
பாப் உலகின் முக்கியமான பெயர் பியான்ஸ் (Beyonce). அமெரிக்காவைச் சேர்ந்த இந்த ஸ்டாருக்கு இப்போது வயது 37. 2017-ம் ஆண்டில் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததும், வொர்க்அவுட்டில் பெரிதாக ஆர்வம் காட்டாததால் எடை கூடியது பியான்ஸுக்கு. அதைச் சமாளிக்க, 22 நாள் பிளான்ட் டயட் ஒன்றைத் தொடங்கி அதை வீடியோவாகப் போட்டிருக்கிறார். இந்த டயட்டில் 22 நாள்களும் கார்போஹைட்ரேட், சர்க்கரை, கொழுப்பு, மீன், ஆல்கஹால் எதுவுமே கிடையாது. இந்த டயட் தொடங்கியபோது பியான்ஸின் எடை 79 கிலோ. இரண்டே வாரங்களில் 9 கிலோ குறைத்திருக்கிறார். இந்த டயட் தூக்கத்தை அதிகரிக்க உதவுவதால், மூட் அவுட் ஆகாமல் இருப்பதாகவும், நிறைய நேரம் வொர்க்அவுட் செய்ய உதவுவதாகவும் சொல்கிறார் பியான்ஸ். ஆனால், `இந்த டயட்டில் தேவையான புரதச்சத்து கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது’ என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாடல் மிராண்டா கேர் (Miranda Kerr). இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கே ரசிகர்கள் ஏராளம். ஒரு கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் கொண்ட மிராண்டா, அவ்வப்போது செலரி (Celery) என்ற ஜூஸ் பற்றிக் குறிப்பிடுவார். `அவரின் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் அதுவும் ஒரு காரணம்’ என ரசிகர்களும் கமென்ட் செய்திருந்தார்கள். அது என்ன செலரி? இது ஒரு வகையான தாவரம். இதைச் சாப்பிட்டால் எத்தனை கலோரி உடலில் சேருமோ அதைவிட அதிக கலோரிகளை எரிக்கும். இதில் அதிக நீர்ச்சத்தும் இருப்பதால், உடலை டீஹைட்ரேட் ஆகாமலும் காக்கும். அதனால் சருமமும் பொலிவடையும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மெத்தில்மெர்க்குரி (Methylmercury) என்பது மெர்க்குரியின் ஒரு வகை. இது மனிதர்களுக்கு ஆபத்தானது. நீர்வாழ் உயிரினங்களில் இந்த மெர்க்குரி காணப்படும். அவற்றை உண்பதன் மூலம் மனிதர்களுக்கு இந்த மெர்க்குரி வந்து சேர்கிறது. அதன் அளவு குறைவாக இருக்கும்வரை பிரச்னையில்லை. ‘நேச்சர்’ என்ற இதழில் வெளியான ஓர் ஆய்வு இந்த மெத்தில்மெர்க்குரி பற்றிப் பேசுகிறது. `அமெரிக்காவில் 82 சதவிகிதம் பேருக்கு மெத்தில்மெர்க்குரி வந்து சேர்ந்தது கடல்வாழ் உயிரினங்களைச் சாப்பிட்டுத்தான்’ என்கிறது இந்த ஆய்வு. இதற்கான காரணமாக இந்த ஆய்வு சொல்வது காலநிலை மாற்றத்தைத்தான். கடந்த 30 ஆண்டுகளாகச் சேகரித்த டேட்டாவை இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதன்படி இந்த 30 ஆண்டுகளில் கடல் வாழ் தாவரங்களில் இந்த மெர்க்குரி அளவு அதிகரிக்க, காலநிலை மாற்றம் காரணமாக இருந்திருக்கிறது. அதை உண்ணும் மீன், அந்த மீனை உண்ணும் பெரிய மீன், அதை உண்ணும் மனிதன் என இந்த மெத்தில்மெர்க்குரி எல்லோரையும் பாதித்திருக்கிறது. `உலகின் வெப்பநிலை ஒரு டிகிரி உயர்ந்தாலும் அது கடலில் ஏகப்பட்ட மாற்றங்களை உண்டாக்கும்’ என எச்சரிக்கிறது இந்த ஆய்வு.

நிலவுக்கும் பூமிக்கும் பல தொடர்புகள் உண்டு. முழுநிலவு நாளில் அலைகள் அதிகம் வருவது தொடங்கி, அன்று பல உயிரினங்கள் அன்று முட்டைகளை வெளியேற்றும் என்பதுவரை பல விஷயங்களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அப்படியென்றால் மனிதர்களின் உடல் மற்றும் மனநலத்திலும் நிலவுக்குப் பங்கிருக்கிறதா... இது பற்றிப் பல்வேறு மதங்களில் பல கதைகள் சொல்லப்பட்டாலும் எதற்கும் ஆதாரம் எதுவுமில்லை. இது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் மெடிக்கல் நியூஸ் டுடேவும் இது பற்றி ஓர் ஆய்வு நடத்தியது. பல்வேறு வயதைச் சேர்ந்த 33 பேரிடம் தூக்கம் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி முழு நிலவு நாளில் அவர்களின் தூக்கம் நன்றாக இருந்திருக்கிறது. `நிலவு நம் தூக்கத்தை பாதிக்கிறது என்பதை நிச்சயமாகச் சொல்லிவிட முடியாது. ஆனால், ஏதோ தொடர்பிருக்கிறது; அதை ஆராய வேண்டும்’ எனச் சொல்கிறது இந்த ஆய்வு.

‘ஓ காதல் கண்மணி’ படத்தில் பிரகாஷ்ராஜின் மனைவியை அல்சைமர் நோய் தாக்கியிருக்கும். அல்சைமர் நோய் பெரிய தொல்லை. வயதானவர்களை வாட்டி வதைக்கும் பிரச்னை. இது பற்றி தற்போது ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதன்படி, அல்சைமர் நோய்க்குக் காரணமான Beta Amyloid எனும் புரதம் ரத்தத்தில் இருந்தால், அதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே ரத்தப் பரிசோதனையில் தெரியவந்துவிடும் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. தொடக்கநிலையிலேயே அல்சைமர் நோய் கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சை அளிப்பது எளிது. அந்த வகையில் இந்த ஆய்வு முக்கியமானதாகிறது.

மலேசியாதான் டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 100 பேர் இந்த நோயால் உயிரிழக்கிறார்கள். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 3-ம் தேதிவரை மட்டும் 113 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருக்கிறார்கள். சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70. இந்த ஆண்டு 80,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது சென்ற ஆண்டின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகம்.