Published:Updated:

சான்றிதழில் ஒரு தேதி; குறுஞ்செய்தியில் ஒரு தேதி; தடுப்பூசி குழப்பம் ஏன்?

COVID-19 vaccine
COVID-19 vaccine ( AP Photo/Anupam Nath )

`டேட்டா தவறாக இருக்கிறது. அதை மாற்றுங்கள்' என்றால், முடியாது என்கிறார்கள். என்ன செய்வது?

`கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட தேதியை, அதற்கான சான்றிதழில் சரியாகக் குறிப்பிடுவதில்லை' என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்துகொண்டே இருக்கிறது. இதே பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒருவர் விகடன் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில், ``நான் மே-17, 2021 அன்று என்னுடைய முதல் டோஸ் கோவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டேன். அதற்கான சான்றிதழை 3 நாளில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று கூறினார்கள். ஆனால், அப்படி வரவில்லை. அதனால், தடுப்பூசி போட்ட மையத்திற்கு நேரில் சென்று கேட்டேன். ``டேட்டா அப்லோடு செய்பவருக்கு கொரோனா வந்துவிட்டது. அவர் விடுமுறையில் இருக்கிறார். அவர் வந்தபிறகுதான் பதிவேற்றம் செய்ய முடியும்'' என்றார்கள்.

Vaccine SMS
Vaccine SMS
கோவிட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு `வாக்சின் பாஸ்போர்ட்' அவசியம்தானா?

அவர்கள் சொன்னதுபோலவே, சில தினங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான குறுஞ்செய்தி வந்தது. அதில், `நீங்கள் ஜூன் 9-ம் தேதியன்று கோவிட் முதல் டோஸ் தடுப்பூசி போட்டிருக்கிறீர்கள். அதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்' என்றிருந்தது. பதிவிறக்கம் செய்தால், அதில் ஜூன் 8-ம் தேதி முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக இருந்தது. ஏன் இத்தனை குழப்பம் என்று மறுபடியும் நேரில் போய் கேட்டதற்கு, `தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் டேட்டாவை பதிவேற்றம் செய்பவர் அன்று வராததால், அவுட்சோர்ஸிங் செய்தோம். தடுப்பூசி போட்டுக்கொண்டதற்காக நாங்கள் கொடுத்த கார்டை காண்பித்து இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளுங்கள் என்றார்கள். `டேட்டா தவறாக இருக்கிறது. அதை மாற்றுங்கள்' என்றால், முடியாது என்கிறார்கள். என்ன செய்வது?'' என்று வருத்தத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

வாசகரின் பிரச்னைக்கான தீர்வை தெரிந்துகொள்ள, தமிழ்நாட்டின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் பேசினோம்.

``கடந்த ஒன்றரை வருடமாக மருத்துவப்பணியாளர்கள் தொடர்ந்து வேலைபார்த்துகொண்டிருக்கிரோம். கொரோனா தீரும் வரை இன்னமும் வேலைபார்க்கத் தயாராகவே இருக்கிறோம். இந்த இடத்தில் ஒரு தகவலைச் சொல்ல விரும்புகிறேன். இந்த கோவிட் நேரத்தில் தடுப்பூசி தொடர்பான பணிகளில் இருக்கிற பணியாளர்களின் எண்ணிக்கை போதுமான அளவு இல்லை. அதற்காக, தடுப்பூசி போடுகிற பணியிலும் பின்தங்கமுடியாது. அதனால், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பற்றிய தகவல்களைப் பதிவு செய்யும் டேட்டா என்ட்ரி பணியாளர்களை அவுட் சோர்ஸிங் செய்து வருகிறோம்.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்
பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்

தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் பணி மத்திய அரசின் கீழ் வருகிறது. அதனால், அதிலொரு தவறு நிகழ்ந்துவிட்டால், நாம் நினைத்த நேரத்தில் சான்றிதழில் மாற்றங்கள் செய்ய முடியாது என்பதும் அதில் சில சவால்கள் இருப்பதும் உண்மைதான். அதற்காக, சான்றிதழில் தவறாக இடம்பெற்ற தேதியை மாற்றவே முடியாது என்றும் சொல்ல முடியாது. `டேட்டா என்ட்ரி மைய'த்துக்கு இதுபோன்ற தகவல் பிழை இனி நிகழாமல் இருக்க வழிமுறைகள் கொடுத்திருக்கிறோம்.

சான்றிதழில் தவறு நிகழ்ந்திருந்தால் எங்களுக்குத் தெரிவியுங்கள். தடுப்பூசி தொடர்பான தகவல்களைத் திருத்துவதற்கான ஆப்ஷனை மத்திய அரசு தரும்போது, சரி செய்துவிடலாம்'' என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு