Published:Updated:

மூன்றாம் அலை: சென்னையில் மெள்ள அதிகரிக்கிறதா கொரோனா தொற்று?

சென்னையில் அதிகரிக்கும் கோவிட் தொற்று
சென்னையில் அதிகரிக்கும் கோவிட் தொற்று

Pandemic என்பது Endemic- ஆக வேண்டும் என்றால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் அல்லது தொற்று பாதித்து மீள வேண்டும். அப்போதுதான் ஒருவரிடமிருந்து எத்தனை பேருக்கு தொற்று பரவுகிறது (R0) என்ற விகிதம் குறையும்.

சென்னையில் மீண்டும் கோவிட்-19 பாதிப்பு மெள்ள அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இரண்டாம் அலையின் தீவிரம் முதலில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில்தான் அதிகரித்தது. சென்னையில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 4,000-க்கும் மேல் சென்றது. இதையடுத்து இரண்டாம் அலையின் தீவிரமும் சென்னையின் சுற்றுப்புறங்களில்தான் முதலில் குறையத் தொடங்கியது. இதையடுத்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குதான் முதலில் அதிக தளர்வுகள் கொடுக்கப்பட்டன.

A health worker prepares to administer a COVID-19 vaccine
A health worker prepares to administer a COVID-19 vaccine
AP Photo/Anupam Nath

போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் என அனைத்தும் அதிகரித்துவிட்ட நிலையில், சென்னையில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை மறுபடியும் சற்று அதிகரிக்கத் தொடங்கியது. மூன்றாம் அலை பற்றி உலக சுகாதார நிறுவனம், நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு (CDC), மத்திய, மாநில அரசுகள் என அனைத்தும் எச்சரிக்கை விடுத்தும் வரும் நிலையில், சென்னையில் பாதிப்பு அதிகரித்துள்ளது மூன்றாம் அலை தொடங்கிவிட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக தொற்றுநோய் மருத்துவர் வித்யா தேவராஜனிடம் பேசினோம்:

``சென்னை மட்டுமல்ல நாடு முழுவதும் 3-ம் அலை வருவதற்கான சாத்தியம் உள்ளது என்ற கணிப்பு உள்ளது. குறிப்பாக, ஆகஸ்ட் மாதம் அது தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு உலக நாடுகளில் 3-ம் அலை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இதற்கு காரணம் புதிய உருமாறிய வைரஸ் உருவாவதுதான். இந்தியாவில் இரண்டாம் அலையின்போது தீவிரமாக இருந்த டெல்டா வைரஸ், தற்போது சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி அங்கு அடுத்த அலை உருவாகக் காரணமாக அமைந்துள்ளது.

Pandemic என்பது Endemic- ஆக வேண்டும் என்றால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் அல்லது தொற்று பாதித்து மீள வேண்டும்.
தொற்றுநோய் மருத்துவர் வித்யா தேவராஜன்

தொற்று ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி உருவானவர்களுக்கு அதன் அளவு குறைவது, நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டுப்படாத புதிய வகை கொரோனா வைரஸ் தாக்குதல், ஏதாவது புதிய வைரஸ் அதிக அளவில் பரவும்போது தளர்வுகள் வழங்கப்படுவது, கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றாதது இவையெல்லாம் 3-ம் அலைக்கான காரணங்களாக அமையும்.

தடுப்பூசி எடுத்துக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் 3-ம் அலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் இரண்டாம் அலையைவிட மூன்றாம் அலை தீவிரமானதாக இருக்கும் என்றும் இரண்டு வேறு கணிப்புகள் உள்ளன. இரண்டில் எது சரி என்ற முடிவுக்கு வர முடியாத நிலை உள்ளது. ஆனால், இரண்டாம் அலையைப் போன்று மூன்றாம் அலை தீவிரமாக இருக்காது என்று பெரும்பாலான நிபுணர்களால் கருதப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு, தடுப்பூசிக்கு கட்டுப்படாத புதிய உருமாறிய வைரஸ் வேகமாகப் பரவினால் 3-ம் அலையின் பாதிப்பு மோசமாக இருக்கும்.

சென்னையில் முதலில் 3-ம் அலையா?

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தனி நபருக்கு தீவிர பாதிப்பு ஏற்படாது என்று மருத்துவ அறிவியல் தெரிவிக்கிறது. கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகள், அதிகமானோருக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் தீவிர பாதிப்பைத் தடுக்க முடியும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இரண்டாம் அலையின் தீவிரம் (Peak) சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் முதலில் ஏற்பட்டது. அதனால் தொற்று பாதிப்பு குறைந்ததும் முதலில் சென்னையில்தான்.

தற்போது சென்னையில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நிலையாகத் தொடர்ந்து அதிகரிக்கும்போதுதான் அது மூன்றாம் அலை என்று கருதப்படும். எண்ணிக்கை சற்று குறைவது, சற்று அதிகரிப்பது என்பதை இரண்டாம் அலையின் நீட்சி என்றுதான் கூற முடியும். ஒட்டுமொத்தமாகத் தமிழகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொற்று சற்று அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு போக்குவரத்தும் அதிகரித்துள்ளதால்தான். இதுபோன்ற காரணங்கள் மூன்றாம் அலைக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

தொற்றுநோய் மருத்துவர் வித்யா தேவராஜன்
தொற்றுநோய் மருத்துவர் வித்யா தேவராஜன்

இரண்டாம் அலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படவில்லை. அதனால் மூன்றாம் அலை என்பது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை மட்டுமே தாக்கும் என்றும் கூறிவிட முடியாது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மத்தியில் உயிரிழப்பு, தீவிர பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிப்பது போன்ற தீவிரத்தன்மை ஏற்படாது.

Pandemic என்பது Endemic- ஆக வேண்டும் என்றால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் அல்லது தொற்று பாதித்து மீள வேண்டும். அப்போதுதான் ஒருவரிடமிருந்து எத்தனை பேருக்கு தொற்று பரவுகிறது (R0) என்ற விகிதம் குறையும். எனவே, தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிகவும் அவசியம். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி தேவையா என்பது தொடர்பான ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லை. அதனால் அரசு சார்பிலும் மூன்றாவது டோஸ் செலுத்திக்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்படவில்லை" என்றார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்கள்
தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்கள்
கொரோனா மூன்றாம் அலை... ரஷ்யா, பிரிட்டன் நமக்கு உணர்த்துவது என்ன?

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் மூன்றாம் அலை குறித்து எச்சரித்துள்ளார். மேலும் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் தளர்வுகளை அலட்சியப்படுத்தக் கூடாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு