Published:Updated:

இன்னா நாற்பது இனியவை நாற்பது

இன்னா நாற்பது இனியவை நாற்பது
பிரீமியம் ஸ்டோரி
News
இன்னா நாற்பது இனியவை நாற்பது

நலம் - 24

சைக்கிளின் பின்சக்கரத்தைத் தூக்கி, அதன் துருப்பிடித்த ஸ்டாண்ட் போடும் சத்தத்தில் அம்மா எழுந்து, அடுப்பங்கரைக்குப் போய், ஒரு காலை மடக்கி இன்னொரு காலை குத்தவைத்து உட்கார்ந்திருப்பாள். ஏற்கெனவே அவள் படுக்கப்போகும் முன்னர் எடுத்து வைத்திருந்த சாப்பாட்டுப் பாத்திரங்கள், அவள் முன் காத்திருக்கும். அரைத்தூக்கத்தில் அவளுக்கு வரும் கொட்டாவி சத்தத்துக்கு, ‘நீ போய் தூங்க வேண்டியதுதானே’ என்ற எசப்பாட்டு அப்பாவிடமிருந்து வரும். இரவு 11 மணிக்கு, அடுப்பங்கரைத் தரையில் சப்பணம்கூட்டி அப்பா சாப்பிட அமர்வார். வரும்போது கணேஷ் லாலா கடையில் நாலணாவுக்கு அவர் வாங்கிவந்த பக்கோடாப் பொட்டலமோ, காரச்சேவுப் பொட்டலமோ கையில் இருக்கும். அதுதான் மோர் சோற்றுக்குத் தொடுகறி. மதியம் உலைவைத்த சோற்றின் மீந்த போர்ஷன்தான், தண்ணீர் விட்டு இரவில் அவருக்காகக் காத்திருக்கும். தண்ணீரை வடித்துவிட்டு முழுத்தட்டும் நிரப்பி வைக்கப்படும் சோறும், சற்றே புளித்த தயிரும், பக்கோடாவும், ஊறுகாயும்தான் இரவுச் சாப்பாடு.

‘என்னது பக்கோடாவா, என்ன கலோரி தெரியுமா, ராத்திரியில தட்டு நிறையச் சோறா?’ என எங்கள் அம்மா கத்தியதாய் எனக்கு நினைவே இல்லை. அந்தச் சோறும், பக்கோடாவும் சுகரையோ, பிபி-யையோ அன்றைக்கு அப்பாவுக்குத் தரவில்லைதான் (ஆனால் நல்ல தொப்பையைத் தரத்தான் செய்திருந்தது). தொப்பையோடிருந்த அவர்களுக்கு எல்லாம் அப்போது ஏன் நோய் வரவில்லை என்பதற்கான பதிலைப் பெற, அப்பா தினமும் 14 கி.மீ ஓட்டி வரும் அந்த ஓட்டை உடைசலான அட்லஸ் சைக்கிள் பயணத்தில் நாம் கொஞ்ச தூரம் சேர்ந்து பயணிக்க வேண்டும்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

முதலில், அப்பாவின் அந்த தினசரி சைக்கிள் பயணத்தில், வழியில் அவர் சுவாசித்த காற்றில் மாசு கொஞ்சமாய்த்தான் கலந்திருந்தது. அப்பா வேலைபார்த்த, அந்த மர நாற்காலி போட்ட ஆபீஸில் நானறிந்து எப்போதும் பரபரப்பே இருந்ததில்லை. இப்படியான அன்றைய பல அப்பாக்களின் தினசரிப் பயணத்தில் கணையமும் வாழ்வும் கடைசி வரை பழுதாகவேயில்லை.

ஆனால் இப்போது அப்படியில்லை. கடந்த மாதம் எங்கள் ஊரில் ஒரு மருத்துவ முகாம் நடத்தினோம். வந்த 160 பேரில், 45 பேருக்கு ரத்த சர்க்கரை ஏகத்துக்கும் இருந்தது. உடனே போனைப் போட்டு, ‘ஏல! நம்ம ஊருலேருந்து கேம்ப்புக்கு வந்த நிறைய பேருக்கு சர்க்கரை ரொம்ப சாஸ்தியா இருக்கு தெரியுமால?’ எனத் தொலைபேசியில் ஊர்க்கார ராஜாராமிடம் கேட்டேன். பதிலுக்கு அவன் சற்றும் யோசிக்காமல், ‘ஏமுண்ணே இருக்காது? இப்போவும் ஊருல தினம் எல்லா டீக்கடையையும் சேர்த்தா, எட்டு மணிக்கு முன்னாலே காலையில இங்கே ஆயிரக்கணக்குல வடை ஓடுதுண்ணே! ஒரு பய வாக்கிங் போறது கிடையாது. வெள்ளாமையும் போச்சா... அத்தினி பேரும் காலையில டீக்கடை பெஞ்சுல உக்காந்து டீயும் வடையும் பேப்பருமா இருக்கானுவ’ என்றான்.

இரவு ஆறு மணிக்கு மேல், இட்லியோ, சோறோ, இடியாப்பமோ, ஆப்பிளோ, அதிரசமோ எதுவும் கண்ணில் காட்டக்கூடாது என்கிறது இந்த உணவு அறிவியல். ஏற்கெனவே இரவுச் சாப்பாட்டுக்கு முன்னர், கலர் கலராய் மாத்திரை சாப்பிடுவோர், தடாலடியாக இந்த உணவுப்பழக்கத்துக்கு வந்துவிட வேண்டாம்.

நகரங்கள் மட்டுமல்ல, கிராமத்தின் புள்ளி விவரங்களும் சர்க்கரை நோய் தலைவிரித்து ஆடுவதை தினமும் ஏதாவது ஒரு வகையில் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. Global Health Challenges 2018 என்ற அறிக்கை, ‘உலகத்தில் இந்தியா மட்டுமல்ல, இந்தியாவிலும் தமிழகம்தான் சர்க்கரையில் முதலிடம்’ எனத் தன் புள்ளிவிவர அறிக்கையை உலக அரங்கில் அழுத்திச் சொல்லிவிட்டது. எடை உயர்வும், தொப்பையும், கட்டுப்பாடற்ற உணவும்தான் இந்த முதலிடத்துக்கு முக்கிய காரணம் என்பது நாமெல்லாம் அறிந்தது. அறியாத ஒன்று, உணவுக்கட்டுப்பாடு என்பது உணவில் உள்ள கட்டுப்பாடு மட்டுமல்ல; அதைச் சாப்பிடும் நேரத்திலும் உள்ள கட்டுப்பாடு என்பது சமீபமாக உணவு அறிவியல் வலியுறுத்தும் மிக முக்கிய விஷயம்.

போன தலைமுறைக்கு அவர்கள் தம் நாற்பது வயதில் பக்கோடாவும் பழைய சோறும் இரவில் சாப்பிட்டது சர்க்கரை நோயைத் தராமல் இருந்திருக்கலாம். இந்தத் தலைமுறைக்கு இரவு 11 மணிக்கு பீட்ஸாவோ, பர்கரோ, பதமாய் வெந்த இட்லியோ சாப்பிட்டால், அவை சர்க்கரை நோயைச் சீக்கிரம் தரும் என்கிறது உணவு அறிவியல். ‘சிர்கார்டியன் ரிதம்’ எனும் மூளையில் ஓடும் கடிகாரம் பல விஷயங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் மிக முக்கிய உடல் இயங்கியல். இரண்டு வருடங்களுக்கு முன்னரே, இந்த சிர்கார்டிய ரிதத்துக்கும் நம் ஆரோக்கி யத்துக்கும் உள்ள தொடர்பைத் தெளிவாகச் சொன்ன ஜப்பானியப் பேராசிரி யர்களுக்கு நோபல் பரிசும் கொடுத்தாயிற்று (அதைப் பல ஆயிரம் வருடத்துக்கும் முன்னாடி சொன்ன வர்கள் நம்ம ஊர் சித்தர்கள்). சிர்கார்டியன் ரிதத்தைக் கட்டுக்கோப்பாய் இயக்கும் Suprachiasmatic nuclei(SCN), நம் கண்ணின் ரெட்டினா மூலமாகவும் இன்ன பிற உடலின் அமைப்புகளின் மூலமாகவும் பெறும் சிக்னலை வைத்து, எதை எப்போது செய்ய வேண்டும் என ஒரு நீண்ட மரபைக் கொண்டுள்ளது.

சிர்கார்டியன் ரிதம் சாப்பாட்டு விஷயத்திலும் நிறைய கணக்குகளை வைத்திருக்கிறது. இரவு 8 மணிக்கு மேல் சாப்பிடும் பழக்கமுடையோருக்கு உடல் எடை அதிகரிப்பதும், சர்க்கரை நோய் கட்டுப்படாது இருக்கும் என்பதும் இன்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. இன்றைக்கு நகர்ப்புற 40, 50 வயதுக்காரர்கள் பலரும் எங்காவது பொதுவெளியில் சந்தித்தால் கேட்கும் இரண்டு கேள்வி, ‘நீங்க எந்த டயட் ஃபாலோ பண்றீங்க? வேகனா, பேலியோவா, இன்டர்மிட்டென்டா?’ என்பதுதான். வேகன், பேலியோ நமக்குத் தெரியும். அது என்ன Intermittent Fasting?

ஹார்வர்டு வரை இப்போது பேசப்படும் இந்த IF, இந்தியாவிலும் ஏகத்துக்கும் பிரபலமாகி வரும் ஓர் உணவுத்திட்டம். காலை முதல் மாலை வரை மட்டும் சாப்பிடுங்க. அப்புறமா இரவில் சாப்பிடாதீங்க என்பதுதான் இந்த இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கின் ஃபார்முலா சுருக்கம். குறிப்பாக, இரவு ஆறு மணிக்கு மேல், இட்லியோ, சோறோ, இடியாப்பமோ, ஆப்பிளோ, அதிரசமோ எதுவும் கண்ணில் காட்டக்கூடாது என்கிறது இந்த உணவு அறிவியல். ஏற்கெனவே இரவுச் சாப்பாட்டுக்கு முன்னர், கலர் கலராய் மாத்திரை சாப்பிடுவோர், தடாலடியாக இந்த உணவுப்பழக்கத்துக்கு வந்துவிட வேண்டாம். உங்கள் குடும்ப மருத்துவர் மனம் நோகாமல் டைம் பார்த்து இந்த ஃபாஸ்டிங் முறையைக் கேட்டு மாத்திரைகளை அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். அந்த டாக்டர் அங்கிளிடம் கேட்கும்போது, ‘கூகுள்ல பார்த்தேன், அதான் கேட்டேன்’ எனக் கேட்க வேண்டாம். விளைவுக்கு நானோ விகடனோ பொறுப்பில்லை.

‘சார்! நல்லவேளை இன்னும் அந்த மாத்திரைக் குவியலுக்கு நாங்க செல்லலை. அப்பா இருபது ரூபா பத்திரத்தில் உயில் எதுவும் எழுதி வைக்கலை. ஆனா, இருபது வயசுக்கு மேலே குடும்பச் சொத்தா பிபி, சுகர், குண்டு உடம்பு எல்லாம் கொடுத்திருக்கார்’ என்போர், இந்த உணவுமுறையை நிச்சயம் பின்பற்றலாம். எப்படி ஆரம்பிப்பது? 8 மணிக்குக் காலை உணவாக, முளைக்கட்டிய பாசிப்பயறு அல்லது சுண்டல் (இஞ்சி துருவிப்போட்டு), ஒரு கப் காய்கறி சாலட், 10 - 15 பாதாம்பருப்பு, கூடவே முருங்கைக் கீரை சூப் சாப்பிடுங்கள். அதற்கும் மேலே தேவைப்பட்டால் கறுப்பரிசி இட்லியோ, பழுப்பரிசி பொங்கலோ கொஞ்சமாய்ச் சாப்பிட்டுவிடுங்கள். அலுவல கத்தில் 11.30 மணிக்கு கிரீன் டீயோ, மோரோ, இளநீரோ சாப்பிட்டுக்கொள்ளுங்கள். மதியம் சாப்பாடு மூணு போர்ஷன். முதல் போர்ஷன், காய்கறி சாலட்டுகள் (வேகவைக்காதது முதலில்). பின்னர் வேகவைத்த காய்கறிகளுடன் மிளகுத்தூளும் கொஞ்சமாய் உப்புத்தூளும் தூவிய சாலட். பிறகு, நம் ரெகுலர் கூட்டு, காய், மீன், வேகவைத்த புலால், கொஞ்சூண்டு சோறு. சாம்பாரைப் பொரியலுக்கு ஊற்றிக்கொண்டு, ரசத்தை இடையிலும், மோரைக் கடைசியிலும் குடித்துவிட்டு எழுந்துகொள்ள வேண்டும். மாலையில் 5 மணி முதல் அதிகபட்சம் 6.30 மணிக்குள் இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும். பழங்களுடன் தொடங்குங்கள். அதிக மாவுப்பண்டம் இல்லாமல், சிறுதானிய காய்கறி கிச்சடி, கம்பு சோள தோசை, கோதுமை ரவா காய்கறி பாத் எனச் சாப்பிட்டுவிட வேண்டும். 6.30 மணிக்குப் பிறகு, அடுப்பங்கரைக்கு மனைவியிடம் காதல் குசும்பு செய்ய மட்டும் செல்லலாம். ஆண்களுக்கு மட்டுமல்ல, தொப்பையுள்ள பெண்களுக்கும் இந்த டயட் பொருந்தும்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

பழக்கதோஷத்தில் இரவு 9 மணிக்கு நம்மில் பலருக்கும் பசிக்கும். சிலருக்குக் கிறுக்குப்பிடித்ததுபோல் கோபம் கொப்பளிக்கும். தலைவலி வரலாம். ஆனால் எல்லாம் இரண்டு, மூன்று தினங்களுக்கு மட்டுமே.

எல்லாவற்றிற்கும் மேலாக, Impaired glucose tolerance எனும் pre diabetes நிலையில் உள்ள பல இளைஞர்கள், யுவதிகளுக்கு ரத்த சர்க்கரை மிகச் சிறந்த கட்டுப்பாட்டில் வருவதற்கு, மேலே சொன்ன உணவுத்திட்டத்துடன் கூடிய இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் ஏகத்துக்கும் உதவுகிறது.

இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங், பெயர்தான் புதுசு. நமக்கு இது ரொம்பப் பழக்கத்தில் இருந்த பழசுதான். சமணர்களின் மிக முக்கியமான உணவுப்பழக்கம் இது. மின்சாரத்தைக் கண்டுபிடித்ததற்குப் பிறகு கொஞ்சமும், இப்போது ஸ்விகி, ஊபரெல்லாம், சோற்றைக் கொண்டு வந்து நடு ராத்திரியில்கூட ஆப்புவைக்க ஆரம்பித்த பின்னரும்தான், இந்த நடு ராத்திரி உணவுத் திருவிழாக்கள் ஏகத்துக்கும் நடக்கின்றன. அதுவும் விருந்து என்றால் இரவுதான் என ஆகிப் போனதுதான், தமிழகத்தில் தொப்பை தொங்க ஆரம்பித்ததன் மிக முக்கிய காரணம். ‘நீங்க வேலையெல்லாம் முடிச்சிட்டு முந்தின நாள் இரவு வந்து வாழ்த்திட்டுப் போங்க, நாங்க நாளைக்குக் காலையில் கல்யாணம் பண்ணிக்கி றோம் என, கடந்த இருபது வருடங்களாகத் திருமண விழாவை மாற்றி யோசித்ததில், ‘கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்’ எனக் கொண்டாடிப் பரிமாறிய மதிய விருந்து இப்போது, ‘லைன்ல வா! வேண்டியதெல்லாம் கொட்டிக்கோ’ என்ற இரவு விருந்தாகிப்போனது. அழி ரப்பர் மாதிரி ரொமாலி ரொட்டியோ, முந்திரி போட்ட ஆனியன் ஊத்தப்பமோ, குல்கந்து பிதுங்கிய பீடாவோ... தமிழ்த் தலைமுறைகளுக்குப் பரிச்சயமே இல்லாத இந்த வகையறாக்கள் இல்லாமல் இரவு விருந்து கொடுத்தால், அது சாமி குத்தமாகிவிடுகிறது. இரவு விருந்துகள், இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்க்கு ஆகவே ஆகாது.

மனிதன் பல நெடுங்காலம் சூரியன் உதிக்கும் போதிருந்து தொடங்கி சூரியன் மறையும் வரைதான் சாப்பிட்டிருக்கிறான். அவனது ஹைப்போதலாமஸில் உள்ள அந்த SCN அதற்கேற்றாற்போல்தான் உணவு டிராஃபிக் கன்ட்ரோலை உடம்புக்குள் செய்துவருகிறது. ‘வேள்பாரி’யில் சொல்லப்பட்ட தெய்வ வாக்கு விலங்கான தேவாங்கு (Slender loris) முதலான சில ஜந்துகள் மட்டும்தான் இரவில் விழித்து, தனக்கு வேண்டியதைச் சாப்பிட்டு, பகலெல்லாம் தூங்கியுள்ளன. அப்படியான பிறப்புகள் அதனால்தான் கிளையில் முன்னேயும் பின்னேயும் நடந்தன. அல்லது சு.வெங்கடேசன் சொன்னதுபோல் வடக்குப் பக்கம் உட்கார்ந்து வழிகாட்டியிருக்கலாம். நாம் முன்னால் மட்டும்தானே நடக்கிறோம்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

காலை உணவைத் தவிர்ப்பவனுக்கு சர்க்கரை நோய் வருகிறது. இரவு உணவைக் கட்டு கட்டு எனக் கட்டுபவனுக்கு சர்க்கரை வருகிறது. இவையெல்லாம் ஏகத்துக்கு எலியிலும், கொஞ்சம் மனிதனிலும் ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்ட உண்மைகள். ஆய்வில் கோலோச்சும் ஹார்வர்டு முதலான பல பல்கலைக்கழகங்கள், தொடர்ச்சியாகத் தங்கள் தளத்தில் பகிரும் விஷயங்கள். சனிக்கிழமை, கூழ் ஊத்துகிற மாதிரி நகர்ப்புறங்களில் இரவு ஓட்டல்களின் முன்னால் குவியும் கூட்டத்திலிருந்தும், `என்ன, ஞாயித்துக்கிழமையும் வீட்டிலேயா சமைக்கிறீங்க? குடும்பத்துல ஏதாச்சும் பிரச்னையா? கவுன்சலிங் போறீங்களா?’ எனக் கொளுத்திப்போடும் சகுனிகளிடமிருந்தும் நாம் தப்பித்தே ஆக வேண்டும். நோயிடமிருந்தும் மருத்துவ மனைகளிடமிருந்தும் தப்பித்தே ஆக வேண்டுமல்லவா?

- இனியவை தொடரும்...