Published:Updated:

கோவிட் காலத்தில் குழந்தைக்குத் தடுப்பூசி போடலாமா?

தடுப்பூசி
பிரீமியம் ஸ்டோரி
News
தடுப்பூசி

தேவை கவனம்

`25 ஆண்டுகள் கஷ்டப்பட்டு முன்னேறிய நிலையிலிருந்து வெறும் 25 வாரங்களில் பின்னோக்கிச் சென்றிருக்கிறோம்' - கோவிட்-19 பாதிப்புக்குப் பிறகு உலகப் பொருளாதாரம், பெண்கள் உரிமை, வறுமை என அனைத்துக்கும் இந்த வாசகம் பொருந்தும். அந்த வரிசையில் இணைந்திருப்பவை குழந்தைகளுக்கான தடுப்பூசிகள். அமெரிக்காவைச் சேர்ந்த பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் சார்பில் இந்தியா உட்பட ஐக்கிய நாடுகளில் நடைபெற்ற ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளை கொரோனா காலத்தில் போட்டுக் கொண்டவர்களின் விகிதம் 84-லிருந்து 74 ஆகக் குறைந் துள்ளது என்கிறது சர்வதேச ஆய்வு ஒன்று. வளர்ந்து வரும் நாடுகளில் கோவிட் நேரத்தில் ஆரம்ப சுகாதார மையங்கள் மூடப்பட்டதும், மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைகள் மட்டுமே வழங்கப்பட்டதும் இதற்கு முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. கோவிட்-19 பயத்தால் தடுப்பூசிக்காக மருத்துவமனையை நாடுபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. ஒரு குழந்தை பிறந்த ஆறு மாதங்களில் தாயிடமிருந்துதான் அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். அதற்குப் பிறகு, குழந்தையின் உடலில் தானே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகத்தான் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

கோவிட் காலத்தில் குழந்தைக்குத் தடுப்பூசி போடலாமா?

5-ல் 2 பேருக்கு கிடைப்பதில்லை!

2017-2018-ம் ஆண்டில் தடுப்பூசிகள் வழங்கப் பட்டது தொடர்பான ஆய்வறிக்கையை மத்திய அரசின் தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஐந்தில் இரண்டு குழந்தைகளுக்கு முழுமையான தடுப்பூசிகள் சென்றடைவதில்லை என்று தெரியவந்துள்ளது.

தடுப்பூசி பற்றிய பல்வேறு புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ள நிலையில் அவற்றின் அவசியம் பற்றியும் பேச வேண்டியுள்ளது. குழந்தை களுக்குக் கொடுக்க வேண்டிய தடுப்பூசிகள் பற்றி விளக்குகிறார் குழந்தைநல மருத்துவர் மாதுரி பிரபு.

``கோவிட்-19 பெருந்தொற்றுக்குத் தடுப்பூசி இல்லாத நிலை நீடிக்கிறது. இந்தியாவில் தொற்று அதிகரித்துவரும் சூழலில், பிற தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதற்குத் தடுப்பூசிகள்தான் துணை புரியும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முக்கியமான தடுப்பூசிகள்!

குழந்தை பிறந்த ஓராண்டுக்குள் கொடுக்க வேண்டிய போலியோ சொட்டு மருந்து, BCG (காசநோய்), DTaP (டிப்தீரியா, டெட்டனஸ், கக்குவான்), ஹெபடைட்டிஸ் பி, குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் வயிற்றுப்போக்கு வராமல் தடுப்பதற்கான ரோட்டா வைரஸ் தடுப்பூசி ஆகியவை தவிர்க்கவே கூடாதவை. MMR (Measles, Mumps, Rubella) தடுப்பூசி சில நாடுகளில் குழந்தை பிறந்த 15 மாதத்தில்தான் கொடுக்கிறார்கள். நம் நாட்டில் தட்டம்மை அதிகம் காணப்படுவதால் 9 மாதத்திலேயே அதைப் போட்டுவிடுவோம். இதை எடுத்துக் கொண்டால்தான் குழு நோய் எதிர்ப்பு சக்தி (Herd Immunity) உருவாகும். டைபாய்டு, அம்மை (Chickenpox) ஆகிய நோய்களுக்கான தடுப்பூசிகளும் வழங்கப்படுகின்றன'' என்கிறார்.

கோவிட் காலத்தில் குழந்தைக்குத் தடுப்பூசி போடலாமா?

குறைமாத பிரசவமும் தடுப்பூசியும்

``குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தை களில் கணிசமானோர் தடுப்பூசியைத் தவற விடுகின்றனர் என்பதும் அதிர்ச்சியளிக்கிறது. குறைமாதக் குழந்தைகள் எடை குறைவாக இருப்பார்கள் என்பதால், பிரசவத்தின்போது வழங்கப்படும் தடுப்பூசிகளை வழங்க முடியாது. குறைந்தது 1.8 முதல் 2 கிலோ எடை இருந்தால்தான் தடுப்பூசிகள் போடும்போது நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் எடை அதிகரித்த பிறகு தடுப்பூசி போடுவதற்கு வரச் சொல்வோம். சிலர் தாமதிப்பார்கள். சிலர் தவிர்த்துவிடுவார்கள்.

தடுப்பூசிகள் ஏன் அவசியம்?

தடுப்பூசிகளைப் போடாவிட்டால், குழந்தைகள் அந்தத் தொற்று பாதிப்புகளால் நோய்வாய்ப்படுவார்கள். உயிரிழப்புகளும் அதிகரிக்கும். சில தடுப்பூசிகளை ஒரு குழந்தை போட்டுக்கொள்ளாவிட்டால் அந்தக் குழந்தை வசிக்கும் பகுதியிலிருக்கும் மற்ற குழந்தைகளுக்கு நோய்ப் பரவல் ஏற்படலாம். தட்டம்மை இதற்குச் சிறந்த உதாரணம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தொடர்ந்து பராமரிப்பதற்கு அடுத்த தவணை (பூஸ்டர்) கொடுக்கப்படுகிறது. அதனால் பூஸ்டர் தடுப்பூசிகளையும் தவறவிடக் கூடாது'' என்கிறார் மருத்துவர் மாதுரி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தடுப்பூசி போட மருத்துவமனைக்குச் செல்கிறீர்களா?

ந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் அவர்களுக்கான பிரத்யேக மாஸ்க் அணிந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு மாஸ்க் அவசியமில்லை. அடிக்கடி கை கழுவுவது, தனிமனித இடைவெளி இவையெல்லாம் அவசியம். தடுப்பூசி போடுவதற்கு குழந்தையை பெற்றோரில் யாராவது ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் போதுமானது. மருத்துவமனையில் முன்பதிவு செய்து நேரத்தைப் பெற்றுவிட்டால், நீண்ட நேரம் மருத்துவமனையில் காத்திருக்க வேண்டி யிருக்காது. வீட்டுக்குச் சென்றதும் குழந்தையைக் குளிப்பாட்டிவிடுவது நல்லது.

எப்போது தடுப்பூசி போடலாம்?

டுப்பூசி போடுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு வரை குழந்தைக்கு காய்ச்சல் இருக்கக் கூடாது. காய்ச்சல் இருந்தால் தடுப்பூசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். காரணம், ஏற்கெனவே ஒரு தொற்று உடலில் இருக்கும்போது, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் அதற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும். அந்த நேரத்தில் தடுப்பூசி போடும்போது அதன் திறன் குறையும்.

வீட்டில் யாருக்கேனும் கோவிட்-19 தொற்று இருந்தால் குழந்தைக்குத் தடுப்பூசி போடுவதற்கு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லக் கூடாது. வீட்டில் ஒருவருக்கு இருந்தால் மற்றவர்களும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக, குழந்தைகள் அறிகுறிகளற்றவர்களாக இருந்து வைரஸை மற்றவர்களுக்குக் கடத்துவார்கள். அதனால் மருத்துவமனைக்குச் செல்வதால் பிறருக்குப் பரவ வாய்ப்புள்ளது. மேலும், அந்த நேரத்தில் தடுப்பூசி போட்டு குழந்தைக்கு காய்ச்சல் வரும் பட்சத்தில் அது கோவிட்-19 ஆக இருக்குமோ என்ற தேவையற்ற குழப்பம் ஏற்படும். அதனால் க்வாரன்டீன் காலத்தை நிறைவு செய்த பிறகே, குழந்தைக்குத் தடுப்பூசி போடச் செல்ல வேண்டும்.

முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றோருக்கே!

``தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் குறைந்துள்ளனர் என்பது உண்மைதான். கோவிட்-19 காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான பாதுகாப்பை உறுதி செய்யவில்லை. அதனால்தான் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

தடுப்பூசியைப் பொறுத்தவரை அரசு சாதகமாக விஷயங்களை மட்டும்தான் வெளியில் சொல்கிறது. பாதகங்களைச் சொல்வதில்லை. உலகிலேயே மிகப்பெரிய காசநோய் தடுப்புமருந்து பரிசோதனை சென்னை செங்கல்பட்டில் நடத்தப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் மேற்பார்வையில்தான் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் காசநோய் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை அந்த நோய் அதிகம் தாக்குகிறது என்று தெரியவந்தது. ஆனால், இதுபோன்ற விஷயங்களைப் பொதுவெளியில் சொல்வதில்லை.

கோவிட் காலத்தில் குழந்தைக்குத் தடுப்பூசி போடலாமா?

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடுப்பூசி வழங்குவதற்கு முன்பு அதன் சாதக பாதகங்கள், பக்கவிளைவுகளை எழுத்துபூர்வமாகப் பெற்றோருக்கு அளிக்கிறார்கள். அதில் சந்தேகம் இருக்கும்பட்சத்தில் மருத்துவர்கள் விளக்கமளிப்பார்கள். இறுதியில் முடிவெடுக்கும் உரிமை பெற்றோருக்குக் கொடுக்கப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வதாகப் பெற்றோரிடம் ஒப்புதல் கையெழுத்து வாங்கிய பிறகுதான் அளிக்கப்படுகிறது.

நம் நாட்டில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. சிகிச்சை குறித்த முடிவை எடுக்கும் அதிகாரம் நோயாளிகளுக்கு உண்டு என்கிறது சட்டம். அதைப் பின்பற்றி தடுப்பூசியின் சாதக பாதங்களை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். தடுப்பூசி போடுவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றோருக்கு வழங்க வேண்டும். அவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது'' என்கிறார் சமூகச் செயற்பாட்டாளர் மருத்துவர் புகழேந்தி.

- க.ர.பிரசன்ன அரவிந்த்