லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

வந்தாச்சு கோடை
பிரீமியம் ஸ்டோரி
News
வந்தாச்சு கோடை

Welcome Summer

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

`வந்துட்டேன்னு சொல்லு' என்று வெயிலும், `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என்று கொரோனாவின் அடுத்த அலையும் போட்டியில் நிற்கின்றன. வருடா வருடம் கோடையைப் பழித்தே பழகிய பலரும், ஊரடங்கில் வீடடங்கி இருந்ததாலும் கொரோனா பயத்தாலும் கோடையின் தாக்கத்தை மறந்திருந் தார்கள். ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு, சராசரி வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் மக்களுக்குக் கோடையை சமாளிப்பதா, கொரோனாவை சமாளிப்பதா என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

கோடையில் கொரோனா வைரஸ் சூடு தாங்காமல் வந்த வழியே போய்விடும் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தவர்கள், கடந்த வருட கோடையில்தான் அதன் உக்கிர முகத்தைப் பார்த்தார்கள். இந்த வருடமும் கொரோனா ஆபத்து விலகிய பாடாக இல்லை. கோடையோடு கொரோனாவையும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் எல்லோரும். வழக்கத்தைவிட இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமாமே என்பதில் தொடங்கி, கோடையில் நோய் எதிர்ப்புத் திறன் கூடுமா என்பதுவரை சம்மர் குறித்த சந்தேகங்கள் ஏராளம்...

சம்மரை சமாளிக்க நாம் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, வாழ்வியலில் தேவைப்படும் மாற்றங்கள், வழக்கமாகச் செய்கிற தவறுகள் என எல்லாவற்றையும் விரிவாக விளக்கியிருக்கிறார்கள் நிபுணர்கள் பலர்.

கொரோனாவோடு கோடையையும் வெல்வோம்...

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
Patil

ஏப்ரல் மாதம் வெப்பநிலை அதிகரிக்கலாம்...

எச்சரிக்கும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்

புயல், மழைக்காலங்களில் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைகளை உற்றுநோக்கும் மக்கள், கோடையில் அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. இந்த வருடத்தின் கோடைக்கால வெப்பநிலை குறித்து பல்வேறு கேள்விகளுடன் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசனை சந்தித்தோம்...

இந்த வருடம் கோடையில் வெப்பத்தின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கும்?

`இந்த வருடம் கோடைக்காலத்துக்கான வெப்பநிலை குறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் விரிவான அறிக்கையைக் கொடுத்திருக்கிறது. அதன்படி பார்த்தால், தமிழகத்தைப் பொறுத்தவரை மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கான வெப்பநிலை கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலையைவிட சற்று குறைவாகத்தான் இருக்கும்.

அதற்கு என்ன காரணம்?

நமக்கு கிழக்கிலிருந்து காற்று வீசிக்கொண்டிருக்கிறது. கிழக்கிலிருந்து காற்று வீசும்போது, மதிய நேரத்தில் கடல் காற்றானது உள் மாவட்டங்கள் வரை வீசக் கூடும். அப்படியான சூழலில், வெப்பநிலை அதிகமாக உணரப்படுவதற்கு வாய்ப்பில்லை. கடல் காற்று இல்லாத நேரத்தில் மட்டும் வெப்ப நிலை அதிகமாகும். வெப்பநிலை குறைவாக இருக்கும் எனச் சொல்வது மூன்று மாதங்களுக்குமான சராசரி அளவுதான். மற்றபடி அவ்வப்போது ஓரிரு நாள்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

ஓரிரு நாள்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என்கிறீர்கள்... அது எந்த மாதத்தில், எந்தெந்தப் பகுதிகளில் இருக்கும்?

ஏப்ரல் இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் ஆரம்பித்து தென்மேற்குப் பருவ மழை தொடங்கும்வரை ஓரிரு நாள்களுக்கு வெப்பநிலை அதிகமாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட சில உள் மாவட்டங்களிலும் அதற்கான வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டைவிட சராசரி வெப்பநிலை குறைவாக இருக்கும் என்றாலும்கூட கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் இரண்டு அல்லது மூன்றாவது வாரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதாவது, வெப்பநிலை வழக்கமாக இருந்தாலும்கூட அங்கு வெப்பம் அதிகமாக உணரப்படும். காரணம், கடலோரப் பகுதிகளில் காற்றில் இருக்கும் அதிகமான ஈரப்பதம்.

புவியரசன்
புவியரசன்

காற்றில் ஈரப்பதம் இருந்தால்தான் வெப்பம் குறைவாக உணரப்படும் என்றுதானே நினைப்போம்...

மனித உடலின் சராசரி வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸ். சுற்றுப்புற வெப்பநிலையானது அந்த அளவைத் தாண்டாதபட்சத்தில் காற்றில் ஈரப்பதம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் பிரச்னை இல்லை. அதுவே, சுற்றுப்புற வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைத் தாண்டும்போது காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் அது வெப்பத்தை அதிகமாக உணர வைக்கும். அதாவது, உடலின் சராசரி வெப்பநிலையைவிட சுற்றுப்புற வெப்பநிலை அதிகரிக்கும்போது உடல் வெப்பத்தைக் கட்டுக்குள் வைக்க நம் உடலில் உள்ள தண்ணீர் வியர்வையாக வெளியேற்றப்படும். அந்த வியர்வை விரைவில் ஆவியாவதன் மூலமே உடல் வெப்பநிலை சரியான அளவில் தக்கவைக்கப்படும்.

சுற்றுப்புற வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக இருக்கும்போது காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால், வெப்பத்தைக் குறைப்பதற்காக நம் உடல் வியர்வையாக வெளியேறும் நீர் ஆவியாவது காற்றின் ஈரப்பதத்தால் தடுக்கப்படும். நம் வியர்வை எளிதில் ஆவியாகாதபட்சத்தில் உடலின் சூடு இன்னும் அதிகரிக்கும். அப்போது நாம் வெப்பத்தை அதிகமாக உணர்வோம். அந்த நிலையைத்தான் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று குறிப்பிடுகிறோம்.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

வெப்பம் அதிகமாக இருக்கும் சூழலில், மக்கள் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

ஏப்ரல் மாதம் இரண்டு, மூன்றாவது வாரத்திலோ, மே மாதம் முதல் வாரத்திலோ சூரியனின் கதிர்கள் தமிழகப் பகுதிகளில் செங்குத்தாக விழும். அப்படியான நாள்களில் காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணி வரைக்கும் திறந்தவெளியில் வெயில்படும் இடத்தில் இருந்தால் உடல் சோர்வு அதிகமாக இருக்கும். ஒரு சிலர் வெப்பம் தாங்காமல் ‘சன் ஸ்ட்ரோக்’ ஏற்பட்டு உயிரிழப்பதற்கான வாய்ப்புகூட இருக்கிறது. ஆகையால், வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் 43 டிகிரி செல்சியஸ் என உயரும் காலகட்டத்தில் 11 மணியிலிருந்து 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியில் செல்லும் மக்கள் அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும். தண்ணீருடன் உப்பு எலுமிச்சைச்சாறு கலந்து குடிக்கலாம்.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை

பொது மருத்துவர் எஸ்.பெரியசாமி

எளிய உணவுகளுக்கு மாறுங்கள்!

மழைக்காலம், குளிர்காலங்களில் சாப்பிட்டதைப் போலவே காரமான, பொரித்த உணவுகளை கோடையிலும் சாப்பிட சிலர் விரும்புவார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம். கோடையில் அதிகம் வியர்ப்பதால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு உடல் வறட்சியாக இருக்கும். அந்த நேரத்தில் காரமான உணவுகளைச் சாப்பிடும்போது உடல் மேலும் சூடாகி, அதிக வறட்சி ஏற்படும். இதனால் வயிற்றுப்போக்கு, செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். மேலும், வயிற்றில் செரிமானத்துக்காகச் சுரக்கும் அமிலங்களுடன் காரமான உணவும் கலந்து அல்சர் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதனால் வெயில் காலத்தில் காரமில்லா, எளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, இடியாப்பம், மோர் சாதம் போன்ற எளிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.

 எஸ்.பெரியசாமி
எஸ்.பெரியசாமி

வெயில் பயணம் வேதனையில் முடியலாம்!

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, வயதானவர்கள் காலை 11 முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்லக் கூடாது. ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் என்றால் வெயில் தாக்கம் குறைவாக இருக்கும் காலை அல்லது வெயில் தணிந்த மாலை நேரத்தில் செல்லலாம். அப்படியே வெளியே செல்ல நேரிட்டாலும் குடை, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல மறக்கக் கூடாது.

தண்ணீரை அலட்சியப்படுத்தாதீர்கள்!

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும் என்பதால் பெண்கள் தொடங்கி வயதானவர்கள் வரை தண்ணீர் குடிப்பதைக் குறைப்பார்கள். இதனால் அவர்களுக்கு எளிதில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு, உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். எனவே, கோடைக்காலத்தில் தினம்தோறும் 2 - 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். கோடையிலும் கொதித்து, ஆறவைத்த நீரையே குடிக்க வேண்டும்.

சிலர் வெயில் நேரத்தில் வெளியே சென்றுவிட்டு வந்ததும் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட தண்ணீரை உடனே எடுத்துக் குடிப்பார்கள். உடல் வெப்பமாக இருக்கும்போது உடனே குளிர்ந்த நீரைப் பருகும்போது சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் வரலாம். பெருந்தொற்று காலத்தில் இதுபோன்ற தொற்றுகள் அண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும், ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட நீரில் கிருமிகள் சேர்வதற்கும் வாய்ப்புள்ளது. அதன் மூலமாகவும் தொற்று ஏற்படலாம்.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

டயப்பர் தவிருங்கள்!

கோடையிலும் குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துவதை பெரும்பாலான பெற்றோர் தவிர்ப்பதில்லை. வெப்பமான காலநிலையில் அதிக இறுக்கமான டயப்பர் அணிவிக்கும்போது சருமத்தில் அரிப்பு, தடிப்புகள் போன்ற பிரச்னை ஏற்படலாம். அத்தியாவசியம் என்றால் காட்டன் டயப்பர் பயன்படுத்தலாம். அடர் நிறத்திலான மற்றும் கறுப்பு நிற உடைகளும் அணியக் கூடாது. அடர்நிற ஆடைகள் வெப்பத்தை வேகமாக உறிஞ்சி உடலுக்குக் கடத்தும். வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியலாம்.

கடினமான பயிற்சிகளுக்கு நோ!

மழை, குளிர்காலத்தில் முடங்கியிருந்தவர்கள், வெயில் தலையைக் காட்ட ஆரம்பித்ததும் உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிடுவார்கள். உடற்பயிற்சி நல்லதுதான். ஆனால், கடினமாக உடலை வருத்தி பயிற்சிகள் செய்யும்போது நீர்ச்சத்து இழப்பு ஏற்படக்கூடும். அதனால் கோடையில் எளிதான உடற்பயிற்சிகளே சிறந்தவை. உடற்பயிற்சி, நடைப்பயிற்சிக்குச் செல்பவர்கள் போதுமான அளவு தண்ணீர், நீர்ச் சத்துள்ள காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

வெந்நீர் குளியல் வேண்டாமே!

வெயில் காலத்தில்கூட வெந்நீரில் குளிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. சரும அலர்ஜி இருப்பவர்கள் கோடையிலும் வெந்நீரில் குளிக்கலாம். மற்றவர்கள் உடல் வெப்பநிலையைவிட சற்று அதிகமாக இருக்கும் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். அதிக சூடான நீரில் குளிப்பதை அனைவருமே தவிர்க்க வேண்டும்.

கோடைக்கேற்ற லைஃப்ஸ்டைல் மாற்றங்கள்...

சித்த மருத்துவர் விக்ரம் குமார்

அதிகாலை விழிப்பு!

கோடைக்காலம் வந்துவிட்டாலும், காலை 5 முதல் 6 மணி வரை வானிலையில் மெல்லிய குளிர்ச்சி இருக்கும். இந்த நேரத்தில் எழுந்துவிட்டால் அதிகாலையின் குளுமையும் தூய்மையான காற்றும் உடலின் செயல் பாடுகளுக்கு முக்கிய காரணியான ‘சர்காடியன் சுழற்சி’யை சரியாக வைக்கும். இதனால், நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

விக்ரம் குமார்
விக்ரம் குமார்

இனி இருவேளைக் குளியல்!

கோடைக்காலம் வந்துவிட்டால் ஒரு நாளைக்கு இருவேளைகள் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். மருத்துவ காரணங்களுக்காக வெந்நீரில் குளிப்பவர்களைத் தவிர, மற்றவர்கள் கோடைக்காலத்தில் வெந்நீர் குளியலைத் தவிர்ப்பது நல்லது. 10 நிமிடங்களாவது குளிர்ந்த நீரில் குளித்தால் சருமம் சுத்தமாவதோடு, உடலுக்குள் இருக்கும் கழிவுகளும் வெளியேறும்.

வாரம் இருமுறை எண்ணெய்க்குளியல்!

எல்லாக் காலத்திலும் வாரமிருமுறை எண்ணெய்க்குளியல் எடுப்பதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆனால், சைனஸ் போன்ற காரணங்களால் குளிர்காலத்தில் எண்ணெய்க்குளியலைத் தவிர்த்து வந்தவர்கள், கோடையில் தைரியமாக எண்ணெய்க்குளியல் எடுக்கலாம். இதுவும் உடலைக் குளிரச் செய்வதோடு உள்ளிருக்கும் கழிவுகளையும் அகற்றும். கோடைக்காலத்தில் வரக்கூடிய வியர்க்குரு, வேனல் கட்டிகள், கொப் புளங்கள் போன்ற பிரச்னைகள் வராமல் பாதுகாக்கும். அப்படியே வந்தாலும் எண்ணெய்க்குளியல் உடல் சூட்டைத் தணித்து, மேலே சொன்ன பிரச்னைகளை சீக்கிரம் சரி செய்துவிடும்.

நீர்க்காய்கறிகள் சாப்பிடுவதற்கான நேரமிது!

நீர்க்காய்கறிகள் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும் என்று பயந்தவர்களும் கோடைக்காலத்தில் கட்டாயம் நீர்க்காய்கறிகள் சாப்பிட வேண்டும். அப்போதுதான் உடலில் போதுமான நீர்ச்சத்து இருந்துகொண்டே இருக்கும். பசியின்மை பிரச்னையும் வராது.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

பழச்சாறுகளும் ஓகே தான்!

மற்ற சீசன்களில் பழங்களை அப்படியே சாப்பிட வேண்டும். பழச்சாறாகக் குடிக்கத் தேவையில்லை என்று சொல்வோம். ஆனால், கோடைக்காலத்தில் உடலில் எப்போதும் போதுமான நீர்ச்சத்து இருக்க வேண்டுமென்பதால், இந்த சீசனில் கிடைக்கிற தர்பூசணி, முலாம் பழம், கிர்ணி பழம் ஆகியவற்றைச் சாப்பிடுவதோடு மற்ற பழங்களையும் ஜூஸாக அருந்தலாம். ஆனால், சர்க்கரை மட்டும் சேர்க்கக் கூடாது.

மண்பானைத் தண்ணீருக்கு மாறுங்கள்!

மண்பானைத் தண்ணீர் உடல் சூட்டைத் தணிப்பதோடு, செரிமானத்தை யும் அதிகரிக்கும். கூடவே நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். ஃபிரிட்ஜ் வாட்டர் குடிக்க வேண்டுமென்கிற தவிப்பை மண்பானைத் தண்ணீர் தணிக்கும். மண்பானைத் தண்ணீரில் சிறிதளவு சீரகமும் போட்டு வைத்துக் குடித்தால் ரத்தமும் சுத்திகரிக்கப்படும்.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

நீராகாரம், பானகம், மோர், இளநீர், நுங்கு, நன்னாரி, கரும்புச்சாறு...

நீராகாரம் உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு செரிமானத்தையும் தூண்டும். பானகம், வியர்வையால் இழந்த நீரிழப்பை ஈடுசெய்வதோடு அதில் சேர்க்கப்பட்டிருக்கிற வெல்லம் இரும்புச்சத்தையும் தரும். மோர் நம்முடைய குடல் பகுதியில் நன்மை செய்கிற பாக்டீரியாவை அதிகப் படுத்தும். கூடவே வெயில் காலத்தில் வருகிற வெப்ப கழிச்சலையும்

சரி செய்யும். இளநீரில் இருக்கிற நுண்ணூட்டச்சத்துகள் கோடைக்காலத்தில் நம் உடல் இழக்கிற நீர்த்தன்மையை உடனடியாக மீட்டுத் தரும். நுங்கை தோலுடன் சாப்பிட்டால் உடல்சூட்டால் வயிற்றில் ஏற்படுகிற புண்ணை ஆற்றும். குழந்தைகளுக்கு வியர்க்குரு வந்தால், அதற்கான பவுடரை தடவு வதற்குப் பதில் நுங்கின் நீரைத் தடவலாம். ஒரே நாளில் வித்தியாசம் தெரியும். சாயம் சேர்க்காத நன்னாரி சர்பத்தும் நல்ல உடல் சூடு தணிப்பான் தான். சர்க்கரை மற்றும் ஐஸ்கட்டி சேர்க்காத, சுகாதாரமான கரும்புச்சாறும் கோடைக்கால நீரிழப்பை ஈடுகட்டும்.

மெத்தைக்கு பதில் பாய்!

கோடைக்காலத்தில் ஃபோம் மெத்தையில் படுப்பதைவிட இலவம் பஞ்சு மெத்தையில் படுத்தால் உடம்பு சூடாகாது. உடனடியாக இலவம் பஞ்சு மெத்தை வாங்க முடியாதவர்கள், கோரைப் பாயில் படுக்கலாம். பிளாஸ்டிக் பாயைத் தவிர்ப்பது நல்லது.

உடலைக் குளிர்விக்கும் சித்த மருந்துகள்!

சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் செம்பருத்தி மணப்பாகு உடலைக் குளிர்விக்கும். உடல் உஷ்ண பிரச்னையிருப்பவர்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற சந்தன சிராய்களை பானைத் தண்ணீரில் போட்டு வைத்துக் குடிக்கலாம்.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

நடைப்பயிற்சியை ஆரம்பிக்கலாம்!

மழைக்காலம், பனிக்காலம் என்று கைவிட்ட நடைப்பயிற்சியை மறு படியும் ஆரம்பிக்க இதுதான் நேரம். நடைப்பயிற்சி உடல் உள்ளுறுப்பு களுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தைக் கொடுப்பதோடு, போது மான ஆக்ஸிஜனையும் எடுத்துக் கொண்டு நம்மை நோய் நொடி யில்லாமல் பாதுகாக்கும்.

கோடைக்கால நோய்களைத் தவிர்ப்பது எப்படி?

பொது மருத்துவர் ஜிம்மி பிரபாகர்

கோடைக்காலத்தில் பரவும் நோய்களை காற்றால் பரவும் நோய், நீரால் பரவும் நோய் என இரண்டாக வகைப்படுத்தலாம். காற்றால் பரவும் நோய்கள் வைரல் இன்ஃபெக்‌ஷன் எனப்படுகிறது. அம்மைநோய் முதல் புது வரவான கோவிட் 19 வைரஸ்வரை இந்த ரகம்தான்.

ஜிம்மி பிரபாகர்
ஜிம்மி பிரபாகர்

வைரல் இன்ஃபெக்‌ஷனைத் தடுக்க சோஷியல் டிஸ்டன்சிங் கடைப்பிடிப்பது அடிக்கடி ஹேண்ட் வாஷ் செய்வது மாஸ்க் அணிவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது அவசியம். கோவிட் பரவுதலாலேயே மாஸ்க் அணிவது சமூக இடைவெளி கடைப்பிடிப்பது கைகளை சானிட்டைஸ் செய்வது போன்றவை நடைமுறையில் இருந்துவருகின்றன. இவை கோவிட் மட்டுமல்லாது காற்றால் பரவும் மற்ற நோய்களிலிருந்தும் பாதுகாப்பை அளிக்கின்றன என்றே கூறலாம்.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

நீரால் பரவும் நோய்கள் லிஸ்ட்டில் அமீபியாசிஸ், பேதி, மலச்சிக்கல், காலரா போன்றவை இடம்பிடிக்கின்றன. நார்ச்சத்து அதிகமுள்ள முழுதானிய உணவுகள், காய்கறிகள், பருப்பு வகைகள், நீர்ச்சத்து நிறைந்த பழ வகைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வது மலச் சிக்கலுக்கு நல்ல தீர்வு. வெயில் காலத்தில் உடலில் நீர் வறட்சி ஏற்படும். எனவே, நீர் வறட்சியை ஏற்படுத்தும் காபி, டீ போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. அவற்றிலுள்ள அதிக கஃபைன் உடலில் சேரும்போது அல்சர், நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்றவை ஏற்படலாம். குளிர்பானங்களுக்குப் பதிலாக இயற்கை பானங்கள் எடுத்துக்கொள்வது உடலுக்கு குளிர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தரும். நீர் வறட்சி ஏற்பட்ட பின் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்த்து முன்கூட்டியே இளநீர், மோர், நன்னாரி சர்பத் போன்ற இயற்கை பானங்களை எடுத்துக்கொள்வது நல்லது.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

வெயில் காலத்தில் செரிமான பிரச்னை பலருக்கும் தொடர்கதையாகும். கூடுமானவரை கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவைத் தவிர்ப்பது செரிமான சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். கோடைக்காலத்தில்

40 டிகிரிக்கு மேல் வெயில் ஏற ‘ஹீட் ஸ்ட்ரோக்’ ஏற்படும். அதனால் தினசரி குறைந்தபட்சம் 3 முதல் 4 லிட்டர்கள் வரை நீர் அருந்துவது மிக அவசியம். குழந்தைகளை மதிய வேளைகளில் வெளியே விளையாட விடாமல், மாலை வேளைகளில் விளையாட அனுமதிக்கலாம்.

அனிதா பாலமுரளி
அனிதா பாலமுரளி

கோடைக்கேற்ற காய்கறிகள்!

வெள்ளரிக்காயும் வெண்பூசணியும் வெயிலுக்கேற்ற காய்கறிகள் என்பது எல்லோருக்கும் தெரியும். இவை தவிர கோடைக்காலத்தில் நீங்கள் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டிய நீர்ச்சத்து நிறைந்த முக்கியமான காய்கறிகளைப் பற்றி விளக்குகிறார் டயட்டீஷியன் அனிதா பாலமுரளி.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
SednevaAnna

தக்காளி

வைட்டமின் சி, கே 1, பி 9 சத்துகள் தக்காளியில் நிறைந்திருப்பதால், அது ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகச் செயல்படுகிறது. 95 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்தது. நார்ச்சத்து அதிகமிருப்பதால், தக்காளியை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் உடல் சூடு மற்றும் அது தொடர்பான அனைத்து பிரச்னைகளும் சரியாகும்.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

பாகற்காய்

கோடையில் சருமத்தில் கொப்புளங்கள், தடிப்பு, படர்தாமரை போன்றவை ஏற்படும். பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் இந்தப்பிரச்னைகளை மிக எளிதாகத் தவிர்க்கலாம். பாகற்காய் சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

கத்திரிக்காய்

இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து போன்றவை நிறைந்திருப்பதால், கத்திரிக்காய் ஆன்டி ஆக்ஸிடன்டாகச் செயல்படும். நோய்த்தொற்றுகளைத் தடுக்கும். மலச்சிக்கல் மற்றும் செரிமானப் பிரச்னைகளைச் சரிசெய்ய உதவும்.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

புடலங்காய்

கோடையில் ஏற்படும் சுவாசக்குழாய் தொடர்பான தொற்றுகளைத் தவிர்க்க புடலங்காய் உதவும். அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்னைகளையும் புடலங்காய் சரிசெய்யும். உடலிலுள்ள நச்சுகளை நீக்குவதோடு, சருமப் பராமரிப்புக்கும் உதவும்.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

பீன்ஸ்

பீன்ஸில் வைட்டமின் மற்றும் ஃபோலேட் சத்துகள் நிறைந்திருப்பதால், மனநலத்தைக் காக்கும். இதிலுள்ள அமினோ அமிலம், சுரப்பிகளின் செயல்பாடுகளைச் சீராக்கும்.

மிகக் குறைந்த அளவே கலோரி இருக்கும் என்பதால், பகல் நேரத்தில் உடல் சோர்வு ஏற்படாமல் காக்கும்.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

கண்களைப் பாதுகாக்க

வெயிலில் செல்லும்போது சன் கிளாஸ் பயன் படுத்தலாம். வாரம் ஒருமுறை உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க, கண் எரிச்சல் நீங்கும். அதிக நேரம் கண் விழித்து வேலை செய்வது, டிவி, மொபைல் மற்றும் கணினியைப் பார்ப்பதால் கண் எரிச்சல் மற்றும் கண் சிவந்து போகலாம். ஆகையால், 6 - 8 மணி வரை சீரான தூக்கம் அவசியம்.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் குடியுங்கள்!

தண்ணீர் பாட்டிலை எப்போதும் கைவசம் வைத்திருப்பது நல்லது. எப்போதெல்லாம் தண்ணீர் கேன்-ஐ கடந்து போகிறீர்களோ அப்போதெல்லாம், தாகம் இருக்கிறதோ, இல்லையோ... தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் குடிக்க மறந்துபோகிறவர்கள், செல்போனில் ரிமைண்டர் போட்டு வைத்து, அது சிணுங்கும்போதெல்லாம் தண்ணீர் குடிக்கலாம்.

ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்துவிட்டு வரும்போதும், உங்கள் உடலிலிருந்து நீர் வெளியேறுகிறது. எனவே, அப்போதெல்லாம் கண்டிப்பாக ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற செயல் பாடுகளின்போது ஏராள மான வியர்வை வெளி யேறும். வியர்வையின் மூலம் நம் உடம்பிலிருந்து பொட்டாசியம் மற்றும் உப்புகள் வெளியேறுகின்றன.

எனவே, விளையாடிய பின்னும், உடற்பயிற்சி செய்த பின்னும் நீர்ச்சத்துள்ள பழம் அல்லது நீர் ஆகாரங் களை எடுத்துக் கொள்வ தால், வியர்வை மூலம் வெளியேறும் இழப்பை ஈடுகட்டலாம்.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

இருப்பிடத்தைக் குளுமையாக வைத்துக்கொள்ளும் வழிகள்!

ஏ.சியை நீங்கள் எந்த அளவுக்குக் குளிராக வைத்திருக்கிறீர்களோ அந்த அளவு அது அறையின் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். அறையிலுள்ள உங்களின் உடலை மட்டும் அது சும்மா விட்டுவிடுமா என்ன? உங்கள் உடலில் தேவையான அளவு இருக்கும் ஈரப்பதத்தையும் அது உறிஞ்சிவிடும். இது உங்களுக்கு உடல் சோர்வை ஏற்படுத்தும். முறையாக ஏ.சியைப் பராமரிக்கவில்லை என்றால்கூட அதனால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படும். ஏ.சி ஃபில்டரை முறையாகச் சுத்தம் செய்து அழுக்கு, தூசி போன்றவற்றை அவ்வப் போது அகற்ற வேண்டும்.

காலை முதல் மாலை வரை ஏ.சி குளிரில் செலவு செய்வதால் உடல் சுறுசுறுப்பை இழக்க நேரிடும். குளிரிலேயே இருந்து பழகிவிட்டால் பின்னர் குறைவான வெயிலைக்கூட நம் உடல் ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறும். திடீரென வெப்பநிலை மாற்றம் ஏற்படும்போது அதை உடல் ஏற்றுக்கொள்ளாமல் ஒவ்வாமை, சுவாசம் சீரின்மை போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. நாள்பட்ட நோய்கள், வாதப் பிரச்னைகள் உள்ளவர்கள் குளிரூட்டப்பட்ட அறையில் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம். காரணம், அது உடலின் ரத்த அழுத்தத்தைக் குறைவாகவே வைத்திருக்கும். அதற்காக ஏ.சி பயன்படுத்தவே கூடாது என்றில்லை. அதிக குளிர் இல்லாமல் மிதமான (23 - 25 டிகிரி) வெப்பத்தில் பயன்படுத்துதல் நலம்.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

இதற்கு மாற்றாக, உங்கள் வீட்டைச் சுற்றி நிறைய செடிகள், மரங்கள் இருப்பது போலப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் வீடு இருக்கும் சுற்றுப்புறத்தில் கொசுக்களைக் கட்டுப்படுத்திவிட்டாலே, நீங்கள் இரவின் இயற்கை காற்றில் ஜன்னலைத் திறந்து வைத்து உறங்கலாம். ஏ.சியின் தேவையே இருக்காது. எப்போதும் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொண்டால், வெயில் காலத்தைச் சுலபமாகக் கடந்துவிடலாம்.

வெப்ப பக்கவாதம் (Heat Stroke) என்றால் என்ன?

அதிக வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகளில் மிகவும் ஆபத்தானது ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் வெப்ப பக்கவாதம். இது நிகழும்போது ஒருவரின் உடல் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸைத் தாண்டியிருக்கும். முழுவதுமாக அல்லது அரைகுறை யாகச் சுயநினைவை இழந்திருப்பார்கள். பல நேரங்களில் இந்த வெப்ப பக்கவாதம் நிகழும்போது வியர்வை பெரிய அளவில் சுரக்காது. முக்கியமாகக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த நிலை ஏற்படும். உடனே இதற்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் உயிரை இழக்கும் நிலைகூட ஏற்படலாம்.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

அறிகுறிகள்

எரிச்சல், சருமம் வறட்சி.

தலைச்சுற்றல், மயக்க நிலை, தள்ளாடும் நிலை.

தலைவலி, குழப்பம்.

சோர்வு.

தண்ணீர் குடித்தும் அடங்காத தாகம்.

அதிக உடல் வெப்பநிலை.

வலிப்பு.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

என்னென்ன முதலுதவிகள் செய்ய வேண்டும்?

உடனே மருத்துவ உதவியை நாட வேண்டும். உதவி வரும் வரை கட்டாயம் ஒருவர் அருகில் இருக்க வேண்டும்.

மிகவும் குளிர்ந்த, நிழலான பகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

ஷூ, சாக்ஸ், மேலாடை போன்ற தேவையற்ற உடைகளை அகற்றி விடவும்.

குளிர்ந்த நீரில் நனைத்த துணி அல்லது ஐஸ்கட்டிகள் கொண்டு தலை, முகம் மற்றும் கழுத்துக்கு அழுத்தம் கொடுக்கவும். குளிர்ந்த நீரை முகத்தில் தெளித்து விடவும்.

தண்ணீர், பழச்சாறு போன்றவற்றைக் குடிக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டாம்.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

லெகின்ஸுக்கும் ஜீன்ஸுக்கும் நோ!

இந்த வகை ஆடைகளை கோடைக்காலத்திலும் தொடர்ந்து அணிந்துவந்தால். வியர்வை வெளியேறாமல் சருமத்தில் படர் தாமரை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. படர் தாமரை வந்தவர்கள் அருகன் தைலம் பயன்படுத்தி குணம் பெறலாம். கோடையில் மட்டுமாவது பருத்தி ஆடைகளை அணிவதுதான் சருமத்துக்குப் பாதுகாப்பு.

எந்த வேளைக்கு எந்த உணவு?

ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன்

காலை உணவைப் பொறுத்தவரை முந்தைய தலைமுறையினர், முதல்நாள் சமைத்த கம்பு, அரிசி சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்து சாப்பிடுவார்கள். இதில், நல்ல பாக்டீரியா இருக்கும் என்பதால் உடலுக்கு நல்லது. நீர்வறட்சியும் சரியாகும். அதே போல நாமும் சாப்பிடலாம். அது பிடிக்காதவர்கள் இட்லி, தோசை, உப்புமா போன்றவற்றைச் சாப்பிடலாம். 11 மணியளவில் காபி, டீக்குப் பதில் இளநீர், நீர், பானகம் குடிக்கலாம். ஏனென்றால், இது வெயில் ஏறும் நேரம் என்பதால் குளிர்ச்சியாகக் குடிப்பது நல்லது. மதியம், இரவு உணவுகளில் மூன்று விஷயங்கள் இருக்க வேண்டும். ஒன்று அல்லது ஒன்றரை கப் சாதம், அடுத்து, அரை கப் பருப்பு. மூன்றாவது, ஒன்றரை கப் காய்கறிகள். அவரைக்காய், காராமணி, செளசெள. பூசணிக்காய் போன்றவை இருக்கலாம். எண்ணெய் அதிகம் பயன்படுத்தாமல் சமைக்க வேண்டும். மோர் இருப்பது நல்லது. மாலை நேரத்தில் பஜ்ஜி, பகோடா போன்ற அதிக எண்ணெய் பொருள்களைச் சாப்பிடாமல் இருப்பதே நல்லது. அதற்குப் பதில் உலர் பழங்களைச் சாப்பிடலாம். கர்ப்பிணிகளின் உடல்சூடு இயல்பாகவே அதிகமாக இருக்கும். இது கோடைக்காலம் என்பதால் இன்னும் அதிகரிக்கக்கூடும். அதனால், அவர்கள் இளநீர், நீர் மோர் போன்றவை அதிகம் குடிக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு அதிகம் பானகம் கொடுக்கக் கூடாது. எந்த உணவாக இருந்தாலும், காரமும் எண்ணெயும் குறைவாகச் சேர்த்து சமைத்ததைச் சாப்பிடலாம்.

பிளாஸ்டிக் பாட்டிலில் மோர் கொண்டு போறீங்களா?

கோடைக்காலத்துக்கு மிகவும் ஏற்ற பானம் மோர். ஆனால், மோரை பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி, கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் குடிப்பது தவறான பழக்கம். ஏனென்றால், புளிப்பு மிக்க உணவுப் பொருளை பிளாஸ்டிக்கில் ஊற்றும்போது, அது பிளாஸ்டிக்கையும் சேர்த்துக்கொள்ளும். எனவே, பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றப்பட்ட மோரைக் குடிக்கும்போது பிளாஸ்டிக்கையும் சேர்த்துக் குடிக்கிறோம். அதற்கு ஜீனோ பயாக்டிஸ் (Xeno biotics) என்று பெயர். எந்தெந்தப் பொருள்களை பிளாஸ்டிக்கில் வைக்கலாம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உணவுப் பொருள்களைப் பொறுத்தவரை அரிசி, பருப்பு இவை மட்டுமே பிளாஸ்டிக் கன்டெயினரில் வைக்கலாம் என்று அறிவியல் கூறுகிறது. உப்பு, ஊறுகாய் என எதுவும் வைக்கக் கூடாது. அப்படித்தான் மோரும். காலையில் வைக்கும் மோரில் நேரமாக, புளிப்பு ஏற, ஏற அது பிளாஸ்டிக்கையும் சேர்த்துக்கொள்ளும். அதற்குப் பதில் எவர்சில்வர் பொருள்களைப் பயன்படுத்தலாம்.

வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

உடலுக்கு குளிர்ச்சி தரும் செம்பருத்தி

செம்பருத்தி இலைகள், துளசி, வெந்தயம் (ஒரு நாள் முன்னரே தண்ணீரில் ஊறவைத்துப் பயன்படுத்தவும்) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். வடிகட்டிய சாற்றை ஷாம்பூவாகத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடையும். கருமையான கூந்தல் பெற உதவும். பொடுகுத்தொல்லை நீங்கும்.

வியர்க்குரு உள்ளவர்கள் குளிப்பதற்கு வேப்பிலை போட்டு ஊறவைத்த தண்ணீரை பயன்படுத்தலாம். வெயிலில் செல்லும்போது, கற்றாழையில் உள்ள சோற்றை வெயில் படும் இடங்களில் தேய்த்துக்கொள்ளலாம். இதனால், வெயிலின் தாக்கம் நேரடியாகச் சருமத்துக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. வீட்டுக்கோ, அலுவலகத்துக்கோ சென்றபின் தேய்த்த இடங்களைக் கழுவிக்கொள்ளலாம். இதனால், சருமம் மங்குவது தடுக்கப்பட்டு, பளபளப்பாக உதவுகிறது.