Published:Updated:

ஆந்திராவையே பரபரக்க வைத்த மூலிகை மருந்து; கொரோனாவை குணமாக்குமா என ஆய்வு செய்யும் அரசு!

மருந்து வாங்க கூடிய கூட்டம்
மருந்து வாங்க கூடிய கூட்டம்

தேன், வால் மிளகு மற்றும் குறிப்பிட்ட வகை கத்தரிக்காயின் கூழ் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு அனந்தையா இந்த மருந்தைத் தயாரித்திருக்கிறார்.

உலகம் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளானதிலிருந்து `எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற மனநிலை மக்களிடையே அதிகரித்துவிட்டது. விளைவு... `கொரோனாவை குணமாக்கும் திறன் கொண்டது’ என்கிற அடைமொழியுடன் பலவகையான மருந்துகள் சந்தையில் உலா வர ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணபட்டினம் என்கிற ஊரைச் சேர்ந்த `போனிகி அனந்தையா’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் தயாரித்து வழங்கிவரும் கொரோனா கண் மருந்து, நாடு முழுக்க கவனத்தை ஈர்த்துள்ளது.

தேன், வால் மிளகு மற்றும் குறிப்பிட்ட வகை கத்தரிக்காயின் கூழ் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு அனந்தையா இந்த மருந்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்த கண் மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையுடன் மக்கள் இந்த மருந்தை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் இந்த மருந்தைப் பயன்படுத்திய பல நோயாளிகள் இன்னும் சிகிச்சைக்காக மருத்துவமனையில்தான் இருக்கின்றனர் என்கிற தகவல்களும் வெளிவந்துள்ளன.

COVID-19
COVID-19

இந்த கொரோனா கண் மருந்தை பயன்படுத்தியவர்களில் சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் சில நோயாளிகள் இந்த மருந்தைப் பயன்படுத்திய பிறகு உடல்நலம் சற்று மேம்பட்டிருப்பதாக உணர்ந்திருக்கின்றனர். எனவே ஒவ்வொரு நபரின் உடலிலும் இந்த மருந்து ஒவ்வொரு விதமாக வேலை செய்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

நிலைமை இப்படி இருக்க, இந்த கண் மருந்தைப் பயன்படுத்துவதால் உடனடியாக எந்தவொரு எதிர்மறையான விளைவும் ஏற்படவில்லை என்று ஆந்திர மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த மருந்தைப் பயன்படுத்துவதால் உடல்நிலை மேம்படுகிறது என்று சொல்கிற மக்களின் கருத்தை சில மருத்துவர்களும், சுகாதாரத்துறை நிபுணர்களும் வேறுவிதமாகப் பார்க்கின்றனர்.

அதாவது, `கொரோனாவுக்கான சிறப்பு மருந்தை எடுத்துக் கொண்டுள்ளோம். அதனால் நமது உடல்நிலை சரியாகப் போகிறது என்கிற உளவியல் சார்ந்த எண்ணம் நோயின் தீவிரத்தைக் குறைத்திருக்கலாம் (இதனை ஆங்கிலத்தில் பிளாஸிபோ விளைவு என்று அழைப்பர்). அப்படி இல்லையென்றால் இயற்கையாகவே உடலிலிருந்து நோயின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்திருக்கக்கூடும். அது காக்காய் அமர பனம்பழம் விழுவதுபோல இந்த மருந்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது' என்று அவர்கள் சொல்கின்றனர்.

உண்மையிலேயே இந்த கண் மருந்து அத்துணை சக்தி மிகுந்ததா என்கிற குழப்பமும், சர்ச்சையும் நீடித்துவர, மத்திய ஆயுர்வேதக் கல்வி ஆராய்ச்சி மையம் இந்த கண் மருந்து குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளதாக ஆயுஷ் துறையின் ஆணையர் என்.ராமுலு தெரிவித்திருக்கிறார்.

corona
corona

இந்த கண் மருந்தைப் பயன்படுத்திய மக்களில் குறைந்தபட்சம் 500 பேரிடமாவது விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், இந்த மருந்தால் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது பற்றியும் ஆராய்ந்து இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவு வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் அனந்தையா கண்டறிந்த இந்த மருந்து கொரோனா பெருந்தொற்றை சரி செய்யும் ஆற்றல் கொண்டதா என்பதைக் கண்டறிய உதவும் அறிவியல்பூர்வமான சோதனைகளுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் ஆளும்கட்சியின் நெல்லூர் சட்டமன்ற உறுப்பினரான கோவர்தன் ரெட்டி என்பவர், தனது சட்டமன்றத் தொகுதியின் கீழ் கிருஷ்ணபட்டினம் வருகிறது என்பதால் அனந்தையாவின் இந்தக் கண்டுபிடிப்பை மிகத் தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறார். `இந்த மருந்தைப் பயன்படுத்தும் கொரோனா நோயாளிகள் அதிசயத்தக்க வகையில் குணமடைகிறார்கள்' என்கிறார் கோவர்தன் ரெட்டி.

``எண்ணற்ற நோயாளிகளுக்கு இது நல்ல பலனைத் தந்து வருகிறது. அதிலும் போனிகி அனந்தையா ஒரு பிரசித்தி பெற்ற ஆயுர்வேத மருத்துவர்.கொரோனா பெருந்தொற்றை குணப்படுத்த ஐந்து மருந்துத் தொகுப்புகளைக் கண்டறிந்துள்ளார். அவரது மருந்துகள் நன்றாகவே வேலை செய்கிறது. அதனால்தான் கிருஷ்ணபட்டிணத்தில் இருக்கின்ற அவரது வீட்டின் வாசலில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது" என்றும் கோவர்தன் ரெட்டி பெருமையுடன் சொல்கிறார்.

ஆனால் இந்த கண் மருந்தை வாங்குவதற்காக கூடிய கூட்டம் குறித்த செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலானதும், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, இந்த மருந்து குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆயுஷ் துறையின் அமைச்சரிடமும், இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவரிடமும் கேட்டுள்ளார். இதன் காரணமாக இந்திய மருத்துவக் கவுன்சிலின் அதிகாரிகள் நெல்லூருக்கு வந்து ஆந்திர அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

மருந்து வாங்க கூடிய கூட்டம்
மருந்து வாங்க கூடிய கூட்டம்

இத்தனை பரபரப்புகளுக்கு இடையில் இந்தகண்மருந்தைத் தயாரித்த போனிகி அனந்தையா தற்போது ரகசியமான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் தயாரிக்கின்ற மருந்துகள் ஆந்திரா, தெலங்கானா மற்றும் டெல்லியில் உள்ள முக்கியமான நபர்களுக்கு மட்டும் அனுப்பிவைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இவ்வளவு ஏன்... போனிகி அனந்தையா தயாரித்த கொரோனா மருந்துகள் கள்ளச் சந்தைகளில் ரூ1500 முதல் ரூ.3000 வரை விற்கப்படுகிறது என்பதுபோன்ற தகவல்களும் வந்தவண்ணம் இருக்கின்றன.

இப்படி தாறுமாறாக தகவல்கள் பரவுவதால் எது வதந்தி, எது உண்மை என்றே தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர் அம்மாநில மக்கள். அரசு விரைவில் இதனை தெளிவுபடுத்தியாக வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு