மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 9

ஆரோக்கியம் ஒரு பிளேட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியம் ஒரு பிளேட்

. சர்க்கரை நோய் பற்றி 2000-3000 ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேத, சித்த மருத்துவ நூல்களில் மிகத் தெளிவான குறிப்புகள் இருக்கின்றன

அரிசி, கோதுமை, சிறுதானியங்கள் பற்றி நிறைய பேசினோம். அதையெல்லாம் படித்த பலரும், ``சார்... glycemic index, glycemic load பற்றியெல்லாம் சொன்னது கொஞ்சம் குழப்புகிறது. மொத்தமாக இதிலிருந்து என்னதான் சொல்ல வருகிறீர்கள்'' என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இது... ஒட்டுமொத்தமாக நம் உணவுமுறையும் வாழ்க்கைமுறையும் எப்படி இருக்க வேண்டும் என்று இந்த வாரம் பார்த்துவிடலாம்.

சர்க்கரை நோய் இன்று மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நோயாக வளர்ந்திருக்கிறது. அதுசார்ந்து நம் மக்கள் நிறைய தேடுகிறார்கள். அதை மையமாக வைத்து சில விஷயங்களைப் பேசுவோம். சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவுமுறை எது; பாதிப்பு இல்லாமல் இருக்க என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்; சர்க்கரை நோயை முழுமையாகக் குணப்படுத்தமுடியுமா என்ற கேள்விகளுக்கும் விடை தேடுவோம்.

உணவுகளைப் பற்றிப் பேசும்போது உணவுகளோடு இணைந்த சில முக்கிய நோய்களைப் பற்றிப் பேசவில்லை என்றால், இத்தொடரால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விடும். நம் வாழ்க்கைமுறையோடு இணைந்த நோய்களான சர்க்கரை நோய், உடல் பருமன், பெண்களை பாதிக்கும் பி.சி.ஓ.டி, Fatty liver முதலிய நோய்களுக்கெல்லாம் தீர்வு மருந்துகளில் கிடையாது. நம் சாப்பாட்டுத் தட்டில்தான் இருக்கிறது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம், சர்க்கரை நோய்தான். நான் சொல்லவரும் விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொண்டால் 80% - 90% சர்க்கரை நோயாளிகள் மருந்துகளில் இருந்து விடுபடக்கூட வாய்ப்புள்ளது.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 9

முதலில் சர்க்கரை நோய் என்றால் என்னவென்று தெரிந்துகொண்டால் அடுத்தடுத்து நாம் இதுகுறித்து விரிவாக ஆராய முடியும். சிலர், ``சர்க்கரை என்று ஒரு நோயே இல்லை, அது ஆங்கில மருந்துக் கம்பெனிகள் தங்கள் உற்பத்தியை விற்பதற்காக உருவாக்கிய பொய்'' என்று சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். இது மிகவும் அபாயகரமான பொய். அந்தப் பொய்யை நம்பி சிகிச்சையும் உணவுக்கட்டுப்பாடும் இல்லாமல் கால்களையும் கண்களையும் சிறுநீரகங்களையும் இழந்தவர்கள் பலர்.

அதேபோல, ``எங்கள் தாத்தா பாட்டி காலத்திலெல்லாம் சர்க்கரை நோய் இருந்ததில்லை. இருபது முப்பது வருடங்களாகத்தான் இருக்கிறது'' என்று சொல்பவர்களும் உண்டு. அதுவும் உண்மையில்லை. சர்க்கரை நோய் பற்றி 2000-3000 ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேத, சித்த மருத்துவ நூல்களில் மிகத் தெளிவான குறிப்புகள் இருக்கின்றன. குறிப்பாக அகத்தியர் சர்க்கரை நோய் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். தமிழில் இதை நீரிழிவு நோய் அல்லது மதுமேகம் என்று சொல்வார்கள். மது என்றால் தேன்; மேகம் என்றால் சிறுநீர். தேன் போன்ற இனிப்பான சிறுநீர் வெளியேறும் நோய்தான் மதுமேகம். ஆயுர்வேதத்திலும் இதற்கு மதுமேகம் என்றுதான் பெயர். `சரஹ சம்ஹிதை', `சுஸ்ருத சம்ஹிதை' போன்ற ஆயுர்வேத நூல்களில் சர்க்கரை நோயின் வகைகள் குறித்து விரிவாகப் பிரித்து எழுதப்பட்டிருக்கிறது. `சர்க்கரை நோய் என்ற ஒன்றே இல்லை, அலோபதி மருந்துக் கம்பெனிகள்தான் பரப்புகிறார்கள்' என்பவர்கள், இந்த வரலாற்றையெல்லாம் அறியாதவர்கள்.

அந்தக்காலத்திலேயே சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் இருக்கின்றன என்றெல்லாம் தெள்ளத் தெளிவாக விவரித்துள்ளார்கள். ஒன்று `சஹஜ பிரேமஹா.' `இந்தவகை நோயாளிகள் ஒல்லியாகவும் அதீத தாகத்துடனும் இருப்பார்கள். நாளுக்கு நாள் உடல் மெலிந்துகொண்டே போவார்கள். இந்த நிலையில் இருப்பவர்கள், நோய் அறியப்பட்டு ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்குள் இறந்துவிடுவார்கள்' என்று ஆயுர்வேதத்தில் தெளிவாகக் குறிப்பிருக்கிறது. இதை நாம் இன்றைய காலகட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் `டைப் 1 டயாபடீஸ்' என்று சொல்லக்கூடிய, இன்சுலின் (Insulin) தீவிரமாகத் தேவைப்படுகிற சர்க்கரை நோய். இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் டைப்-1 சர்க்கரை நோயாளிகள் இயல்பான வாழ்வை வாழ்கிறார்கள். அந்தக்காலத்தில் இதற்கு சிகிச்சையே இல்லை என்பது ஆயுர்வேதக் குறிப்புகளில் மிகவும் தெளிவாக இருக்கிறது.

அதேபோல சரியான உணவுமுறை, வாழ்க்கைமுறை இல்லாத காரணங்களால் ஏற்படும் உடல்பருமன் சர்க்கரை நோய் குறித்தும் அந்தக்காலத்தில் கண்டறிந்து எழுதியிருக்கிறார்கள். அந்த நிலைக்கு `அபத்ய நிமிட்டஜா' என்று பெயர். இது டைப்-2 சர்க்கரை நோயுடன் ஒத்துப்போகிறது. `இந்தவகை சர்க்கரை நோயாளிகள், உணவுகளில் மாற்றம் கொண்டுவரவேண்டும்; பால் உணவுகள் மற்றும் இனிப்புகளைத் தவிர்த்து, சைவர்கள் தானியங்களைக் கஞ்சி வடிவிலும், அசைவர்கள் அசைவ உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும்; குதிரையேற்றம் போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும்' என்று ஆயுர்வேத நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அகத்தியர்கூட `ஒழுங்கற்ற உணவுமுறையும் வாழ்க்கைமுறையுமே சர்க்கரை நோய்க்குக் காரணம்' என்று பாடல்கள் வழி குறிப்பு எழுதியிருக்கிறார். சர்க்கரை நோய் என்பது இல்லாத ஒரு விஷயம் என்று சொல்வது எவ்வளவு அபத்தமானது என்று இதன்மூலம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

சர்க்கரை என்றால், டீ, காபிக்கு நாம் பயன்படுத்தும் சர்க்கரையல்ல. மருத்துவ ரீதியாக, குளுக்கோஸ் (glucose) என்னும் சர்க்கரையின் அளவு உடலில் அதிகரிப்பதையே சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்கிறோம். இந்த நோயின் தன்மைகளில் அதிகமான சிறுநீர் வெளியேற்றமும் ஒன்று என்பதால்தான் நீரிழிவு நோய் என்று சொல்கிறோம். நாம் இயல்பாக உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் 80% முதல் 90% `கார்போஹைட்ரேட்' எனும் மாவுச்சத்தைக் கொண்டிருப்பவை. அவற்றை நாம் சாப்பிட்டவுடன் செரிமானமாகி குளுக்கோஸ் எனும் அடிப்படைச் சர்க்கரையாக மாறுகிறது. நாம் டீ, காபிக்குப் பயன்படுத்தும் சர்க்கரை மட்டுமல்ல... நாம் சாப்பிடும் அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், பழங்கள், பருப்பு வகைகள் என்று எல்லாமே வயிற்றில் செரிமானத்துக்குப் பிறகு குளுக்கோஸ் எனும் அடிப்படைச் சர்க்கரையாகவே மாறுகிறது. இந்த குளுக்கோஸ்தான் ரத்தத்தில் கலந்து உடலெங்கும் உள்ள கோடானுகோடி செல்களுக்கும் சென்று எரிசக்தியைக் கொடுக்கிறது. இதுதான் நாம் முதலில் அறியவேண்டிய அடிப்படை விஷயம். நம் உடலில் இன்சுலின் என்ற ஹார்மோன் சீராக வேலை செய்தால் மட்டுமே இந்த குளுக்கோஸ் எல்லா செல்களுக்கும் சரியான முறையில் சென்று சேர்ந்து எரிசக்தியைக் கொடுக்கும்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 9

நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் மாவுச்சத்து எனப்படும் கார்போஹைட்ரேட் ஜீரணமாகி குளுக்கோஸ் என்னும் சர்க்கரையாக ரத்தத்தில் மாறுவதாகப் பார்த்தோம் அல்லவா? அந்த குளுக்கோஸ் செல்களுக்குப் போய்ச் சேராமல் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை எனப்படும் இன்சுலின் ஹார்மோன் வேலை செய்ய இயலாத நிலை ஏற்பட்டு குளுக்கோஸின் அளவு ரத்தத்தில் அதிகமாகலாம். அல்லது இன்சுலின் ஹார்மோன் சரியான அளவில் சுரக்காமல் போய் அதன் பற்றாக்குறையால் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கலாம். இந்த நிலையைத்தான் சர்க்கரை நோய் என்று கூறுகிறோம்.

சர்க்கரை நோய் எதனால் வருகிறது என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்வார்கள். சிலர் பரம்பரையாக வரும் நோய் என்பார்கள், சிலர் தினமும் இரண்டு ஸ்பூன் வெள்ளைச் சர்க்கரை சாப்பிட்டதால் வந்தது என்பார்கள், இவைதவிர `நடைப்பயிற்சியை விட்டுவிட்டேன்', `அதிகமாக டென்ஷன் ஆகிறேன்', `அரிசி சாதம் அதிகம் சாப்பிடுகிறேன்' என்றெல்லாம்கூட காரணங்கள் சொல்வார்கள். ஆனால் உண்மையான காரணங்கள் வேறு.

எந்த நோயாக இருந்தாலும் அடிப்படைக் காரணமாக மூன்று விஷயங்களைச் சொல்வோம். Agent, Host, Environment. இவற்றில் Agent என்பது நோய்க்கான காரணி. Host என்றால் நோய் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை. Environment என்பது சமூகச்சூழல். சரி, சர்க்கரை நோயின் அடிப்படை என்ன? நம் உடலில் இருக்கக்கூடிய மாவுச்சத்தை சரியாக பிராசஸ் செய்ய இயலாத நிலை. மாவுச்சத்துதான் குளுக்கோஸாக மாறி நமக்கு எரிசக்தி கொடுக்கிறது.

``ஊரே மாவுச்சத்தைத்தானே சாப்பிடுகிறது, எல்லோருக்குமா சர்க்கரை நோய் வருகிறது, எங்கள் தாத்தா, பாட்டியெல்லாம் அந்தக் காலத்திலிருந்து சாதம், இட்லி தோசைதானே சாப்பிட்டார்கள்'' என்று சிலர் கேட்கலாம். நாம் ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அவைதான் host-factors. அதாவது நீங்கள் மாவுச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதால் மட்டுமே சர்க்கரை நோய் வராது. மாவுச்சத்தை பிராசஸ் செய்யக்கூடிய தன்மை ஒவ்வொரு நபருக்கும் மாறுபடலாம். அது மரபணு ரீதியாகவும் உங்களின் வாழ்க்கைமுறை மூலமாகவும் நிர்ணயிக்கப்படும். பரம்பரை பரம்பரையாக சர்க்கரை நோய் வருவது மரபணு ரீதியான காரணங்களால்தான். 30 வயதில் இருக்கும் ஒல்லியான நபர்களுக்குக்கூட சர்க்கரை நோய் வருவதைப் பார்க்கலாம். ராணுவத்தில் இருப்பவர்கள், மாரத்தான் ஓட்டக்காரர்கள்கூட சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு என்னிடம் சிகிச்சை பெற வருவார்கள். மிக வலிமையான மரபணுக் குறைபாடுகளே இதற்கான காரணம். அவர்களுக்கு மரபணு ரீதியாகவோ இன்சுலின் சுரப்பிலோ அல்லது வேலை செய்யும் தன்மையிலோ சில குளறுபடிகள் இருக்கும். அதனால் தங்களின் உடலை எவ்வளவு ஆரோக்கியமாகப் பாதுகாத்து நல்ல வாழ்க்கைமுறையைப் பின்பற்றினாலும் குறிப்பிட்ட வயது வந்தவுடன் அவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவார்கள்.

சர்க்கரை நோய்க்கு வாழ்க்கைமுறையும் முக்கியமான காரணம் என்று பார்த்தோம். சரியான உணவு முறை இல்லாமை, உடற்பயிற்சி செய்யாமை, உடல் பருமன், மாவுச்சத்து நிரம்பிய குப்பை உணவுகளைச் சாப்பிடுவது... இவை அனைத்தும் உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்புத் தன்மை மற்றும் லெப்டின் (leptin) எதிர்ப்புத் தன்மை ஆகிய இரண்டுவகை ஹார்மோன் எதிர்ப்புத் தன்மைகளைப் பல மடங்கு அதிகரிக்கின்றன. அதோடு கல்லீரல் மற்றும் கணையப் பகுதிகளில் கொழுப்பையும் சேர்க்கின்றன (Fatty liver and Fatty Pancreas). நம் தசைகளில்கூட இவை கொழுப்பைச் சேர்க்கின்றன. இவை அனைத்தும் சேர்த்து நம் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையை அதிகமாக்கி வயது ஆக ஆக இன்சுலின் செயல் திறன் படிப்படியாகக் குறைந்து சர்க்கரை நோய் வருகிறது. இதுபோன்ற வாழ்க்கை முறையால் வரும் சர்க்கரை நோயெல்லாம் முன்பு 50-60 வயதுள்ளவர்களையே பாதிக்கும். ஆனால் இப்போது 30-35 வயதிலெல்லாம் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. 10-12 வயதிலிருக்கும் உடல் பருமனான பிள்ளைகளுக்கு pre-diabetes எனப்படும் சர்க்கரை நோயின் முந்தைய நிலை வருகிறது. இந்த வேகத்தைப் பார்த்தால், கருவிலேயே சர்க்கரை நோய் பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 9

மூன்றாவதாக Environmental Factors என்று சொல்லக்கூடிய நம் சமூகச் சூழ்நிலை. மரபணுக் குறைபாடுகள் மற்றும் நம் உணவுமுறைக் காரணிகளைத் தாண்டி நம்முடைய வாழ்க்கைமுறை அதிகம் மாற்றம் அடைந்துள்ளது. அரிசியே சாப்பிட்டாலும், பாலீஷ் செய்யப்பட்ட அரிசியைத்தான் அதிகம் சாப்பிடுகிறோம். பண்டிகைகளுக்குச் சாப்பிட்டுக்கொண்டிருந்த இட்லி, தோசை இன்று நம் தினசரி உணவாகி விட்டன. தெருவுக்குத் தெரு பேக்கரிகளும் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளும் வந்துவிட்டன. குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய இனிப்புப் பலகாரங்கள், இன்று ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்துவிடுகின்றன. ஏழை, பணக்காரர், நகரம், கிராமம் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் வாழ்க்கைமுறையில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்துவிட்டன. அதுவும் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முக்கியான காரணமாக இருக்கிறது.

சர்க்கரை நோய் பாதித்தவர்கள் மட்டுமல்ல... எல்லோருமே அந்த நோயின் அடிப்படை அறிவியலைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு விரிவாக இதை எழுதினேன். `இந்த உணவைச் சாப்பிடுங்கள்; இந்த மூலிகையை ரசம் வைத்துக் குடியுங்கள்; வெந்தயம், கருஞ்சீரகத்தைத் தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடுங்கள்; பாகற்காய் ஜுஸைக் குடியுங்கள்' என்றெல்லாம் ஆளாளுக்கு அறிவுரைகளை அள்ளி வழங்குவார்கள். இட்லிக்கு பதில் சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று முன்னர் சொன்னதுபோய் இப்போது சிறுதானியம் சாப்பிடுங்கள் என்று சொல்கிறார்கள். என்ன செய்தாலும் சரி, சர்க்கரை நோய் கட்டுக்குள் வருவதில்லை. இதுதான் நிதர்சனமான உண்மை.

அடிப்படை அறிவியலைப் புரிந்துகொண்டால் மிக எளிதாக நம்மூரிலேயே கிடைக்கக்கூடிய உணவுகள் மூலம் சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம், அல்லது, கட்டுக்குள் கொண்டு வரலாம். அவரவரின் தீவிரத் தன்மையைப் பொறுத்து மருந்துகளிலிருந்து முழுவதுமாக வெளிவரலாம்; அல்லது, அவற்றின் பயன்பாட்டைக் குறைக்கலாம். இவை அனைத்தையும் உணவுமுறை மூலமாகவே எப்படிச் செய்யலாம் என்பதை அடுத்த வாரத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

- பரிமாறவோம்

******

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் விகடன் வாசகர்கள் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்கள். அவர்களுக்கு விளக்கமளிப்பதற்கே இந்தத் தகவல்.

‘`மாவுச்சத்துதான் சர்க்கரை நோயைத் தீர்மானிக்கிறது என்று தங்கள் தொடரில் வாசித்தேன். கிழங்கு வகைகளில் மாவுச்சத்து அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். பழங்குடி மக்கள் அவற்றைத்தான் அதிகம் சாப்பிடுகிறார்கள். அவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதில்லையே?’’ - நாவுக்கரசன்

மாவுச்சத்துதான் சர்க்கரை நோயைத் தீர்மானிக்கிறது என்பது தவறு. மாவுச்சத்து எடுத்துக்கொள்வதால் சர்க்கரை நோய் வருவதில்லை. ஆனால் சர்க்கரை நோய் இருப்பவர்கள் எவ்வளவு மாவுச்சத்தை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதே, அவர்களின் உடலில் சர்க்கரை எந்த அளவுக்கு அதிகரிக்கிறது என்பதைத் தீர்மானிக்கிறது. அரிசியோ சப்பாத்தியோ சாப்பிட்டால் சர்க்கரை நோய் வந்துவிடும் என்பது கிடையாது. பழங்குடி மக்களைப் பொறுத்தவரையில் மிக ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கொண்டிருப்பவர்கள். நன்கு உழைத்து அதற்கேற்ற நல்ல உணவுகளை எடுத்துக்கொள்வதால் அவர்கள் எவ்வளவு மாவுச்சத்தை எடுத்துக்கொண்டாலும் சர்க்கரை நோய் வருவதில்லை. ஆனால் நம் வாழ்க்கைமுறை முற்றிலும் வேறானது. எனவே சர்க்கரை நோய் இருப்பவர்கள் குறைவான மாவுச்சத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும்.

``சாதம் சமைக்கும் முன் அரிசியை ஊற வைப்பது சரியா?" - ஜெயா

அரிசியை சமைக்கும் முன் ஊறவைப்பது நல்லதுதான். எல்லா விதமான தானியங்களிலும் அதன் சத்துகளை ஜீரணிக்க விடாமல் செய்ய சில ரசாயனங்கள் இருக்கும். அப்படி அரிசியில் இருக்கக்கூடிய ரசாயனம் பைட்டிக் ஆசிட் (Phytic acid). இது அரிசியில் இருக்கக்கூடிய நல்ல விஷயங்களை நம் உடல் ஜீரணிக்க முடியாமல் செய்துவிடும். ஊறவைக்கும்போது இதுபோன்ற ரசாயனங்கள் தண்ணீரோடு கலந்து சென்றுவிடும். எனவே, ஊறவைப்பது நல்ல விஷயம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 9

டாக்டரிடம் கேளுங்கள்...

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். மருத்துவர் தரும் பதில்கள் vikatan.com-ல் வெளிவரும். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.