லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

நம் ஆரோக்கியம் நம் வீட்டுச் செடிகளில்!

என் இல்லம் பசுமை இல்லம்
பிரீமியம் ஸ்டோரி
News
என் இல்லம் பசுமை இல்லம்

என் இல்லம் பசுமை இல்லம் - கற்பகம்

சரணி ராம்

``என்னோட தோட்டத்துக்காக தினமும் இரண்டு மணி நேரம் செலவிடுகிறேன். வீட்டுக்குத் தேவையான எல்லாக் காய்களும் தோட்டத்திலிருந்தே கிடைத்துவிடுகிறது. செயற்கை உரம் இல்லாமல் விளையும் காய்கறிகளுக்குத் தனிச்சுவை இருக்கும். ஆரோக்கியமும் உறுதியாகும். காய்கறிகள் விலையேற்றம் பற்றியும் கவலைகொள்ளத் தேவையில்லை” என்று செடிகளை வாஞ்சையுடன் தடவியபடியே பேச ஆரம்பிக்கிறார் கற்பகம்.

சீசனுக்குச் சிறந்தது!

``இந்த சீசனில் அதிகப்படியான வெயில் இருக்கும் என்பதால் செடிகள் சீக்கிரமே பட்டுப்போக ஆரம்பிக்கும். அதனால், கேரட், பீட்ரூட், கோஸ் என மலைப்பிரதேச காய்கறிகளைவிட கத்திரி, வெண்டை, பச்சை மிளகாய், புடலை என்று நாட்டுக்காய்கறிகளைப் பயிரிடுவது நல்லது. நாட்டு ரகங்களில் பெரிய அளவு மெனக்கிடல் இல்லாமல் அதிக பயன்தரக்கூடியது வெண்டைக்காய்தான்” என்கிறவர், வெண்டை செடி வளர்க்கும் முறையை விளக்குகிறார்.

வெண்டைக்காய் வளர்ப்பு

``தென்னங்கழிவு, மண்புழு உரம், மண்...இவை மூன்றையும் 2:1:1 என்று கலந்து பெரிய தொட்டி அல்லது 25 கிலோ சாக்குப் பைகளில் நிரப்புங்கள். தேவையில்லாத தண்ணீர் வெளியே செல்லும் வகையில் பைகளில் துளையிட்டு இருப்பது அவசியம்

வெண்டையில் குட்டை வெண்டை, நீள வெண்டை, கலர் வெண்டை என நிறைய வகை உண்டு. உங்களுக்கு எந்த வகை தேவையோ அதற்கான விதைகளை வாங்கி, மூன்று மணி நேரம் பஞ்சகவ்யாவில் ஊறவைத்துக் கொள்ளுங்கள். மண் நிரப்பிய பையில் ஒரு இன்ச் அளவுக்குக் குழிதோண்டி, ஒரு பைக்கு இரண்டு என்கிற கணக்கில் வெண்டை விதைகளை விதையுங்கள். நான்கு பேர் உள்ள குடும்பம் எனில் மொத்தம் ஐந்து வெண்டைச் செடிகள் இருந்தால் போதுமானது.

 கற்பகம்
கற்பகம்

மூன்றே நாள்களில் செடி துளிர்விட ஆரம்பிக்கும். தினமும் தண்ணீர் தெளிப்பது அவசியம். 45-வது நாளில் பூக்கள் பூக்கும். இந்தப் பருவத்தில் பஞ்சகவ்யா தெளிப்பது, மண் புழு உரம் இடுவது எனச் செடிக்கு வளம் அளிக்க வேண்டும். அடுத்த ஐந்து தினங்களில் காய்களை அறுவடை செய்யலாம். தொடர்ந்து செடிகளை பராமரிக்க அடுத்த மூன்று மாதங்கள் வரை வாரத்துக்கு ஒரு செடியிலிருந்து அரை கிலோவுக்கும் அதிகமான வெண்டைக்காய்களை அறுவடை செய்யலாம்.

விதைக்கு வேண்டுமென நினைப்பவர்கள், செடியிலேயே காய்களை முற்றவிட்டு அறுவடை செய்துகொள்ளுங்கள். அதிலுள்ள விதைகளைச் சேகரித்து, அடுத்த நடவுக்குத் தாய் விதையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பசுமை செழிக்க...

வீட்டில் மாடித் தோட்டம் வைத்திருப்பவர்கள் சில பூச்செடிகளையாவது பராமரிக்க வேண்டும். அப்போதுதான் பூவில் உள்ள தேனை பருக வரும் தேனீக்கள் மூலம் மற்ற செடிகளில் மகரந்தச் சேர்க்கை நிகழும்.

வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிப்பது மிகவும் எளிதானது. மூடியுடன் கூடிய தேவையில்லாத பழைய வாளி ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். காற்று உள்நுழைவது போன்று ஆங்காங்கே சில துளைகளை இட்டுக்கொள்ளுங்கள்.

முதலில் ஒரு லேயர் காய்கறிக் கழிவுகளால் நிரப்புங்கள். அடுத்த லேயர் இலைகள், தென்னங்கழிவு, நியூஸ் பேப்பர் என எது எளிதாகக் கிடைக்குமோ அவற்றைக் கொண்டு நிரப்புங்கள். இப்படி வாளி முழுவதும் ஒவ்வொரு லேயராக மாற்றி மாற்றி நிரப்பி மூடிவைத்துவிட்டால், மூன்று மாதங்களில் இயற்கை உரம் தயாராகிவிடும்.

இயற்கை உரம் செய்ய நேரம் இல்லை என்பவர்கள் முட்டை ஓடுகளை மிக்ஸியில் சேர்த்து அரைத்து, பொடி செய்து உரமாக இடலாம். பயன்படுத்தி உலரவைத்த டீத்தூளையும் உரமாக இடலாம்.

நம் ஆரோக்கியம் நம் வீட்டுச் செடிகளில்!

பூச்சித் தாக்குதலிலிருந்து செடிகளைப் பாதுகாக்க வேப்ப எண்ணெயைத் தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யலாம் அல்லது பஞ்சகவ்யா பயன்படுத்தலாம். பஞ்சகவ்யாவைக் கடைகளில்தான் வாங்க வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே தயார் செய்துகொள்ளலாம்.

ரோஜாக்கள் பூத்துக்குலுங்க...

பெரும்பாலானவர்களுக்கு ரோஜாக்கள்மீது தீராத காதல் இருக்கும். ஆனால், எத்தனை முறை செடி வாங்கி வைத்தாலும் பூக்கவே இல்லையே என்பதைக் குறையாகச் சொல்லுவார்கள். அதற்கு நம்முடைய பராமரிப்பும் முக்கிய காரணமாக அமையும்.

நர்சரியிலிருந்து ரோஜா செடி வாங்கும்போது, ஏற்கெனவே செடியில் பூக்களுடன் இருக்கும் செடியை தேர்வு செய்யக் கூடாது. சிறிய செடியில் அவ்வாறு பூக்க ஏகப்பட்ட செயற்கை உரங்களைப் பயன்படுத்தியிருப்பார்கள். அதனால் பூக்கள் இல்லாத, அதேநேரம் அதிக கிளை கொண்ட செடியைத் தேர்வு செய்ய வேண்டும்.

செடியை வாங்கி வந்த அன்றே அதை வேறு தொட்டிக்கு மாற்றக் கூடாது. அதை வெயிலும் நிழலும் சமமாகப்படும் இடத்தில் வைத்து தண்ணீர் மட்டும் தெளித்து வாருங்கள். மூன்று நாளைக்குப் பிறகு அதை செம்மண், உரம், தென்னங்கழிவு நிரப்பிய தொட்டிக்கு மாற்றுங்கள். வாடியிருக்கும் இலைகளை நீக்கிவிடுவது நல்லது.

நம் ஆரோக்கியம் நம் வீட்டுச் செடிகளில்!

ரோஜாச் செடிக்கு அதிக உரம் தேவைப் படும். வாரம் ஒருமுறை மண்புழு உரம், காய்கறிக் கழிவுகள் என ஏதேனும் ஒன்றை உரமாக இட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.வாழைப்பழத்தின் தோலை தண்ணீரில் கொதிக்கவிடவும். பின் வடிகட்டி, ஆறவைத்து ரோஜா செடியில் தினமும் தெளிப்பதன் மூலம் பூக்கள் சீக்கிரம் துளிர்விட ஆரம்பிக்கும். ரோஜா செடியைப் பொறுத்தவரை மண்ணில் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அதன்பின் ஒரு சில வாரங்களிலேயே ரோஜா பூத்துக்குலுங்கும்.

மாடித் தோட்டம் பராமரிப்போம், நமது ஆரோக்கியத்துக்குப் பொறுப்பேற்றுக் கொள்வோம்'' என விடைபெறுகிறார் கற்பகம்.