் முதலமைச்சர் ஏற்கெனவே அறிவித்தது போல் ஒரு மாத சம்பளத்தை ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும். தேர்தலை காரணம் காட்டி கலந்தாய்வு நடத்தாததாலும், கலந்தாய்வு நடந்த துறைகளின் உத்தரவுகள் வெளியிடாததாலும் மருத்துவர்கள் தங்கள் மாத ஊதியத்தில் ரூ. 8,000 முதல் ரூ 10,000 வரை இழந்து வருகிறார்கள். புதிதாகத் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மார்ச் மாத சம்பளம் வழங்கப்படவில்லை.

COVID-19
COVID-19
AP Photo / Jae C. Hong

இது மட்டுமல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் ஆன்லைன் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்று காரணம் காட்டி சார்ஜ் மெமோ வழங்குவது, சம்பளத்தில் பிடித்தம் செய்வோம் என்று எச்சரிப்பது எல்லாம் கோவிட் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை மனச்சோர்வு அடையச் செய்கிறது.

பல அரசு மருத்துவமனைகளில் கோவிட் பணிக்குப் பின் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 7 நாள்கள் தனிமைப் படுத்தும் முறை, முறையாக வழங்கப்படவில்லை. அது மட்டுமல்லாமல் கோவிட் மரண தணிக்கை, மாதாந்தர மரண தணிக்கை என ஆய்வுக்கூட்டங்களை நடத்தி தன்னலமற்று பெருந்தொற்று காலத்தில் பணியாற்றும் மருத்துவர்களை குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு மருத்துவர்களின் பல வருட கோரிக்கையான சம்பள உயர்வு, சலுகைகளை உடனே வழங்க வேண்டும். முதுகலை மருத்துவர்களுக்கான கலந்தாய்வையும், முதுகலை மாணவர்களுக்கான பல்கலைக்கழகத் தேர்வையும் ரத்து செய்யாமல் வழக்கம்போல நடத்த வேண்டும்.

அரசு மருத்துவர்கள் - File Photo
அரசு மருத்துவர்கள் - File Photo

நிர்வாகக் குளறுபடிகளால் கோவிட் பணியாற்றி வரும் மருத்துவர்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகி வருகிறார்கள். பெருந்தொற்று காலத்தில் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் 18,000 அரசு மருத்துவர்களுக்கும் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்கள்.

இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத் தலைவர் மருத்துவர் கே.செந்திலிடம் பேசினோம். ``கோவிட்-19 தீவிரமாகப் பரவி வருகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இதைத் தடுக்க முடியாது. அரசு மருத்துவர்களான நாங்கள் எங்கள் பணிகளைத் தன்னலம் இல்லாமல் செய்து வருகிறோம். அதே நேரம் கோவிட் பரவலைத் தடுக்கவும், எங்களின் நீண்ட கால கோரிக்கைகளையும் அரசுக்கு வைத்திருக்கிறோம். கோவிட் பணியாற்றும் மருத்துவர்கள் தனிமைப் படுத்துதலுக்குத் தேவையான ஏற்பாடுகளைக் கடந்த ஆண்டுபோல் இனி செய்வதாகத் தெரிவித்துள்ளார்கள். கோவிட்-19 க்கு எதிரான எங்கள் பணி தொடரும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு