Published:Updated:

இன்னா நாற்பது இனியவை நாற்பது

இன்னா நாற்பது இனியவை நாற்பது
பிரீமியம் ஸ்டோரி
News
இன்னா நாற்பது இனியவை நாற்பது

நலம் 12

கழுத்து, இடுப்பு மற்றும் முதுகுத் தண்டுவட எலும்புகளுக்கு இடையிலான தட்டின் விலகலும் வீக்கமும் உலர்வும் பிதுக்கமும் இந்தத் தலை முறைக்குச் சற்று அதிகம்தான். ‘செர்விகல் / லம்பார் ஸ்பாண்டி லைடிஸ்’ என்கிற மருத்துவ நோய்க்கணிப்புச் சொல்லால் குறிக்கப்படும் இந்த நோய், நடுத்தர உழைக்கும் வர்க்கத்தில் கொஞ்சம் கூடுதல். குறிப்பாக, கல்லூரிக்காலத்திலிருந்து இருசக்கர வாகனங்களில் அதிகமாகப் பயணிக்கும் ஆண்களுக்குக் கழுத்தில் ஏற்படும் ‘செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ் ‘பிரச்னையும், இரண்டு சிசேரியன் பிரசவங்கள் ஆன பெண்கள், தினமும் பேருந்தில் நின்றுகொண்டே பயணிப்பதால் நாற்பதுகளில் ஏற்படும் ‘லம்பார் ஸ்பாண்டிலோசிஸ்’ பிரச்னையும் இன்று மிக அதிகம். அந்தக் காலத்தில் குடம் தூக்கி, கிணற்றில் நீர் இறைத்து, அடிபம்பில் தண்ணீர் அடித்து இதே பிரச்னைகளைச் சந்தித்தவர்கள்தாம் நாம். ஆனால் அப்போதைவிட, இப்போது வலியின் தீவிரம் அதிகரித்திருக்கிறது. கூடவே நம் வலி தாங்கும் ஆற்றல் மிகவும் குறைந்துபோய்விட்டது.

வலி, உடல் பேசும் மொழி. உடல் தனக்குள் நடக்கும் பிழையை அல்லது நோயோடு தான் நடத்தும் யுத்தத்தினை அறிவிக்கும் சமிக்ஞையே வலி. உடல், தனக்குத் தானே பிழையைச் சரி செய்துகொள்ளும் ஆற்றல் கொண்டிருப்பதால், பெரும்பாலும் அம்மொழியைக் கேட்காமல் நாம் அலட்சியப்படுத்தியபடி நகர்கிறோம். சின்னச் சின்ன காயங்களால் உண்டாகும் சின்னச் சின்ன நுண்ணுயிரிகளுடன் உடல் நடத்தும் போரில் ஏற்படும் வலிகளை மிக எளிதாகக் கடந்து போகிறோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதேநேரம், மீண்டும் மீண்டும் உடலை ஒழுங்கீனப் பழக்கங்களால் சிதைப்பதன் காரணமாக வரும் வலி, நம் இயல்பான வாழ்வுக்கே சவாலாக அமைந்துவிடும். ‘ஸ்பாண்டிலோசிஸ்’ அப்படித்தான். ‘ஸ்கோலியோசிஸ்’ (Scoliosis) மாதிரி பிறப்பிலேயே சற்றுக் கோணலாக வளைந்திருக்கும் முதுகைத்தவிர்த்து, பிற கழுத்து மற்றும் முதுகு வலிகள் எல்லாம் அநேகமாக நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ளும் வலிகள்தான்.

`ஸ்பாண்டிலோசிஸ்’ வராமலிருக்க உணவில் பெரிதும் அக்கறை வேண்டும். அடிக்கடி நெஞ்சு கரித்து, புளித்த ஏப்பத்துடன் வாய்வுத் தொல்லை உள்ளோருக்குக் கழுத்து வலி அதிகம் வருகிறது. வலிக்கு மருத்துவமில்லாமல் வாய்வு போக ‘அஷ்ட சூரணம்’ எனும் எளிய அன்னப்பொடியில் கழுத்துவலியைக் குணமாக்கிக்கொண்டவர்கள் நிறைய பேர். உணவில் புளிப்பும் துவர்ப்பும் கூடும்போது, இந்த எலும்புகளுக்கிடையே ‘டிஸ்க்’ எனப்படும் தட்டு உலர்கிறது. ‘துவர்த்தல்’ என்றால் ‘உலர்தல்’ என்று பொருள். தட்டு உலர்வதும், அதில் ஏற்படும் அழற்சியில் வீங்குவதும்தான் ஸ்பாண்டிலோசிஸ் பிரச்னைக்கு அடிப்படைக் காரணம். இப்படி உலரும், வீங்கும் தட்டு பிதுங்கத் தொடங்கும்போது முதுகுத் தண்டு வடத்தில் இருந்து வரும் நரம்புகளைத் தொட்டுச் சீண்டி, அழுத்தி, வேதனை தர ஆரம்பிக்கிறது.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

கழுத்தில் அப்படி நிகழ்வதைச் சித்த மருத்துவம் ‘சகனவாதம்’ என்கிறது. சில சித்தர்கள் இடுப்பில் ஏற்படும் இப்படியான தொல்லையை ‘சகனவாதம்’ என்கின்றனர். இடுப்பில் ஏற்படும் இதுபோன்ற தொல்லைகள், பெருவிரல்வரை நீளும் மிக முக்கியமான நரம்பான ‘சியாட்டிக்’ நரம்பினை அழுத்துகின்றன. அப்போது ‘சியாட்டிகா’ எனும் நரம்பு நோய்த்தொல்லை ஏற்படுகிறது.

கொஞ்ச நேரம் நிற்கத் தொடங்கியவுடன், இடுப்புப் பகுதியில் சுறுசுறுவென எரிச்சலும் இடுப்பு, பிட்டம், பின்னங்கால் பகுதிகளில் வலியும் பரவினால், சியாட்டிக் நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு ‘சயாட்டிகா’ ஏற்பட்டிருக்கிறது எனப் புரிந்துகொள்ளலாம். 35 - 40 வயதினருக்கு இந்த பாதிப்பு இப்போது மிகவும் அதிகம் காணப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதியம் மூன்று மணிக்கு விமானத்தில் ஏற, குண்டு துளைக்காத காரில் அத்தனை சாலைப் பயணிகளையும் காக்க வைத்துவிட்டு ‘சர்ரென’ பறக்கும் தலைவர்களின் பாதுகாப்புக்குக் காலை 8 மணியிலிருந்தே கால்கடுக்கக் காத்திருக்கும் கான்ஸ்டபிள்களுக்கு, அவர்களின் நாற்பதுகளில் புரமோஷன் வருகிறதோ இல்லையோ, ‘சியாட்டிகா’ வருவது இயல்பு. ஆறு மணிக்கு எழுந்து, காபியில் ஆரம்பித்து, அலுவலகத்தில் கைரேகையைப் பதித்து உட்காரும்வரை அதிகம் நின்றும் ஓடியும் உழலும் பெண்களுக்கும் இந்த ‘சியாட்டிகா’ சாதாரணமாக வரும். கூடவே, கழுத்துப்பகுதியில் ஸ்பாண்டிலோசிஸ் உண்டாக்கும் வலியானது, இடதுபக்கத் தோள்பட்டை, முன்னங்கை எனப் பரவும்போது, ‘இது மாரடைப்பின் அறிகுறியோ?’ என மருத்துவரையே மிரள வைப்பதும் உண்டு.

என்ன செய்யலாம்... என்ன செய்யக் கூடாது?

நிமிர்ந்த முதுகுடன் நிற்கும், முதுகைச் சரியாகத் தேவையான அளவு, நம் பணிகளுக்கு ஏற்ப வளைத்துக்கொண்டும் வாழும் அற்புத உயிரி நாம். காரியம் ஆக வேண்டும் என்றால் நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுவதும், ஜப்பானியரே சொக்கிப்போகும் அளவுக்கு முதுகை வளைத்து வணக்கம் வைப்பதிலும் தமிழர்கள் இன்னும் ஒருபடி உசத்தி. இப்படியான அரசியல்வியாதிகளும், அதிகம் இருசக்கர வாகனத்தில் அலைந்து திரியவேண்டிய பணியிலிருப்போரும், கழுத்து மற்றும் முதுகுக்கான உடற்பயிற்சிகளையும் ஆசனங்களையும் செய்தே ஆகவேண்டும் (விவரங்கள் பெட்டிச் செய்தியில்).

கூடவே, தாம் ஓட்டும் வாகனங்களின் ‘ஷாக் அப்சார்பர்’ (Shock absorber) சீராக உள்ளதா என அவ்வப்போது சோதித்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். தற்போது இளசுகளை மயக்கும்விதமாக வரும் புதுப்புது இருசக்கர வாகனங்கள், பயணிப்பதற்காக வடிவமைக்கப் பட்டவையாகத் தெரியவில்லை. எல்லாமே அநேகமாகப் பந்தய வாகனங்கள். அதுவும் அதன் பின் இருக்கையைப் பார்க்கையில் கொஞ்சம், பணக்காரர் இறந்தால், அன்றைக்கு மட்டும் அவர்களுக்கு வைக்கும் ‘பாடை’ மாதிரியே தோன்றும். அதில் தன் நண்பிகளை, கால்மேல் கால் போட்டு உட்கார வைத்து அல்லது முழுசாய் கங்காருபோல முதுகை வளைத்து வண்டி ஓட்டுபவர் மேல் விழுந்து அப்பிக்கொண்டு போவதைப் பார்க்கும்போது, பயணிக்கும் வாகனம்மீது கொஞ்சம் கவனம் இருக்கட்டும் என்று சொல்லத்தோன்றும். 20 வயதில் அப்படி ஓட்டினால், நாற்பது வயதில் முன் வளைந்து இடுப்பைப் பிடித்தபடி நடக்க வேண்டியிருக்கும்.

7 - 8 மணி நேரம் நாம் பயன்படுத்தும் இருக்கையும் படுக்கையும், கழுத்து வலி, இடுப்பு வலி வராமலிருக்க மிக முக்கியப் பங்காற்றும். அப்படியான இருக்கையைக் கேட்டு, அலுவலகத்தில் அடம்பிடிக்கலாம். மேற்கத்திய கழிப்பறை மாதிரியான இருக்கையில் உட்கார்ந்து பணிபுரிந்தால், ‘ஆயும், நோயும்’தான் அடிக்கடி வரும்.

படுக்கையைக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை ரிப்பேர் செய்வதோ அல்லது மாற்றுவதோ மிக மிக அவசியம். பஞ்செல்லாம் நைந்துபோய், நடுவில் பள்ளமும் பக்கவாட்டில் திரண்டும், மேடுபள்ளத்தோடு, மழை பெய்த சென்னைச் சாலை மாதிரியான படுக்கையே ஸ்பாண்டிலோசிஸ் தந்துவிடும்.

நாற்பதுகளில் வாழ்க்கை பெரும்பாலானோருக்கு அழகிய கவிதையாக இருப்பதில்லை. அர்த்தமுள்ள ஆய்வுக் கட்டுரையாகவும் அமைவதில்லை. குறைந்தபட்சம் மதிப்பெண்ணுக்காக மட்டும் எழுதும் அசைன்மென்ட் பேப்பர் மாதிரிகூட இல்லை. சிலருக்கு அது பாதுகாப்பான ஒரு பயணம். சிலருக்கு, கொலைவெறித் தாக்குதலிலிருந்து தப்பியோடும் பதற்றமான ஓட்டம். சிலருக்குக் கடற்கரையில் பறக்கும் கை நழுவிப்போன வண்ண பலூன். வெகு சிலருக்கு மட்டுமே வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

அறிவும் ஆரோக்கியமும் காசு உள்ளோருக்கு மட்டும்தான் எனத் தற்போது வலுவாகச் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். விளைவு... இப்போதைய நாற்பதுக்கும் சரி, 2040-ன் நாற்பதுக்கும் சரி, வலி இன்னும் கொஞ்சம் அதிகமே! இனி இன்னும் கூடுதலாக உடல்மீது அக்கறையும் கரிசனமும் வேண்டும் தோழமையே..!

- இனியவை தொடரும்...

இன்னா நாற்பது இனியவை நாற்பது

வர்ம சிகிச்சை!

`ஸ்பாண்டிலோசிஸ்’ நோய்க்கான தலையாய சிகிச்சை வர்மமும், மூலிகை எண்ணெய்ப் பிழிச்சல் சிகிச்சையான ‘தொக்கணமும்’தான். சரியான இந்தச் சிகிச்சையின் மூலம், பெரும்பாலும் அறுவை சிகிச்சையைத் தவிர்க்கமுடியும். அதேசமயம் அக்குபிரஷரும் அக்குபஞ்சரும் அடைந்த உயரத்தை வர்மம் இன்னும் உலக அரங்கில் அடையவில்லை என்பது கசப்பான உண்மை. சித்த மருத்துவ வர்ம ஆய்வாளர்கள், சமீபத்தில் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடந்த, வர்ம தேசியக் கருத்தரங்கில் வெளியிட்ட பல ஆய்வுக்கட்டுரைகள், ‘சித்த மருத்துவத்தின் மிகப்பெரிய நலவாழ்வு சூத்திரமான வர்மத்தை உலக அரங்கில் வெகுசீக்கிரம் வேறு தளத்துக்கு எடுத்துச்செல்லும்’ என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. கழுத்து, இடுப்பு, மூட்டு வலி மட்டுமல்ல, சுகப்பிரசவத்தைக்கூட வர்மம் மூலம் சாத்தியப்படுத்தலாம் எனக் கட்டுரைகளில் ஆராய்ந்து சொல்லியுள்ளனர். நவீன மருத்துவர்கள் கொஞ்சம் உற்றுக் கவனித்து ஆய்வில் தோள்கொடுக்கும் பட்சத்தில் வர்மத்தால் தமிழகம் உலகில் தனிப்பெரும் இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

அன்னப்பொடி

சாதாரணமாக வாய்வு போக, வயிற்று உப்புசம் தீர, சீரணம் சரியாகக் கொடுக்கப்படும் அன்னப்பொடி கழுத்து மற்றும் இடுப்பு வலியைப் போக்கவும் பயன்படும். சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம், ஓமம், பெருங்காயம், இந்துப்பு ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, வறுத்துப் பொடித்துக் கலந்து செய்யப்படும் இந்த அன்னப்பொடியைக் கால் டீஸ்பூன் அளவு சோற்றில் கலந்து சாப்பிடலாம். சர்க்கரை - ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உப்புக்குப் பதில் கறிவேப்பிலை போட்டுக்கொள்ளலாம்.

முடக்கறுத்தான் சூப், தாய் உணவகத்தில் (அம்மா உணவகத்தைச் சொல்லவில்லை... தாய்லாந்து நாட்டு உணவகம்) தரும் சித்தரத்தை சூப் இரண்டும் `ஸ்பாண்டிலோசிஸ்’ நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும்.

பாக்யராஜ் டான்ஸ் ஆடுங்கள்!

`ஸ்பாண்டிலோசிஸ் ‘ வராமல் தடுக்க ‘சூரிய நமஸ்காரம்’ எனும் சூரிய வணக்கமும் சாதாரணமாகப் பள்ளிகளில் செய்யும் ஏரோபிக் எக்சர்சைஸ்களும் போதுமானவை. ஆனால், கழுத்து மற்றும் இடுப்பில் வலி வந்துவிட்டால் முன் குனியும் - முன் வளையும் ஆசனமோ, உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. புஜங்காசனம், தனுராசனம், பவனமுக்தாசனம் மற்றும் மூச்சுப்பயிற்சிகளே போதுமானவை.

தாடை, முன் நெஞ்சுப்பகுதியில் தொடும்படி கழுத்தை மெல்லக் குனிந்து பின்னர் கிளாக்வைஸ் மற்றும் ஆன்டி கிளாக்வைஸாகச் சுற்ற வேண்டும். பும்ரா, மலிங்கா மாதிரி வேகமாகக் கையைச் சுற்றாமல், மெதுவாகப் பந்துவீசும் பயிற்சி நல்லது. அந்தக்காலத்தில், பாக்யராஜ் ஹீரோயினைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே நடனமாடுவதாக நினைத்துச் செய்யும் நடன அசைவுகள் எல்லாமே கழுத்து மற்றும் முதுகு வலியைப் போக்கும்.