Published:Updated:

`சுகாதாரப் பணியாளர்கள் பாதுகாப்பு முக்கியம்!’ - நாகை அரசு ஊழியர்கள் சங்கம் சொல்லும் `மாஸ்க்’ கணக்கு

கொரோனா
கொரோனா

கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவப் பணியாளர்கள் தம் குடும்பத்தை மறந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தமிழ்நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாள்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாகை மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்புச் சாதனங்கள் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா
கொரோனா

நாகை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கை 12. இதில் பணிபுரியும் மருத்துவர்கள் 157, செவிலியர்கள் 300, ஆய்வக நுட்பனர்கள் 23, மருந்தாளுநர்கள் 42, செவிலிய உதவியாளர்கள் 42, தூய்மைப் பணியாளர்கள் 35, இதர ஊழியர்கள் 57, இவர்களுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் செய்யும் நிர்வாகத்துறை ஊழியர்கள் 47 ஆகும். மொத்தத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 103 ஆகும். பணியில் உள்ளோர் எண்ணிக்கை 703 ஆகும். காலிப் பணியிடங்கள் 300 ஆகும்.

இந்நிலையில் 24.3.2020 அன்று, நாகப்பட்டினம் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் தெரிவித்ததாக செய்தித் தாள்கள் வெளியிட்ட செய்திகளில் 2,000 முகக் கவசங்கள் (மாஸ்க்) வந்து பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அரசு ஊழியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் அன்பழகனிடம் பேசினோம். ``முகக் கவசங்களைப் பொறுத்தவரை தற்போது வழங்கப்படுபவை மூன்று முதல் ஆறு மணிநேரம் மட்டுமே அணிவது சரியாக இருக்கும் எனத் தகவல்கள் வருகின்றன. அதிலும் அவை முகத்தில் முறையாக அணியப்பட்டு, கழற்றி வைக்கப்படாமல் இருந்தால் மட்டுமே இந்நிலை. சாப்பிட, தண்ணீர், காபி உள்ளிட்ட பானங்களை அருந்த முகக் கவசங்களைக் கழற்றினாலும், அவை திரும்ப அணியக் கூடாது என உரிய விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், மருத்துவ‌ சேவைகளை வழங்கி வரும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று முகக் கவசங்கள் தேவை எனத் தெரியவருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவை செய்துவரும் ஊழியர்கள் எண்ணிக்கை மொத்தம் 703 ஆகும். இவர்களுக்கு ஒரு நாளைக்குத் தேவையான முகக் கவசங்கள் எண்ணிக்கை 2,100 ஆகும். ஆனால், இந்தக் குறைந்தபட்ச அளவுகூட வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. முகக் கவசம் மட்டுமன்றி கையுறைகள், காலுறைகள், உடைகள், கிருமிநாசினிகள் போன்றவற்றிலும் உரிய கவனம் செலுத்தப்படுவதாகத் தெரியவில்லை.

அன்பழகன்
அன்பழகன்

மேற்குறிப்பிட்ட குறைந்தபட்ச வசதி அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே தேவையாக உள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 58 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அவற்றிலும் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாற்றும் ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களுக்கும் முகக் கவசங்கள், கையுறைகள், காலுறைகள் போன்றவை தேவையுள்ளன.

இதேபோல், கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட ஊழியர்கள் களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுக்கும் குறைந்தபட்ச வசதியாக முகக் கவசங்கள் வழங்கப்பட வேண்டும். அதேபோல் காவல்துறை அதிகாரிகளில் நேரடி களப் பணிகளில் உள்ளவர்களுக்கும், உரிய வகையில் செய்திகள் சேகரிப்பு பணியில் உள்ளோருக்கும் குறைந்தபட்சம் முகக் கவசங்கள் வழங்கப்பட வேண்டும்.

கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவப் பணியாளர்கள் தம் குடும்பத்தை மறந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதிலும், குறிப்பாக இவர்கள் இல்லங்களில் உள்ளோருக்கு பணி முடித்து வருபவர்களால் நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளது. சில இடங்களில் இவர்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை காலி செய்து தர கோரும் நிலையும் உள்ளது என்பதையும் கவனத்தில் எடுத்து இவர்கள் இந்தப் பணியைத் தொய்வின்றி செய்திட தேவையான அளவிலான முகக் கவசங்கள், கையுறைகள், காலுறைகள் மற்றும் கிருமிநாசினிகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட மையம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு