Published:Updated:

குழந்தைக்கு கொரோனா காய்ச்சலா, சாதாரண காய்ச்சலா...? - கண்டுபிடிக்கலாம் இப்படி!

குழந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தை

பயம் வேண்டாம்!

ழைக்காலத்தில் பெரும்பாலான குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்படுவார்கள். இந்த மழைக்காலத்தில் கொரோனா நோய்த்தொற்று அபாயமும் இருப்பதால், பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், எப்படி மருந்து கொடுக்க வேண்டும், சாதாரண காய்ச்சலா, கொரோனா காய்ச்சலா என்று எப்படிக் கண்டறிவது உட்பட பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு தரும் ஆலோசனைகளைப் பகிர்ந்துகொண்டார், கோவை அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைப் பிரிவு சிறப்பு மருத்துவர் செந்தில்குமார்.

உடல் சில்லென்று ஆனாலும் காய்ச்சல்தான்!

“குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் சில நேரங்களில் வித்தியாச அறிகுறிகளுடன் இருக்கும். பெரியவர்களைப்போல அவர்களுக்கு உடல் சுட வேண்டும் என்பதில்லை. சில குழந்தைகளுக்கு, காய்ச்சல் ஏற்படும்போது சில நேரங்களில் உடல் சில்லென்று ஆகிவிடும். குறிப்பாக, ஒரு மாதத்துக்கு உட்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்குக் காய்ச்சலின்போது உடல் சில்லென்றாவது அதிகம். அது அபாய அறிகுறி என்பதால், உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.

குழந்தைக்கு கொரோனா காய்ச்சலா, சாதாரண காய்ச்சலா...? - கண்டுபிடிக்கலாம் இப்படி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆறு மாதம் முதல் ஐந்து வயதுவரை உள்ள குழந்தைகளுக்குக் காய்ச்சல் அதிகரிக்கும்போது வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 10-ல் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளுக்கு, மரபு உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பிரச்னை ஏற்படலாம். வலிப்பு வந்த குழந்தைகளைத் தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். மருத்துவர் குறிப்பிட்ட இடைவெளியில் குழந்தைக்குத் தொடர்ந்து மருந்து கொடுப்பது, உடல் சூடு அதிகரிக்கும்போது மருத்துவர் பரிந்துரையின்படி சுத்தமான ஈரத்துணியால் குழந்தையின் உடலைத் துடைத்தெடுப்பது போன்றவை, காய்ச்சல் அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மருந்து வயதுக்கேற்றபடி அல்ல, எடைக்கேற்றபடி!

வயது என்னவாக இருந்தாலும், குழந்தைகளுக்கு அவர்களின் எடையின் அடிப்படையிலேயே மருத்துவர் மருந்தின் அளவைப் பரிந்துரைப்பார். உதாரணமாக, ஐந்து வயதுக் குழந்தை 18 கிலோ எடையுடன் இருந்தால், அதற்கு 5 மில்லி மருந்து கொடுக்க மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். மூன்று வயதுக் குழந்தை 18 கிலோ எடையுடன் இருந்தால் அதற்கும் அதே 5 மில்லி மருந்துதான் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும்.

குழந்தைக்கு கொரோனா காய்ச்சலா, சாதாரண காய்ச்சலா...? - கண்டுபிடிக்கலாம் இப்படி!

ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை மருந்து!

குழந்தைகளுக்கு ஒரு வயது வரை டிராப்ஸும், அதற்கு மேல் சிரப்பும் கொடுக்கலாம். காய்ச்சல் மருந்தை மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில், குறிப்பிட்ட இடைவெளியில், டாக்டர் குறிப்பிடும் நாள்கள்வரை தொடர்ந்து கொடுப்பது மிகவும் அவசியம். பொதுவாக எட்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மருந்து கொடுக்கலாம். காய்ச்சல் அதிகமாக இருந்தால் ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறைகூட கொடுக்கலாம்.

நீர் ஆகாரம்!

காய்ச்சல் நேரத்தில் குழந்தைகளுக்கு உடலில் நீர்ச்சத்து குறைவதால் சோர்வடைந்துவிடுவார்கள். உடலில் நீர்ச்சத்து இருந்தால்தான், கொடுக்கும் மருந்து வேலைசெய்யும். ORS (Oral Rehydration Solutions) கரைசல் கொடுப்பது, நீர்ச்சத்தை அதிகரிக்கும், காய்ச்சலையும் குறைக்கும். அதேபோல அரிசிக் கஞ்சி, இளநீர், மோர், எலுமிச்சைச்சாறு இவற்றையும் கொடுக்கலாம். காய்ச்சலின்போது இவற்றையெல்லாம் கொடுத்தால் சளி பிடித்துவிடும் என்று சிலர் நினைப்பார்கள். முதலில் உடலில் நீர்ச்சத்தை சமன்படுத்துவதுதான் முக்கியம். கொடுக்கும் பானம், குளிர்ச்சியாக இல்லாமல் இருந்தால் போதும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹை அலர்ட்!

காய்ச்சலின்போது குழந்தை ஆக்டிவ்வாக இருக்கிறது, வழக்க மான இடைவெளிகளில் அல்லது அதைவிட கொஞ்சம் அதிகமான இடைவெளிகளில் சிறுநீர் கழிக்கிறது(மஞ்சளாக இல்லாமல்) என்றால் பயப்பட வேண்டியதில்லை. மூன்றில் ஒரு குழந்தை காய்ச்சலின்போது சோர்வாகத்தான் இருக்கும் என்றாலும், குழந்தை சோர்வாகவே இருக்கிறது, காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, கொடுக்கும் உணவு வயிற்றில் தங்காமல் வெளியேறிக்கொண்டேயிருக்கிறது, வலிப்பு வருவதுபோல அண்ணாந்து மேலே பார்த்துக்கொண்டிருக்கிறது, 12 மணி நேரமாகக் காய்ச்சல் துளிகூட குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அங்கு குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றி, அதன் நீர்ச்சத்தை அதிகரிப்பார்கள்.

சாதாரண காய்ச்சலா, கொரோனா காய்ச்சலா?

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘தைமஸ்’ என்ற சுரப்பி, நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டிவிடும். அதனால்தான், கொரோனா வைரஸ் குழந்தைகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. கொரோனா வைரஸ் குழந்தைகளிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தினால், அதன் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். இந்தியா முழுவதுமே கொரோனா பாசிட்டிவ்வான பெண்களின் குழந்தைகளுக்குக்கூட பாதிப்பு ஏற்படவில்லை. அதற்கு தைமஸ்தான் முக்கிய காரணம்.

இரண்டு வயதுவரை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குழந்தைகளுக்கு வைரல் காய்ச்சல் ஏற்படுவது இயல்புதான். குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டால், கொரோனாவாக இருக்குமோ என்று பதற்றமடைய வேண்டியதில்லை. காரணம், இந்த ஊரடங்கில் குழந்தைகள் வீட்டிலேயே இருப்பதால், அவர்கள் நோய்த்தொற்று வாய்ப்பிலிருந்து விலகியே இருக்கிறார்கள். அதே நேரம், அப்பா, அம்மா, பாட்டி என வீட்டினரோ, குழந்தையுடன் பழகிய ஒருவரோ கொரோனா பாசிட்டிவ் ஆகியிருந்து அதைத் தொடர்ந்த நாள்களில் குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.

கொரோனா அம்மா... தாய்ப்பால் கொடுக்கலாமா?

பொதுவாக, குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள்வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். கோவை அரசு மருத்துவமனையில் பிரசவித்த 50 அம்மாக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். என்றாலும், தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டினர். முதல் நாள் மற்றும் ஐந்தாவது நாள் என இரண்டு முறை குழந்தைகளுக்குக் கொரோனா சோதனை செய்தோம். இரண்டு முறையும் நெகட்டிவ் என்றே ரிசல்ட் வந்தது. எனவே, கொரோனா பாசிட்டிவ் அம்மாக்கள் மாஸ்க், சானிட்டைசர் என உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி பலவீன மடையும் என்பதால், தாய்ப்பாலுக்கு பதில் பவுடர் பால் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாகக் குழந்தைகளுக்கு வேறு எந்த உடல்நலக் குறைவுகளும் இன்றி கொரோனா மட்டும் பாதித்தால், அது எளிதில் சரியாகிவிடுகிறது என்பதை மருத்துவர்கள் நாங்கள் பார்த்துவருகிறோம்.

மொத்தத்தில், குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால் கவனம் தேவை, பீதி தேவை யில்லை!”

ரத்தசோகை, வைட்டமின் ஏ, நோய் எதிர்ப்பு சக்தி!

``இந்தியாவில் 12 வயதுக்குட்பட்ட 66% குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின் குறைவால் ரத்தசோகை ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபட ஆரோக்கிய உணவுகளுடன் குழந்தைகளுக்குக் குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டியது அவசியம். குடற்புழுக்கள் ரத்தசோகை ஏற்படக் காரணம் என்பதால், குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழுநீக்க மருந்து கொடுக்க வேண்டும். இரண்டு வயதுவரை 200 மில்லி கிராம் மருந்தும், அதற்கு மேல் 400 மில்லி கிராமும் இரவு உறங்குவதற்கு முன் கொடுக்க வேண்டும். அதேபோல, குழந்தை களுக்கு வைட்டமின் ஏ மிக முக்கியம். சருமம் மற்றும் பார்வை பிரச்னைகளை வைட்டமின் ஏ தவிர்க்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மீன் எண்ணெய் மாத்திரைகள், முட்டை, பால், பப்பாளி, கேரட், காய்கறிகளில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது’’ என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் செந்தில்குமார்.