Published:Updated:

மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!
பிரீமியம் ஸ்டோரி
மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

உறவுச் சிக்கல், மெனோபாஸ், மன அழுத்தம், தற்கொலை எண்ணம், தூக்கமின்மை

மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

உறவுச் சிக்கல், மெனோபாஸ், மன அழுத்தம், தற்கொலை எண்ணம், தூக்கமின்மை

Published:Updated:
மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!
பிரீமியம் ஸ்டோரி
மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

உடல் ஆரோக்கியம் பொதுவாக மூன்று விஷயங்களை உள்ளடக்கியது. உடல்நலம், மனநலம் மற்றும் சமூக நலம் (Physical, Mental, Social Health). இவை மூன்றும் சேர்ந்ததுதான் முழுமையான உடல் ஆரோக்கியம்.

மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

உடல்நலனைப் பற்றி அக்கறைகொள்ளும் அளவுக்கு, மனநலனைப் பற்றிப் பலரும் அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. உடல்நலனைப் பேணுவது எந்த அளவு முக்கியமோ அதே அளவு மனநலனைக் காப்பதும் அவசியம். மூன்றாவது நலனான சமூக நலனில், அதாவது மற்றவர்களுடன், சமூகத்துடன் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இணைந்து இருப்பதில் மனநலனின் பங்கு முதன்மையானது.

மனநலம் என்பது அனைவருக்கும் பொதுவானது. அதைப் பெண் களுக்கு மட்டும் எனப் பிரித்துப் பார்க்க‌ முடியாது. என்றாலும், மாதவிடாய் முதல் மெனோபாஸ் வரை ஹார்மோன்களால் ஏற்படும் மனநிலை மாற்றங்களாலும், ஆணாதிக்கக் குடும்ப அமைப்புகள் அவர்களுக்குத் தரும் கட்டுப்பாடுகளாலும், பாதுகாப்பு மலிந்து கிடக்கும் சமூகத்தால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளாலும், ஆண்களைவிட பெண்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகும் சூழல்கள் அதிகமாக உள்ளன. பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் பற்றியும், சிகிச்சை முதல் உணவு வரை அதற்கான தீர்வுகள் பற்றியும் இந்த இணைப்பிதழில் பேசுகிறார்கள் துறை சார்ந்த நிபுணர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

வெவ்வேறு பருவங்களில் மனநலன்!

குழந்தைப் பருவம் முதல், வெவ்வேறு காலகட்டத்தில் பெண்களின் மனநலன் பொதுவாக எவ்வாறு அமையும் என்பது பற்றிக் கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் கவிதா.

 கவிதா
கவிதா

குழந்தைப் பருவ தாக்கங்கள்... வலுவானவை!

ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என இருபாலருக்குமே, குழந்தைப் பருவத்தில் ஏற்படும் தாக்கங்கள் மிகவும் வலுவானவை. பின்நாள்களில் ஏதேனும் மனநலப் பிரச்னைகள் ஏற்பட, அவை காரணமாக அமையக்கூடும். குழந்தை வளர்ப்பு அடக்குமுறைகள், குழந்தைகள் மீதான வன்முறைகள், சிறார் பாலியல் கொடுமைகள், பெண் குழந்தைகளைப் பொருத்தவரை ஆண் குழந்தைகளுடனான பாகுபாடுகள் போன்றவை அவர்களுக்கு மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக, குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவு ஏற்படுவது பெரும்பாலும் நன்கு தெரிந்த நபர்கள் மூலம்தான். தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாத வயதில் நடப்பவை பற்றிப் பின்னாளில் அவர்கள் அறியவரும்போது, மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாவார்கள். எனவே, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது குடும்பம், பள்ளி, சமூகம், அரசு என அனைவரது கூட்டுப் பொறுப்பு.

மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

பதின் பருவம்... மயக்கமா, தயக்கமா, குழப்பமா?

பதின்பருவப் பெண்களின் மனதில் பயம், தயக்கம், குழப்பம் போன்ற உணர்வுகள் மேலோங்கி இருக்கும். எது சரி, எது தவறு எனப் பல கேள்விகள் உருவாகும். அவற்றுக்கு எல்லாம் சரியான தீர்வை வழங்க வேண்டியது பெற்றோரின் கடமை. பூப்பெய்தும் வயதில் மாதவிடாய் பற்றிய புரிந்துணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதேபோல், தங்கள் உணர்வுகளைக் கையாள அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும். எதிர்பாலினத்தவரோடு ஆரோக்கியமாகப் பழகக் கற்றுத் தர வேண்டும். ஆண்களுடன் பேசாதே, பழகாதே என அவர்களை அடக்காமல், சரியான முறையில் அவர்களைக் கையாள்பவர்களாகப் பெண்களை உருவாக்க வேண்டும். பாலியல் கல்வி இந்த வயதில் அவசியமானது. பொதுத் தேர்வு, பாடச்சுமை குறித்த அச்சங்கள் மன அழுத்தமாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மாதவிடாய் மூட்ஸ்விங்ஸ்!

பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்பு மனம் சார்ந்த பிரச்னைகள், எரிச்சல் உணர்வு, மன உணர்வுகளில் வேறுபாடுகள் போன்றவை தோன்றும். இது `ப்ரீமென்ஷுரல் சிண்ட்ரோம்' (Premenstrual syndrome) என்று அழைக்கப்படும். காரணமே இல்லாமல் கோபம், அழுகை வரும்போது, புறச்சூழல் மீது கோபம் கொள்ளாமல், இது ஹார்மோன்களின் செயல் என்று புரிந்துகொண்டு அவற்றைக் கடக்க வேண்டும்.

வேலைச் சூழல் மனப் பதற்றங்கள்!

வேலைச் சூழலில் பெண்கள் பல பிரச்னைகளைச் சந்திப்பார்கள். தங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்கள், நம்பிக்கை துரோகம், ஆணாதிக்கம், வேலையை சரியாகச் செய்கிறோமா, சிறப்பாகச் செயல்படுகிறோமா போன்ற பதற்றங்களும் இருக்க வாய்ப்புண்டு. இவற்றையெல்லாம் எதிர்கொள்ள நேரிடும்போது, அவையெல்லாம் தங்கள் மனநலனை பாதிக்க அனுமதிக்கக் கூடாது. ‘ஜஸ்ட் ஆபீஸ் பிரச்னை’ என்று அவற்றைக் கையாள, தாண்டி வர கற்றுக்கொள்ள வேண்டும்.

திருமண உறவுச் சிக்கல்கள்!

காதல் திருமணமாக இருந்தாலும் சரி, பெற்றோர் நிச்சயித்த திருமணமாக இருந்தாலும் சரி, கல்யாணத்துக்குப் பின் பெண்களின் வாழ்வில் பல புதிய மாற்றங்கள் நிகழும். விளைவாக, மனதிலும் பல மாற்றங்கள் ஏற்படும். ஒருவேளை இரு குடும்பங்களுக்கு இடையே பிரச்னைகள் வந்தால் எப்படிக் கையாள்வது, இணையுடன் எப்படி சுமுக உறவை ஏற்படுத்துவது போன்ற‌ பல சவால்கள் அவர்கள் முன்பு இருக்கும். ஒவ்வொரு சூழலையும் பக்குவத்துடன், நிதானத்துடன் கையாண்டால் நிம்மதி உறுதி செய்யப்படும், மன உளைச்சல் எட்டிப் பார்க்காமல் இருக்கும்.

மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

மெனோபாஸ் கேள்விகள்!

மெனோபாஸ் காலகட்டத்தில் பல பெண்களுக்கு மெனோபாஸ் குறித்த பல சந்தேகங்கள் இருக்கும். கூடவே, ‘நாம் பெண்மையை இழந்துவிட்டோமோ, இதன் பிறகு, நம் பாலியல் வாழ்வு எப்படி இருக்கும், நம் கணவருக்கு நம்மை பிடிக்குமா’ என்றெல்லாம் பல சந்தேகங்கள் தோன்றும். இதுவே அவர்களை ஒருவித மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும். ஹார்மோன் அளவுகள் மாறுபாடு காரணமாகவும் இந்தக் காலகட்டத்தில் மனதளவில் பல மாற்றங்கள் உண்டாகும். எனவே, சம்பந்தப்பட்ட பெண்கள் இது மெனோபாஸால் ஏற்படும் மன மாற்றங்கள் என்பதைப் புரிந்துகொண்டு அவற்றை எதிர்கொள்ள வேண்டும்.

தைராய்டும் காரணமாகலாம்!

உடல் சார்ந்த பிரச்னைகளான தைராய்டு பிரச்னைகள் (Hypothyroidism, Hyperthyroidism), உடல் பருமன் (Obesity) போன்றவற்றுக்கும் மனநலத்துக்கும் சம்பந்தம் உண்டு. எனவே, இந்தப் பிரச்னைகளுக்கு சரியான சிகிச்சை எடுக்கும்போது, அதனால் ஏற்பட்ட மனநலப் பிரச்னைகளும் நீங்கிவிடும்.

பெண்களுக்கு அதிகம் ஏற்படும் மன பாதிப்புகள்!

பெண்களுக்கு மனச்சோர்வு (Depression), மன அழுத்தம் (Stress), மனப் பதற்றம் (Anxiety) போன்றவை அதிக அளவில் ஏற்படுவதைப் பார்க்க முடிகிறது. மேலும், ஏதாவது அதிர்ச்சி தரக்கூடிய சம்பவங்களால் பாதிப்படைந்திருந்தால் `பி.டி.எஸ்.டி' (PTSD - Post Traumatic Stress Disorder) ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மன அழுத்தம்... மூன்று நிலை!

மன அழுத்தத்தில் லேசான, மிதமான மற்றும் கடுமையான மன அழுத்தம் என மூன்று வகை உண்டு. உரிய நேரத்தில் மனநல மருத்துவரிடம் சென்றால், பாதிப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கான தீர்வை வழங்குவார். மன அழுத்தம் மிகவும் தீவிரமாகும்போது தற்கொலை எண்ணங்கள் தோன்ற வாய்ப்புண்டு என்பதால், சிகிச்சை அவசியம்.

ஹார்மோன் மாற்றங்களால் மனம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுமா?

கர்ப்பகாலம், குழந்தை பிறந்த பிறகான காலம், மெனோபாஸ் போன்ற நேரங்களில் ஹார்மோன்களில் அதிக அளவு மாற்றம் இருக்கும். மன அழுத்தம் ஏற்பட இதுவும் ஒரு முக்கியக் காரணமாக அமையும்.

தவிர, தைராய்டு அளவுகள் மாறுபடும்போது மனநலப் பிரச்னைகள் தோன்றலாம். அதற்காக தைராய்டு பிரச்னை உள்ள அனைவருக்கும் மனநலப் பிரச்னை இருக்க வேண்டும் என்று பொருள் இல்லை. ஆனால், மனநலப் பிரச்னை இருப்பவர்களுக்கு தைராய்டு அளவுகளையும் சோதனை செய்து பார்க்கலாம்.

உதாரணமாக, தைராய்டு சுரப்பியில் பிரச்னை உள்ளவர்கள் ஒருவித மந்தமாக இருப்பார்கள், அதிகம் தூங்குவார்கள். இந்த மந்த நிலையே அவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும். நம்மால் ஏன் சுறுசுறுப்பாக இருக்க முடியவில்லை என ஏங்குவார்கள். உடற்பயிற்சி போன்றவற்றை செய்யும்போது தைராய்டு அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதோடு மன அழுத்தத்தையும் குறைக்க முடியும்.

மனப்பிரச்னை இருப்பதை எப்படிக் கண்டறியலாம்?

முன்பு கலகலவெனப் பேசிக்கொண்டிருந்த பெண் திடீரென அமைதி ஆகிவிடுவது, நன்றாகப் படித்துக்கொண்டிருந்த மாணவி படிப்பில் பின்தங்குவது, தன்னுடைய வேலைகளைச் சிறப்பாகச் செய்துகொண்டிருந்த பெண்ணின் அன்றாட வாழ்வில் ஏதோ தொந்தரவு தெரிவது போன்றவை மனநலப் பிரச்னைகளின் அடிப்படையாக இருக்கலாம்.

பிறருடன் பழகுவதில் பிரச்னை இருப்பது, தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளாமல் இருப்பது போன்றவற்றை வைத்தும் அறியலாம். இவர்கள் தங்களைக் கவனித்துக்கொள்ளும் எண்ணமே இல்லாமல் இருப்பார்கள். காரணமே இல்லாமல் அழுவது, எரிந்து விழுவது என மாற்றம் தெரியும்.

வழக்கமாக இல்லாமல் இப்படி புதிதாய் தெரியும் மாற்றங்களை நிச்சயமாக அவர்களுடன் இருப்பவர்களால் அறிய முடியும். சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோரோ, கணவரோ இப்படிப்பட்ட மாற்றங்கள், அறிகுறிகள் தென்பட்டால் முதலில் அவர்களிடம் பேச வேண்டும். சில பெண்களுக்கு, தங்கள் பிரச்னையைக் கேட்க யாரும் இல்லாததே ஒரு பிரச்னையாக இருக்கும். அவர்களின் கூற்றைக் கேட்ட பிறகு, வீட்டினராலேயே அவர்களுடைய பிரச்னைக்குத் தீர்வு தர முடியும் என்றால், அதைச் செயல்படுத்தவும். இல்லையெனில் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

சிகிச்சைகள் என்னென்ன?

மனப்பதற்றம், மன அழுத்தம் என மிதமான அளவில் பிரச்னை இருக்கும்போது மனநல மருத்துவரிடமோ, உளவியல் நிபுணரிடமோ செல்ல வேண்டும். இந்த நிலையில் தெரபி, கவுன்சலிங் மூலமே அந்தப் பிரச்னையை சரி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். தெரபிகளில் பல வகை உள்ளன.

பிரச்னை கொஞ்சம் தீவிரமடைந்தாலோ, தீவிர நிலையில்தான் மருத்துவரிடம் செல்ல நேர்ந்தாலோ அவர்களுக்கு மருந்துகள் கொடுப்பது அவசியம். மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு மாதக் கணக்கில், வருடக்கணக்கில் எடுத்துக்கொள்ளும் நிலைகூட வரலாம். காய்ச்சல் போல் உடனடியாகக் குணமாகிவிடும் என நினைக்கக் கூடாது. உரிய மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளும் மருந்தை மருத்துவர் கூறும் வரை நிறுத்தக் கூடாது. பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாக, மருந்தின் அளவை அதற்கு ஏற்றாற்போல் குறைத்து, பிறகு நிறுத்த வேண்டும்.

மருந்துகளுடன் சேர்ந்த தெரபியும் சிலருக்கு வழங்கப்படும். இவை அனைத்துமே நோய்க்கு நோய் மாறுபடும். நோயின் தீவிரத்தை வைத்தே உரிய சிகிச்சை முறை தேர்வு செய்யப்படுகிறது.

மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

மனப்பிரச்னை உடையவர்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும்?

மனப்பிரச்னை உள்ளவர்களைக் குணப்படுத்துவதில் மூன்று முக்கியப் பகுதிகள் உண்டு. ஒன்று, அவர்களுக்குத் தரப்படும் மருத்துவரின் சிகிச்சை. சிகிச்சையில் மருந்துகள், தெரபி அனைத்தும் அடங்கும். இரண்டாவது, நோயாளியின் ஒத்துழைப்பு. அதாவது, தெரபிகளுக்கு தவறாமல் வருவது, உரிய மருந்தை எடுத்துக்கொள்வது போன்றவை. மூன்றாவது, குடும்பத்தின் ஒத்துழைப்பு. இது மிகவும் முக்கியமானது.

மனப்பிரச்னை உடையவரைப் பற்றி அவரின் குடும்பத்தினர் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவருடைய பிரச்னை என்ன என்பது குறித்து சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அவரை கண்ணியமாக நடத்த வேண்டும். வாய் வார்த்தையாக, தவறுதலாகக்கூட ‘லூசு, மென்டல்’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. இது அவர்களை மிகவும் காயப்படுத்தும். பெற்றோர் இதைப் புரிந்துகொண்டு சரியாக நடந்துகொண்டாலும், சில நேரங்களில் சகோதரனோ, சகோதரியோ விளையாட்டாக, போகிற போக்கில் ஏதாவது சொல்லிவிட வாய்ப்புள்ளது. எனவே, குடும்பத்தில் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். அவர் சரியாக மருந்து எடுத்துக்கொள்கிறாரா எனக் கவனிப்பது, தெரபிக்கு அழைத்துச் செல்வது என உறுதுணையாக இருக்கவும்.

மிகவும் தீவிரமான மனநோயுடன் இருப்பவர்களைப் பார்த்துக்கொள்வது கடினமான பணி. அவர்களுக்குத் தொடர்ச்சியான கண்காணிப்புத் தேவை. அதுமட்டுமல்லாமல் தவறாமல் அவர்களுடைய மருந்துகளை எடுத்துக்கொள்ள வைப்பது மிக அவசியம். ஒன்றிரண்டு நாள்கள் மருந்து எடுக்காமல் விட்டாலே அவர்களின் நடவடிக்கைகளில் பிரச்னை இருக்கும். அவர்களைப் பராமரிப்பதில், பராமரிப்பவர் அழுத்தத்துக்கு உள்ளாக வாய்ப்புள்ளது (Caregiver Burnout). இந்தச் சூழல்களையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும்.

மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கையை உடைத்துக்கொள்வது, காலை உடைத்துக்கொள்வது, சுவரில் மோதுவது எனத் தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்ள வாய்ப்புண்டு. சில நேரங்களில் தற்கொலை வரைகூட போகலாம். `சைக்கோசிஸ்' (Psychosis) போன்ற தீவிர மனப்பிரச்னை இருப்பவர்களுக்கு, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே தெரியாது. அவர்கள் அடுத்தவர்களை அடிப்பது, காயப்படுத்துவது என இருப்பார்கள். அதற்கு ஏற்றாற்போல கவனம் கொடுத்து அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

குடும்பத்தின் பங்கு என்ன?

பெண்களின் மனநலனில் குடும்பத்தின் பங்கு பற்றிச் சொல்கிறார், மதுரையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் கயல்விழி.

பெண்களின் மனநலத்தில் குடும்பத்துக்குப் பெரும் பங்கு இருப்பதாகப் பல ஆய்வுகள் கூறுகின்றன. குடும்பத்தில் பெண்களுக்கு தாய், தாரம், மருமகள் எனப் பல பொறுப்புகள் உண்டு. ஆண்களுக்கும் இதே போன்ற பொறுப்புகள் உண்டு என்றாலும், வார இறுதியில் ஓய்வெடுத்துக்கொள்ள பெரும்பாலான ஆண்களுக்கு அவகாசம் உண்டு. ஆனால், பெண்களின் அகராதியில் ஓய்வு என்பது இல்லாத ஒன்று. வார நாளோ, வாரக் கடைசியோ அவர்களின் பணி எப்போதும் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும். ஓய்வில்லாத இந்தச் சூழல் அவர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்கும்.

கயல்விழி
கயல்விழி

குடும்பத்தினரின் அன்புக்கு, கவனத்துக்கு ஏங்கும் இல்லத்தரசிகள் பலர். எத்தனையோ சோகங்களையும் அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் சந்தித்தாலும் அத்தனையையும் தங்களுக்குள் புதைத்துக்கொண்டு, குடும்பத்துக்காகத் தொடர் ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கும் பெண்களை குடும்பங்கள் உதாசீனப்படுத்தாமல் உரிய அன்பும் அங்கீகாரமும் கொடுக்க வேண்டும்.

பல வீடுகளில் பெண்களுக்குத் தங்கள் வலியைப் பகிரக்கூட யாரும் இருப்பதில்லை. எனவே, குடும்பத்தினர் பெண்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அதுவே அவர்களின் மன இறுக்கத்துக்கு பெரிய வடிகாலாக அமையும். மிக முக்கியமாக, தன் கணவர் தன்னோடு இருக்கிறார், தனக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்ற எண்ணமே பெண்களுக்கு மனதளவில் மிகுந்த பலத்தைக் கொடுக்கும். ஏதேனும் மனநலப் பிரச்னை இருந்தால் அதை விரைவிலேயே கண்டுபிடித்துவிடுவது சிகிச்சையை எளிதாக்கும்.

வீட்டில் தாயோ, மனைவியோ, சகோதரியோ முகவாட்டத்துடனோ, சோகமாகவோ காணப்பட்டால் தவறாமல் காரணத்தை விசாரிக்க வேண்டும். குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிடுவது, வெளியில் எங்காவது செல்வது போன்றவை இறுக்கங்களைத் தளர்த்த உதவும்.

ஒரு பெண் படித்தால், அந்தக் குடும்பமே படித்தது போல என்று கூறப்படுவதைப் போல, ஒரு பெண்ணின் மனநலம் ஆரோக்கியமாக இருப்பதும் அவர் குடும்பத் தில் பிரதிபலிக்கக்கூடியது. பெண்களின் மனநலனில் கணவர் மற்றும் கணவர் வீட்டினரின் பங்கு மிக முக்கியமானது. அதேபோல தன் மனநலனைப் பேணு வதில் அந்தப் பெண்ணுக் கும் சமமான பங்குண்டு.

குடும்பம், குழந்தைகள் என எப்போதும் ஓடாமல் தங்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். தங்களுக்கு என ‘மீ டைம்’ ஒதுக்கிப் பிடித்த விஷயங் களைச் செய்ய வேண்டும். பிரச்னைகளைத் தேடி இழுத்துப் போட்டுக் கொள் ளாமல், நிம்மதியையும் சந்தோஷத்தையும் மட்டுமே நாட வேண்டும்.

மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

குழந்தை வளர்ப்பு முறைகள்!

குழந்தையின் மனநலனைப் பேணிக் காப்பதில், அம்மாவும் அப்பாவும் மேற்கொள்ளும் குழந்தை வளர்ப்பு முறைக்கு பெரும்பங்கு உண்டு. அதில் பல வகைகள் உண்டு. அது குறித்த வழிகாட்டல் இங்கே...

‘அதாரிடேரியன்’ (Authoritarian): இந்த வகை பேரன்டிங்கில் ஒழுக்கத்தை ஏற்படுத்த தண்டனைகளைப் பயன்படுத்துவார்கள். குழந்தைகளுக்கு இன்னும் சிறப்பான வழியில் எப்படிச் செயல்பட வேண்டும் எனக் கற்றுத்தருவதை விடுத்து, அவர்களைத் தங்கள் தவற்றுக்கு வருந்த வைப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.

‘அத்தாரிடேட்டிவ்' (Authoritative): குழந்தைகளின் பழக்க வழக்கங்களை மேம்படுத்துவதில் அதிக கவனத்தையும் நேரத்தையும் செலவிடுவார்கள்.

நல்ல நடவடிக்கைகளுக்குப் பாராட்டுவது, பரிசு கொடுப்பது என அவர்களின் பழக்க வழக்கங்களை பாசிட்டிவ்வாக மேம்படுத்துவார்கள். அத்தாரிடேட்டிவ் முறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் நல்ல மனநலத்துடன் வளர்வதோடு, வளர்ந்த பின்பும் தங்கள் எண்ணங்களை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள்.

‘பெர்மிஸிவ்’ (Permissive): பெற்றோர் போல் நடந்துகொள்ளாமல் நண்பர்களைப் போல் இருப்பார்கள். குழந்தைகளிடம் நன்றாகப் பேசிப் பழகும் ஆர்வத்தில், அவர்களின் தவறான செயல்களைக் கண்டிக்க மறந்துவிடுவார்கள். இப்படி வளரும் குழந்தைகள் பழக்க வழக்கங்களில் பல பிரச்னைகளை சந்திப்பார்கள்; மற்றவர்களின் கூற்றை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அன்இன்வால்வ்டு (UnInvolved): குழந்தை வளர்ப்பில் பெரிதாக அக்கறை இல்லாதவர்களாக இந்த வகைப் பெற்றோர்கள் இருப்பார்கள். அதிக வேலை, பெற்றோரின் மனநல பாதிப்புகள், உடல்நலக் குறைபாடுகள் போன்றவை இந்தக் கண்டுகொள்ளாத தன்மைக்குக் காரணமாக இருக்கலாம்.

இவற்றில் ‘அத்தாரிடேட்டிவ்’ முறையில் குழந்தைகளை வளர்ப்பது, குழந்தை - அம்மா - அப்பா மூவரின் மனநலனுக்கும் சிறப்பாக அமையும்.

சிமோனா
சிமோனா

மனநலனைப் பேண வழிகள்...

பெண்கள் தங்கள் மனநலனை மேம்படுத்த என்னென்ன செய்யலாம் என்பது குறித்துச் சொல்கிறார், மதுரையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சிமோனா.

மனநலம் குறித்த தவறான நம்பிக்கைகளை உடையுங்கள்!

மனநலம் மற்றும் மனநலப் பிரச்னைகள் குறித்த பல தவறான தகவல்கள் நம்மிடையே உள்ளன. இதை உடைக்க நாம் தயாராக இருக்க வேண்டும். உடல் சார்ந்த பிரச்னைகளை இயல்பாகக் கையாள்வதுபோல, மனம் சார்ந்த பிரச்னைகளையும் கையாள வேன்டும். அதை ஏற்று சிகிச்சைக்குச் செல்லும் சூழல் இன்னும் இங்கு ஏற்படவில்லை. ‘எனக்கு மனநலப் பிரச்னை எதுவும் இல்லை’ என்று மறுக்கக் கூடாது. தாமாகவே முன்வந்து மருத்துவரை அணுக வேண்டும்.

மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

உடல் ஆரோக்கியம் மிக முக்கியம்!

உடலுக்கும் மனதுக்கும் மிகப் பெரிய தொடர்பு உண்டு. இரண்டும் நன்றாக இருக்க வேண்டியது ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்குத் தேவை. எனவே, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கான வழிகளைப் பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான உணவுகள், தேவையான அளவு தூக்கம் என்ற நடைமுறைகளைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

தன் நலத்தைப் பேணுதல்!

தன்னுடைய நலத்தைப் பற்றி யோசிப்பது சுயநலம் கிடையாது. அதை முதன்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய நாளில் வாழுங்கள்!

நடந்து முடிந்ததைப் பற்றி யோசிப்பது சோகத்தை அதிகமாக்கு வதோடு, இதை இப்படி செய்திருக் கலாமோ, அப்படி செய்திருக்கலாமோ என குற்ற உணர்வை அதிகமாக்கும்.

எதிர்காலத்தில் என்ன உள்ளது என்பது யாருக்கும் தெரியாத நிலையில் அதைப் பற்றியும் அதிகம் யோசிக்காமல், இன்றைய நாளில் கவனத்தை வையுங்கள். அது உங்கள் மனம் தேவையற்றதை நினைத்துக் கலங்குவதைத் தடுக்கும்.

மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

உடற்பயிற்சி அவசியம்!

தினமும் 30 - 40 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வது உடல் மற்றும் மனம் இரண்டுக்கும் மிகவும் நல்லது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் செரடோனின் அதிகமாக உற்பத்தி ஆகும். அது மனதை அமைதிப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

தூக்கத்துக்கு நோ காம்ப்ரமைஸ்!

நல்ல தூக்கத்தை எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்காதீர்கள். 6 - 8 மணி நேர தூக்கம் அவசியம். நல்ல தூக்கம் மனநலத்துக்கு மிகவும் அவசியம்.

பரந்த மனதுடன் உலகை நோக்குங்கள்!

குறுகிய மனதுடன் இல்லாமல் பரந்த கண்ணோட்டத்துடன் உலகைப் பாருங்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்ப்பது உங்கள் வாழ்வைத் தொய்வின்றி சுறுசுறுப்பாக இயக்க உதவும்.

சுற்றி இருப்பவர்களிடம் பழகுங்கள்!

சுற்றி இருப்பவர்களிடம் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்திக் கொள்வது நம் மனநலத்துக்கு மிக முக்கியம். பிறரிடம் பேசுவதற்கு தயக்கம் காட்டாமல் புதிய உறவுகளை உருவாக்க முயலுங்கள்.

புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்!

நடனம், ஓவியம், தையல் என உங்களுக்குத் தெரியாத ஏதாவதொரு கலையைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருங்கள். புதிய கலைகளைக் கற்றுக்கொள்வது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள்!

குடும்பத்தினருடன் கலந்து பேசுவது மனநலத்துக்கு மிகவும் முக்கியம். ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடுவது, வெளியில் செல்வது போன்றவை குடும்பத்துக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதோடு மனநலத்தை மேம்படுத்தவும் உதவும்.

வீட்டுக்குள் அடையாதீர்கள்!

பெண்கள் எப்போதும் வீட்டுக்குள் முடங்கி இருக்காமல் வெளியில் செல்ல வேண்டும். புதிய மனிதர்களைப் பார்ப்பது, அவர்களிடம் பேசுவது, புதிய அனுபவங்களைக் காண்பது போன்றவை ஒரு புத்துணர்ச்சி தரும்.

சுற்றுலா செல்லுங்கள்!

பயணங்கள் நம் வாழ்வில் பல புதிய அனுபவங்களைத் தர வல்லவை.தனியாகவோ, குழுவுடன் சேர்ந்தோ நிறைய பயணம் செய்ய முயலுங்கள். அது இறுக்கங்களைத் தவிர்க்கும், மனதை லேசாக்க உதவும். உங்கள் ஊரிலேயே நீங்கள் சென்றிடாத ஏதோவோர் இடம் இருக்கலாம். அதைப் பார்த்துவிட்டு உற்சாகத்துடன் வீடு திரும்பலாம்.

தவறுகளைக் கண்டு வருந்தாமல் திருத்திக் கொள்ளுங்கள்!

ஏதாவது தவறு செய்துவிட்டால், இப்படிச் செய்துவிட்டோமே என எண்ணிக் கொண்டே இருப்பது மன வருத்தத்தை அதிகமாக்குவதோடு மனநலனையும் பாதிக்கும். தவறு நிகழ்ந்துவிட்டால் அதை ஏற்றுக்கொண்டு அடுத்த முறை இப்படி இந்தத் தவறு நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்!

யாருமே உங்களுடைய முயற்சியைப் பாராட்டவில்லை என்பதால் அது வீணான முயற்சி என்று அர்த்தம் கிடையாது. பிறருடைய பாராட்டுக்காக ஏங்கி வருத்தம் அடையாமல் உங்களுடைய ஒவ்வொரு முயற்சியையும் வெற்றியையும் நீங்களே கொண்டாடுங்கள். அது உங்களை சோகமாக விடாமல் வெற்றியை நோக்கி முன்னேற உறுதுணையாக இருக்கும்.

சங்கீதா
சங்கீதா

மனநலமும் உணவும்!

மனநலத்துக்கும் உணவுக்கும் இருக்கும் தொடர்பு குறித்து சென்னையைச் சேர்ந்த உணவியல் ஆலோசகர் சங்கீதா கூறுகிறார்.

மனநலத்துக்கும் உணவுக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது. உடல் செயல் பாட்டுக்கும், மூளை சுறுசுறுப்பாக இயங்கு வதற்கும் உணவு மிகவும் அவசியமான ஒன்று. மூளையையும் குடலையும் இணைக்கும் வகையில் ஒரு நரம்பு உள்ளது. அந்த நரம்பின் பெயர் ‘வேகஸ்’ (Vagus nerve). ஒருவரின் மனநிலைக்கு ஏற்றது போல மூளையிலிருந்து குடலுக்குச் செய்தி கிடைக்கும்.

மன அழுத்தம், மனச் சோர்வு போன்ற சூழலில் மூளையிலிருந்து குடலுக்கு செய்தி கிடைக்கும். அதன் காரணமாக சோகமாக இருக்கும் நேரங்களில் அதிக உணவை உண்ணத் தொடங்கு வோம். ஊட்டச்சத்து இல்லாத துரித உணவுகளை விரும்பி உண்ணும் வாய்ப்பு அதிகமாகும்.

துரித உணவுகள் என்று சொல்லும்போதே, அவை அதிக அளவு சர்க்கரை உடையதாகவும், கொழுப்பு சத்துகள் உடையதாகவும்தான் இருக்கும். இந்த மாதிரி உணவுகளை உண்ணுவது உடனடியாக ஓர் இன்பத்தையும், நிம்மதி யையும் தரும். அதிக சர்க்கரை உடைய உணவுகள் சாப்பிட்ட உடனேயே மூளையை மிகவும் சுறுசுறுப்பாக்கிவிடும் என்பது உண்மைதான். ஆனால், அவை உடம்புக்கு ஆரோக்கியமானதல்ல. மன அழுத்தத்தில் இருந்ததால் பருமனாகிவிட்டேன் எனப் பலர் கூறக் கேட்டிருப்போம். அதன் பின்னணியில் உள்ள காரணம் இதுதான். நம் உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டையும் காப்பதற்கு ‘Mindful eating’ முறையைக் கடைப்பிடிப்பது நல்லது.

மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

மன பாதிப்பு காரணமாக வரும் உணவு தொடர்பான நோய்கள் என்னென்ன (Eating Disorders)?

மன பாதிப்பு காரணமாக ஏற்படும் உணவு தொடர்பான நோய்களில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு நோய்க்கும் ஏற்றது போல் அறிகுறிகள் மாறுபடும்.

அனரெக்சியா நெர்வோசா (Anorexia Nervosa): இந்த வகை நோய் உடையவர்கள் தங்கள் உடல் எடை குறித்து அதீத அக்கறையுடன் இருப்பார்கள். தாங்கள் குண்டாக ஆகிவிடுவோமோ என்ற பயம் அதிகமாக இருக்கும்.

அந்த பயத்தின் காரணமாகவே இவர்களால் சாப்பிட முடியாது. உருவத்தின் மேல் அதிக சிந்தனை இருக்கும். எப்போது பார்த்தாலும் கண்ணாடி முன் நின்று உருவத்தைப் பார்த்துக்கொள்வது, குண்டாக இருக்கிறோமா என ஆராய்வது போன்ற செயல்களைச் செய்வார்கள். வழக்கத்தைவிட உடல் எடை மிகவும் குறைவாக இருப்பார்கள். சருமம் வெளுப்பாகக் காணப்படுவதோடு வாய், தொண்டை வறண்டு காணப்படும். இவை அனைத்துக்கும் ஊட்டச்சத்து குறைவாக இருப்பதே காரணமாகும்.

புலிமியா நெர்வோசா (Bulimia Nervosa): இந்த வகை நோய் இருப்பவர்கள் உடல் எடை அதிகரிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். ஆனால், அனரெக்சியா போல சாப்பிடாமல் இல்லாமல் இவர்கள் அதிகமாக சாப்பிடு வார்கள். அதிகமாக சாப்பிட்ட பிறகு உடல் எடை அதிகரிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் அவர்களாகவே விரல்களால் வாந்தி வரவைத்து சாப்பிட்டதை வெளியேற்றுவார்கள். இவர்களுக்கு உடல் பருமன், சரும பாதிப்புகள், மாதவிடாய்க் கோளாறுகள் எனப் பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

பிஞ்சே ஈட்டிங் டிசார்டர் (Binge Eating Disorder): இந்த வகையில், கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுகிறேன் என நிறைய சாப்பிடுவார்கள். சாப்பாடு சாப்பிட்டால் குண்டாகிவிடுவோம் என அதைத் தவிர்த்துவிட்டு நொறுக்குத் தீனிகளாகச் சாப்பிடுவார்கள். அதிக கலோரிகள் உள்ள உணவுகளையும், ஆரோக்கியமற்ற உணவுகளையும் சாப்பிடுவார்கள். இது உடல் எடை அதிகரிப்பதற்குக் காரணமாக அமையும்.

பைகா டிசார்டர் (Pica Disorder): இவர்கள் உணவு அல்லாத பிற பொருள்களைச் சாப்பிடுவார்கள். பேப்பர், சுண்ணாம்பு, மண் போன்ற பொருள்களைச் சாப்பிடும் இந்த நோய் ஆபத்தானது. வயிறு பிரச்னைகள், குடல்களில் அடைப்பு, செரிமானக் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் உண்டாகலாம். இந்த உபாதைகளால் சாதாரண உணவு சாப்பிடுவதில் பாதிப்பு வரலாம். மிகவும் ஒல்லியாக, உடல் எடை குறைவாக இருப்பார்கள்.

இந்த உணவு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் மனநலனுக்கும் பெரிய தொடர்பு உண்டு. இந்த நோய்கள் இருப்பவர்கள் அனைவருக்கும் உடல் அளவில் எந்தவித பிரச்னையும் இருக்காது. அவர்களுடைய மனம் மற்றும் சிந்தனைகள் காரணமாகவே இப்படி நடந்துகொள்வார்கள்.

மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

மனநலனைப் பேணுவதற்கான உணவுகள் என்ன?

முதலில் கூறியதுபடியே மனநலத்துக்கு Mindful eating மிக அவசியம்.ஆரோக்கியமான சத்தான உணவுகளைச் சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும்.

தானியங்கள், பருப்புகள் அனைத்தும் அடங்கிய சமவிகித உணவை உண்ண வேண்டும். பழங்களையும் காய்களையும் அதிகம் சேர்க்க வேண்டும்.

மன அழுத்தத்துடன் இருக்கும் சமயத்தில் பசித்தால் பழங்களையோ, காய்கறிகளையோ சாப்பிடுவதில் ஆர்வம்காட்ட மாட்டோம். ஆனால், ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுவதை விடுத்து, அப்போது ஒரு பழத்தையோ, காயையோ சாப்பிடப் பழகும்போது நிச்சயம் மனநிலையில் நல்ல மாற்றத்தைத் தருவதோடு உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது.

மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் (Omega-3-fatty acids) அடங்கிய உணவுகள் மனநலனுக்கு மிகவும் உகந்தது. சால்மன் மீன், நட்ஸ் வகைகள் போன்ற வற்றில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக இருக்கும்.

எப்போதும் நிம்மதியையும் சந்தோஷத்தையும் தேர்ந்தெடுப்போம்!

******

கர்ப்பகாலம்... ஹார்மோன்களின் பரமபதம்!

கர்ப்பகாலத்தில் ஹார்மோன்களில் ஏற்படும் மாறுபாட்டால் கர்ப்பிணி களுக்கு நிச்சயமாக மன உணர்வில் வேறுபாடு இருக்கும். இந்தக் காலகட்டத் தில் சிலர் மன அழுத்தத்துக்கு உள்ளாவ தோடு ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்படவும் வாய்ப்புண்டு. மேலும், குழந்தை பிறந்து 6 மாத காலத்துக்குக் குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதில் பல சிக்கல்களை உணர்கிறார்கள். இந்த எண்ணங்கள் அவர்களை மனதளவில் அழுத்தத் துக்கு உள்ளாக்குகின்றன.

மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

பிரசவத்துக்குப் பிறகு, பெரும்பாலான பெண்களுக்கு உண்டாகும் இந்த மன அழுத் தத்தை ‘போஸ்ட்பார்டம் டிப்ரஷன் (Postpartum Depression)’ என்று கூறு வோம். இதில் ஹார்மோன் களுக்குப் பங்கு உண்டு. இந்த நிலை தீவிரமடையும்போது அது `போஸ்ட்பார்டம் சைகோசிஸ்' (Postpartum Psychosis) ஆக மாறி, தாயே தன் குழந்தையை அடிக்கவோ, துன்புறுத்தவோ வாய்ப் புண்டு. எனவே, பிரசவத்துக்குப் பிறகான காலகட்டத்தில் கணவரும், குடும்பத்தினரும் அந்தப் பெண்ணை கவன மாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களின் உதவியே அவரை மன அழுத்தத்திலிருந்து மீட்க உதவும்.

மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

போதைப் பொருள்களால் ஏற்படும் மனநோய்!

இந்தத் தலைமுறையில் போதைப் பொருள்களின் விளை வாக ஏற்படும் மனநோய்களை அதிகம் பார்க்க முடிகிறது. ஆண்கள் மட்டுமன்றி சில பெண்களும் இவற்றுக்கு அடிமையாகிறார்கள். புகை, மது, கஞ்சா போன்றவை நியூரோ டிரான்ஸ்மிட்டர்களான காபா, டோபமைன், செரடோனின் (GABA, Dopamine, Serotonin) ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத் துவதால் ஒருவித போதையை உணர்வார்கள்.

இந்த நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் மூளையின் செயல்பாட்டுக்கு மிக அவசியம் என்பதால் அதன் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும் போது எண்ணங்கள், உணர்வுகள், நடத்தை என அனைத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்கொலை பற்றிப் பேசுகிறார்களா?

முக்கியமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது, மன அழுத்தத்தில் இருக்கும் ஒருவர் தற்கொலை குறித்துப் பேசினால் அதை உதாசீனப்படுத்தவே கூடாது. அவருக்கு மருத்துவ உதவி உடனடியாகத் தேவை. ஒருவர் தற்கொலை குறித்துப் பேசுகிறார் என்றால் அவர் தீவிரமான மன அழுத்தத்தில் உள்ளார் என்பதை புரிந்துகொண்டு மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

சிறப்புக் குழந்தைகளை வளர்க்கும் அம்மாக்களுக்கு... உறுதுணையாக இருப்போம்!

சிறப்புக் குழந்தைகளின் அம்மாக்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாவது இயல்பு. 24 மணி நேரமும் குழந்தையைக் கண்காணிப்பது, பராமரிப்பது, பழக்கவழக்கங்களைக் கற்றுத் தருவது என்றே வாழ்க்கை நகரும். இந்தச் சூழலில் அவர்களுக்கு தங்களுடைய வாழ்க்கையை வாழ முடியாத நிலை இருக்கும். அவர்களுக்கென்று நேரமே இல்லாமல் போய்விடும். இதன் காரணமாக ஏற்படும் அழுத்தத்தை அவர்களால் யாரிடமும் சரியாக பகிரவும் முடியாது. கிட்டத்தட்ட இது வாழ்நாள் முழுவதற்குமான சுமை போல ஆகிவிடுகிறது. தங்களுக்குள்ளேயே வலியைப் புதைத்துக்கொண்டு வாழ்வார்கள். இதையெல்லாம் உணர்ந்து அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

குழந்தை வளர்ப்பும் அம்மாக்கள் மனநலனும்!

குழந்தை வளர்ப்புக்கும் அம்மாக்களின் மனநலனுக்கும் முக்கியத் தொடர்பு உண்டு. சுவர் இருந்தால்தான் சித்திரம் எனச் சொல்லுவதைப் போல, அம்மாக்களின் மனநலம் நன்றாக இருந்தால்தான் குழந்தைகளை சிறப்பாக வளர்க்க முடியும்.

தாயின் மனநலன் நன்றாக இல்லாத சூழலில் வளரும் குழந்தைக்கு உணர்வுகள் சார்ந்த பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. அத்துடன், பிறருடன் எப்படிப் பழகுவது, சமூகத்துடன் எப்படி ஒன்றிணைவது போன்ற பிரச்னைகளும் வரலாம். எனவே, ஹேப்பி குழந்தைகளை வளர்த்தெடுக்க `ஹேப்பி மாம்' ஆக இருக்க வேண்டியது முக்கியம்.

மனநலம் காக்கும் மகத்தான வழிகாட்டி!

உதவி கேட்கத் தயங்காதீர்கள்!

பிறரிடம் உதவி கேட்பது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பண்புகளில் ஒன்று. சிலர் உதவி கேட்கவே தயங்கு வார்கள்; தாமே அனைத்தையும் செய்துவிடலாம் என நினைப்பார்கள். ஆனால், சரியான நேரத்தில் தேவையான உதவியைப் பெற்றுக்கொள்வதில் தவறு ஏதுமில்லை என்பதை உணர வேண்டும்.

மைண்ட்ஃபுல் ஈட்டிங் (Mindful eating) என்றால் என்ன?

நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும், உணவின் மூலமே கிடைக்கிறது என்பதை உணர்ந்து சாப்பிட வேண்டும். நாம் என்ன சாப்பிடுகிறோம், ஏன் சாப்பிடுகிறோம் என்பதை உணர்ந்து சாப்பிட வேண்டும்.

துரித உணவுகளைத் தவிர்த்துவிட்டு ஆரோக்கியமான உணவு களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். கார்போஹைட்ரேட், அதிக புரதம், பழங்கள், காய்கறிகள் என சமவிகித உணவை உண்ண வேண்டும்.

ஆரோக்கியமான உணவை உண்ணும்போது கவனச் சிதறலின்றி உணவில் மட்டுமே கவனத்தைச் செலுத்த வேண்டும். நன்றாக மென்று, அதன் ருசியை உணர்ந்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவது உடல் மற்றும் மனம் இரண்டுக்கும் நல்லது. இதனால் தான் டிவி பார்த்துக்கொண்டு சாப்பிடக் கூடாது, சாப்பிடும்போது பேசக் கூடாது என வீடுகளில் கூறுவார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism